“மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று செயலலிதா கூறுவது சனநாயகக் குரல் தானே?
ஒரு சிறு திருத்தம்; “மக்களால் நான், மக்களை அடிமைப்படுத்த நான்” என்று செயலலிதா சொன்னால், நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருக்கும்.
தஞ்சாவூர் கூட்டத்தில் பேசும் போது, கலைஞர் கருணாநிதி, “தமிழினத்தின் உரிமைகளுக்காகப் போராட என்னைவிட்டால் வேறு யார் இருக்கி றார்கள்” என்று கேட்டிருக்கிறாரே?
ஒரு சிறு திருத்தம்; “தமிழினத்தைக் காட்டிக் கொடுக்க என்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்” என்று கலைஞர் கருணாநிதி கேட்டிருந்தால் பாவ மன்னிப்புக் கேட்டது போலாவது இருந்திருக்கும்!
திராவிடம் பேசக்கூடிய அறிவுத்துறையினர் சிலர் இந்தியத் தேசியத்தை இணக்கமாகப் பார்க்கிறார்கள். தமிழ்த் தேசியத்தைத்தான் எதிரியாகப் பார்க்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?
இதில் முரண்பாடு என்ன இருக்கிறது? இந்தியத் தேசியத்தின் இளைய பங்காளிதான் திராவிடம்! இரவீந்திரநாத் தாகூர் ஜனகனமன பாட்டில் பாடவில்லையா, “பாரத பாக்ய விதாதா - திராவிட உத்கல வங்கா” என்று!
பாரதத்தின்கீழ் தமிழ்நாடு இருப்பதாகத் தாகூர் பாடவில்லையே! திராவிடம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
திராவிடத்தின் பிதாமகர் பெரியார் 1954களிலிருந்து 1967 வரை காங்கிரசு வெற்றிக்காக ஒவ்வொரு தேர்தலிலும் கடுமையான களப்பணி ஆற்றியவராயிற்றே!
கலைஞர் கருணாநிதி “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக!” என்று இந்திரா காந்திக்கு வரவேற்பு விண்ணப்பம் பாடினார் அல்லவா?
இந்தியத் தேசியத்துடன் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திராவிடத்துக்குப் பங்காளிப்பாசம் உண்டு! பாரதம், திராவிடம் இரண்டுமே ஆரிய உருவாக்கம் தானே! இந்தியத் தேசியம் எப்போதுமே தமிழ்த்தேசியத்திற்குப் பகையாளி!
தேர்தலில் போட்டியிடாத “திராவிடர் கழகம்” ஒரு தாய் அமைப்பாக இருந்து, தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிக்கு ஆதரவளித்து வாக்குக் கேட்பது போல, தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஏதாவதொரு தமிழ்த் தேசிய அமைப்பை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தால் என்ன?
தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஓய்வு பெற்றுவிட்ட தமிழ்த் தேசியத் தாய் அன்று! தமிழ்நாட்டு விடுதலைக்காகக் களத்தில் நிற்கும் போராளி!
மக்கள் போராட்டம்தான் விடுதலையை ஈட்டும். ஆதிக்க இந்தியா நடத்தும் தேர்தல், தேசிய இனங்களைத் தங்களின் இறையாண்மைக்கான போராட்டங்களிலிருந்து திசைதிருப்பி, பதவி ஆசை காட்டி போராளிகளைச் சீர்குலைக்கும் உத்தி என்று கருதி பேரியக்கம் தேர்தலைப் புறக்கணிக்கிறது. அது எப்படி இன்னொரு அமைப் பிற்கு வாக்குக் கேட்க முடியும்? வாக்களிக்க முடியும்?
கோவையில் தேர்தல் அலுவலர்களின் ஊர்திகளில் தேர்தலுக்காகப் பணம் கடத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து அலுவலர்கள் ஊர்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவே, வேலியே பயிரை மேய்கிறதா?
அனுபவக் குறைவான ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அரைவேக்காட்டுத்தனமாகத் தேர்தல் அலுவலர்கள் மூலம் ஊர்திகளில் பணம் கடத்தி இருக்கிறார்கள்; உயர் காவல் அதிகாரிகள் அல்லவா பணம் கடத்தலைக் கச்சிதமாகச் செய்து வந்தார்கள்!
தமிழீழத்தில் இனப்படுகொலை செய்தவர்கள் அதற்குத் துணை போனவர்களையெல்லாம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தண்டிக்கும் என்று செயலலிதா பேசி வருகிறாரே, அப்படித் தண்டிக்க வாய்ப்புண்டா?
2008 - 2009-இல் தான் செயலலிதா குறிப்பிடும் ஈழத்தமிழர் இனப்படுகொலை அதிகமாக நடந்தது. 2011லிருந்து ஆட்சியிலிருக்கும் செயலலிதா - இந்த ஐந்தாண்டில் ஈழத்தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்ட அல்லது அதற்குத் துணை நின்ற யாரையும் தண்டிக்கவில்லையே!
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த தலைமைக் கொலையாளி இராசபட்சே. அந்த இனப் படுகொலைக்குத் துணை போனவர்கள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், கருணாநிதி போன்றவர்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இவர்களை விசாரிக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பு செயலலிதாவுக்கு என்ன இருக்கிறது?
இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் செயலலிதா தீர்மானம் போட்டார்.
இந்திய அரசு அதைக் கால் காசுக்கு மதிக்கவில்லை. ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.வின் ஆயுட்காலத் தலைவர்செயலலிதா, பொருளாதாரத் தடை கோரிக்கையை முன்வைத்து ஒரு இலட்சம் பேர் பேரணி நடத்தி, இந்திய அரசை வலியுறுத்தியிருந்தால் ஓர் அழுத்தம் கிடைத்திருக்கும்! அவர் அதைக்கூட செய்ய வில்லை.
தமிழ் உணர்வாளர்கள் சப்புக் கொட்டிக் கொள்வ தற்காக, சட்டப்பேரவையில் ஒப்புக்குத் தீர்மானம் போட்டு, ஒய்யாரமாக ஒதுங்கிக் கொள்கிறார் செயலலிதா! அதற்கே உடலெல்லாம் புல்லரித்து அம்மாவின் ஊது குழலாய் மாறுவோரும் உண்டு. அந்த வரிசைச் சவடால்களில் ஒன்றுதான் செயலலிதா, ஈழத்தமிழர் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தாம் ஆட்சிக்கு வந்தால் தண்டிப்பேன் என்று உதார் விடுவது!
தமிழ்நாடு அரசுக்கு எல்லா அதிகாரங்களும் இருப்பது போலவும் அவற்றை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை; இவர் சரியாகப் பயன்படுத்தவில்லை; நான் ஆட்சிக்கு வந்தால் சரியாகப் பயன்படுத்துவேன் என்று ஒவ்வொரு முதலமைச்சர் வேட்பாளரும் பேசுகிறார்கள். நீங்களோ, தமிழ்நாடு அரசுக்கு உருப்படியான அதிகாரம் எதுவுமில்லை என்கிறீர்கள், எது உண்மை?
நாம், தமிழ் இனத்திற்குரிய, தமிழ்த் தேசத்திற்குரிய இறையாண்மை அதிகாரங்கள் இல்லை என்கிறோம். தனிநபர் பதவிப் போட்டியில் ஈடுபடுபவர்களுக்கு இப்போது இருக்கும் அதிகாரங்கள் போதுமே!
மாவட்ட ஆட்சியர் மலர்க்கொத்து கொடுத்து, உடம்பை வளைத்து வாழ்த்துப் பெற்றிடுவார்; காவல்துறை உயர் அதிகாரிகள் மண்ணை ஓங்கி உதைத்து, கார் கதவைத் திறந்துவிட்டு படைத்துறை வணக்கம் செய்வர்.
தனிநபராகத் தங்களைச் சந்தித்துக் கொள்பவர் களுக்கு இவையெல்லாம் பெரிய கவுரவங்கள் அல்லவா! அடுத்து கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன! அதற்கு மேல் தனிநபர் அதிகாரப் போட்டிக் காரர்களுக்கு வேறென்ன வேண்டும்?
நாம் கேட்பது நம் இனத்திற்குரிய -- தேசத்திற்குரிய இறையாண்மை அதிகாரம்!