தமிழ் செம்மொழியாக ஏற்கப்பட்ட பிறகு ‘செம்மொழி தமிழ் ஆய்வு மய்யம்’ சென்னையில் அமைக்கப்பட்டது. தனித்து இயங்கிய இந்த ஆய்வு மய்யத்தை இழுத்து மூடிவிட்டு, திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு துறையாக மாற்ற மோடி ஆட்சி முடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியைத் தவிர்த்து பிறமொழி நிறுவனங்கள் அனைத்தையும் ஆங்காங்கே இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒரு துறையாக இணைக்க மோடியின் மனித வள மேம்பாட்டுத் துறை முடிவெடுத்திருக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகளை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளங்கள் என்பதை மோடி ஆட்சி ஏற்கத் தயாராக இல்லை. தேசிய இனங்களை இந்த பார்ப்பனிய கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, தேசிய இனங்களின் மொழிகளை சமஸ்கிருத, இந்தி ஆளுகைக்குக் கீழே அடக்க முயலும் பார்ப்பன சதியை தமிழர்களே! தமிழ் மொழிப் பற்றாளர்களே புரிந்து கொள்ளுங்கள்!

கீழடியில் நடக்கும் கீழறுப்பு

சிவகங்கை அருக உள்ள கீழடியில் தமிழர் சங்ககால வாழ்வியல் குறித்து சான்றாதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டறிந்திருக்கிறது. ஜாதி, மதங்கள் இல்லாத ஒரு வாழ்வே சங்ககாலத் தமிழர்கள் வாழ்வு என்று இந்தத் தடயங்கள் உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்துத்துவா திணிப்புக்கு இது எதிரானது என்பதால் தொல்பொருள் தடயங்களை ஒரு மூட்டையில் கட்டி பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் வீசி விட்டனர். நீதிமன்ற வழக்குகள், பொது மக்கள் எதிர்ப்பு வந்த பிறகு மீண்டும் ஆய்வுகள் தொடங்கின. நேர்மையான ஒரு அதிகாரி முறையாக தொல்பொருள் ஆய்வுகளைத் தொடங்கினார். அவரை திடீரென்று இடமாற்றம் செய்தது மோடி ஆட்சி. மக்கள் கொதித்தெழுந்தார்கள். கீழடியைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன், நிர்மலா சீத்தாராமனை முற்றுகையிட்டார்கள். தமிழர்கள் பண்பாடு பார்ப்பனிய இந்துத்துவா பண்பாடு அல்ல என்பதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளை முடக்க முயலுகிறது மோடி ஆட்சி.

அடிபணியும் தமிழக அரசு

கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக களமிறங்கிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 தோழர்களை கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறது தமிழக அரசு. அவர்களை பிணையில் விடுவிக்கவும் கூடாது என்று ‘ஓ.என்.ஜி.சி.’ பார்ப்பன அதிகாரவர்க்கம் தனது முழு அதிகாரச் செல்வாக்கையும் பயன்படுத்துகிறது.

நெடுவாசல் - கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்காக அவர்கள் கோரிக்கையின் நியாயங்களை விளக்கி சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கை வழங்கிய மாணவி வளர்மதியை காவல்துறை ஜூலை 16ஆம் தேதி கைது செய்து குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. 23 வயது வளர்மதி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டம் பெற்றவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு இதழியல் படிக்கிறார். ‘ஓ.என்.ஜி.சி.’யை எதிர்ப்போர் எல்லோருமே தேச விரோதிகளாம். மத்திய அரசிடம், ‘ஓ.என்.ஜி.சி.’க்கு அவ்வளவு செல்வாக்கு! தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் அவ்வளவு குலை நடுக்கம்! தமிழ் மக்கள் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்கள் தேச விரோதிகளா?

பறி போகிறது திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

1966ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருச்சியில் தொடங்கப் பட்டது துப்பாக்கித் தொழிற்சாலை, பொதுத் துறை நிறுவனம். இந்திரா காந்தி திறந்து வைத்தார். இந்திய இராணுவத்துக்குத் தேவையான தளவாட உற்பத்தியில் முதலிடத்தில் நிற்கும் இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கப் போகிறது, மோடி ஆட்சி. நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 72,500 கோடி நிதி திரட்டு வதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கியிருக்கிறது மோடி ஆட்சி. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் இந்தத் தொழிற் சாலையைச் சார்ந்து வாழும் அய்ந்து கிராமங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் மோடி ஆட்சி, பாதுகாப்பு தொடர்பான அனைத்து துறைகளையும் செயலிழக்கச் செய்கிறது. யூத மத வெறி இஸ்ரேலிடம் அதிகமான இராணுவத் தளவாடங்கள் வாங்கப்படுகின்றன.

பார்ப்பனியமும் ஜியோனிசமும் இராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?

Pin It