பக்கத்து வீட்டுக்கு பூரணி குடிவந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். அழகான அளவான குடும்பம். எட்டு வயதில் ஒரு மகன், சரவணன். அவள் கணவர் சிதம்பரநாதனுக்கு ஊரின் பெரிய நகைக்கடையில் கணக்காளர் வேலை.  பூரணி “அக்மார்க்“ குடும்பத்தலைவி. மிகவும் எளிமையான நடுத்தரக் குடும்பம்.  இரண்டு பேருமே நகர வாழ்க்கைக்கு அதிகம் பொருந்தாதவர்கள்.  இளநிலைப் பட்டம் ஒன்று வாங்கியதோடு தங்கள் படிப்பை முடித்துக் கொண்டவர்கள். எங்கள் வீட்டிலிருந்து நடந்து  செல்லும் தூரத்திலுள்ள ஓர் “உயர்தர“ சர்வதேசப் பள்ளியில் (International School)  மகன் சரவணனை படிக்க வைக்கிறார்கள்.  

அதிகாலை 4 மணிக்கே பூரணி வீட்டு அடுக் களையில் விளக்கெரியும்.  கடுகு தாளிக்கும் வாசனையோடு சரவணனை எழுப்பும், - கிளப்பும் சத்தமும் கேட்கும்.  என் கைபேசி அலாரம் 5 மணியில் ஒலிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாகவே அவர்கள் வீட்டு வாசல் கதவு திறந்துவிடும். சரவணன்தன் அப்பாவோடு சைக்கிளில் கிளம்பிவிடுவான்.  சன் தொலைக்காட்சியில் காலை 7.30 மணி செய்திகள் முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் வீடு திரும்பி விடுவார்கள். 8.30 மணிக்கு வீட்டு வாசலில் பள்ளிப்பேருந்தில் ஏறினால், சரியாக மாலை 4.00 மணிக்கு திரும்பி வீட்டுக்கு வந்துவிடுவான் சரவணன். அடுத்த பத்தாவது நிமிடம் உடை மாற்றி, தலைசீவி, பவுடர் அடித்துபளிச்சென்று வாசலில் தெரிவான். பௌர்ணமி நிலா அளவுக்கு ஒரு கைப்பந்தைத் தரையில் தட்டித்தட்டியும், சுவரில் எறிந்து பிடித்தும் தனக்குத் தானே விளையாடுவான். கையில் தட்டை ஏந்தியபடியே, “சீக்கிரம் முழுங்குடா!!” என்று ஒவ்வொரு வாய்க்கும் சொல்லிச் சொல்லித் திணிப்பாள் பூரணி. தட்டு காலியாகிறதோ இல்லையோ 4.30 மணிக்கெல்லாம் புத்தகப் பையைத் தோளில் மாட்டியபடி அவனைக் கூட்டிக் கொண்டு கிளம்பிவிடுவாள். ஆறுமணி சுமாருக்கு பூரணி மட்டும் கையில் காய்கறிக் கூடையோடு வீடு திரும்புவாள். பாதித் தூங்கிய நிலையில் 9 மணிக்கு மேல் அப்பாவோடு சைக்கிளில் வீட்டுக்கு வருவான் சரவணன். இது அன்றாடம் அவர்கள் வீட்டில் நான் பார்க்கும் நிகழ்வுகள்.

இன்று என் மகன் ஆனந்தனுக்குப் பிறந்தநாள் என்பதால் பக்கத்துப் பிள்ளையார் கோயிலுக்குப் பூசைக்குக் கொடுத்திருந்தேன். பிரசாதமாய் வந்த சர்க்கரைப் பொங்கலை எடுத்துக் கொண்டு சரவணன் விளையாடும் நேரத்துக்கு அவர்கள் வீட்டுக்குப் போனேன் முதல்முறையாக.

மலர்ந்த முகத்தோடு வரவேற்று, “உள்ளே வாங்கம்மா” என்று அழைத்தாள் பூரணி. “பரவாயில்லை! நான் இங்கேயே உட்கார்ந்துக்கறேன். பிள்ளை விளையாடட்டும், நீ ஊட்டிவிடு, அப்படியே இந்த பொங்கலும் அவனுக்கு ஊட்டு, இன்னைக்கு என் பையனுக்குப் பிறந்த நாள்.“ என்று சொல்லி அவளிடம் கொடுத்தேன். “ஓ! அப்படியா! ரொம்ப சந்தோஷம். உங்க பையன் என்ன பண்றாங்க?“ என்று கேட்டுக் கொண்டே நான் கொடுத்த டப்பாவைத் திறந்து பொங்கலை சரவணனுக்கு ஊட்டி விட்டாள்.

“சாஃப்ட்வேர் இன்ஜினியரா அமெரிக்காவுல வேலை பார்க்கிறான், என் மருமகளும் அதே வேலைதான் பார்க்கிறா. ஏழரை வயசுல ஒரு பேரன் இருக்கான், ஆதித்யான்னு பேரு” என்று பூரணியிடம் சொல்லிக் கொண்டே சரவணனைப் பார்த்துக் கேட்டேன், “எங்க வீட்டுக்கு வரீயா? நிறைய விளையாட்டு சாமான் இருக்கு. எல்லாம் போன லீவுல எங்க ஆதித்யா வந்தப்போ வாங்கினது.  நாம ஜாலியா விளையாடலாம்“ என்றேன். உற்சாகமாய் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிய சரவணன் என்னிடம் கேட்டான், “வீடியோ கேம்ஸ் இருக்கா? ஆச்சி!!“ என்று. அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டு, “இருக்குடா கண்ணா, ஆதித்யா கூட விளையாண்ட ஞாபகத்துக்கு, வீட்ல தாத்தா அதை விளையாண்டு தான் பொழுதைப் போக்குறார். ஆச்சிக்குத்தான் அது சரியா விளங்கலை. நீ வந்து சொல்லிக்குடு. நாம சேர்ந்து விளையாடலாம்“ என்றேன். சட்டென தன் அம்மா பக்கம் திரும்பி கெஞ்சும் குரலில், “அம்மா! ப்ளீஸ் ஆச்சி வீட்டுக்குப் போய் வீடியோ கேம்ஸ் விளையாண்டுட்டு வரேன்மா!” என்றான்.

பூரணி பதட்டமாய், “ஐயையோ இல்லைடா! இப்பவே நேரமாயிடுச்சுபாரு. லீவு நாள் போய்க்கலாம்!“ என்று மறுத்தாள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு நானே அவனிடம், “அம்மா சொல்றது சரிதாண்டா கண்ணா! லீவு நாள் நீ ஆச்சி வீட்டுக்கு காலையிலேயே வந்துடு. நாள் முழுக்க விளையாடலாம் சரியா! இப்போ ஆச்சி கிளம்பறேன்!“ என்று அவனுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு, “ஓய்வா இருக்கும் போது வீட்டுக்கு வாம்மா“ என்று பூரணியிடமும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வெள்ளிக்கிழமை என்பதால் விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வீட்டு வாசலில் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். மாலையில் பூரணி வீட்டுக்குப் போய் வந்ததிலிருந்தே எனக்குள் இனம்புரியாத ஏதோ ஒரு மனப் பதட்டம் இருப்பதாக உணர்ந்தேன். சாய்வு நாற் காலியில்  சாய்ந்து கொண்டு கண்களை மூடிய படி எனக்குப் பிடித்த சூலமங்கலம் சகோதரிகள் முருகன் மீது பாடிய பக்திப் பாடல்களை ஐபாடில் (ipod) கேட்டுக் கொண்டிருந் தேன். ஐபாடு உச்ச கட்ட ஒலியில் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்ததால் பூரணி வீட்டுக்குள் வந்ததை நான் கவனிக்கவில்லை. என் அருகில் வந்து என் கைகளைத் தொட்டதும்தான் கண் விழித்துப் பார்த்தேன். பொங்கல் கொடுத்தடப்பாவைத் திருப்பிக் கொடுப்பதற்காக வந்தாள் பூரணி. “வாம்மா! உட்கார்! சரவணனை டியூஷன் விட்டாச்சா!, என்ன படிக்கிறான் அவன்?“ என்றேன். “மூன்றாவது படிக்கிறான்ம்மா! இன்டர்நேஷனல் சிலபஸ்ங்கறதால பாடமெல்லாம் ரொம்ப கடினமா இருக்கு. அதான் அவன் ஸ்கூல் மிஸ்கிட்டேயே டியூஷன் வைச்சுவிட்டுட்டேன்.“ என்றாள். “காலையில 5 மணிக்கே அவன் அப்பாவோட போறானே, அதுவும் டியூஷனுக் குத்தானா?“ என்றேன். “இல்லைம்மா!“ என்று வேகமாய் மறுத்தபடியே, காலையில் 5-6.30 யோகாவும் நீச்சல் பயிற்சியும், 7-8 ஸ்போக்கன் இங்கிலீஷ், சாயந்திரம் 5-6 அபாகஸ் பயிற்சி, 6.30-9 வரைக்கும்தான் டியூஷன் என்று தன் மகனின் ஒரு நாள் பொழுதைப் பட்டியல் பிரித்துச் சொன்னாள் பூரணி. “சரியா இருக்குதும்மா! நாள் முழுக்க அவனுக்கும்! அவனோடு சேர்த்து எனக்கும் அவன் அப்பாவுக்கும்.“ என்று பெருமூச்சோடும் லேசான சலிப்போடும் அலுத்துக் கொண்டாள்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த என்னைப் பார்த்தது போலிருந்தது பூரணியைப் பார்ப்பதற்கு. நானும் இப்படித்தான் ஏழு வயதிலிருந்தே என் மகனை, இந்தி கத்துக்க ஓடு!, ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துக்க ஓடு!, டியூஷனுக்கு ஓடு!, ஸ்பெஷல் கிளாஸ்க்கு ஓடு!, ஸ்கூலுக்கு ஓடு! கம்ப்யூட்டர் கிளாஸ்க்கு ஓடு!, என்று நிற்கவிடாமல் - வீட்டில் இருக்க விடாமல் ஓடு! ஓடு! என்று விரட்டிக் கொண்டே இருந்தேன். அதனால்தான் இப்போது என் மகன்...

“அம்மா!“ என்ற அழைப்பில் நினைவு கலைந்தேன். “நான் கிளம்பறேன். இரவு உணவு தயாரிக்கனும். சரவணனும் அவன் அப்பாவும் பசியோடு வருவாங்க.“ என்று சொல்லி விட்டு பூரணி எழுந்து கொண்டாள்.

“சரிம்மா!“ என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து மீண்டும் என் நினைவுகளுக்குள் போனேன். “ஓடு!! ஓடு!! என்று நான் விரட்டியதால்தானோ என்னவோ இப்போது என் மகன் என்னைவிட்டு வெகு தூரம் ஓடிவிட்டான். தாயையும் தாய் மண்ணையும் விட்டு ஏதோ ஓர் அந்நிய தேசத்தில் உறவுகளின் அரவணைப்பில்லாமல் வெறும் பணத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறான். வயதாகும் காலத்தில் நாங்களும் இங்கே அவன் பணத்தால் ஏற்படுத்திக்கொடுத்த அனைத்து வசதிகளோடும் இயல்பை மறந்து இயந்திரத் தனமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனந்தன் என்னை “மம்மி“ என்றழைத்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியும், பெருமிதமும் இப்போது என் பேரன் ஆதித்யா என்னை “கிராண்ட்மா“ என்று கூப்பிடும்போது ஏற்பட வில்லை.

மாலையில் பக்கத்து வீட்டு கார்த்திக் சரவணன் என்னை ”ஆச்சி” என்று அழைத்த போது என் உடல் முழுவதும் ஏற்பட்ட புத்துணர்வு, ஆதித்யா என்னை கிராண்ட்மா என்று அழைத்த போது ஒருமுறை கூட என்னுள் ஏற்பட்டது இல்லை. உறவு நெருக்கமும், இரத்த  சொந்தமும் எங்கேயோ அந்நியப் பட்டு நிற்பது போல் ஓர் உணர்வுதான் எனக்கிருந்தது” இப்படி நினைக்கும் போதே நான் அழத் தொடங்கினேன்.

“பார்வதி சீக்கிரம் வா! ஆனந்தன் வீடியோ சாட்டிங் கில் வந்திருக்கான்.“ என்று குரல் கொடுத்தார் அவன் அப்பா. அழுகையை அடக்கிக் கொண்டு கண்களைத் துடைத்துவிட்டு உள்ளே சென்றேன். கம்ப்யூட்டரில் என்மகன் ஆனந்தனின் முகம் பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி எங்கள் ஆசிர்வாதத்தைக் கொடுத்தோம்.  அதற்கு மேல் அடக்க முடியில்லை. வெடித்து அழுது விட்டேன்.

Pin It