பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவரும், சோழவந்தான் தமிழறிஞர் அரசஞ் சண்முகனாரும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து தமிழ் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது, ‘ஸ்காட்’ என்னும் ஆங்கிலேயப் பாதிரியார் அங்கே வந்தார். வந்த பாதிரியார், “திருக்குறளில் பல இடங்களில் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. எனவே, திருக்குறளைத் திருத்தி, எதுகை, மோனை அனைத்துக் குறள்களிலும் இடம் பெறுமாறு எழுதி ஒரு நூல் அச்சிட்டுள்ளேன்” என மகிழ்ச்சிப் பொங்கிடக் கூறியதுடன், நூலின் ஒரு பிரதியையும் பாண்டித்துரைத் தேவரிடம் கொடுத்தார்.

        pandiduraiதிருக்குறளைத் திருத்தி எழுதி அச்சாக்கியிருக்கும் செய்தியைக் கேட்டதுமே, அருகிலிருந்து அரசஞ் சண்முகனாரின் கண்கள் கோபத்தினால் சிவந்தன; உள்ளம் கொதிப்படைந்தது.

        பாண்டித்துரைத் தேவர், அந்தப் பாதிரியாரை, அச்சிடப்பட்ட நூல்களுடன், அவரது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வருமாறு’ வேண்டினார். மேலும் அதற்குரிய தொகையை அளித்து விடுவதாகவும் கூறினார். அந்த ஆங்கிலேயப் பாதிரியார் அகமகிழ்ந்து, உடனே சென்று அச்சிட்ட அனைத்து நூல்களையும், தமது கையெழுத்துப் பிரதியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, பாண்டித்துரைத் தேவரிடமிருந்து ஒரு கணிசமான தொகையையும் பெற்றுச் சென்று விட்டார்.

        பாண்டித்துரைத் தேவர், சும்மா இருப்பாரா? பிழையாக அச்சிடப்பட்டிருந்த திருக்குறள் நூல்களைப் பெற்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில் தீயிட்டுச் கொளுத்தி அதன் சாம்பலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டார். திருக்குறளைப் புரிந்து கொள்ளாத ஆங்கிலப் பாதிரியாரின் அறிவீனத்தையும், மண்டைக் கொழுப்பையும் மண்ணில் புதைத்தவர் மன்னர் பாண்டித்துரைத் தேவர்! இது கற்பனையல்ல, வரலாற்று உண்மை!

        இசை மேதையும் பாலவனத்தம் ஜமீன்தாருமாகிய பொன்னுச்சாமித் தேவரின் புதல்வராக 21.03.1867 ஆம் நாள் பிறந்தார் பாண்டித்துரைத் தேவர்.

        பாண்டித்துரைத் தேவர் தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுக் கொண்டவராகவும், ஆங்கிலப் புலமையுடையவராகவும், ஆய்வுத் திறமை படைத்தவராகவும், இசை ஞானமும், தமிழ் ஞானமும் ஒருங்கே பெற்றவராகவும் விளங்கினார். அனைத்திற்கும் மேலாக, வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவராக வாழ்ந்தார்.

        இராமநாதபுரத்து அரசவைக் கொலு மண்டபமும், பாண்டித்துரைத் தேவரின் ‘சோமசுந்தர விலாச மாளிகை’யும் இனிய தமிழ்ப் புலவர்களும், சிறந்த தமிழறிஞர்களும் நிறைந்திருக்கும் கலை இலக்கிய கூடமாகத் திகழ்ந்தது.

        ஒருமுறை பாண்டித்துரைத் தேவர் மதுரைக்கு வந்துள்ளதை அறிந்து, தமிழன்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தனர். பத்து நாட்களுக்கு, திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென அவரை விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றார் பாண்டித்துரைத் தேவர். தமது கையில் எந்த நூலும் அப்போது எடுத்துவரவில்லை. எனவே, திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய இரண்டு நூல்களைக் கொண்டு வந்து தருமாறு அவர்களிடம் கேட்டார். திருக்குறளும், கம்பராமாயணமும் அங்கு எவரிடமும் இல்லை என்பதை அறிந்து திடுக்கிட்டார். ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் திருக்குறளும், கம்பராமாயணமும் இல்லாது போயினவா’ என்று மிகுந்த வேதனையடைந்தார். பின்னர், புது மண்டபத்திற்கு ஒருவரை அனுப்பி, அங்கும் தேடித்தேடித் திருக்குறள் நூலை வாங்கி வரச் செய்தார்; அதன் பின்னர், பத்து நாட்கள் தொடர் சொற்பொழிவாற்றினார்.

        “தமிழ் நூல்களைப் பெற்றிராத தமிழர்கள், மதுரையில் மட்டுமன்று, தமிழ் நாடெங்கும் வாழ்ந்து வருகின்றனரே! அந்தியர் ஆட்சி, ஆங்கில மொழி மீது மோகத்தையும், தாய்த் தமிழ் மீது தாழ்ச்சியையும், தமிழர்கள் கொள்ள வைத்துள்ளதே? மொழிப்பற்றின்றிப் பாழ்பட்டுள்ள தமிழர்களுக்குப் பைந்தமிழுணர்வை நாம் ஊட்ட வேண்டாமா? எனத் தம் தமையனார் மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.

        அதைச் செவிமடுத்த, மன்னர் பாஸ்கர சேதுபதி, “அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?” என வினவினார். “தமிழுக்கு உயிர்ப் பூட்டவும், தமிழ் உணர்வுக்கு உரமூட்டவும் வேண்டும். தமிழ்ச் சங்கம் ஒன்றை மதுரையில் உருவாக்க வேண்டும்” என உறுதிபடக் கூறினார் பாண்டித்துரைத் தேவர்.

        தமிழ்க் கல்லூரி உருவாக்குதல் - சுவடிகள், நூல்கள் தொகுத்தல் – வெளியிடுதல் - பிறமொழி நூல்களை மொழிபெயர்த்துப் பதிப்பித்தல் - முறையாகத் தமிழ்த் தேர்வு நடத்துதல் – தமிழாராய்தல் - புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அரங்கேற்றுதல், இதழொன்று நடத்துதல் முதலிய உயரிய குறிக்கோள்களைக் கொண்டு, தமிழ்ச் சங்கம், தொடங்க முடிவு செய்தார். அதன்படி, மதுரையில் 14.09.1901 ஆம் நாள், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தலைமையில், மன்னர் பாஸ்கர சேதுபதியின் முன்னிலையில், தமிழறிஞர்களும், தமிழன்பர்களும் குழுமியிருக்க தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது.

        மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியை அடுத்திருந்த கட்டிடங்களில், ‘சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை’, ‘நூல் ஆராய்ச்சி சாலை’, ‘பாண்டியன் புத்தக சாலை’ முதலிய அமைப்புகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடங்கப்பெற்றன.

        தமிழ்ச் சங்கத் தொடக்க விழாவிற்கு, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா, இரா. இராகவய்யங்கார், பரிதிமாற் கலைஞர், சோழவந்தான் அரசஞ் சண்முகனார் முதலிய தமிழறிஞர் பலர் தமிழகமெங்குமிருந்து வருகை தந்தனர். பாண்டித்துரைத் தேவரை ‘பைந்தமிழ்க் காவலர்’ எனப் புகழ்ந்து போற்றினார். தமிழ்ச் சங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துக் கருத்துரைகள் வழங்கினர். இதுவே, முத்தமிழ் வளர்த்த மதுரையில் உருவான நான்காம் தமிழ்ச் சங்கமாகும்!

        தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கேயே தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உண்டி உறையுள் அளித்து படிக்க வைத்தார் மன்னர்! தேர்வு நடத்திப் புலவர் பட்டம் வழங்கித் தமிழ் அறிஞர்களாகவும் தமிழாசிரியர்களாகவும், தமிழகத்திற்கு அளித்து மகிழ்ந்தார் பாண்டித்துரைத் தேவர்.

        யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைக் கொண்டு, ‘திருக்குறள் பரிமேலழகர் உரை’, ‘திருக்கோவையார் உரை,’ ‘சேது புராணம்’ முதலிய பழந்தமிழ் நூல்கள் பலவற்றை ஏட்டுச்சுவடிகளிலிருந்து முதன் முதலில் அச்சில் பதிப்பித்தார். ‘தமிழ்த் தாத்தா’, உ. வே. சா, ‘புறநானூறு’, ‘புறப்பொருள் வெண்பாமாலை’, ‘மணிமேகலை’ போன்ற அரிய தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க உதவி செய்தார்.

        சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார், கலைக்களஞ்சிய அகராதிக்கான செய்திகளைச் சேர்த்து வைத்திருந்தார். அச்செய்திகளைத் தொகுத்து ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலாக வெளியிடப் பொருளுதவி செய்தார்.

        தேவாரத் திருமுறைப் பதிப்புகளையும், சிவஞான சுவாமி பிரபந்தத் திரட்டு நூலையும், சிவசமவாதவுரை மறுப்பு’ என்ற நூலையும், தகுதிவாய்ந்த பெரும்புலவர்களைக் கொண்டு வெளியிட்டார்.

        ‘பன்னூற்றிரட்டு’, ‘சைவ மஞ்ஞரி’ முதலிய நூல்களைத் தாமே தொகுத்து வெளியிட்டார்.

        சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாருக்குப் பின்னர், அவரைப் போலவே, பாண்டித்துரைத் தேவர் இயற்றிய ‘காவடிச் சிந்து’ மிகவும் புகழ் வாய்ந்த நூலாகும்.

        தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக, ‘ஞானாமிர்தம்’, ‘வில்லி பாரதம்’, யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் ‘தமிழகராதி’ முதலிய நூல்கள் வெயியிடப்பட்டன.

        பாண்டித்துரைத் தேவர் நாவன்மை பெற்றுச் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினார். தமிழ் நூல்கள் பலவற்றை முயன்று பதிப்பித்துள்ளார். தாமே பல நூல்களைப் படைத்தளித்துள்ளார். துமிழ் வளர்ச்சிக்காக நான்காம் தமிழ்ச் சங்கம் கண்டதுடன், சிறந்த நாட்டுப் பற்றாளராகவும், விடுதலை உணர்வு கொண்டவராகவும் விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக, கப்பலோட்டிய தமிழர் வ. உ. சி. யின் சுதேசிக் கப்பல் குழுமத்திற்கு ஒன்றைரை லட்சம் ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்த வள்ளல் ஆவார்.

        நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவர் முதுமை எய்துமுன், தமது நாற்பத்து நான்காவது நடுவயதில், 02.12.1911 ஆம் நாள் இமை மூடினார். ‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ எனும் புரட்சிக்கவிஞர் வாக்கிற்கு ஏற்ப பாண்டித்துரைத் தேவரின் புகழ் என்றும் சாவதில்லை; அழியாமல் நிலைத்து நிற்கும்!

- பி.தயாளன்

Pin It