மனித உரிமைப் போராளி ஈகி ந.வெங்கடாசலம் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினவு நாள் பொதுக்கூட்டம் 21.9.2013 அன்று தஞ்சை மாவட்டம் வல்லம் சீரணி அரங்கில் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. முருகையன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ. மணியரசன் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், பேராசிரியர் த. செயராமன் த.தே.பொ.க தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் இரெ. கருணாநிதி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு. முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.காமராசு, வல்லம் புதூர் தோழர் தனசேகர் உள்ளிட்டோர் உரையாற்றினார்.

தோழர் பெ. மணியரசன் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்:

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வட்டப் பகுதியில் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந.வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் இந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந் தாலும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களை இங்கு பேசிய தோழர்களும், பேராசிரியர் செயராமன் அவர்களும் நினைவு கூர்ந்தார்கள். அவர் 1977 செப்டம்பர் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்படவில்லையென்றால் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

மனிதர்கள் மரணத்திற்குப் பின் வாழ்கின்ற வாழ்க்கை மகத்தானது. நீண்ட நெடிய வாழ்நாளோடு வாழ்ந்தாலும் சமூகம் நினைவுகூரத் தக்க வாழ்க்கை வாழாததை விட மக்களுக்காகப் போராடி இளைமையிலேயே உயிரிழந்தாலும் அது அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். இருபத்து மூன்று அகவையில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மரணமடைந்த பகத்சிங் நூறாண்டுகளைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இருபத்து மூன்று அகவையில் தன் இனவிடுதலைக்காக உண்ணாப்போராட்டம் நடத்தி மடிந்த தீலிபன், பல நூறாண்டுகளுக்கு வாழ்வான். மக்களுக்காக பாடல்கள் யாத்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் இருபத்தென்பது வயதில் இறந்தார். அவர் நூறாண்டுகளைக் கடந்து வாழ்கிறார். 39 வயதில் காலமான பாரதியார் இன்னும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப்போகிறார்.

மரணமில்லா வரலாறு மனிதர்களுக்கு முக்கியம்! சிலர் வாழும் போதே தங்கள் வரலாற்றைச் சாகடித்து விடுகிறார்கள். அவர்கள் வாழ்கிறார்கள்; அவர்களது வரலாறு செத்து விடுகிறது.

தஞ்சைப் பகுதியில் மனித உரிமைப் போராளியாக வாழ்ந்து மடிந்த தலைவர் வெங்கடாசலம் அவர்கள் நம் பகுதியில் மரணத்திற்குப் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஈகி வெங்கடாசலம் அவர்கள் நடத்திய போராட்டங்களை நான்கு வகைகளாகப் பிரித்து விடலாம். அவர் மனித சமத்துவக் கொள்கையின் சிகரமாக விளங்கும் மார்க்சியத்தை ஏற்றுப் பின்பற்றினர். தீண்டாமை சாதி ஆதிக்க ஒழிப்பு உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் அரசியலில் உள்ள ஊழலை எதிர்த்துச் சமர்புரிவது காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடுவது என இந்த நான்கு தளங்களில் போராடியவர் ந.வெ.!

1970-71 ஆம் ஆண்டுகளில் உழவுத் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது. நடவு நடும் பெண்களுக்கு மூன்று ரூபாய் கூலி, உழவு உழும் ஆண்களுக்கு 4 ரூபாய் கூலி. கூலி உயர்வு கேட்டு உழவுத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார் ந.வெ. வேலை நிறுத்தம் நடைபெறும் காலத்தில் உழவுத் தொழிலாளிகள் வேலைக்குப் போகமாட்டார்கள். விவசாயிகள் தங்கள் சொந்த வயலில் தாங்களே உழுது கொள்கிறோம் என்று ஏர்கட்டுவார்கள் வேலை நிறுத்தத்தை உடைக்க இந்த வேலையை செய்வார்கள் அவர்கள்.

நாங்கள், “உங்கள் வயலாக இருந்தாலும் நீங்கள் உழக்கூடாது. இதுவரை நீங்களா உழுதீர்கள்? தொழிலாளிகளுக்குக் கூலி உயர்வு கொடுங்கள்; வழக்கம் போல் தொழிலாளிகள் உழுவார்கள்” என்போம்.

இது வெறும் கூலிப் போராட்டமாக இல்லாமல் சாதிப் போராட்டமாக மாற்றப்படும். ஏனெனில் இங்கு வர்க்கமும் சாதியும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. உழவுத் தொழிலாளிகளில் 90 சதவீதம் பேர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். பொருளாதார அடிப்படையில் மட்டுமின்றி. பிறப்பு அடிப்படையிலும் அவர்கள் கீழ் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஒடுக்கப்பட்டுள்ளார்கள்.

கைகட்டி வாய் பொத்தி நின்று கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு போன கூட்டம் இன்று சமமாக நின்று உரிமைப் பேசுகிறதே என்ற ஆத்திரம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு விவசாயிகளுக்கு வரும். வட்டாட்சியர் அலுவலகத்தில், காவல் நிலையத்தில் இருதரப்பாருக்கும் இடையே சமரசப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் அதிகாரிகள் அப்போது தொழிலாளிகள் சமமாக உட்கார்ந்து எதிர்த்துப் பேசுவது, மிராசுதார்களுக்கு எரிச்சலை உண்டாக்கும் வயல் வெளியில் வெட்டுக்குத்து என்ற அளவுக்கு ஆயுதத் தோடு வருவார்கள். கூலிப் போராட்டம் என்பது கூலி உயர்வுக்கானதாக மட்டுமின்றி உழைக்கும் மக்களின் மனித உரிமைக்கானதாகவும் இருந்தது.

இப்படிப் போராட்டம் நடத்தி 1972 இல் திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங் கலத்தில் பெண் தொழிலாளி கூலி மூன்று ரூபாயிலிருந்து மூன்றரை ரூபாயாக உயர்த்தப்பட்டதாக ஞாபகம். ஆண் தொழிலாளி கூலி நான்கு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டதாக ஞாபகம்.

இப்படிப்பட்ட பல ஊர்களில் போராட்டம் வெடித்தது. கூலி உயர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. வெங்கடாசலம் அவர்கள் தலைமை தாங்கிய போதும், அவர்க்குப் பிறகு நாங்கள் தலைமை தாங்கி நடத்திய போதும் தீண்டாமைக்கொடுமைகள் தஞ்சை திருவையாறு வட்டங்களில் ஒழிய பற்பல போராட்டங்கள் நடந்தன. அப்படி நாங்கள் நடத்திய போராட்டங்களால் பல ஊர்களில் இரட்டைக் குவளைமுறை ஒழிந்தது. ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர்கள் செருப்பணிந்து குடைபிடித்துச் செல்லும் மனித உரிமை, ஊருக்குள் சைக்கிளில் ஏறிச் செல்லும் மனித நீதி போன்றவை பெறப் பட்டன. கிராம ஏரிகளில் மீன் பிடித்தால் அதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு பங்கு கிடையாது. இந்த வட்டாரத்தில் பல ஊர்களில் நாங்கள் நடத்திய போராட்டத்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஏரியில் கிராமப் பொதுச் சொத்தில் பங்கு கிடைத்தது.

இங்கே பேசிய தோழர்கள், இப்பொழுது சாதி அமைப்புகள், சாதிக்கட்சிகள் பெருத்து விட்டதை சுட்டிக் காட்டினார்கள். சாதிக் கட்சிகள் என்று நம்மால் சிலவற்றை எளிதில் அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அனைத்து சாதிகளுக்குமான பொதுக்கட்சிகள் போல் தோற்றமளிக்கும் தி.மு.க., அ.தி.மு.க. காங்கிரசு போன்ற கட்சிகள் சாதிக் கட்சிகள் இல்லையா? இவைதான் மூத்த சாதிக் கட்சிகள்!

எந்தெந்த வட்டாரத்தில் எந்தெந்த சாதி அடர்த்தியாக இருக்கிறதோ, ஆதிக்கத்தில் இருக்கிறதோ அந்த சாதியில் பிறந்தவர்களுக்குத் தானே இந்தக் கட்சிகள் பதவிகள் கொடுத்தன. அந்த வட்டாரத்தில் அந்த சாதிக்கு ஆதரவாகத்தானே, இந்தக் கட்சிகள் நடந்து கொண்டன; நடந்து கொள்கின்றன. நடுநிலையாகச் செயல்படவில்லையே!

தங்கள் கட்சிக்காக கட்சியின் கொள்கைக்காக உழைத்த சிறைசென்ற செயல் திறனும் அறிவாற்றலும் பெற்ற ஒருவருக்கா தி.மு.க., அ.தி.மு.க. காங்கிரசுக் கட்சிகள் பதவி கொடுத்தன? இல்லை. சாதி ஆதிக்கம் பண ஆதிக்கம் உள்ளவரைப் பார்த்துதான் பதவி கொடுத்தன? இல்லை சாதி ஆதிக்கம் பண ஆதிக்கம் உள்ளவரைப் பார்த்துதான் பதவி கொடுத்தன. தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் போது அந்தந்தத் தொகுதியில் எந்த சாதி அதிகம், அந்த சாதி ஓட்டை அதிகமாக வாங்கும் சாதிச் சார்பாளர் யார் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சொந்தமாகத் தேர்தல் செலவு செய்யும் வசதி படைத்தவர் யார் என்று பார்த்துத்தானே, இந்தக் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின.

இக்கட்சிகளால்தான் சாதி ஆதிக்கமும் பண ஆதிக்கமும் ஊழலும் மறுபிறப்பெடுத்தன. புத்துயிர் பெற்றன. சாதி வாக்கு வங்கி என்று உருவாக்கினார்கள் இதன் வளர்ச்சிதான் சாதிக் கட்சிகள் உருவாகக் காரணம். அடுத்த சாதிக்காரனைத் தலைவனாக, தலைவி யாக ஆக்குவதை விட நம் சாதிக்காரனே தலைவர் ஆகட்டும் என்று ஒரு பகுதி மக்கள் முடிவு செய்தார்கள். அனைத்து சாதிகளுக்கும்பொதுவான கட்சிகளாகச் சொல்லிக் கொண்ட கட்சிகளில் போய் பதவி, பணம் சம்பாதிக்கும் வாய்ப்பில்லாத வர்கள் ஆற்றல் இல்லாதவர்கள் சொந்த சாதி உணர்வைத் தூண்டி விட்டுத் தாங்களே தலைமை தாங்கிக் கட்சி நடத்துகிறார்கள். சாதி அமைப்புகள் நடத்துகிறார்கள்.

தி.மு.க. அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏன் சாதி உணர்வைத் தூண்டி விட்டன. மக்களைத் திரட்டிட அவர்களைத் தூண்டிவிட இலட்சியங்கள் தேவை; கொள்கைகள் தேவை. பதவியும் பணமும் இலக்குகளே தவிர இலட்சியங்கள் இல்லையே!

இலட்சிய மில்லாத அரசியலால்தான் தமிழ்நாடு எல்லா வகையிலும் சீரழிந்து கிடக்கிறது. சாதி உணர்வுகள் சாதிவெறிகளாக மாறிய கொடுமைகள் நடக்கின்றன. இந்த அவலத்தைப் போக்க நாம் இலட்சியத்தை முன் வைக்க வேண்டும்.

அதனால்தான் தமிழ்த் தேசிப் பொதுவுடைமைக் கட்சி தமிழ்த் தேசியம் என்ற இலட்சியத்தை முன் வைத்துள்ளது. தமிழ்நாடு விடுதலை. மனிதனை மனிதன் சுரண்டாத மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத சமத்துவ தமிழ்த் தேசம் படைக்க வேண்டும். அதற்கான முதல் நிபந்தனை இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும்.

இந்த தமிழ்த் தேசியத்தை நிலைநாட்ட பதவி – பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாதவர்களின் அணிவகுப்பாகத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உருவாக வேண்டும். அந்த இலக்கை நோக்கி நமது பயணம் இருக்கிறது. மனித உரிமைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்த ஈகி வெங்கடாசலம் அவர்களின் நினைவுகள் நம்மை இந்தத் திசை நோக்கி, வேகமாக முன்னேற வைக்கும்!”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார். திரளான மக்கள் கூடியிருந்தனர்.

Pin It