(உலக விருத்த ஆராய்ச்சியை முன்வைத்து)

காரண - காரிய இயைபு அல்லது இயை பின்மையை விளக்கும் அறிவாராய்ச்சியின் ஒரு வகை அணுகுமுறையைத் ‘தருக்க நெறி’ என்பர். இந் நெறி நிற்கும் தருக்கவாதிகள் பலர்; தருக்கவாத முறைகளும் பல; அவரவர் சார்ந்த மெய்யியலுக்கேற்பக் கட்டமைக்கப்படும் தருக்கநெறிகளுள் பௌத்தத் தருக்க நெறியை - அளவையியலை அறவண அடிகளின் வழியாக மணிமேகலை எவ்வாறு பதிவுசெய்துள்ளது என்பது ஆராய்தற்குரியது. இத்தகைய தருக்கவாதத்தைத் தமிழில் முதன்முதலில் முன்வைக்கும் தருக்கவாதியாக அறவண அடிகள் விளங்குவதை இந்தக் கட்டுரை விளக்கி முன்வைக்கிறது.

உலக விருத்தம் (29 : 162) என்னும் ஒரு தொடர்

மணிமேகலையின் 29ஆம் காதையான ‘தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை’யில் இத்தொடர் இடம் பெற்றுள்ளது. ‘உலோக விருத்தம்’ என்று ஓரிடத்திலும் (29 : 149-150), ‘உலக விருத்தம்’ என்று ஓரிடத்திலுமாக (29:162) இரண்டு இடங்களில் பதிவுபெற்றுள்ளது. மணிமேகலைக்குப் பௌத்த அளவையியலை அறவண அடிகள் விளக்கிப் போதிக்கும் பகுதியில் இத்தொடரைச் சாத்தனார் கையாண்டுள்ளார்.

27வது காதையான ‘சமயக் கணக்கர் தம்திறம் கேட்ட காதை’யில் மணிமேகலை தோன்றிய காலத்தில் வழக்கிலிருந்த ஐந்து சமயங்களின் மெய்யியல் சிந்தனைகளை அவ்வச் சமயவாதிகள் மணிமேகலைக்குச் சொல்கின்றனர். அச் சமயங்களின் வாதங்கள் முறையே, வைதீகவாதம், ஆசீவகம், சாங்கிய வாதம், வைசேடிக வாதம், பூதவாதம் ஆகியவையாகும். இவற்றை யெல்லாம் கேட்ட மணிமேகலை, இவையெல்லாம் தம் ஏற்புக்குரியனவாக இல்லை என முடிவெடுத்து, அறவண அடிகளிடம் சென்று பௌத்த வாதத்தைக் கேட்குமிடத்தில் இவ் ‘உலகவிருத்தம்’ பற்றிய விளக்கம் இடம்பெற்றுள்ளது.

அளவை வாதங்களின் பின்னணியில்

பௌத்த அளவைவாதம்

முதலில் வைதீக அளவைவாதியிடம் அவர்தம் அளவையியலைக் கேட்கும்போது வைதீக அளவை வாதத்தின் முறைகள் வேதவியாதன் ‘பத்து’ என்றும் கிருதகோடி ‘எட்டு’ என்றும் சைவிமி ‘ஆறு’ என்றும் வரையறுத்துள்ளனர் என்று கூறிவிட்டு முறையே பத்து வகையான அளவைவாதங்களை விளக்கிச் சொல்கிறான். அப் பத்து அளவை வகைகள் வருமாறு : காட்சியளவை, கருத்தளவை, உமவ அளவை, ஆகம அளவை, அருந்தாபத்தியளவை, இயல்பளவை, ஐதீகவளவை, அபாவ அளவை, மீட்சியளவை, உள்ளநெறியளவை ஆகியன.

இவ்வாறு வைதீக அளவைவாதம் 10 எனக் கூறியுள்ள அளவைகளைப் பௌத்த அளவையியல் முதல் இரண்டுக்குள் (2) அடக்கிக் காட்டுகிறது என்பதை 29-வது காதையான இப்பகுதி விவரிக்கிறது. புத்தரின் போதனைகள் தருக்கவியற் கூறுகளைத் தன்னகத்தே கொண்ட மெய்யியலாக வெளிப் பட்டிருந்தது. ஆனால், தருக்க நெறிகளுக்கான விளக்கங் களையோட தருக்க நெறிக்கான கட்டமைப்புகளையோ புத்தர் முன்மொழிந்தாரில்லை. எனவே, புத்தரின் தேரவாத பௌத்தம் தருக்கத் துறையில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது. இதனால் தான், புத்தர் பிரானே ‘தருக்க முடிச்சுகளிலும் அப்பாலைத் தத்துவங்களிலும் ஈடுபடக் கூடாது’ என எச்சரித்தார். எனினும், பழைய நூல்களில் கூறப்பட்டன என்பதற்காக எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினையும் கண்டித்தார். ஞானசார சமுச்சயத்தில்,

“நன்றாக உருக்கியும், சோதித்தும், கட்டளைக் கல்லில் உரைத்துப் பார்த்தும் பொன்னின் மாற்றினைச் சோதிக்கும் அறிஞனைப் போல என் சொற்களையும் நன்றாக ஆராய்ந்த பிறகுதான் நீங்கள் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்; என்னிடம் வைத்திருக்கும் மரியாதை காரணமாக என் சொற்களை ஏற்க வேண்டாம்”

(கந்தசாமி., சோ.ந. 1977:189)

என்றார் புத்தர். புத்தரின் மெய்யியலையும் அவருக்குப் பின்வந்த பௌத்த அறிஞர்களின் மெய்யியல் விளக்க முறைமைகளையும் விரிவாக ஆராய்ந்த ஷேர்பட்ஸ்கி எனும் அறிஞர் இதனை உறுதிப்படுத்துகிறார். ஷேர்பட்ஸ்கி எழுதிய ‘பௌத்த அளவையியல் (Buddhist Logic) என்னும் நூல் இது குறித்த பல்வேறு ஆய்வு முடிவுகளைத் தருகிறது.

மகாயான பௌத்தப் பிரிவுகள்தாம் பௌத்த அளவையியலை வளர்த்தெடுத்தன. மாத்யமிக மகாயானப் பிரிவை உருவாக்கிய நாகார்சுனர் வைதீகமும் நியாயமும் வளர்த்தெடுத்திருந்த அளவைகளில் பிரத்தியட்சம், அனுமானம், உபமானம், சப்தம் அல்லது ஆகமம் என்னும் நான்கு அளவைகளை வளர்த்தெடுத்தார். முற்கால யோகாகாரப் பிரிவினை வளர்த்த மைத்திரேயர், அசங்கர் ஆகியோர் பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம் என்ற மூன்று அளவைகளைக் கைக்கொண்டனர். பிற்கால யோகாசாரம் அல்லது சௌந்திராந்திக யோகா சாரப் பிரிவினை உருவாக்கிய வசுபந்து, திக்நாகர், தரும கீர்த்தி ஆகியோர் முதல் இரண்டு அளவைகளை மட்டுமே ஏற்றனர். இவர்களில் வசுபந்துவைத்தான் ‘ஆதி சினேந்திரன்’ என்று குறிப்பிட்டுள்ளார் சாத்தனார் என்பது ஷேர்பட்ஸ்கியின் ஆய்வு முடிவாகும் (Stcherbatsky., F.Th.. தி.ஜிலீ.. 1962 : 32).

மணிமேகலையில் அளவைவாதங்கள்

பௌத்த மெய்யியலின்படி அளவைகள் இரண்டு. அவை, காட்சியளவை, கருத்தளவை என்பன. இதை மணிமேகலைக் காப்பியம்,

‘ஆதி சினேந்திரன் அளவை இரண்டே

ஏதமில் பிரத்தியக்கம் கருத்தளவு என்ன’ (29 : 47-48)

எனக் குறிப்பிடுகிறது. இவ் இரண்டனுள் கருத் தளவையின் வகைக்குள் இடம்பெறுவதே இவ் ‘உலக விருத்தம்’ என்பது.

கருத்தளவையை வடமொழியில் அனுமானம் என்கின்றனர். ‘காட்சியளவை’ யைப் ‘பிரத்தியக்கம்’ என்று வடமொழிச் சொல்லாலேயே குறிப்பிட்டுள்ள சாத்தனார் ‘கருத்தளவை’யை மட்டும் ‘அனுமானம்’ என வடமொழிச் சொல்லால் குறிப்பிடாது ‘கருத்தளவு’, என்னும் தமிழ்ச் சொல்லால் பதிவுசெய்துள்ளார். இனி, கருத்தளவைக்குள் ‘உலக விருத்தம்’ இடம்பெறுமாற்றைக் காணலாம்.

கருத்தளவை (அனுமானம்) என்பது காரணானு மானம் (பூர்வசத்து), காரியானுமானம் (சேஷவத்து), சாமானியானுமானம் (சாமான்யதோ திருஷ்டா) என மூன்று வகைப்படும். இம் மூன்று வகையுள் காரணானு மானம், சாமானியானுமானம் என்ற இரண்டு பிழை படுவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், இவற்றுள் பிழையாதது ‘காரியானுமானம்’ என்ற ஒன்றேயாகும் என்கிறார் சாத்தனார் (29 : 52 -56). இத்தகைய கருத்தளவை ஐந்து உறுப்புகளைக் கொண்டது. அவை முறையே, பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் என்பனவாகும். (29 : 57). இவற்றுள் பக்கம், ஏது, திட்டாந்தங்களில் நல்லனவும் உள, தீயனவும் உள. இதன்படி, இவற்றை, நன்பக்கம் (Valid Thesis), நல்லேது (Valid reason),), ஏதமில் எடுத்துக்காட்டு (Valid Reason) என்கிறார் சாத்தனார். இம் மூன்றிற்கும் உரிய விதிகளி லிருந்து பிறழ்ந்தவற்றைத் தருக்கப் போலிகள் (தீயன) ((Logical Fallacies) என்பர்.

பக்கம் என்பதற்கு, ‘இம் மலை நெருப்புடைத்து எனல்’ என்கிறது மணிமேகலை (29 : 59). இப் பக்கம், தன்பக்கம் (சபக்கம்), மறுதலைப் பக்கம், (விபக்கம்) என்ற இருவகைப்படும். தன்பக்கமாவது நன்பக்கம் என்றும் மறுதலைப் பக்கமாவது தீயபக்கம் என்றும் கூறப்படும். நன்பக்கம் என்பது பிற ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம் ஆகியவற்றைத் துல்லியமான அளவை நெறியில் கொண்டு சேர்க்கும். இதைக் கீழ்வரும் எடுத்துக்காட்டுத் தொடர்ச்சியின்மூலம் மணிமேகலை விளக்குகிறது:

‘இம்மலை நெருப்பையுடையது; - பக்கம்

‘இம்மலை நெருப்பை யுடையது’

எவ்வாறெனில், மலை புகையுடையதாய்                ஏது

இருக்கிறது - ஆதலால்’           

‘இம்மலை புகையுடையதாதலால் நெருப்பை யுடையது;

எவ்வாறெனில், பலவகைப்பட்ட

அடுக்களைகளில் புகைவருவது போல’ திட்டாந்தம்

‘அடுக்களைகளில் புகைவருவது போல

இம்மலையும் புகையை உடையதாய்          உபநயம்

இருக்கிறது’

‘எதெல்லாம் புகையுடையதாய் இருக்கிறதோ

அதெல்லாம் நெருப்புடையது எனல்’        நிகமனம்

மேற்கண்ட எடுத்துக்காட்டுத் தொடர்ச்சியில் ஒரு வகை இயைபும், முரணும் கலந்தரு மயக்கப் போக்கு காணப்படுகிறது. இந்தப் பின்புலத்தில், பக்கம் என்பதற்கான கூற்றை இருநோக்குகளிலும் அணுகிக் காணலாம். அதாவது,

1.            ‘இம்மலை நெருப்புடையது’ என்பதை மலையில் உள்ள மரங்கள் உரசிக் கொள் வதாலோ பாறைகள் உடைந்து பாறைக்கற்கள் மோதிக் கொள்வதாலோ அறிய முடியும் என்ற நேர்நிலை அனுபவ அனுமானம் - இது ஒரு நோக்கு

2.            ‘இம்மலை நெருப்புடையது’ என்பதைச் சமவெளியில் நெருப்புண்டாவதன் காரண - காரியக் கூறுகளுடன் ஒப்புநோக்கி தூரத்தி லிருந்து கண்டவாறே அறிய முடியும் என்ற சார்நிலை அனுபவ அனுமானம் - இது இன்னொரு நோக்கு.

முதல் நோக்கை (ஒரு நோக்கை) ‘நன்பக்கம்’ என்றும் இரண்டாம் நோக்கை (இன்னொரு நோக்கை) ‘தீயபக்கம்’ என்றும் கொள்ளலாம் (நன்பக்கம், 29 : 113-121), (தீய பக்கம் 29 : 154-190).

இந்த ‘நன்பக்கம்’ என்பதுடன் நல்லேது (29 : 121-135), ஏதமில் எடுத்துக்காட்டு (29 :136-141) என் பவையும் சேர பௌத்த தருக்கத்தின் முக்கூற்று முடிவுக்குரிய நல்உறுப்புக்கள் (Valid Members) மூன்றாகின்றன. இம்முக்கூற்று முடிவினைத் திக்நாகர் ‘பரார்த்தனுமானம்’ என்கிறார். இவை பௌத்த தருக்கத்திற்கான நல்ல அடிப்படைகளாக விளங்கு கின்றன.

முக்கூற்று நல்லுறுப்புக்களின் தருக்கநெறியில் ஏற்படும் பிறழ்ச்சிகளால் ஏற்படும் குற்றங்கள் - தீமை களை உருவாக்குபவற்றைத் தருக்கப் போலிகள் ( Logical Fallacies) என்பர். இதனடிப்படையில், ஏற்படும் தீய தருக்கப் போக்குகளை முறையே பக்கப் போலிகள் (Fallacies of thesis), ஏதுப் போலிகள் (Fallacies of Reason), எடுத்துக்காட்டுப் போலிகள் (Fallacies of Examples) என வழங்குவர் பௌத்தத் தருக்கவியலார். இவற்றுள் பக்கப் போலிகள் 9 நிலைகளிலும் (29 : 154-190), ஏதுப் போலிகள் 14 நிலைகளிலும் (29 : 195-324), எடுத்துக் காட்டுப் போலிகள் 10 நிலைகளிலும் (29 : 340 - 468) எழுகின்றன என்பதை மணிமேகலை மிகத் தெளிவாக விளக்குகிறது (கந்தசாமி.,சோ.ந. 1977 : 208, Balusamy.N. 1965 : 102)

பக்கப் போலிகளில் ‘உலக விருத்தம்’

9 நிலைகளில் எழும் பக்கம் போலிகளுள் 4-வது நிலையாக இடம்பெறும் ‘உலக விருத்தம்’ என்பதும் ஒன்று. இதை,

‘பக்கப் போலி ஒன்பது வகைப்படும்

பிரத்தியக்க விருத்தம் அனுமான

விருத்தம் சுவசன விருத்தம் உலோக

விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

சித்த விசேடணம் அப்பிர சித்த

விசேடியம் அப்பிர சித்த வுபயம்

அப்பிர சித்த சம்பந் தம்மென’                       (29 : 147-153)

என்றவாறு பதிவுசெய்துள்ளது மணிமேகலை.

இவற்றுள் ‘உலக விருத்தம்’ என்பதற்கான விளக்கத்தை மணிமேகலை கீழ்வருமாறு கூறியுள்ளது.

‘உலக விருத்தம் உலகின் மாறாம் உரை

இலகுமதி சந்திரன் அல்ல என்றல்’             (29 : 162-163)

இதன்பொருள்,

‘உலக விருத்தம்’ என்பது உலக வழக்குக்கு மாறாக உரைத்தலாகும். அதாவது, வானில் இலகுகின்ற மதியைச் சந்திரன் அல்ல என்று கூறுவதாகும்’

என்பதாகும். உலக இருப்பிலும் இயக்கத்திலும் இருக்கும் ஒன்றை - உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்படும் ஒன்றை - இல்லை என்று கூறுதல் காரண - காரிய இயைபில்லாத ஒன்றல்லவா? உலகம் உண்டு என்பதை இல்லை எனல் போலி உரையாகும். எனவே, இவ்வாறு உரைப்பதை ‘உலக விருத்தம்’ (உலகப் போலி அல்லது உலகக் குற்றம்) என்கிறது பௌத்த தருக்கவியல். பௌத்தத் தருக்கவியலின் வளர்ச்சிக்குப் பெருங்கொடை நல்கிய நியாயத் தத்துவ நூலான நியாயப் பிரவேசம், ‘உலக விருத்தம்’ என்பதற்கு, ‘மனிதர் மண்டையோடு தூய்மையுடையது. உயிருடம்பினுறுப்பாதலால், சங்குச்சிப்பி போலும் என்று கூறுவது’ என்று கூறுகிறது. (வைசேடிக சூத்திரம் வீவீவீ 2.8.12 - ஒளவை உரை., மணிமேகலை, 1964 : 514).

உலகின் இயல்பை உள்ளதை உள்ளவாறு புரிந்து கொள்ளாமல் மாறுகொளப் புரிதலும் மாறுகொள உரைத்தலும் ஆகாது என்பதைப் பௌத்தத் தருக்கவியல் இவ் உலக விருத்தத்தின்வழி உணர்த்துகிறது எனலாம்.

இவ்வாறு, பௌத்தத் தருக்கவியல் அறிவுக்குகந்த, அறிவாராய்ச்சிக்குட்பட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது. ஏனெனில், இவ்வுலகப் பிரச்சினைகள் அனைத்துக்குமான தீர்வைத் தரவல்லது, அறிவாராய்ச்சி யியலேயாகும். இத்தகைய அறிவாராய்ச்சியியலின் அணுகுமுறைப் பின்புலத்தில் தருக்கங்களை வகுத் துணர்த்துப் பயன்படுத்துவதால் பௌத்த தருக்கவியலை ‘அறிவாராய்ச்சித் தருக்கம்’ (Epistomological logic) என அழைக்கலாம். (Stcherbatsky., F.Th.1962 :1).

முடிவுரையாக...

இதுவரை ஆராய்ந்த பௌத்தத் தருக்கவியலை முதன் முதலில் மணிமேகலைக் காப்பியமே பதிவு செய்துள்ளது. எனவே, காப்பியத்தைப் படைத்த சீத்தலைச் சாத்தனாரும் பௌத்தத் தருக்கவியலின் மாபெரும் அறிஞராகத் தமிழகத்தில் நிலவியுள்ளார் என்பது பெறப்படுகிறது. சாத்தனார் காப்பியத்தில், மணிமேகலைக்குப் பௌத்தத் தருக்கவியலைக் கற்பித்த பௌத்த ஞானியாக அறவண அடிகளைப் படைத் துள்ளார். இதிலிருந்து, முப்பெரும் பௌத்தத் தருக்கவியல் அறிஞர்களை மணிமேகலைக் காப்பியத்தில் காணமுடிகிறது. அவர்கள் முறையே, சீத்தலைச் சாத்தனார், அறவண அடிகள், மணிமேகலை ஆகியோ ராவர். இவர்களுள், மணிமேகலைக்குப் பௌத்தத் தருக்கவியலைக் கற்பித்ததாலும், அக்கால பௌத்தத் தமிழ் ஞானியருள் ஒருவராக அறவண அடிகள் விளங்குவதாலும் அறவண அடிகளே தமிழின் முதல் தருக்கவாதியாகத் திகழ்கிறார் என்பது தெளிவாகிறது.

பயன்பட்ட நூல்கள்

1) உ.வே.சா., 2008, மணிமேகலை - அரும்பதவுரை, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை - 90.

2) கந்தசாமி., சோ.ந. 1977, பௌத்தம், டாக்டர் ஷி.இராதா கிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக் கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

3) வேங்கடசாமி., நாட்டார் ந.மு, 1964, ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை உரை, தி.சை.சி.நூ.ப. கழகம், திருநெல்வேலி - 6.

4) Stcherbatsky., F.th. 1962, Buddhist logic, Vol -1, 2, Dover publications, Inc. New Yark.


Balusamy.,N. 1965, Studies in Manimekalai, Athirai Pathippakam, Madurai -13.

 

Pin It