இந்திய நாட்டின் பரிபூரண விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட காந்தியின் இயக்கங்கள் ஒரு வழியாய் முடிவடைந்து விட்டன. காந்தியும் அவரது சகாக்களும் பத்து வருடங்களுக்குப் பிறகாவது தங்களது தப்பான வழியை உணர்ந்து தங்கள் போக்கைத் திருப்பியது மிகவும் போற்றத்தக்கதே. காந்தியின் உப்பு சத்தியாக்கிரக திருவிளையாடல்களின் பயனாய் ஏற்பட்ட அடக்குமுறையால் இந்திய அரசியல் விடுதலைக் கிளர்ச்சிகள் ஒரு வகையில் ஸ்தம்பித்துப் போய்விட்டன என்பதைக் காந்தியே ஒப்புக் கொள்வார். இந்தப் பரிதாபகரமான நிலையிலிருந்து தப்பவும் "இந்து மதம்" என்ற போர்வையில் பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நடத்தவும் ஒரு வழியையும், சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து வந்தனர் நமது தேசீயவாதிகள். இவர்களது திக்கற்ற நிலையை நன்குணர்ந்த லார்டு வெல்லிங்டன் இந்திய சட்டசபையைக் கலைத்து மறு தேர்தல் நடத்தப் போவதாக ஒரு நாடகம் நடித்தார்.periyar karunanidhi veeramaniதிக்கு முக்காடி இறக்குந் தருவாயில் தண்ணீரில் தவிக்குமொருவன் தனதெதிரில் வரும் ஒரு துரும்பைக்கூட கைப்பற்றித் தனது உயிரை நிலைக்க வைக்கப் பார்ப்பது சகஜமே. எனவே இந்த நிலையில் காந்தியார், தான் இந்த நாட்டின் அரசியல் இயக்க சர்வாதிகாரி என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டு தனது சட்ட மறுப்பியக்கத்தை வாபீஸ் வாங்கிக் கொள்வதாகவும், சுயராஜ்யக் கட்சி என்ற பழைய பார்ப்பனக் கூட்டத்திற்கு சட்ட ரீதியாக அரசியல் கிளர்ச்சி நடத்த இடந்தருவதாகவும் வெளியிட்டுத் தனது கௌரவத்தை நிலை நிறுத்திக் கொள்ள எத்தனித்தார். சமயத்தை எதிர்பார்த்து வந்த பார்ப்பனர்களும் அகில உலக ராஜீய நாடக நடிகரான கனம் சாஸ்திரியார் முதல் தேவதா கைங்கர்யப் பிரியர் சத்தியமூர்த்தி வரையில் ஒரே கூட்டமாக திடீரெனக் கிளம்பி இந்த நாட்டை ஒரு கலக்கு கலக்க எத்தனித்துள்ளனர்.

ஆனால் நாட்டின் நிலையையும், நாட்டு மக்களுக்கு இவர்களது எத்தனங்களால் ஏற்படுத்துவதாகப் பிரகடனம் செய்யும் பரிகாரங்களையும் சமதர்மிகளாகிய நாம் கவனிக்குமளவில் இந்த சில்லரைச் சீர்திருத்தங்களால் எவ்வித பயனுமில்லையென்று கருதுவதுடன் இந்த நல்ல சந்தர்ப்பத்தை இந்தப் பிற்போக்காளரது திட்டங்களால் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாவதைவிட தீமையே அதிகரிக்குமென்பதையும் பகிரங்கப்படுத்த உபயோகித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமெனக் கருதுகிறோம்.

(புரட்சி கட்டுரை 22.04.1934)

Pin It