இங்கிலாந்து என்றும் பிரிட்டன் என்றும் அழைக்கப்படும் நாட்டின் அதிகாரப்படியான பெயர் “ஒருங்கிணைந்த முடியரசு (United Kingdom) என்பதாகும்.  சுருக்கமாக யு.கே. என்று அழைக்கப்படுகிறது.

இந்நாட்டில் வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் என நான்கு தேசங்கள் இருக்கின்றன. வடக்கு அயர்லாந்து மக்களின் தாய்மொழி ஐரிஷ்.  இங்கிலாந்து மக்களின் தாய்மொழி ஆங்கிலம்.  ஸ்காட்லாந்து மக்களின் தாய்மொழி ஸ்காட்டிஷ்.  வேல்ஸ் மக்களின் மொழி வெல்ஷ். ஒருங்கிணைந்த முடியரசு நாட்டில் ஆங்கிலேயர் மற்றும் ஆங்கில மொழி மேலாதிக்கம் அதிகம். அதனால் அயர்லாந்து மக்கள் 150 ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டம் தொடங்கினர்.

பின்னர் தெற்கு அயர்லாந்திற்கு விடுதலை கிடைத்தது. வடக்கு அயர்லாந்து இன்னும் யு.கே.யில் இருக்கிறது.  அதன் விடுதலைப் போராட்டம் தொடர்கிறது. இப்பொழுது ஸ்காட்லாந்தும் விடுதலை கேட்கிறது.  கடந்த பத்தாண்டுகளில் ஸ்காட்லாந்து விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது. ஸ்காட்லாந்திய தேசியக் கட்சி“ என்ற கட்சி அங்கு வளர்ச்சி பெற்று மாநில ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சித் தலைவர் அலெக்ஸ் சல்மாண்டு என்பவர் ஸ்காட்லாந்தின் முதலமைச்சராக உள்ளார்.

மாநில ஆட்சி - அதற்கென நாடாளுமன்றம், அரசமைப்புச் சட்டம் என்ற ஏற்பாடுகளைப் பிரித்தானிய அரசு செய்து கொடுத்த போதிலும், ஸ்காட்லாந்து மக்களின் தனிநாட்டு வேட்கை தணியவில்லை.

தங்களது ஸ்காட்லாந்திய மக்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளியல் சாதனைகள், கலை மற்றும் விளையாட்டுத் துறைச் சாதனைகள் அனைத்தும் பிரித்தானியாவின் சாதனைகளாக வெளிப்படுவதால் அவை ஆங்கிலேயர்களின் சாதனைகள் என்றே வெளி உலகத்தில் புரிந்து கொள்கின்றனர்.

வரலாற்றில் தடம் பதித்த தனித்த தேசிய இன மக்களாகிய ஸ்காட்லாந்தியர்கள் தங்களின் தனித்தன்மையை இழந்து ஆங்கிலேயரின் அடையாளத்திற்குள் கரைந்து விட்டனர். தங்கள் மக்களின் அரசியல், பொருளியல், பண்பியல் தேவைகளை நிறைவேற்றிப் போதுமான அதிகாரங்கள் ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை. எல்லா அதிகாரமும் இலண்டனில் குவிந்து கிடக்கின்றன.

ஸ்காட்லாந்து பிரிந்து போவது பற்றி 2014 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் கருத்துவாக்கெடுப்பு நடத்த யு.கே.அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இப்பொழுதிருந்தே அதற்கான பரப்புரையை ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி தொடங்கிவிட்டது.

உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற திரைப்படப் பாத்திரத்தில் நடித்த சர்சீன் கானரி ஸ்காட்லாந்தியர் ஆவார். அவர் ஸ்காட்லாந்து விடுதலைக் கோரிக்கையில் மிகவும் தீவிரமாகச் செயல்படுகிறார். 2014 கருத்து வாக்கெடுப்பில் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஸ்காட்லாந்து மக்களைக் கேட்டு வருகிறார். ஸ்காட்லாந்து விடுதலை அடையாமல் அந் நாட்டிற்குள் நுழைவதில்லை என்று உறுதி ஏற்று பகாமாஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார் சீன்கானரி.

வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளில் தேசிய இனச்சிக்கல் எழாது என்று ஒரு காலத்தில் மார்க்சிய அறிஞர்களால் கருதப்பட்டது.  அக்கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் வரலாறு செல்கிறது.

உலகமயம் வந்து உலகத்தை ஒரு கிராம மாக்கிவிட்டது என்று சிலர் கதைத்தனர். உலக மயத்தின் தலைமை நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவிலேயே தனித் தேசக் கோரிக்கை வலுவடைந்துள்ளது தான் வரலாறு சொல்லும் பாடம்!

பிரித்தானியாவே பிரிகிறது என்றால் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியம் வெல்லும் ! ஸ்காட்லாந்து விடுதலை பெற வாழ்த்துகள்.

Pin It