மட்டைப் பந்து (கிரிக்கெட்) விளையாட்டில், உலகக் கோப்பைக்கான அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவில் இந்தியா தோற்றுவிட்டது உங்களுக்கு வருத்தமளிக்க வில்லையா?

தமிழர்கள் அன்றாடம் எத்தனையோ சிக்கல்களில் இந்தியாவிடம் தோற்று வருகிறார்கள். அவற்றுக்கு அழுவதற்கே நேரம் போதவில்லை. இந்தியா தோற்ற தற்குத் தமிழர்கள் எப்படி அழ முடியும்? ஈழத்தமிழர் இனப்படுகொலை, கச்சத்தீவுப் பறிப்பு, மீனவத் தமிழர் படுகொலை, காவிரி - முல்லைப் பெரியாறு - பாலாறு உரிமைப் பறிப்புகள், தமிழகத்தைச் சுற்றி அணுக்கதிர் வீச்சுத் தொழிற்சாலைகள் திணிப்பு என அன்றாடம் தமிழர்களும் தமிழகமும் இந்தியாவிடம் தோற்று வரும்போது, இந்தியாவின் மட்டைப்பந்து தோல்வி என் மனத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

தாலி கட்டுவது பழந்தமிழர் பழக்கம் என்றும், பழந் தமிழரிடம் தாலி கட்டும் பழக்கம் இல்லை என்றும் தமிழறிஞர்களிடையே இருவகைக் கருத்துகள் இருக் கின்றன. இப்போது திருமணத்தில் தாலி கட்டுவது பற்றி உங்கள் கருத்தென்ன?

சங்க காலத்தில் தாலி கட்டாமல் திருமணம் நடந்த தற்கும், தாலி கட்டித் திருமணம் நடந்ததற்கும் சான்றுகள் இருக்கின்றன. சிறு பருவத்தில் ஆண் பிள்ளைகளுக்கு சிறுதாலி என்ற பெயரில் வீரத்தாலி கட்டும் பழக்கமும் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில் தாலி என்ன நோக்கத்திற்காக வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்து, அதே பழக் கத்தை இன்றும் வலியுறுத்துவதைவிட, இந்தக் காலத் தில் மணமகன் - மணமகளுக்குத் தாலி கட்டும் பழக்கம் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்பதே, பண்பார்ந்த செயல்!

இன்று தாலி என்பது ஆணாதிக்கத்தின் - பெண்ண டிமைத்தனத்தின் சின்னம்! வளர்ச்சியடைந்த எல்லா இனங்களிலும் அவற்றின் மரபு வழிப்பட்ட பழக்க வழக்கங்களில் இன்றைக்கும் பொருந்தக்கூடிய முற் போக்குக் கூறுகளும் இருக்கும். இன்றைக்குப் பொருந் தாத பிற்போக்குக் கூறுகளும் இருக்கும். நாம் முற் போக்குக் கூறுகளை பின்பற்ற வேண்டும்; அவற்றை மேலும் செழுமைப்படுத்த வேண்டும். பிற்போக்குக் கூறுகளைக் கைவிட்டு விடவேண்டும்.

தமிழர்கள் தங்கள் திருமணங்களில் தாலி கட்டும் பழக்கத்தைக் கைவிட்டு விடுவதே சிறந்த சமத்துவப் பண்பாக அமையும்!

பீகாரில் மாணவர்கள் பொதுத் தேர்வெழுதும் போது, பெற்றோரும் உற்றாரும் மாணவர்கள் ‘காப்பி’அடிப்பதற்கான துண்டுத் தாள்களை சன்னல் வழியாகவும், மற்ற வழியாகவும் பெரும் எண்ணிக்கையில் சுவரில் ஏரியும் கொடுப்பதைப் படம்பிடித்து ஏடுகளில் போட்டார்கள். அதைக்கண்டு அம் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ’வெட்கப்படுகிறேன்’என்றார். ஆனால், பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், “நான் முதலமைச்சராக இருந்திருந்தால் - திருட்டுத் தனமாகப் பெற்றோர் துண்டுத்தாள்களை (பிட்டுகளை) கொடுக்க வேண்டி இருந்திருக்காது. பார்த்து எழுத புத்தகங்களையே வழங்கி இருப்போம்”என்றார். இது சரியான கருத்தா?

சரியா, தவறா என்று ஆராய்வதற்கு முன், தொடர் வண்டித் துறை உள்ளிட்ட நடுவண் அரசுத் துறை களின் வேலைவாய்ப்பிற்கானத் தேர்வுகளில் பீகார் அரசாங்கம் லாலு சொல்வது போல், காப்பியடிக்க அனுமதித்தும் முன்கூட்டியே வினாத்தாள்களை வெளி யிடச் செய்தும், பீகாரிகளை செயற்கையாக- ஏராளமான எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்து தான் தமிழகத்தில் ஏராளமாக நடுவணரசு வேலையில் சேர்ந் துள்ளார்கள் என்ற குட்டு லாலு பேச்சால் அம்பல மாகிவிட்டது என்பதைத் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தகுதியற்ற பீகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள வேலை களைப் பறித்துக் கொண்டு தமிழர்களை அவ்வேலை களுக்கு வராமல் தடுத்துள்ளார்கள் என்ற உண்மை யைப் புரிந்து கொண்டு அவர்களை வெளியேற்றுவது அறம் சார்ந்த போராட்டம் என்பதை உணர வேண்டும்.

லாலு சொன்னது போன்று, காப்பி அடிக்க ஊக்கு விக்கும் பழக்கத்தைத் தமிழ்நாடு பின்பற்றக் கூடாது. அதைச் செய்தால் வருங்காலத் தலைமுறையினரிடம் திறமையும் ஆற்றலும் வளராது. அறச்சிந்தனையும் தழைக்காது. பொறுக்கித்தனம்தான் வளரும்!

அணு உலையை எதிர்க்கிறவர்கள், நியூட்ரினோ ஆராய்ச்சியை எதிர்க்கிறவர்கள் எல்லாம், அறிவியல் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு கருத்து வைக்கப் படுகிறது. சூழலியலாளர்களோ, அறிவியல் ஆய்வுக்கு எல்லைகள் இருக்க வேண்டும், மனித குலத்திற்கெதிரான அறிவியல் கூடாது என்கின்றனர். இதில் எது சரி?

நம்மைப் போன்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக் கட்டும். ஸ்டீஃபன் ஹாக்கிங் என்ற உலகின் தலை சிறந்த இயற்பியல் அறிவியல் வல்லுநரே இயற்கையின் இயைபைக் குலைக்கும் வகையில் மூலப்பொருள் தோற்றம் குறித்த ஆராய்ச்சிகள் கூடாது என்றும் அந்த நோக்கத்தில் ஸ்விஸ் நாட்டின் செர்ன் நகரில் சுரங்க நகரை உருவாக்கிச் செய்யும் ஆராய்ச்சிக் கூடத்தை மூட வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.

அந்த செர்ன் ஆய்வுக் கூடத்தில் விபரீதங்கள் அல்லது விபத்து ஏற்பட்டால் அதனால் புதிதாகப் பெரிய கருந்துளை உண்டாகி - அதற்குள் நிலக்கோளம் உள்வாங்கப்பட்டு இந்த பூமிப்பந்தே அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்று கூறியுள்ளார்.

அறிவியல் வேண்டும்; அறிவியல் வழிபாடு கூடாது. ஆராய்ச்சி வேண்டும். அதனால் மனிதகுலம் அழிந்து விடக் கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஆராய்ச்சி எல்லைகளை அறிவியலாளர்கள் வகுத்துக் கொள்வதே பாதுகாப்பானது.

மிகை நுகர்வுவாதத்தின் இன்னொரு வெளிப் பாடுதான் பக்க விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத அறிவியல் ஆராய்ச்சி!

மாட்டுக்கறி சாப்பிடுவதை மராட்டிய அரசு தடை செய்துள்ளதே?

ஆடு உயிரில்லையா? கோழி உயிரில்லையா? பன்றி உயிரில்லையா? அவற்றின் கறியைச் சாப்பிடலாம், மாடு புனிதமானது - அதன் கறியைச் சாப்பிடக் கூடாது என்று மராட்டிய பா.ச.க. ஆட்சி சட்டம் செய்திருப்பது பார்ப்பனிய வர்ணாசிரமப் பாகுபாட்டின் இன்னொரு வெளிப்பாடுதான்!

மனிதர்களில் பார்ப்பனர்கள் புனிதர்கள், - பூதேவர் கள் என்றார்கள். மற்றவர்களை பார்ப்பனர்களுக்குக் கீழே வைத்தார்கள். சூத்திரர்கள் பஞ்சமர்கள் என்று அவர்களால் சொல்லப்பட்டவர்களைத் தீண்டினால் தீட்டு என்றார்கள். அதே அளவுகோலை விலங்குகளி டமும் பயன்படுத்தி, ஆடுகள், கோழிகள், பன்றிகள் போன்றவற்றைக் கொன்று தின்னலாம், மாட்டைக் கொன்று சாப்பிடக் கூடாது என்று சட்டமியற்றி உள்ளார்கள்.

பா.ச.க.வின் ஆன்மிகம் ஒழுக்கமற்றது, நேர்மை யற்றது, வஞ்சகமானது, பயன்படுத்தித் தூக்கியெறியும் உத்தி கொண்டது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. ஆட்டைக் கொல்லலாம்; கோழியைக் கொல்லலாம்; மாட்டைக் கொல்லக் கூடாது என்று பா.ச.க. கூறும் தகிடுதித்த “கொல்லாமை”கொள்கையின் யோக்கியதை இதுதான்!

திருவள்ளுவப் பெருந்தகை போன்றவர்கள், சமணர்கள், சைவ - வைணவப் பெரியோர்கள், வள்ள லார் போன்றவர்கள் வலியுறுத்திய உயிர் கொல்லா மைக் கோட்பாடு எறும்பிலிருந்து யானை வரை எல்லா உயிர்களையும் கொல்லக் கூடாது என்ற உயர்நெறி கொண்டதாகும். ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. போன்ற ஆரியச்சார்பு இந்துத்துவவாதிகள் விலங்குகளிடமும் வர்ணாசிரமப் பிரிவினையை உண்டாக்கி மாடுகளுக்கு மட்டும் புனிதம் கற்பிக்கும் போலிக் கொல்லாமைக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர்.

ஒன்றையன்று சாப்பிட்டு உயிர் வாழும் வகையில்தான் இயற்கைப் படைப்பு இருக்கிறது. எனவே, ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிடத் தடை விதிக்கக் கூடாது என்பதே நமது நிலைபாடு! தங்கள் விருப்பத்தின் அடிப் படையில் புலால் மறுப்போரை நாம் எதிர்க்கவில்லை.

அண்மைக் காலமாகத் திராவிடர் கழகத்தினர் “திராவிடர் விழிப்புணர்ச்சிக் கூட்டம்”என்ற பெயரில் கூட்டம் போடுகின்றனர். அதற்கான விளம்பரத்தில், “ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழர்களாய் வாழ்வோம்”என்று முழக்கங்கள் பொறித்துள்ளார்கள். தமிழர் களாய் வாழ்வோம் என்று சொல்லும் திராவிடத்தாரை ஏன் எதிர்க்கிறீர்கள்?

திராவிடத்தால் எழுந்தோம் என்று சொல்பவர்கள் திராவிடராய் வாழ்வோம் என்று சொல்லியிருந்தால் அவர்கள் நம்பிக்கையின்படி அவர்கள் நேர்மையாகச் சொன்னதாக அமையும். நாம் திராவிடம் - திராவிடர் என்பவற்றை ஒருபோதும் ஏற்கவில்லை என்றாலும், அப்படிக் கூறிக் கொள்பவர்கள் தங்களின் தர்க்கத்திற்கு முரண்படாமல் “திராவிடராய் வாழ்வோம்” என்றல்லவா கூறியிருக்க வேண்டும் என்கிறோம்.

“திராவிடத்தால் எழுந்தவர்கள்” திராவிடராய் வாழாமல் - தமிழராய் வாழுங்கள் என்று கூறினால் தன்முரண்பாடு வருகிறதே. எனவே, அவர்களின் நேர்மையில் ஐயம் எழுகிறது. அவர்களுக்குத் திராவிடத்தின் மீதும் முழு நம்பிக்கை இல்லை; தமிழ்த் தேசியத்தின் மீதும் முழு நம்பிக்கை இல்லை என்பதைத் தான் “திராவிடத்தால் எழுந்தோம்; தமிழராய் வாழ்வோம்” என்ற அவர்களின் இரண்டுங்கெட்டான் முழக்கம் தெரிவிக்கிறது.

இது ஒருவகைப் பார்ப்பனியப் பண்பியல் ஆகும். பலித்தவரை பார்ப்பது, பயன்படுத்திக் கொண்டு தூக்கி எறிவது என்பவைப் பார்ப்பனியப் பண்புகள். இதை வேண்டுமானால் திராவிடப் பார்ப்பனியம் என்று கூறலாம்.

நம்மைப் பொறுத்தவரை, சங்க காலத்திலிருந்து நாளதுவரை, இந்தியத் துணைக் கண்டத்தில் ஆரிய இனத்தையும் ஆரிய மொழியையும் ஆரியப் பார்ப்பனி யத்தையும் முன்னுக்குப் பின் முரணில்லாமல் எதிர்த்து வரும் செழுமையான மரபுத் தொடர்ச்சி தமிழ் இனத்தி லும் தமிழ் மொழியிலும் மட்டுமே உண்டு என்ற வரலாற்று உண்மையைச் சார்ந்து தமிழ்த் தேசியம் நிற்கிறது. ஆரிய எதிர்ப்பை மட்டுப்படுத்துவதுதான் திராவிடம்!

இதற்கான சான்று, பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்து தம் கழகத்தவர்க்கு நடுவண் அமைச்சர் பதவி பெற்ற கலைஞர் கருணாநிதியும் செயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்த ஆசிரியர் வீரமணியும் ஆவர்.

Pin It