18 ஆண்டுகளாக சிறையில் வாடும் 49 இசுலாமியத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் 2016 சட்டமன்றத் தேர்தல் அடியோடு பறித்துவிட்டது. இந்தத் தேர்தலில் தங்களின் விடுதலைக்கான கோரிக்கை மேலெழும் என அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். இதைத்தான் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான “People's Movement for justice” என்ற இயக்கமும், “இதுவிசயத்தில் தமிழக முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்டு நின்றால்; அனைத்து சமுதாய அமைப்புகளும் தங்களின் ஆதரவை ஒரே குரலில் தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் எங்கள் விடுதலை மிக எளிதாக சாத்தியமாகிவிடும்” என நம்பிக்கையோடு தெரிவித்தது.

அதாவது இசுலாமிய கட்சிகள் ஒன்றுபட்டு நின்று இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் அதை அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க போன்ற பெரிய கட்சிகளை ஏற்க வைக்க வேண்டும்; வெற்றிபெற்று ஆட்சியமைப்பவர்கள் மூலம் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என்பதேயாகும்.

இது “People's Movement for justice” என்ற அமைப்பின் குரல் மட்டுமல்ல. சிறையிலிருக்கும் 49 பேர்களுடைய குடும்பத்தார் அனைவரின் குரலாகும். கூடவே, தங்களது குழந்தைகள் மீது எப்போது, என்ன மாதிரியான பொய்வழக்குகள் போடப்படுமோ! என அஞ்சிக் கிடக்கிற இசுலாமிய சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலுமாகும்.

இதற்கு இசுலாமிய இயக்கங்கள் என்ன செய்தன?

இசுலாமிய கட்சிகளில் எதுவும் சிறைவாசிகளின் விடுதலையில் அக்கறை செலுத்தவுமில்லை; அவைகள் எதற்காகவும் ஒன்றுபடவுமில்லை. மாறாக, ஒவ்வொரு இயக்கமும் ஒன்றுக்கொன்று எதிராக நடந்து கொண்டன. தேர்தலில் பங்கேற்ற அனைத்து இசுலாமிய அமைப்புகளும் அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகிய இரு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டுசேர்ந்து ஒன்றிரண்டு தொகுதிகளைப் பெறுவதற்கே பெரும்போராட்டங்களை நடத்த வேண்டியதாயிற்று. இதையும் தாண்டி சில இசுலாமிய கட்சிகளோ “பேருக்கு எங்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் போதும்” என்ற நிலைக்கு கீழிறங்கின.

இவற்றின் பலவீனமறிந்த அ.இ.அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் இசுலாமிய கட்சிகளை எளிதாக நிராகரித்தன. அப்படி இசுலாமிய கட்சிகளை நிராகரிக்க அ.இ.அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் சொன்ன காரணம் வேதனைக்குரியது. “உங்களை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் எங்களுக்கு பாதிப்புதான் ஏற்படும்; உங்கள் ஆட்களை அழைத்துக்கொண்டு போய் பிற சமூகத்தவரிடம் (இந்துக்களிடம் என்பதைத்தான் இப்படிக் கூறுகிறார்கள்) ஓட்டு கேட்க முடியாது. உங்கள் சமூகத்தின் மீதான முத்திரையும் (தீவிரவாதி, பயங்கரவாதி என்பதைத்தான் இப்படிக் கூறுகிறார்கள்), உங்களின் அடையாளமும் மற்றவர்களின் (இந்துக்களின்) வெறுப்பையே சம்பாதித்துத் தரும்” என்று இரு கழகங்களும் வெளிப்படையாகக் கூறி நிராகரித்தன.

இன்றைக்கு இசுலாமியர்களிடம் செல்வாக்கு செலுத்துகிற எந்த ஒரு கட்சியாலும் இதை அரசியலால் எதிர்கொள்ள முடியவில்லை. மாறாக அவைகள் இதை ஏற்றுக் கொள்வதைப் போலவே வினையாற்றின. கிடைத்தவரைக்கும் போதுமென கொடுத்த தொகுதிகளை மறுப்பின்றி பெற்றுக்கொண்டன. அதுவரை தங்களின் ஆதரவைப் பயன்படுத்திக் கொண்ட கட்சி தங்களை நிராகரித்ததும் இன்னொரு கட்சியிடம் ஓடிப்போய் சரணடைந்தன.

இந்த நிலையில் இக்கட்சிகளிடம் சிறைவாசிகளின் விடுதலைக்கான கோரிக்கையை மையப்படுத்தச் சொல்லி மக்கள் வலியுறுத்தியபோது, “ஏற்கனவே நம்மை சேர்த்துக் கொள்வதற்கு பெரிய கட்சிகள் (இரு கழகங்களைத்தான் சொல்கிறார்கள்) தயங்கி நிற்கும்போது, சிறைவாசிகளின் விடுதலை குறித்துப் பேசினால் நம்மை யாரும் சீண்டவே மாட்டார்கள்” என்று பதிலளித்தனர். மேலும் தங்களது கட்சியினரிடம் “நம்மவர்கள் யாரும் சிறைவாசிகளின் விடுதலை குறித்து பொதுதளத்தில் (பேஸ்புக், வாட்ஸ்அப் உடபட) பேசவோ, எழுதவோ கூடாது” என அறிவுறுத்தினர்.

இசுலாமியராக வாழ்வது பெருமையென்றும்; இசுலாமியர் என்பது அதன் அடையாளங்களை வரித்துக்கொள்வதுதான் என்றும் பேசி, அதை ஊக்குவித்த இயக்கங்களே, “இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையைப் பேசுவதென்பது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவது என்றும்; இசுலாமிய அடையாளமே பயங்கரவாதம்தான் என்றும்” ஒத்துக் கொள்வதைப்போல் நடந்து கொண்டதைப் பார்த்து இசுலாமிய சமூகமே நிலைகுலைந்து போனது.

இதையறிந்த சிறைவாசிகளும், அவர்களது குடும்பத்தாரும் “யா அல்லா! இனி எங்கள் கதி என்ன?” என்று கதறினர். தாங்கள் கைவிடப்பட்டதாக எண்ணி அவர்கள் கதறியதை மெய்ப்பிப்பது போலவே இன்று “ஏழு தமிழர்” விடுதலைக்கு மட்டுமான குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இசுலாமிய சிறைவாசிகள் அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

இசுலாமிய சிறைவாசிகள் பயங்கரவாதிகளா?

இல்லவே இல்லை.

கோவையில் 14.2.1998 அன்று குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு ஐ.எஸ் அமைப்புக்காகவோ, அல்-காய்தா அமைப்பிற்காகவோ அல்லது தாலிபான்களுக்காகவோ நடத்தப்பட்டது என்று யாராவது கூற முடியுமா? முடியவே முடியாது.

பிறகு ஏன் குண்டு வெடித்தது?

1980 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களானது தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் மிக முக்கியமான காலகட்டங்களாகும். இந்த காலத்தில்தான் இந்தியா உலகமயமாக்கலுக்குள் தீவிரமாக நுழைந்தது.

ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இந்த உலகமயமாக்கலுக்கு எதிராக அணிதிரட்ட வேண்டிய அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்-உம், அதன் உறுப்பு அமைப்புகளும் இராமர் கோவில் - பாபர் மசூதி பிரச்சினையைக் கிளப்பின. ஆர்.எஸ்.எஸ் உலகமயமாக்கலின் தீவிரத்தை உணராத அமைப்பல்ல. அது பொருளாதாரம் அறிந்த பல “குருமூர்த்தி”களைக் கொண்டது. ஆம், அவர்கள் மக்களைப் பிளவுபடுத்துவதில் வெற்றி கண்டார்கள். 1980 பிப்ரவரி கரூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ்-இன் இரகசிய கூட்டத்தில் தோன்றிய இந்து முன்னணி முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து – கிருத்துவர் என மக்களைப் பிளவுபடுத்தியது. பிறகு கோவையில் இந்து – முசுலீம் என பிளவுபடுத்தியது.

ஆக, நடந்தவையனைத்தும் உலகமயமாக்கலுக்காக மக்களை பலியிடுகின்ற பணி. அதை திட்டமிட்டு நடத்தின இந்துத்துவ அமைப்புகள். இசுலாமிய சமூகம் எதிர்கொண்டவை அனைத்தும் தற்காப்புக்கான நடவடிக்கையே. இதில் இசுலாமிய சமூகத்திற்கும், அவர்களது அமைப்புகளுக்கும் எந்த அரசியல் அஜண்டாவோ, அதற்கான திட்டமிடலோ, தனிப்பட்ட இலாப நோக்கமோ இல்லவே இல்லை.

திட்டமிட்ட வன்முறை நடவடிக்கைகள் மூலமாக ஆட்சிக் கவிழ்ப்பையோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதையோ அல்லது அப்படியான நோக்கம் கொண்டவர்களுக்கு உதவுவதையோ குறிக்கோளாக கொள்ளாதவர்களின் தற்காப்பு நடவடிக்கைகளை எப்படி தீவிரவாதம் என சொல்ல முடியும்? தங்களின் ஒட்டுமொத்த சமூகமும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் எதிர்வினையாற்றிய இசுலாமியர்களை எப்படி பயங்கரவாதிகள் என கூற முடியும்?

இதை பேசுவதற்கு உருவான இசுலாமிய இயக்கங்கள் பாதை மாறியது எப்படி?

இந்துத்துவம் இசுலாமியர்களை குறிவைத்து தீவிர தாக்குதலைத் தொடங்கிய 1980-களுக்கு முன்புவரை இசுலாமியர்களுக்கு தி.மு.க, காங்கிரசு போன்ற கட்சிகளே போதுமானதாக இருந்தது. 80-க்கு பின்பும், குறிப்பாக பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்பும் இது மாறிவிட்டது.

இந்துத்துவத்தின் புதிய பாய்ச்சல் உலகமயமாக்கலுக்கு ஆதரவாக மக்களைப் பிளவுப்படுத்துகிறது என்பதை இடதுசாரி இயக்கங்கள் கூட உணராத நிலையில்; இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களிடம் தீவிர அரசியல் பணிகளை முன்னெடுக்காத நிலையில் இசுலாமியர் தங்களுக்கான தனி இயக்கங்களை உருவாக்கிக்கொண்டது சரியானதுதான்.

அப்போது இசுலாமிய சமூகத்தின் முன்னால் மலைபோல் நின்றது இரண்டு சவால்கள்.

1.   எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒட்டுமொத்த சமூகமும் ஒரே அணியாய் (அமைப்பாக) நிற்பது.

2.   தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவத்திற்கு எதிராக உள்ள தலித்துகள், கிருத்துவர்கள் மற்றும் சனநாயக, முற்போக்கு இயக்கங்கள் அனைவரையும் ஆதரவாக திரட்டுவது.

இந்த உண்மையை உணர்ந்து உருவான அமைப்பாக “முஸ்லீம் பேரவை” இருந்தது. முகமது மொய்தீன் உலவியின் முன்னெடுப்பில் உருவான இவ்வமைப்பின் விரிவடைந்த கூட்டம் 26/3/1995-இல் மதுரை வில்லாபுரத்தில் நடந்துள்ளது. கூட்டத்தில் இசுலாமிய சமூகம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் விரிவாக அலசப்பட்டதன் விளைவாக

 • முஸ்லீம்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒரே அமைப்பாக மாறுவது.
 • இவ்வமைப்பு தேர்தலில் போட்டியிடாது.
 • முஸ்லீம்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்வது.
 • அதற்கு பொதுக்கூட்டம், அரங்க கூட்டம், மாநாடுகள் போன்ற பிரச்சார வடிவங்களை மேற்கொள்வது.
 • சட்டத்தின் மூலமாகவும், சனநாயக வழியிலும் போராடுவது.
 • அப்பாவி முஸ்லீம்கள் கைதை தடுப்பது. கைதானவர்களின் வழக்குகளுக்கு சட்ட உதவிகள் செய்வது. அவர்களின் குடும்பத்தை பராமரிப்பது.
 • பிற சமூகங்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பது.

என்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 14/4/1995 அன்று திருச்சியில் கூடுவதாக இருந்தது. அதேநாளில் சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்ததன் காரணமாக கூட்டமும் நடக்கவில்லை, அதன் செயற்பாடும் முடங்கிப் போயிற்று.

அடுத்தடுத்து முன்னெழுந்த அமைப்புகள் எதுவும் இசுலாமிய சமூகத்தின் ஒற்றுமையையும் வலியுறுத்தவில்லை; இந்துத்துவத்திற்கு எதிராக உள்ள தலித்துகள், கிருத்துவர்கள் மற்றும் சனநாயக, முற்போக்கு இயக்கங்கள் அனைவரின் ஆதரவையும் திரட்டவில்லை. ஒற்றுமைக்கு மாறாக தாங்கள்தான் உண்மையான இசுலாமை கடைபிடிப்பவர்கள் என்பதை நிரூபிக்கும் வேலையில் இறங்கின.

வேடிக்கை என்னவென்றால், எல்லா அமைப்புகளும் “வஹாபிசத்தையே” தங்களின் கொள்கையாகக் கொண்டன. வஹாபிசம் என்பது அரேபியாவை மையமாகக் கொண்டு தோன்றியதென்பதும், அதை வளர்த்துவிடுவதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் பணத்தை அள்ளிக் கொட்டின என்பதும், அது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராடும் ஷியா பிரிவினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பதும் தனிக் கதை. ஆனால் இங்கே வஹாபிஸ்டுகள் என சொல்லிக் கொள்கிறவர்களே ஒருவருக்கொருவர் எதிராக நடந்து கொள்வதுதான் வேதனை! தங்களுக்குள்ளே முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டே போகும் உள்ளரசியலால் தங்களுக்கு ஆதரவாக அனைவரின் ஆதரவை திரட்டும் பணியும் நடக்கவேயில்லை.

ஆக, இசுலாமிய இயக்கங்களின் போக்கானது, “எல்லா வேறுபாடுகளையும் களைந்து ஒட்டுமொத்த சமூகமும் ஒரே அணியாய் (அமைப்பாக) நிற்பதையும் நிறைவேற்றவில்லை. தங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவத்திற்கு எதிராக உள்ள தலித்துகள், கிருத்துவர்கள் மற்றும் சனநாயக, முற்போக்கு இயக்கங்கள் அனைவரையும் ஆதரவாக திரட்டவும் முடியவில்லை. மாறாக தங்கள் சமூகத்தை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தவே பயன்பட்டிருக்கிறது”

பதவிக்கு அடித்துக்கொள்ளும் அடையாள அரசியல் வலையில் இயக்கங்கள்.

மக்கள் அனைவரும் சமமில்லை; அவரவர் பிரச்சினைகளே அவரவர்களுக்கு பெரிது; எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கேயான பிரச்சினைகளின் அடிப்படையில் தனித்தனி அமைப்புகளின் கீழ் செயல்பட வேண்டுமென்றும்; அதன் மூலம் அதிகாரத்தில் பங்குபெற்று தங்களுக்கானதை சாதித்துக்கொள்ள வேண்டுமென்றும் மதம், இனம், நிறம், சாதி ஆகியவற்றின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது அடையாள அரசியல்.

அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த அடையாள அரசியலின் தாக்கம் இந்தியாவிலும் ஆழ வேரூன்றிவிட்டது. “தங்களுக்கேயான பிரச்சினைகளின் அடிப்படையில் தனித்தனி அமைப்புகள் கண்டு, அதன் மூலம் அதிகாரத்தில் பங்கு பெற்று தங்களுக்கானதை சாதித்துக் கொள்ள வேண்டும்” என்கிற அடையாள அரசியலின் ஆசைகாட்டல் என்பது, “தங்களின் பிரச்சினைகளில் மட்டுமே அக்கறை செலுத்திய தீவிர செயற்பாட்டாளர்களையும், தங்களின் பிரச்சினைகளை பேசுவதுபோல் காட்டிக் கொள்ளும் பிழைப்புவாதிகளையும்” ஈர்த்துவிட்டது.

இந்த ஆசைகாட்டல் என்பது

 • ஏற்கனவே இருக்கும் அதிகார அமைப்பு முறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி அதை பாதுகாக்கிறது.
 • அந்த அதிகாரத்தில் பங்கு கிடைக்குமென சாதி, மத வாரியாக மக்களை தூண்டுவதால் அனைத்துப் பிரச்சினைகளையும் இணைத்து சமூக மாற்றம் பேசுகிற கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களைப் பலவீனமாக்கி அழிக்கிறது.
 • அதிகார ஆசையால் ஒரே சமூகத்திற்குள்ளேயே ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தோன்றி அம்மக்களுக்கு எதிராகவே செயல்பட வைக்கிறது.
 • கூடுதலாக, ஒடுக்கப்பட்டப் பிரிவினர் தங்களுக்கான அடையாளத்தின் கீழ் அமைப்பாவதை காட்டி ஆதிக்கப் பிரிவினர் அமைப்பாகி செல்வாக்கு செலுத்துவதை ஞாயப்படுத்துகிறது.

விசயம் என்னவென்றால், தமிழ்நாட்டிலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் நீடிக்கிற அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கு இருக்கும் தேர்தல் தொகுதி வரையறை என்பது ஆபத்தானதாக உள்ளது. இந்த தொகுதி வரையறையின் கீழ் இந்தியாவில் ஒருசில இடங்களில் தவிர ஒடுக்கப்பட்ட மக்கள் எம்.பி-யாகவோ, எம்.எல்.ஏ-வாகவோ, மாநகராட்சி மற்றும் நகராட்சித் தலைவராகவோ ஆவதுகூட சாத்தியமேயில்லை. இது தமிழ்நாட்டில் துளிகூட சாத்தியமேயில்லை.

சில இடங்களில் கவுன்சிலராகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும் மட்டுமே முடியும். இந்த அதிகார வாய்ப்புகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுவிட முடியாது. மாறாக பெரும் அதிகாரம் செலுத்துகிறவர்களிடம் சில்லறை பேரங்கள் நடத்தி சம்பாதிக்க மட்டுமே முடியும்.

ஆக, அடையாள அரசியலை உயர்த்திப் பிடித்துக்கொண்டு சமூக நலம் பேசிய அமைப்புகள் இறுதியில் இப்படித்தான் சீரழிகிறது. இந்த அமைப்புக்களில் உள்ளூர் அளவிலுள்ள தலைவர்கள் கவுன்சிலராகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும் மாறும் வாய்ப்புள்ளதாலும்; அதிகாரிகள் மட்டத்தில் பஞ்சாயத்துகள் நடத்தும் வட்ட, நகர, மாநகர, மாவட்ட பொறுப்புகள் பெறுவதாலும் தமது சொந்த நலனைப் பெருக்கிக் கொள்வதோடு, மக்கள் நலனை ஈவு, இரக்கமின்றி பலிகொடுக்கவும் துணிகிறார்கள். இத்தகையவர்கள் ஒரு கட்சியில் செல்வாக்கு செலுத்தும்போது அடியோடு அவ்வமைப்பு மக்களுக்கு எதிரானதாக மாறிவிடுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இயக்கங்கள் நடந்து கொண்டதைப் பார்த்தால் பதவிக்கு அடித்துக் கொள்ளும் அடையாள அரசியலில் அவைகள் சிக்கிக் கொண்டதைப் போலவே தெரிகிறது. இயக்கங்கள் இதை பரிசீலிக்க வேண்டும். தங்கள் சமூகத்தின்மீது படர்ந்துள்ள ஆபத்து இன்னும் தொடர்கிறதென்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்காக இசுலாமிய இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் அணிதிரள வேண்டும். மற்ற சமூக மக்களோடும், சனநாயக சக்திகளோடும், அமைப்புகளோடும் ஒன்றுசேர வேண்டும்.

குறிப்பாக சொல்வதென்றால், பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படுவதைப்போல் இசுலாமிய சமூகத்திற்கும் இப்போது உடனடியாக தேவைப்படுவது அரசியல் மறுமலர்ச்சியேயாகும். 

- திருப்பூர் குணா

Pin It