thamilarkannotam jan14தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமுடியாது என்று கர்நாடகத்தில் ஆளுங்கட்சி எதிர்க் கட்சி என அனைத்துக்கட்சிகளும் அரசும் கூறுவது வழக்கம். ஒரு சொட்டு கூட காவிரி நீர் தர மாட்டோம் என்று கர்நாடகம் கூறுவதில் ஒரு கருத்தியல் (ஒரு சித்தாந்தம்) இருக்கிறது.

“தமிழகத்துக்குரிய காவிரி நீரை எவ்வளவு குறை வாகத் தீர்ப்பாயம் வழங்கினாலும் அதையும் தர மாட்டோம். தமிழக அரசு எவ்வளவு குறைவாகத் தண்ணீர் கேட்டாலும் அதையும் தர மாட்டோம்; எங்கள் அணைகள் நிரம்பி இருந்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தரமாட்டோம்.

“எங்கள் அணைகள் நிரம்பி மிகையாக வெள்ள நீர் வந்தாலும் அது தமிழ்நாடு செல்ல அனுமதிக்க மாட் டோம்; புதிதாக மூன்று அணைகள் கட்டி அந்த வெள்ள நீரையும் தேக்கிக் கொள்வோம்.

காவிரி நீர் எங்களுக்குத் தேவை என்பதை விடத் தமிழ்நாட்டிற்குத் தரக் கூடாது என்பதே எங்களின் அடிப்படைக் கொள்கை. காரணம் என்ன வெனில் நாங் கள் கன்னடர்கள், தமிழ்நாட்டில் உள்ள நீங்கள் தமிழர்கள். இருவரும் வெவ்வேறு இனங்கள். எனவே வேற்றி னமான தமிழர்களுக்குக் கன்னட இனத்தைச் சேர்ந்த நாங்கள் காவிரி நீர் தரமாட்டோம்.’’

இதுதான் கர்நாடகத்தின் அரசும் அனைத்துக் கட்சிகளும் கடைபிடிக்கும் இனவியல் கருத்தியல் (சித்தாந்தம்)! அதாவது கன்னட இன வெறிக் கருத்தியல்! தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் கருத்தியல்! கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் பெரு மழை பெய்து பெருவெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ள நீரைக் கர் நாடக அணைகளில் தேக்கி வைக்க முடியவில்லை. தங்கள் அணைகள் உடைந்து சேதமாகக் கூடாது என்ப தற்காக வெள்ள நீரைத் திறந்து வெளியேற்றினார்கள். இதனால் மேட்டூர் அணை நிரம்பியது. 120 அடிக்கு மேல் மேட்டூரில் தேக்க முடியாத நிலையில் தமிழகமும் வெள்ள நீரை வெளியேற்றியது.

இந்தச் செய்தியறிந்து, தீயை மிதித்தவர்கள் போல் துடித்துப் போனார்கள் கன்னட நாட்டு கட்சித் தலை வர்களும், உழவர் தலைவர்களும். “மேட்டூர் அணையில் 120 அடியும் நிரம்பி விட்டதாமே! என்ன கொடுமை இது? இந்த அநீதிக்குப் பரிகாரம் கிடையாதா?’’ என்று கொதித் தார்கள்; கொந்தளித்தார்கள்.

“இந்தப் பாவத்திற்குப் பரிகாரம் கண்டார்கள்;’’ அது தான் காவிரி யின் குறுக்கே புதிதாக மூன்று அணைகள் கட்டும் திட்டம்!

கர்நாடக சட்டத்துறை அமைச் சர் செயச்சந்திரா 21.08.2013 அன்று பெங்களூரில் இவ்வாறு அறிவித்தார்:

“கர்நாடகத்தின் மேக்கேதாட்டு வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே 600 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 50 ஆ.மி.க (டி.எம்.சி) கொள்ளவு கொண்ட மூன்று நீர்த் தேக்கங்கள் கட்டப்படும். காவிரி யின் உபரித் தண்ணீரைத் தேக்கி மின்சாரம் எடுக்கவும் குடி நீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ் வணைகள் கட்டப்படும்.’’

இந்த 3 அணைகளும் எங்கு கட்டப்படவுள்ளன?

தமிழக -கர்நாடக எல்லையான பில்லி குண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவில்! இப்பொழுது கிருஷ்ணராஜ சாகரிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் அர்கா வதியிலிருந்தும் வெளியேறும் உபரி நீர் தங்குதடையின்றி நேரே மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இது போல் உபரி நீர் ஒரு சொட்டுக் கூட மேட்டூர் அணைக் குப் போகாமல் தடுக்கத் தான் இந் தப் புதிய 3 அணைகள் கட்டும் திட்டம்!

ஐம்பது ஆ.மி.க.(டி.எம்.சி) கொள் ளளவு கர்நாடகாவின் கிருஷ்ண ராஜாசாகர் அணையை விடவும் அதிகம். கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு 44 ஆ.மி.க. மின்சாரம் எடுக்கத் தானே அணைகட்டுகிறார்கள். அதற்காகத் திறந்து விடப்படும் தண்ணீர், தமிழ் நாட்டிற்குத் தானே வரும் என்று சிலர் கருதக் கூடும். அது வராது. அதைத் தடுப் பதற்குத் தான் மூன்று அணைகள்!

மேலும் குடிநீருக்காகவும் இந்த அணைகள் கட்டப்படுவதாகச் சொல்கிறார் கர்நாடக அமைச்சர். அதன் பொருள் என்ன? தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்வோம் என்பதுதான்!

இந்த மூன்று அணைகளும் கட் டப்பட்டு விட்டால், காவிரி என்பது தமிழகத்தைப் பொறுத் தவரை பொய்யாய், பழங்கதையாய் கன வாய்ப் போய்விடும்! ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தரக்கூடாது என்று கன்னடர்கள் காணும் கனவு மெய்யாய், புது நடப் பாய் மேலேழுந்த அநீதியாய் அரங் கேறிவிடும்! அறுநூறு கோடி ரூபாய்க்கான இத்திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதியைப் பெற் றிட முடியும் என்ற நம்பிக்கை யோடுதான் இத்திட்டத்தைக் கர்நாடகம் தீட்டியுள்ளது. தமிழரகளுக்கெதிரான எத்தீமையையும் இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக் கைதான் அது!

இத்திட்டங்களுக்குத் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குப் போட்டுள்ளது. உச்சநீதிமன்றமோ எல்லா வற்றையும் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

இந்திய அரசு 19.02.2013 அன்று காவிரி இறுதித் தீர்ப்பைத் தனது அரசிதழில் வெளியிட்டது. அத் தீர்ப்பை செயல்படுத்துவ தற்கான பொறியமைவாய் காவிரி மேலாண்மை வாரியமும், அவ்வா ரியத்திற்கு உதவியாய் காவிரி ஒழுங்குமுறைக் குழுவும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று இறுதித்தீர்ப்பில் கூறியிருந்தது. அவ்விரண்டு அமைப்பையும் அமைத்து அவற்றையும் அதே 19.02.2013 அரசிதழில் இந்திய அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அக்குழுக்களை இந்திய அரசு அமைக்கவில்லை.

காவிரி இறுதித் தீர்ப்பின் ஒரு பாதியை அரசிதழில் வெளியிட்டு விட்டு மறுபாதியை வெளியிடா மல் விட்டு விட்டது நடுவண் அரசு. அதாவது பாதிக் கிணறு தாண்டிய கதையாகக் குழிக்குள் விழுந்து கிடக்கிறது காவிரித் தீர்ப் பாயத்தின் இறுதித் தீர்ப்பு.

மேலாண்மை வாரியம் அமைத்திட ஆணையிடுமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுப் போட்டது. அதற்கு அவசரம் இல்லை, அடுத்த ஆண்டு அசல் வழக்கு வரும் போது எடுத் துக் கொள்ளலாம் என்று கூறி 05.08.2013 அன்று அம்மனுவைத் தள்ளுபடி செய் தது உச்சநீதிமன்றம். அதற்கு உச்ச நீதி மன்றம் கூறிய காரணம், “இப்பொழுது மழை பெய்து இரு மாநிலங்களிலும் தண்ணீர் நிறைய இருக்கிறது.” என்றது.

இரு மாநிலங்களுக்கிடையே மரபு வழிப்பட்ட உரிமை பற்றிய வழக்கு இது. உரிமைச்சிக்கலில் நீதியை நிலைநாட்ட வேண்டிய உச்சநீதி மன்றம், இப்பொழுது தண்ணீர் இருக்கிறது, அவசரமில்லை என்று கூறியது சரியா? 1974ஆம் ஆண்டிலிருந்து காவிரி உரிமை கர்நாடகத்தால் பறிக்கப் பட்டு, பெரும் பொருள் இழப்புகளுக்கும் உயிர் இழப்புகளுக்கும் உள்ளாகி வாழ்வுரிமை பாதிக்கப் பட்டுள்ளனர் தமிழ் மக்கள்.

மூன்று அணைகள் கட்டுவது பற்றிய திட்டத்தைக் கர்நாடக அரசு வெளியிட்ட பின் மறு படியும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தமிழக அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் பொறுப்பில் கர்நாடக - தமிழக காவிரி அணைகளின் நீர் நிர் வாகத்தை உடன டியாக ஒப்படைக்க வேண்டும். இல்லா விடில் புதிய அணைகள் கட்டி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்கு வராமல் கர்நாடகம் தடுத்துவிடும். எனவே மேலாண்மை வாரியம் உடனே அமைக்கவும் 2013 சனவரி 31க்குள் கர்நாடகம் தர வேண்டிய 26ஆ.மி.க பாக்கித் தண்ணீரைத் திறந்து விடவும் ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரியது.

அதற்கு உச்ச நீதிமன்ற நீதி பதிகள் 03.12.2013 அன்று அளித்த மறுமொழியும் கூறிய முடிவும் அதிர்ச்சி தரத்தக்கது. நீதிக்குப் புறம்பானது.

நீதிபதி ஆர்.எம்.லோதா தலை மையில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், குரியன் சோசப் ஆகியோர் அடங்கிய அமர்பு பின்வருமாறு கூறியது. நீதிபதி லோதா தான் முடிவை வெளியிட்டார்.

”உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்குமுறைக் குழு அடங்கிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக் கையை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை. தமிழக அரசின் இந்த மனுவுக்கு நடுவண் அரசும் கர்நாடக அரசும் நான்கு வாரங் களுக்குள் விடை அளிக்க வேண் டும். அணை கட்டுதல் போன்ற பெரும் திட்டங்களை நடுவண் அரசின் அனுமதியைப் பெறாமல் ஒரு மாநில அரசு நிறைவேற்றி விட முடியாது. எனவே அச்சம் வேண்டாம்.

”தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதைப் பார்த்துக் கொள்ள இடைக் கால ஏற்பாட்டினை (காவிரி மேற்பார்வைக் குழு) உச்ச நீதி மன்றம் செய்துள்ளது.

“கர்நாடகம் தனது ஆளு கைக் குட்பட்ட இடத்தில் எதைச் செய் தாலும் அதைத் தமிழகம் எதிர்க்கக் கூடாது. மழை நன்கு பெய்து நீர் வரத்து சீராக உள்ளது. போதிய நீர் கிடைப்பதைக் கடவுள் கவனித்துக் கொள்வார். அண்டை மாநிலத் துடன் தமிழக அரசு எதற்கெடுத் தாலும் சச் சரவில் ஈடுபடக்கூடாது.

கர்நாடக அரசு பரிசீலிக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களால், தமிழக நலன் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு அச்சம் கொள்ள வேண்டாம். வரும் சனவரி வாக்கில் வரும் அசல் வழக்குடன் சேர்த்து இதை விசாரித்துக் கொள்ளலாம்’’.- தினமணி, The Hindu - 04.12.2013

தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் நீதி கேட்டு உச்சநீதிமன்றத்திற்குப் போனபோது இரு மாநிலங்களிலும் தண்ணீர் போதிய அளவில்லை மழை பெய்யட்டும் என்றார்கள்; இப்போது கர்நாடக அணைகளில் நிறையத் தண்ணீர் இருக்கிறது, தமிழகத்திற்கு உரிய பங்கு நீரைத் தர ஆணையிடுங்கள் என்று கோரினால், அதுதான் தண்ணீர் இரு மாநிலங்களிலும் இருக்கிறதே அவசரம் என்ன என்று கேட்கிறார்கள்.

“பற்றாக்குறை இருந்தால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது; உபரி நீர் வந்தால் மேலாண்மை வாரியம் தேவை இல்லை” என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் நிலைப்பாடோ?

உச்சநீதிமன்றம் கட்டப் பஞ்சாயத்துக்கும் குறைவாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.

அடுத்து, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நீதிபதிகள் கூறினால், சிக்கலுக்குத் தீர்வு தேடிக் கோயிலுக்குப் போகலாமே, உச்சநீதிமன்றம் போக வேண்டிய தில்லையே! நல்லவேளை அவ்வாறான அறிவுரையைத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்க வில்லை.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநீதி என்னவெனில் அண்டை மாநிலத்துடன் அடிக் கடி சண்டைச் சச்சரவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்று தமிழ் நாட்டிற்கு நீதிபதி லோதா அறிவுரை வழங்கியதுதான்!

அவருடைய அறிவுரையில் இன்னொன்றும் கவனத்திற்குரியது. கர்நாடகம் தனது ஆளுகைக் குட்பட்ட இடத்தில் எதைச் செய்தாலும் அதைத் தமிழகம் எதிர்க்கக் கூடாது என்று நீதிபதி லோதா கூறினார். அடாவடி செய்பவனுக்கு அரவ ணைப்பு; அடங்கிக் கிடப்பவனுக்கு அதட்டல்! மிரட்டல்! என்ன நீதியோ?

கர்நாடகம் 26 ஆ.மி.க தண்ணீரை நடப்புப் பருவத்திற்குத் தர வேண்டும் என்றும் அதற்கு ஆணையிடுமாறும் தமிழக அரசு கேட்டதற்கு, அதற்கெல்லாம் இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக் குழு அமைத்துள்ளோம்; அது பார்த்துக் கொள்ளும் என்று கூறி உச்ச நீதிமன்றம் ஒதுங்கிக் கொண்டது. ஆனால் நடந்த உண்மையென்ன? உச்சநீதிமன்றம் அமைத்த இடைக்கால - காவிரி மேற்பார்வைக் குழுதான் 26 ஆ.மி.க தண்ணீர் கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்றது. அதற்குக் கர்நாடக அதிகாரிகள் - அதெல்லாம் திறந்து விட முடியாது என்று அக் கூட்டத்திலேயே சொல்லி விட்டு வந்துவிட்டார்கள்.

இந்த உண்மைகள் தமிழக அரசின் மனுவில் இருந்தும் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை உச்சநீதிமன்றம். கர்நாடகம், தன் மீது சினங்கொண்டு விடக் கூடாது என்பதில் மட்டுமே உச்சநீதிமன்றம் கவனமாக இருந்தது.

கர்நாடகத்தின் இத்தனை அடாவடித்தனங்களுக்கும் உச்ச நீதி மன்றம் ஒத்துப் போவது ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய அரசு, தமிழகத்திற்கெதிராகவும் கர்நாடகத்திற்காதரவாகவும் நடந்துகொள்வது! இரண்டு, தமிழக அரசும் தமிழகக் கட்சிகளும் உரிமைக் காப்பிற்கான மக்கள் எழுச்சியை உண்டாக்காதது.

இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு மேலாண்மை வாரியம் - ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை அமைக்குமாறு நடுவண் அரசுக்கு கெடுவிதித்தது உச்சநீதி மன்றம் தான். ஆனால் கர்நாடகம் எதிர்க்கிறது என்றவுடன் இந்தியரசு மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தியது; பின்னர் மறுக்கும் நிலைக்கு வந்தது. 2013 பிப்ரவரியிலிருந்து மேலாண்மை வாரியம் அமைத்திட இன்னும் காலம் தேவை என்றும் பரிசீலித்து வருகிறோம் என்றும் ஒவ்வொரு முறையும் உச்சநீதி மன்றத்தில் சாக்குப் போக்கு சொல்லி வருகிறது. இந்திய அரசு, கர்நாடகம் எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்திற்காக - மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.

இந்த அநீதியைக்கண்டு தமிழகம் ஏன் கொந்தளிக்க வில்லை? அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏன் நடத்த வில்லை? வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் அணிவகுப்புகளும் ஏன் நடக்க வில்லை?

தமிழக மக்கள் உரிமைப் போராட்டங்கள் நடத்திட வீதிக்கு வந்திடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையல்லவா இங்குள்ள பெரிய கட்சிகள் ஏற்றுள்ளன!

காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, பாலாற்று உரிமைப் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை தமிழர்களின் வாசல் கதவைத் தட்டுகிறது.

தமிழகத்திற்கும் கேரளத்திற்குமான எல்லையை வரையறுத்து நமது பக்கமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் ஓடிவரும் நீரோடைகளை, அருவிகளை நமக் குரியதாக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். விழிப்புணர்ச்சி தேவை; வீரம் தேவை!

வெற்றி வர வேண்டுமெனில்- போராட வேண்டும். போராட வேண்டுமெனில் அறிவுத் தெளிவும் உள்ள உறுதியும் வேண்டும். அடைய வேண்டிய இலக்கு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும். இவை அனைத்தும் நிரம்பிய அமைப்பும் தலைமையும் வேண்டும். இவற்றில் எந்த ஒன்று குறைந்தாலும் வெற்றி பெற முடியாது.

காவிரி நீர் இயற்கை நமக்கு வழங்கிய உரிமை நீர்; பன்னாட்டுச் சட்டங்கள் படியும் இந்திய நாட்டுச் சட்டங்கள் படியும் நமக்குரிய பங்கு நீரைக் கர்நாடகம் அடைத்து வைத்துக் கொள்ள முடியாது. எனவே நாம் கர்நாடகத்தின் கருணையை எதிர்பார்த்திருக்க வில்லை; கர்நாடகத்தின் ஆக்கிர மிப்பை -அரம்பத்தனத்தை எதிர்த்து அறப்போர் புரிகிறோம். காவிரி உரிமையை மீட்பதற்கான நமது போராட்டம் சட்டவழிப் பட்டது, நீதி வழிப்பட்டது.

இந்த உள்ளத் தெளிவு தமிழர்களுக்கு வேண்டும். “கன்னடர்கள் கொடுக்கிற இடத்தில் இருக்கிறார்கள்; நாம் வாங்குகிற இடத்தில் இருக்கிறோம்’’ என்று நம்மில் யாராவது சொன்னால் அது விவரம் தெரியாத பேச்சு என்று ஒதுக்கிவிட வேண்டும்.

தமிழினம் இன உரிமை பேசக் கூடாது, இன அடிப்படையில் ஒன்று சேரக்கூடாது என்று கங்கணம் கட்டித்திரியும் சூது மதியாளர்கள், சூழ்ச்சித் திட்டம் வகுப்போர் நம்மைக் கையேந்தும் கூட்டமாக மாற்றிட, நம் மீது கரிசனம் கொண்டவர்கள் போல் பேசி, திசை திருப்புவார்கள்; அந்தத் தந்திரங்களைக் கண்டு தெளியும் அறிவாற்றல் நமக்கு வேண்டும்.

இந்தியாவும் 1956ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக் கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டம் வைத்துள்ளது. காவிரி சிக்கலில் இந்தச் சட்டப்படி செயல் பட இந்தியா மறுக்கிறது. இதுதான் அடிப்படைச்சிக்கல். கர்நாடகம், தடி எடுத்தவன் தண்டல்காரன் பாணியில் செயல்படுகிறது. அதன் அரம்பத் தனத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா நடந்து கொள்கிறது.

கர்நாடகத்திற்கும் இந்திய அரசுக்கும் நெருக்கடிகள் கொடுக்கத் தக்க போராட்டங்களைத் தான் இனி நடத்த வேண்டும்.

இவ்வாறான நெருக்கடி கொடுக்கும் போராட்டத்தை முதல்முதலாக 17.07.1991 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தியது. “காவிரி நீரைத் தடுத்து வைத்துள்ள கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் செல்லாமல் நிறுத்து!” என்ற முழக்கத்துடன் த.தே.பொ.க.வின் அன்றையத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் இன்றைய பொதுச்செயலாளருமான தோழர்கி.வெங்கட்ராமன் தலைமையில் நெய்வேலி நிலக்கரிக் கழகத் தலைமை நிர்வாகியை அவரது அலுவலகத்தில் வைத்து திடீ ரென்று 35 தோழர்கள் முற்றுகை (கெரோ) செய்தார்கள். இரண்டாவது அனல்மின் நிலையத்திலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தச் சொல்லுங்கள் என்றார்கள். 35 தோழர்களும் தளைப்படுத் தப்பட்டு, கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாட்களுக்குப் பிறகு பிணையில் வந்தனர்.

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் திரைப்படத்துறையினர் 12.10.2002 அன்று நெய்வேலியில் காவிரிக்காக மேற்படிக் கோரிக்கையை வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 13.12.2003 அன்று தமிழ்த் தேசிய முன்னணி கல்லணையில் தொடங்கி 22.12. 2002 அன்று நெய்வேலியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று, 200க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள்.

இந்தப் போராட்டத்தை அடையாளப் போராட்டமாக இல்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் நெய்வேலி நிலக்கரிக் கழகத்தையும் மின் உற்பத்தி நிலையங்களையும் வாரக் கணக்கில்முற்றுகையிடும் போராட்டமாக அங்கேயே சமைத்துச் சாப்பிட வேண்டும். ஒரு முடிவு வரும் வரை அந்த இடத்தை விட்டு அகலக்கூடாது. அப்படி ஒரு போராட்டத்திற்கு இனி ஆயத்தமாக வேண்டும். இன்றும் நெய்வேலியிலிருந்து 11 கோடி யூனிட் மின்சாரம் அன்றாடம் கர்நாடகம் போகிறது.

கர்நாடகத்திற்கெதிராகப் பொருளியல் தடை விதிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கும் எப்பொருளும் போகாமல் பல நாட்களுக்கு அனைத்து முனைகளிலும் மறியல் போராட்டம் நடத்த வேண்டும்.

இதற்கு முன்னோடியாக ஓர் அடையாளப் போராட்டத்தை 1995ஆம் ஆண்டு த.தே.பொ.க. நடத்தியது. கர்நாடகத்திற்குப் பொருளியல் தடை விதிக்கக் கோரி கர்நாடக எல்லை நகரமான சத்தியமங்கலத்தில் 25.09.1995 அன்று தோழர் பெ.மணியரசன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. அப்போது ஒரு கர்நாடகப் பேருந்து எரிக்கப் பட்டதாக த.தே.பொ.க. தோழர் குழ.பால்ராசு (இப் பொழுது தஞ்சை மாவட்டச் செயலாளர்) தலைமையில் 12 பேர் தளைப் படுத்தப்பட்டு அவினாசிச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்து இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்டங்களை நடத்த வேண்டும். இதற்கும் முன்னோடியாக “காவிரி என்ற ஓர் இயற்கை வளத்தைப் பாதுகாத்துத்தராத இந்திய அரசே, காவிரிப் படுக்கையில் கிடைக்கும் இன்னொரு இயற்கை வளமான நரிமணம் பெட்ரோலியத்தை எடுத்து செல்லாதே’’ என்ற முழக்கத்துடன் த.தே.பொ.க. (அப்போது எம்.சி.பி.ஐ) கல்லணையிலிருந்து மிதிவண்டிப் பரப்புரை சில நாள் சென்று வந்து 26.08.1991 அன்று அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் க.பழநிமாணிக்கம் தலைமையில் நரிமணம் பெட்ரோல் கிடங்கில் முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

அதன் பிறகு தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் (த.தே.பொ.க, த.த.இ., த.ஒ.வி.இ., த.த.பே.) தோழர் பெ.மணியரசன் தலைமையில் கங்களாஞ்சேரி முனையிலிருந்து நரிமணம் செல்லும் நரிமணத்திலிருந்து வரும் பெட்ரோலிய ஊர்திகளை மறித்துப் பெருந்திரள் போராட்டம் நடத்தியது.மீண்டும் 23.02.2013அன்று இந்திய அரசு நிறுவனமான அடியக்க மங்கலம் பெட்ரோல் கிணறு முற்றுகைப் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடத்தப்பட்டது.

எனவே, கர்நாடகத்திற்கும், இந்திய அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் போராட்டங்கள்யாவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவை அடையாளப் போராட்டங்களாக மட்டுமே நடந்தன. இனி, முழுஅளவில் வாரக்கணக்கில், மாதக்கணக்கில், இருபதாயிரம் பேர், பத்தாயிரம் பேர் கலந்து கொள்ளும் போராட்டங்களாக அங்கேயே உணவு சமைத்து உண்டு தொடரும் போராட்டங்களாக சனநாயகப் போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடத் தவறும் இனம் அழிந்து விடும். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு என அனைத்தையும் இழந்து வரும் தமிழினம் இவற்றின் உரிமைகளை மீட்கப் போராடியாக வேண்டும் என்று வரலாறு வற்புறுத்துகிறது.

காவிரித் தண்ணீரைக் கொண்டு 28 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்து வந்தோம் அதை 24 லட்சத்து 500 ஏக்கராகத் தீர்ப்பாயம் குறைத்து விட்டது. அதே நேரம், கர்நாடகத்திற்கு, இடைக்காலத் தீர்ப்பின் போது 1991இல் 11,10,000 ஏக்கர் சாகுபடிப் பரப்பு. இறுதித் தீர்ப்பில் 21,00,500 ஏக்கர் சாகுபடிப் பரப்பு. இரு மடங்கு உயர்த்திக் கொடுக்கப் பட்டது.

தமிழகத்திற்குத் தீர்ப்பாயம் பெரும் அநீதி இழைத்துவிட்டது. அந்த அநீதியை எதிர்த்துப் போராடி நமது உரிமையை நிலைநாட்ட வேண்டிய நாம், அநீதி வழங்கிய தண்ணீரையாவது கொடு என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். ஓடுபவனைக் கண்டால் துரத்துபவனுக்குத் தொக்கு! காவிரியில் கன்னடர்களிடம் நாம் தோற்றதைப் பார்த்த மலையாளிகள் துணிவு பெற்று முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்.

வஞ்சிக்கப்பட்ட தமிழர்களே நெஞ்சு நிமிர்த்துங்கள்!

கெஞ்சிக் கேட்க, இது பிச்சை யல்ல, நமது உரிமை!

காவிரி டெல்டா மாவட்டங் களில் மட்டுமல்ல,

தமிழகம் முழுவதும் போராட் டம் பரவட்டும்!

இது தமிழினத்தின் தன்மானப் போராட்டம்!

கர்நாடக அரசையும் இந்திய அரசையும்

பணிய வைக்கும் போராட்டங் கள் நடத்துவோம்!

காவிரியில்லாமல் வாழ்வில்லை, களம் காணாமல் காவிரியில்லை.

வரலாறு அழைக்கிறது! தமிழர்களே! வாருங்கள் போர்க் களத்திற்கு!

Pin It