கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் சில உட்பகுதிகளிலும் எவ்விதமான வரைமுறையும் இன்றி சட்ட விரோதமாக அரியவகை தாதுமணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. தற்போது சில அதிகாரி களின் நடவடிக்கையால் அது அம்பலமாகி உள்ளது. தாது மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரிகள் தமிழக அரசால் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இன்னொரு பக்கம் தாதுமணல் கொள்ளையை எதிர்த்து மீனவ மக்களின் போராட்டம்! தமிழக அரசு வேறுவழியின்றி தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் அள்ளும் குவாரிகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது.

ஆய்வுக்குழு அரசு அனுமதி அளித்த இடங்களில் மட்டுமே ஆய்வு நடத்தியது. மக்கள் பல்வேறு தடைகளையும் மீறிச் சென்று சட்டவிரோதமான முறையில் அள்ளப்பட்ட இடங்களுக்கு ஆய்வுக் குழுவை அழைத்துச் சென்று காட்டினர். தாதுமணல் கொள்ளை வெட்ட வெளிச்சமாக உலகிற்குத் தெரிய வந்தது.

தாதுமணல் கொள்ளை பற்றிய ஆய்வை வெறும் 15% மணல் மட்டும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தோடு நிறுத்தாமல் நெல்லை, குமரி மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என நெல்லை குமரி மாவட்ட மீனவ மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதே போல் திருச்சி மாவட்ட விவசாயிகளும் திருச்சியில் அமைந்துள்ள 80 தாதுமணல் குவாரியை ஆய்வு செய்ய வேண்டிப் போராடினர். ஏற்கெனவே கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் போராடிவரும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்களை சாக்குப் போக்கு சொல்லி ஏமாற்ற முடியாது என்பதால், தற்போது தமிழக அரசு 71 தனியார் தாது மணல் குவாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக கேரள கடற்கரையோரம் முழுவதும் தாது மணல் அள்ளுவதற்குத் தடை விதித்து 14.8.2013 அன்று உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை உடனடியாக அமுல் படுத்தாத தமிழக அரசு இப்போது 17.9.2013 அன்று ஆய்வுக் குழுவை அமைத்ததோடு தாது மணல் குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமுல்படுத்தி உள்ளோம் என்று கூட சொல்லாமல், தமிழக அரசே மக்கள் நலன் கருதி தாதுமணல் குவாரிகளின் செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளது போல் காட்டிக் கொண்டது.

இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ள தாதுமணல் கொள்ளை பல கேள்விகளை நம் முன் எழுப்புகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு நிர்வாகமும், பல்வேறு அரசுத் துறைகளும் இம்மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக என்ன செய்து கொண்டிருந்தனர்? ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தாதுமணலைக் கொள்ளையடிக்கும் வரை அதிகார வர்க்கம் எவ்வாறு கண்டு கொள்ளாமல் இருந்தது? அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை எவ்வளவு?

முக்கிய எதிர்க் கட்சிகளான தி.மு.க., தே.தி.மு.க., காங்கிரசு போன்றவை இந்தக் கொள்ளயை ஏன் கண்டு கொள்ளவில்லை? ஓட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தாதுமணல் கொள்ளையர்களின் அறிவிக்கப்படாத கூட்டாளிகளாகவே செயல்பட்டு வந்துள்ளனர். எந்த ஒரு தேர்தல் கட்சியும், தாதுமணல் கொள்ளையர்களிடம் இதுவரை தாங்கள் நன்கொடையோ, நிதியோ, பெற்றதில்லை என சொல்லக் கூட முடியாத அளவிற்கு அனைவரையும் வளைத்து, தங்கள் பிடிக்குள் வைத்துள்ளனர் தாது மணல் கொள்ளையர்கள்.

பத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அதிக அழுத்தம் மற்றும் வெப்பத்தால் உருமாற்றப் பாறைகள் உருவான போது அதனோடு உருவானது தாதுக் கனிமங்கள். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக பொதிகை மலையில் உருமாற்றப் பாறைகள் அதிகம். மலையில் உருவான இக்கனிமங்களை ஆறுகள்தான் கடலில் கொண்டு வந்து சேர்த்தன.

அலைகளின் ஆர்ப்பரிப்பால் முன்னும், பின்னும் அலைக்கழிக்கப்படும் போது அடர்த்தி மிகுந்த தாதுக் கனிமங்கள் மட்டும் கரையோரம் சேர்ந்து படிகின்றன. பொதுவாக வங்கக் கடலில் தென்கிழக்கில் இருந்து அலைகள் தாக்குவதால் கடல் நீரோட்டம் வடக்கு நோக்கி இருக்கும். தரையில் கிடக்கும் மணலை வடக்கு நோக்கித் தள்ளிக் கொண்டுபோகும் அலைகள் தூத்துக்குடி, ராமேசுவரம் மேட்டுப் பகுதியில் தடுக்கப்படுகின்றன. இதனாலேயே தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களின் கடலோரத்தில் இத் தாதுமணல் தங்கி விடுகிறது. இல்மனேட் அதிகம் இருக்கும் கடற்கரை கருப்பு நிறமாகவும், கார்னெட் அதிகமிருக்கும் கடற்கரை சிவப்பு நிறமாகவும் காட்சி அளிக்கிறது.

தென் தமிழகத்தின் குமரி மாவட்டம் மிடாலம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பாறு வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரமுள்ள கடற்கரையில் இல் மனைட், கார்னெட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட், சில்லு மனேட் என அரிய வகை தாது மணல் வகைகள் இருப்பதை 1900 ஆம் ஆண்டுகளில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஜெர்மானியார்கள்.

ஸ்கோம்மெர்க் எனும் ஜெர்மன் விஞ்ஞானி நேரடியாக வந்து தென் தமிழகத்தின் கடலோரத்தை ஆய்வு செய்து மோனோசைட் உட்பட பல்வேறு அரிய வகை தாது மணல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இதை சர்வதேச சந்தையில் விற்பனை செய்தனர். 1910 இல் குமரி மாவட்டம் மணவாளக் குறிச்சியில் ஜெர்மன் நிறுவனம் தாதுமணல் பிரித்தெடுக்கும் ஆலையை அமைத்தது. பின்பு இது முதல் உலகப் போரின் போது ஆங்கிலேயே அரசின் வசம் வந்தது. வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் 1950 களில் இந்திய அரசு தனியார் ஒருவருடன் சேர்ந்து இந்திய சுடுமணல் ஆலையை நடத்தியது. பின்னர் இந்த மணலில் இருந்து மோனோசைட் போன்ற அணு உலைக்குத் தேவையான கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியும் எனக் கண்டறியப்பட்டவுடன் தனியார் பங்களிப்பை நீக்கி 1963 இல் இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இந்த ஆலை வந்தது.

1980 களில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற நாசகாரக் கொள்கையை நடை முறைப்படுத்தத் தொடங்கியவுடன் அரசு நிறுவனங்கள் தவிர தனியார்களுக்கும் தாது மணல் கனிம குவாரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கினர். தமிழகத்தின் இயற்கைச் செல்வத்தை வரைமுறையற்றுக் கொள்ளை அடிப்பது தொடங்கியது.

பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக நமது தமிழகத்தின் வளங்களைச் சுரண்ட அனுமதி அளித்ததில் முதன்மைப் பங்கு வகிக்கும் காங்கிரசுக் கட்சியின் ஆதரவு பெற்றவர்களே முதலில் தாதுமணல் அள்ளுவதற்கான அனுமதியைப் பெற்றனர்.

காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மனைவியை இயக்குநராகக் கொண்ட “இந்தியன் கார்னெட்” கம்பெனிக்கு முதன் முதலில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ள அனுமதி தரப்பட்டது. குமரி மாவட்டத்தில் “குமரி மினரல்ஸ்” என்ற பெயரில் உள்ள நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து இந்தியன் கார்னெட் நிறுவனம் தாது மணல் அள்ளத் தொடங்கியது. காங்கிரசுக் கட்சியினர்தான் இந்த தாது மணல் கொள்ளையைத் தொடங்கி வைத்தனர்.

1989 இல் தொடங்கப்பட்ட வைகுண்டராசனின் “வி.வி. மினரல்ஸ்” எனும் நிறுவனம் தனது போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் பல்வேறு முறைகளைக் கையாண்டு தொழிலில் இருந்து விரட்டியடித்து விட்டு, தனி அரசாங்கமே நடத்தி வருகின்றது. தமிழகத்தில் உள்ள 78 தாதுமணல் குவாரிகளில் 60க்கும் மேற்பட்டவை வைகுண்ட ராசன் குடும்பத்தார் வசமே உள்ளன.

தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு மிக நெருக்கமானவராக, ஜெயா தொலைக் காட்சியின் பங்குதாரராக அறியப்படும் வைகுண்டராசனின் 20 தாதுமணல் குவாரிகளுக்கு கருணாநிதி அரசு அனுமதி வழங்கியது. இந்தத் தாதுமணல் குவாரிகளுக்குத் தமிழக அரசின் அனுமதி என்பது பெரும்பாலும் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவும், தேர்தல் முடிந்த சில மாதங்களிலும் கிடைத்துள்ளது. ஆட்சி முடியும் காலங்களிலும், ஆட்சிக்கு வந்த உடனேயும் கருணாநிதி, செயலலிதா அரசுகள் தாதுமணல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன. தாதுமணல் நிறுவனங்கள் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளுக்கு அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபிகளாக விளங்குகின்றன.

உலகின் அரிய வகையான இத்தாதுக் கனிமங்கள் இந்தியாவில் மட்டும் 60% உள்ளது. அதில் சரிபாதி தமிழகத்தில் மட்டும் உள்ளது. இங்கிருந்து இத்தாதுக் கனிமங்களில் பிரித்தெடுக்கப்படும் கார்னெட், இல்மனைட் ரூட்டைல், சிர்கான், மோனோசைட் போன்றவை ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, நியூசிலாந்து, கொரியா, சிங்கப்பூர், அபிதாபி எனப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. மோனோசைட் அதிகக் கதிர் வீச்சு கொண்டது. அணுகுண்டு தயாரிக்கக் கூட பயன்படும் என்பதால் தனியார் நிறுவனங்கள் இதை ஏற்றுமதி செய்யத் தடை உள்ளது. இதை அணுசக்தித் துறையிடம் தந்து விட வேண்டும் என்ற விதி உள்ளது.

உலகச் சந்தையில் ஒரு டன் தாதுமணல் கார்னெட் ரூ. 5,600, இல்மனைட் 11,800, சிர்கான் ரூ. 74,500 ரூட்டைல் 80,000, மோனோசைட் ரூ 5 இலட்சம் என விலை போகிறது. இதில் இல்மனைட் அணுசக்தியில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களிலும், ரூடைல் அதிக வெப்பத்தையும், வேதி மாற்றத்தையும் தாங்குவதால் போர் விமானம் மற்றும் விண்வெளி உபகரணங்களிலும், சிர்கான் 18 ஆயிரம் செண்டிகிரேடில்தான் உருகும் என்பதால் அணுமின் நிலையங்களிலும் பயன்படும் அணு ஆற்றல்களை உள்ளடக்கிய அதிமுக்கிய தாதுமணல்கள் ஆகும். அணு ஆற்றல்களுக்கு மட்டுமின்றி பல்வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு உதவும் இத்தாது மணல் கனிமங்கள் தமிழகத்தின் அரிய சொத்துக்கள். ஆனால் இதன் மூலம் இதுவரை தமிழகத்திற்கு எவ்விதமான நன்மைகளும் கிடைத்தது கிடையாது. தனியார் தாது மணல் நிறுவனம் எதுவும் இதுவரை பிரித்தெடுக்கும் போது கிடைத்த மோனோசைட் தாதுமணலை ஒப்பந்தப்படியும், சட்டப்படியும் அரசுத் துறையிடம் ஒப்படைத்தது இல்லை.

தாதுமணல் நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் நிலம் முழுவதும்ஆண்டுக்கு வெறும் 16 ரூபாய்க்கும் 50 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு 9 ரூபாய்க்கும் 30 ஆண்டுக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 2011 வரை அனுமதி கொடுக்கப்பட்ட 52 குவாரிகளில் கரை உவரி ஊராட்சியில் உள்ள இரண்டு குவாரிகள் மட்டுமே 10.10.5 ஹெக்டேர், 36.34.0.ஹெக்டர் பரப்பரளவு கொண்டவை. மற்றவை இவற்றை விட பரப்பளவு குறைவானவை. ஆனால் செயலலிதா அரசு பதவியேற்றவுடன் 12.8.2011 அன்று 750 ஏக்கர் (300 ஹெக்டேர்) பரப்பளவுள்ள மிகப்பெரிய குவாரியைக் குத்தகைக்கு கொடுத்தார். இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல், மக்களுக்கே தெரியாமல் ஒரு அரசு உத்தரவு மூலம் 750 ஏக்கர் தாரை வார்க்கப்பட்டது.

அரியவகை தாது மணலை ஏற்றுமதி செய்ததில் ஒரு இலட்சம் கோடி வரை கொள்ளை நடந்துள்ளது என முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பல்வேறு தகவல்களைக் கொண்டு அறிக்கை கொடுத்தனர். ஆனால் அரசியல் கட்சிகள் வாய் திறக்கவில்லை.

தாது மணல் நிறுவனங்களின் முறை கேடுகள்:

தாதுமணல் கடற்கரைப் பகுதியில் 2 முதல் 3 மீட்டர் ஆழத்திற்குள்ளும் ஊர்ப் பகுதியில் 1.00 மீட்டர் ஆழத்திற்குள்ளும் மண்வெட்டி மற்றும் கூடை உதவியுடன் அள்ள வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு முழுக்க முழுக்க ஜே.சி.பி. போன்ற கனரக இயந்திரங்களைக் கொண்டே அள்ளப்படுகிறது. மேலும் கடற்கரையோரம் இருந்த தேரிகள் எனும் மணற்குன்றுகள் 30 அடி, 40 அடி ஆழம் வரை கூட இயந்திரங்கள் உதவியோடு அள்ளப்பட்டுள்ளன. குமரி முதல் தூத்துக்குடி வரை கடலோரப் பகுதி முழுவதும் தாதுமணல் அள்ளப் பட்டதால் கடற்கரையே இல்லாமல் போய்விட்டது. கடற்கரையும் ஊரும் சம மட்டமாகிவிட்டன.

அரசு குத்தகை வழங்கிய நிலத்தை பெயரளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு அதைவிட பல மடங்கு அனுமதி பெறாத நிலத்தில் தாது மணல் அள்ளப்படுகிறது. தனியார் நிலம் மட்டுமின்றி வண்டிப்பாதைகள், கடலோரம் முழுவதும், கடலுக்கு உள்ளே அரசு புறம் போக்கு ஊர்ப் புறம்போக்கு நிலங்கள் அனைத்திலும் தாது மணல் அள்ளப்படுகிறது. தனியார் நிலங்களை விலைக்குக் கேட்பார்கள்; தர மறுப்போரை மிரட்டிப் பணிய வைப்பார்கள். மறுத்தால் நிலத்தின் உரிமையாளர் அனுமதியின்றியே தாதுமணல் அள்ளுவர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தாலும் அவர்கள் புகாரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். புகார் கொடுத்தவர் மீதே பொய் வழக்கு போடுவார்கள். அரசின் அனைத்து வழிகளும், சட்டங்களும் மீறப்பட்டே தாதுமணல் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

தாதுமணல் நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்:

கடற்கரை அழிக்கப்பட்டு விட்டதால் கடலோரத்தில் படகு நிறுத்தவும், மீன் வலை உலர வைக்கவும் மீனவர்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது. கடலும் ஊரும் ஒன்றானதால்; கடல் நீர் புகுந்து வீடுகள் பல இடிந்து போய்விட்டன.

கடலோரமாக இருந்து தாதுமணல் அள்ளப்பட்டு விட்டதால் அனைத்து நீர் ஆதாரமும் உப்பாக மாறிவிட்டது. உட்பகுதியில் சுமார் 5. கி.மீ வரை அனைத்து குடி நீர் ஆதாரமும் அழிக்கப்பட்டுவிட்டது.

கடலோரமாக இருந்த தேரிகள் எனப்படும் மணற்குன்றுகளை அழித்தும் சவுக்குக் காடுகளை அழித்தும் தாதுமணல் அள்ளப்பட்டதால் புயல், சுனாமி, காற்று ஆகியவற்றைத் தடுக்கும் இயற்கை அரண்கள் இல்லாமல் போய்விட்டன. அளவு கடந்த மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடற்கரையும், கடற்கரையை ஒட்டிய நிலத்தாவரங்களும் அழிக்கப்பட்டு விட்டதால் கடலோரம் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும் அரிய வகை ஆமைகள் ஓட்டலிகள் இனப்பெருக்கம் முழுமையாக நின்று விட்டது. உயிர்ச் சூழல் முழுக்க பாதிக்கப்பட்டு உள்ளது. மன்னார் வளைகுடா மாசுபட்டு அழிந்து வருகிறது.

கடற்கரையோரம் முழுக்க தாதுமணல் அள்ளப்பட்டு விட்டதால் பல தாது சத்துகளை கடல் இழந்து விட்டது. இதனால் கடலில் பவளப் பாறைகள், கோரை வடிவலான புற்கள், பல்வேறு வகை பாசிகள் வளர்வதில்லை. இதனால் இவற்றின் மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் 30 க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று விட்டன.

ஆழம் குறைந்த கடலோரத்தில் அலைகள் உருவாகும் பகுதிக்கு சுவாசத்திற்கும் உணவிற்கும் மீன்கள் அதிகம் வரும். தாதுச் சத்து குறைந்த நீரினாலும், தாதுமணல் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட அமிலம் கலந்த நீரை கடலில் விடுவதாலும் மீன்களுக்கு சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்று விட்டன. மீன் வளம் மிகவும் குறைந்து மக்கள் வருவாய் இன்றி, வேலை யின்றி வாடுகின்றனர்.

தாது மணல் சுத்திகரிக்கப்பட்ட அமில நீரை கடலில் விடுவதால் கடலே பல மைல் தூரத்திற்கு செந்நிறமாக மாறிவிட்டது. இந்த அமில நீரில் உள்ள மீன்கள் சயனைட், ஆர்சனிக் போன்ற கடும் நஞ்சு உள்ளவையாக மாறிவிட்டன.

ஊர்ப்புறங்களிலும் தாதுமணல் முழுமையாக அள்ளப்படுவதால் அனைத்து நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது, தென்னந்தோப்புகள் காய்ந்து விட்டன.

கடலில் இருந்து நிலத்தை நோக்கி வீசும் உவர் காற்றை உட்கொண்டு அதில் உள்ள உப்புத் தன்மையை அகற்றும் தேரிகளில் இருந்த காடுகளும் சவுக்குத் தோப்புகளும் அழிக்கப்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் உப்புக் காற்றால் அரிக்கப்படுகின்றன, பயிர்கள் கருகிப் போகின்றன.

லாரிகளில் தொடர்ந்து தாது மணல் மூடப்படாமல் கொண்டு செல்லப்படுவதால் வேளாண்பயிர்களில் புழுதி படிந்து, பூக்காமல், காய்க்காமல் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழும் பகுதியில் கதிர் வீச்சு கலந்த தாதுமணல் முறைகேடாக அள்ளப்படுவதால் புற்றுநோய்ப் சிறுநீரகப் பாதிப்பு, கல் அடைப்பு போன்ற நோய்கள் அதிகமாக உண்டாகின்றன. கடற்கரைப் பகுதியில் 30 முதல் 40 விழுக்காடு மக்கள் புற்று நோயால் இறக்கின்றனர்.

பெண்களில் 20 விழுக்காட்டினருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. அமிலம் கலந்த கடல் நீர் மேலே படுவதால் மீனவ மக்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது.

மக்கள் போராட்டமும் அரசின் செயல்பாடும்

தாதுமணல் நிறுவனங்கள் அதிகார வர்க்கம், தேர்தல் கட்சிகள் மற்றும் தேர்தெடுக்கப் பட்ட பிரதி நிதிகளைத் தங்களுக்கு ஆதரவாக மாற்றிவிட்டாலும் கூட அவற்றால் கொள்ளையை நிம்மதியாக நடத்த முடியவில்லை.

கடலோரத்திலும், உட்புறத்திலும் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரமும், உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் தாதுமணல் நிறுவனத்தின் கொள்ளையை எதிர்த்து போராடியே வந்துள்ளனர். பெரியதாழை, பெருமணல், மிடாலம் போன்ற மீனவ கிராமங்களில் மணல் ஆலைகளை எதிர்த்து மக்கள் கடுமையாகப் போராடினர். பல்வேறு மக்கள் இயக்கங்களும் முற்போக்கு அமைப்புகளும் போராடும் மக்களுக்குத் துணை நின்றனர்.

அண்மையில் கூத்தன் குழி கிராமத்தில் 6 மாதங்களுக்கு மேலாக மணல்ஆலையை எதிர்த்து ஊரே போராடியது.

பெருமணல், பெரியதாழை, மிடாலம் போன்ற மீனவ கிராமங்களில் உள்ள மக்களைக் காவல் துறையை வைத்து தடியடி நடத்தி கடுமையாக தாக்கினர். பொய்வழக்குப் போட்டு நீதி மன்றத்திற்கு பல ஆண்டுகளாக இழுத்தடித்து மக்களை அலைய வைத்தனர், போராட்டத்தில் முன் நின்ற தோழர் புஷ்பராயன் போன்றவர்களைக் காவல்துறையை வைத்துத் தாக்கி அவரது கையை ஒடித்து போராட்டத்தை நசுக்கினர் தாதுமணல் நிறுவனத்தினர். 6 மாதத்திற்கு மேலாகப் போராடி வந்த கூத்தன் குழி மக்கள் மீது அடியாட்களை ஏவி வெடிகுண்டு வீசித்தாக்கியும் போராட்டக்காரர்களின் வீடுகளைத் தாக்கியும் வாகனங்களைக் கடலில் தூக்கிப் போட்டும் அட்டூழியம் புரிந்தன மணற் கொள்ளை நிறுவனங்கள்.

மீனவ கிராம மக்களின் போராட்ட உணர்வை தடுப்பதற்காக ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் முதன்மையாக இருக்கக் கூடியவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பல ஆண்டுகளாக தாது மணல் நிறுவனத்தினர் மாத ஊதியம் வழங்கி வருகின்றனர். வேலை எதுவும் செய்யாமல், மணல் ஆலைக்கு எதிராக ஊரில் யாரும் வராதவாறு மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் இவர்களின் வேலை. ஆனாலும் மீனவ மக்களின் போராட்டக் குணத்தை முழுமையாக ஒடுக்க முடியவில்லை.

தாது மணல் அள்ள அரசு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி?

தாதுமணல் அள்ள அரசுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சிலர் தற்போது கூறி வருகின்றனர். உண்மையில் அரசு நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதால் மட்டும் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினை அல்ல இது.

இந்திய சுடுமணல் நிறுவனம் (IRE) செயல்படும் பகுதியில், தனியார் தாதுமணல் நிறுவனங்கள் எவ்வளவு சட்ட விரோதமான முறைகேடான முறைகளை பின் பற்றி வருகின்றனவோ அவை அனைத்தையும் இம்மி பிசகாமல் அரசு நிறுவனங்களு செய்து வருகின்றன.

ஆற்றுமணல் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததால் முறைப்படுத்தப்படும் என அரசின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆற்று மணல் கொள்ளை என்பது இன்று வரை தனியார் கையில் உள்ளது என்பதே நடைமுறை உண்மை. நிலவும் முறைகள் அனைத்தும் தனி நபர்களின் சுரண்டலுக்கு துணைப்போவதாகவே உள்ளன.

செய்ய வேண்டியது:

இன்று இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டல் நோக்கத்திற்காக சூறையாடப்படும் போது இயற்கை தனது எதிர்வினையைப் பலவகையில் காட்டுகிறது. இயற்கையோடு இயைந்து, இயற்கைக்கு ஊறு நேராத வகையில் மனிதன் தனது வாழ்க்கைத் தேவையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் இயற்கை வளங்களை “வளர்ச்சி, “அந்நியச் செலாவணி” எனக் கூறிக் கொண்டு எந்தப் பெயரிலும் அள்ள வேண்டியதில்லை. கொள்ளையிட வேண்டிய தில்லை.

இயற்கையைப் பாதுகாப்போம்; இயைந்து வாழ்வோம்! சூறையாடுவோர்க்கெதிராகப் போராடுவோம்!

Pin It