வரும் மக்களவைத் தேர்தலில், தமிழினப் பகை ஆற்றலான காங்கிரசை வீழ்த்திட, பாரதிய சனதாக் கட்சியை ஆதரித்தால் தவறென்ன இருக்கிறது. என்று தமிழின உணர்வாளர் களில் சிலர் கருதுகின்றனர்.

பாசக இந்திய ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கும், தமிழ் ஈழத்திற்கும் ஆதரவாக என்ன செய்தது?

2000 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் சிங்களப் படையிடமிருந்து ஆனையிறவு முகாமை மீட்டனர். சிங்களப் படையின் நெஞ்சாங்குலை நொறுங்கியது போல் ஆனது. அடுத்து, யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் மீட்டு விடுவார்கள் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டது. அதே அச்சம் வாஜ்பாயி அரசுக்கும் ஏற்பட்டது.

அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டார். விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுக்கக் கூடாது. அவ்வாறு படை யெடுத்தால் அங்குள்ள சிங்களப் படையினர்க்கும் புலிகளுக்கும் நடக்கும் போரில் இரத்த ஆறு ஓடும் உயிர்ப்பலி ஏராளமாக ஏற்படும்” என்றார்.

சிங்களப் படை தோற்றுவிடும்; சிங்களப் படையாட்கள் ஏராளமாகக் கொல்லப்படுவர் என்ற பதற்றத்தில் அவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டார். அத்தோடு நில்லாமல், சிங்களப் படைக்கு ஒரு போர்க்கப்பலையும் வாஜ்பாயி அரசு வழங்கியது. யாரைக் கொல்லுவதற்காக அந்தப் போர்க்கப்பல் வழங்கப்பட்டது? தமிழர்களைக் கொல்வ தற்குத் தான்!

2008 – 2009 இல் இராசபட்சே அரசு, தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் வீசி ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக் கொன்றது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதியினரும் போராடினோம். போர் நிறுத்தம் கோரி முத்துக் குமார் தொடங்கி தமிழர்கள் அடுத்தடுத்து தீக் குள்ளித்து மடிந்தனர். அப்போது பாசக தலைமை போர் நிறுத்தம் கோராதது ஏன்?

அப்போது சிங்களப் படைக்கு மன்மோகன் அரசு ஆயுதம் கொடுத்தது. அவ்வாறு ஆயுதம் கொடுக்கக் கூடாது என்று அவரிடம் மனுக்கொடுத்த வைகோ அவர்களுக்கு, எழுத்து வடிவில் அளித்த விடையில், “இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கா விட்டால் சீனா கொடுக்கும்” என்று ஞாயப்படுத்தினர் மன்மோகன்தலைமை மன்மோகன் அரசு சிங்களப் படைக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது என்று பா.ச.க. கூறிய துண்டா? இல்லை!

எல்லாம் முடிந்து, தமிழினம் அழிக்கப்பட்டபின், இலங்கை அரசு நடத்தியது இன அழிப்புக் குற்றம் (Genocide) என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 2013 மார்ச்சில் தி.மு.க. கோரியது. (தனது இனத்துரோகத்தை மறைக்க அது அவ்வாறு செய்தது என்பது வேறு செய்தி) அவ்வாற்று தீர்மானம் நிறை வேற்றுவது பற்றிக் கருத்தறிய மக்களவைத் தலைவர் மீராகுமார் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்திய போது அந்த முன்மொழிவை முதலில் எதிர்த்தவர் பாசக.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ்!

இலண்டன் சேனல் 4 தொலைக்காட்சியும் நியுயார்க் மனித உரிமைக் கண்காணிப்ப கமும் இராசபட்சே அரசின் இனப்படுகொலைக் குற்றத்தை அக்கு அக்காக அம்பலப் படுத்தின. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த தாருஸ்மான் தலைமை யிலான மூவர் குழுவும் 2008 -2009 இல் இலங்கைப் படை செய்தது மனித குலத்திற் கெதிரான குற்றம் என்றது.

இவ்வளவுக்குப் பின்னும் இன அழிப்புக் குற்றவாளி இராசபட்சேயை பாசக. ஆளும் மத்தியப் பிரதேச அரசு சிறப்பு விருந்தாளியாக அழைத்து பாராட்டியது. அந்த விழா வும் சுஷ்மா சுவராஜின் சாஞ்சி தொகுதியில் நடந்தது. இலங்கை சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைமை தாங்கிய சுஷ்மா சுவராஜ் இராசபட்சேக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சிறப்பாக நடக்கின்றன. என்று சான்றுரை பகன்றார். இந்திக் காரர்களுக்கு ஏதோ ஒரு நாட்டில் இப்படி இன அழிப்பு நேர்ந்திருந்தால் அநாட்டுத் தலைவருடன் – பா.ச.க. தலைமை கூடிக்குலாவுமா?

இராசபட்சே கும்பலை விசாரிக்கப் பன்னாட்டு புலாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் கோருகின்றன. அக்கோரிக் கையை இன்று வரை பா.ச.க. தலைமை ஆதரிக்க வில்லையே ஏன்? காங்கிரசுக்கும் பாசகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் அதன் தமிழினப் பகைச் செயல்கள் தெரிந்து விடுகின்றன. பாசகவின் மவுனம், அதன் வஞ்சகத்தை மூடி மறைக்கிறது.

பதினைந்தாம் நூற்றாண்டில் அயோத்தியில் இராமர் கோயிலை இடித்து அந்த இடத்தில் மசூதி கட்டினார் பாபர் என்று கூறி அந்த மசூதியை அத்வானி தலைமையில் இடித்தனர். ஈழத்தில் நூற்றுக்கணக்கான தமிழர் கோயில்களை புத்தமதச் சிங்கள வெறியர்களும் சிங்களப் படையாட்களும் இடித்தார்கள். இன்றும் இடிக்கிறார்கள். தமிழர் கோயில்களைப் புத்தவிகாரைகளாக மாற்றுகிறார்கள். இந்த அநீதியை பா.ச.க. கண்டிக்காதது மட்டுமல்ல, அதைச் செய்யும் இராசபட்சேக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது!

தமிழர்கள் வழிபடும் சிவன் கோயில், பிள்ளையார் கோயில், பெருமாள் கோயில், சிங்களப் புத்தமத வெளியர்களால் இடிக்கப்பட்டால் அதைப் பற்றி பா.ச.கவுக்குக் இல்லை! கடவுள் வழிப்பட்டிலும் இனப்பாகுபாடு! ஐ.கே. குஜரால் பிரதமராக இருந்தபோது, காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்த சரியான திட்டம் வகுக்கப்பட்டது. அதிகாரிகளைக் கொண்ட ஆணையம் அமைப்பது என்றும் அந்த ஆணையத்தின் பொறுப்பில் கர்நாடக, தமிழக அணைகளின் நீர் நிர்வாகத்தை ஒப்படைப்பது என்றும் அத்திட்டம் கூறியது. ஐ.கே. குஜரால் ஆட்சி கவிழ்ந்து விட்டது. அதற்குபின் ஆட்சிக்கு வந்த வாஜ்பேயி அரசு அத்திட்டத்தை மறுத்து விட்டது. அதிகாரமில்லாத ஓர் ஆணையத்தை உருவாக்கி ஏமாற்றியது. இனத்துரோகத்திற்குப் பெயர் போன கருணாநிதியை அதற்குப் பயன்படுத்திக்கொண்டது வாஜ்பாயி அரசு.

பாசக ஆட்சியின் போதும் தமிழக மீனவர்களைத் தாக்கியது சிங்களப்படை! கச்சத் தீவைத் தமிழ்நாட்டிற்கு மீட்க பாசக. ஆட்சி எதுவும் செய்யவில்லை. பாசகவிற்கும் காங்கிரசுகும் என்ன வேறுபாடு இருக்கிறது?

பாரதிய சனதாவிற்கென்று ஓர் இன அரசியல் இருக்கிறது; ஒரு மத அரசியல் இருக்கிறது. ஆரிய இனச்சார்பும் பார்ப்பனிய மதச்சார்பும்தான் அது கூறும் இந்துத் துவா! “இந்தியரும் ஆரியர், சிங்களரும் ஆரியர், இருநாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று அண்மையில் அத்வானி கூறினார்.

இந்தியாவின் இனப் பன்மை, பண்பாட்டுப் பன்மை, மொழிப் பன்மை, மதப் பன்மை ஆகிய அனைத்தையும் ஒழித்து, ஒற்றை அடையாளமாக “இந்தியன் - இந்துத்துவா” என்பதை நிலைநாட்ட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். பாசக ஆகியவற்றின் திட்டம்.

இந்தச் சதியை மூடி மறைத்து, அனைத்து மக்களின் வாக்குகளை வாங்கி இந்தியாவின் ஆட்சியைத் தனிப்பெரும்பான்மையுடன் அமைத்துவிட்டால் தனது ஆரியத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று ஆர். எஸ். எஸ். உத்தி வகுத்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் முகமூடி அணிந்து தமிழர்களை ஈர்க்க வேண்டும் என்பது அவர்களின் உத்தி! அதனால்தான் திருச்சியில் 26.9.2013 அன்று பேசும் போது, மோடி “செந்தமிழ்நாடு என்னும் போது காதில் தேன் வந்து பாயுது” என்றும் “தமிழன் என்றோர் இன முண்டு தனியே அவற்கோர் குணமுண்டு” என்றும் தமிழ் மொழியிலேயே கூறினார். இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்கள் இனக்கொலை செய்யப்பட்ட போது இரங்கல் தெரிவிக்க ஒரு சொல் மோடிக்குக் கிடைக்கவில்லை.

மோடி பார்ப்பனரல்லாத வைசியர். உ.பி., பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களை ஈர்க்க மோடியை பயன்படுத்தலாம் என்று ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. பார்ப்பனரல்லாதவராக இருந்தாலும் ஆரியத்தின் ஆர்.எஸ்.எஸ். சின் தீவிரச் செயல்பாட்டாளர் மோடி!

குசராத்தில் 2002 இல் மோடி ஆட்சியின் துணையோடுதான் இரண்டாயிரம் அப்பாவி இஸ்லாமியர்களை ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிசத்; பாசக. குண்டர்கள் படுகொலை செய்தனர்” காரில் போகும் போது குறுக்கே ஓடிவரும் நாய்க்குட்டி அடிபட்டு செத்துப் போனால் ஏற்படும் வருத்தம்தான் 2002 நிகழ்வுகள் பற்றி எனக்கு ஏற்பட்டது” என்று அண்மையில்தான் அயல்நாட்டுச் செய்தி ஊடகத்திடம் கூறினார் மோடி. இப்படிப்பட்ட ஆரிய இந்துத்துவா வெறியன் இந்தியாவின் பிரதமர் ஆகிவிட்டால் ஆரியத்தின் பெயரால் இட்லர் செய்ததையெல்லாம் இந்தியாவிலும் செய்யலாம் என்பது ஆர். எஸ்.எஸ். திட்டம்.

மோடி பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாவலர் பன்னாட்டு முதலாளிகளின் நாடுகள் மோடியை ஆதரிக்கின்றன.

அண்மைக் காலமாக மோடி பேசும் கூட்டங்களில் இந்திய இராணுவத்தின் பெருமை களை திறமைகளை ஈகங்களை வானளாவ புகழ்கிறார். முன்னாள் இராணுவத் தளபதி வி.கே.சிங். மோடியுடன் சேர்ந்துள்ளார்.

மோடியின் பேச்சைக் கவனித்தால் 1930களின் தொடக்கத்தில் செர்மனியின் தேர்தல் கூட்டங்களில் இட்லர் பேசியது நினைவுக்கு வருகிறது. முதல் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் செர்மனி நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள் செர்மனி இராணுவத் திற்கேற்பட்ட சிறுமைகள் இவற்றை மிகைபடப் பேசி செர்மானிய இனவெறியைத் தூண்டினார் இட்லர்.

தனிப் பெரும்பான்மையுடன் நரேந்திரமோடி தலைமையில் பாசக ஆட்சி அமைத்து விட்டால், இந்தியாவில் உள்நாட்டுப் போர்நடக்கும் அல்லது மற்றவர்கள் அனைவரும் ஆரியத்திற்கு அடிமை என்பதை அமைதியாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

அரசுக் கட்டிலில் அமர்ந்துவிட்டால் ஆரியம் முதலில் பாய்வது தமிழ்மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதுமாகத்தான் இருக்கும். மூவாயிரம் ஆண்டுகளாக ஆரிய ஆதிக் கத்தை, வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்துச் சமர் புரிந்து வருவது தமிழ் இனமும் தமிழ்மொழியும்தான்!

மொழிவழி மாநிலங்கள் நிர்வாக மாநிலங்களாகப் பிரிக்கப்படும். பிரதமர் ஆட்சி முறையைக் குடியரசுத் தலைவர் ஆட்சி முறையாக மாற்றுவார்கள், ஒரே இடத்தில் அதிகாரங்களைக் குவித்துக் கொள்வார்கள். இட ஒதுக்கீட்டை சிதைத்துச் சின்னா பின்னமாக்குவார்கள்! எதிர்ப்புக் கிளம்பினால் இராணுவத்தை அனுப்புவார்கள்!

திருச்சியில் தமிழ்ப் பெருமை தமிழ்நாட்டுப் பெருமை பற்றியெல்லாம் மோடி பேசிய அதே பேச்சின் பிற்பகுதியில் காங்கிரசு ஆட்சி மொழி வழி மாநிலங்களை அமைத்து இந்தியாவைப் பிளவுப் படுத்திவிட்டது என்றார்.

காங்கிரசு ஆட்சி மொழிவழி மாநிலம் அமைக்க மறுத்தது. போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியில்லாமல் மொழிவழி மாநிலம் அமைத்தது.

காங்கிரசும் பாசகவும் – ஆரியத்தின் – தமிழினப் பகையின் இரட்டை முகங்கள்! இவ் விரண்டும் தமிழ்நாட்டில் வேர் பிடிக்க விட்டால் தமிழினம் தனக்கான சவக் குழியைத் தானே தோண்டிக் கொள்கிறது என்று பொருள்! எச்சரிக்கை

Pin It

தண்ணீருக்குள் கிடந்தாலும் பாஸ்பரஸ் அணைந்து விடாமல் தணலாக இருப்பது போல் பணயக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருந்தாலும் தமிழ் ஈழமக்கள் இராசபட்சே கும்பலுக்கு வாக்குச் சீட்டால் பதிலடி கொடுத்துள்ளார்கள்.

பளபளக்கும் புதிய சாலைகளோ பாய்ந்து செல்லும் புதிய தொடர்வண்டிகளோ பளிச்சிடும் புதிய மாளிகைகளோ எங்களின் தாயக வேட்கையைத் தணித்து விடா என்பதைத் தமிழீழ மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். ஈழத் தமிழ் மக்களுக்கு எம் வாழ்த்துகள்!

வடக்கு மாநில அவைக்கு (மாகாணசபைக்கு) நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதுவும் பெரும் வாக்கு வேறுபாட்டில்!

இராசபட்சே – டக்ளஸ் தேவானந்தா கூட்டணி ஏழு இடங்களைப் பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டணி 80 விழுக்காடு வாக்குகளையும் இராசபட்சே கூட்டணி 18.38 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளன.

வடக்கு மாநிலம் முழுதிலும் படை அணிகளை நிறுத்திவைத்துக் கொண்டு, வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி இராசபட்சே ஆட்சி அட்டூழியம் புரிந்தது. சுதந்திரமாக வாக்களிக்கும் சூழ்நிலை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டணி யின் பெண் வேட்பாளர் ஆனந்தி எழிலன் வீடு குண்டர்களால் தாக்கப்படது. அவரும் அவர் பிள்ளைகளும் உயிர்பிழைத்தது பெரும்பாடு! இருப்பினும் பன்னாட்டுத் தேர்தல் பார்வையாளர்கள் அங்கிருந்தது ஆறுதலாக இருந்தது. இராசபட்சேயால் முற்றிலும் மோசடித் தேர்தல் நடத்த முடியவில்லை.

ஈழத் தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது. சம்பந்தன் – விக்னேசுவரன் – சுமந்திரன் அடங்கிய மூவர் குழு மீது நம்பிக்கை வைத்து, தமிழர்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வில்லை. சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கும் போருக்குப்பின் பணயக் கைதிகள்போல் தமிழர்களை வைத்திருக்கும் பாசிசத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்ப்பு வாக்களித் துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நேர்வகை ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்று கருத முடியாது.

கட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பாக இருந்தாலும் அதைப் பயன் படுத்தி பன்னாட்டு சமூகத்திற்குத் தங்கள் மன உணர்வையும், தேவையையும் சனநாயக வழியில் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழ்மக்கள்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு; அது ஆயுதப் போராளிகளைக் கொண்டு தமிழ்மக்களை அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கக் கட்டாயப் படுத்திவிட்டது; தமிழ்மக்கள் சிங்களர்களோடு சேர்ந்து அமைதியாக வாழவே விரும்புகிறார்கள் என்று கோயபல்ஸ் போல் திரும்பத் திரும்ப சிலர் புளுகி வந்தனர். அனைத்திந்திய ஆரியச் சார்பு ஊடகங்கள், காங்கிரசுக் கட்சியினர், சுப்பிரமணியசாமி, சோ. இராமசாமி போன்ற பன்னாட்டு உள்நாட்டு பார்ப்பனத் தரகர்கள், பார்ப்பன- வங்காளி- மலையாளி கூட்டுத் தலைமையில் இயங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போன்றோர் ஈழத் தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை, தமிழ்நாட்டில் உள்ள சிலர்தான் கேட்கின்றனர் என்று கூறி வந்தனர்.

ஈழம் இலங்கையில் சேர்ந்திருப்பதா அல்லது பிரிந்து தனி நாடாவதா என்று கேள்வி கேட்டுக் கருத்து வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் இதைவிடக் கூடுதல் பெரும்பான்மை யில் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணியை இந்தியாதான் இயக்குகிறது. இந்தியா ஏற்பிசைவு அளித்த முதலமைச்சர் வேட்பாளர்தாம் விக்னேசு வரன்! ஆனால், ஈழத் தமிழர்கள் இந்த அளவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வாக்களித்தைக் கண்டு இந்தியாவே மிரண்டு போயிருக்கிறது.

இன அழிப்புக் குற்றவாளி இராசபட்சே ஆட்சியை நாங்கள் ஏற்கவில்லை என்று பன் னாட்டு சமூகத்தின் முன்பாக ஈழத் தமிழர்கள் தெளிவுபடக் கூறிவிட்டார்கள்.

வட அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் நடுநிலை வகிப்பது போல் தோற்றம் கொடுத்துக் கொண்டு, ஈழ விடுதலைப் போரைக் குருதி வெள்ளத்தில் மூழகடிக்க இராசபட்சே கும்பலுக்குத் துணை போயின. இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒளிவுமறைவின்றி இராசபட்சே நடத்திய தமிழின அழிப்புப் போரில், பல்வேறு வடிவங்களில் பங்கெடுத்தன. சிங்கள இனவெறி அரசைத் தூக்கி நிறுத்தின; பன்னாட்டு அரங்கில் பல்வேறு உத்திகளைக் கையாண்டு இன அழிப்புக்குற்றவாளிகளான இராசபட்சே கும்பலைப் பாதுகாத்தன.

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவமான, கெளரவமான வாழ்க்கை தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கை” என்ற பசப்பு மொழியைப் பயன்படுத்திக் கொண்டுதான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடங்கி சி.பி.எம். கட்சி வரை உள்ளவர்கள் சிங்கள இனவெறி அரசுக்குத் தங்கள் ஆதரவை நல்கி வருகின்றனர். இராசபட்சேக் கும்பலின் இன அழிப்புக் குற்றங்களை மூடி மறைப்பதற் கான மூடுதிரையாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் “இலங்கையில் நடந்த மனித உரிமைச் சிக்கல்களை விசாரிக்க இலங்கை அரசே குழு அமைக்கட்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா அத்தீர்மானத்தை ஆதரித்தது.

இப்பொழுது இந்தியா 13 ஆவது திருத்ததின் படி வடக்கு மாநில அவை அதிகாரம் பெற்று நல்லாட்சி நடத்தட்டும் என்கிறது. காளை மாட்டில் பால் கறந்து காய்ச்சிக் குடி என்பது போல், கழுதைமேல் ஏறி குதிரை வேகத்திற்குப் பயணம் செய் என்பது போல் அதிகாரம் வழங்காத அலங்காரத் திருத்தமான 13 ஆவது திருத்ததின் மகத்து வம் பற்றி இந்தியா பேசுகிறது.

இனத்துரோகி ப. சிதம்பரம், சம்பந்தன் குழுவுக்கு வாழ்த்துச் சொல்லும் சாக்கில் “இனிமேல் நீங்கள்தான் சமர்த்தாக எல்லா அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளவேண்டும்” என்கிறார். “தமிழ்த் தேசியக் கூட்டணி, சமத்துவமான அதிகாரங்களைப் பெறவேண்டும்’’ என்கிறார்! ஆனால் ப. சிதம்பரம் இராசபட்சே ஆட்சிக்கு எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை. இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் செய்யபட்ட 13 ஆவது திருத்தம், நிலம், காவல்துறை, நீதிமன்றம், போன்றவற்றில் எந்த அதிகாரமும் மாநில அவைக்கு வழங்கவில்லை.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் மொழிவழி மாநில அமைப்பு கிடையாது. சிங்களர்களுக்கு ஏழு மாநிலங்கள்; தமிழர்களுக்கு இரண்டு மாநிலங்கள் என வெள்ளையர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் போன்ற அமைப்புகள்தாம் இந்த ஒன்பது மாநிலங்களும். இம் மாநிலங்களை வெள்ளையர் ஆட்சிகாலத்திலிருந்து அதிகாரிகளே நிர்வாகித்து வந்தனர்.

தமிழ் ஈழ விடுதலைப் போர் முன்னேறிய போது நெல்லியடி இராணுவ முகாமைக் கரும்புலி மில்லர் தாக்கித் தகர்த்தபிறகு, அன்றைய இலங்கைக் குடியரசுத் தலைவர் செயவர்த்தனா, இந்தியப் பிரதமர் இராசீவ்காந்தியிடம் “எப்படியாவது புலிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க வேண்டும் இல்லையேல் தனி ஈழ நாடு உருவாகிவிடும்” என்றார். அதற்காக இந்தியா தலையிட்டு இலங்கையுடன் தன் முனைப்பாக ஒப்பந்தம் செய்துகொண்டு அதை ஈழத் தமிழர்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் திணித்தது. அப்பொழுது கண் துடைப்பாக உருவாக்கப்பட்டதுதான் 13 ஆவது திருத்தம்.

வெள்ளைக்காரன் காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வந்த மாநிலங்களுக்கு ஒரு நிர்வாக அவை அமைப்பது (provincial council); அந்த அவைக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் முதலமைச் சராகவும் சிலர் அமைச்சர்களாகவும் இருப்பது என்று 13ஆவது திருத்தம் கூறுகிறது.
ஆனால் இந்த மாநில அவை (provincial council) ஓர் அரசு அல்ல. மேற்கு வங்கத்தில் உள்ள கூர்க்கலாந்து நிர்வாக அவையை விடவும் குறைவான அதிகாரங்களைக் கொண்டது இலங்கையின் மாநில அவை.

மொழிவழி – இனவழி – மாநிலம் கிடையாது; அரசமைப்புச் சட்டப்படி அதிகாரங்கள் நடுவண் அரசுக்கும் மாநில அவைக்கும் பிரிக்கப்படவில்லை. நிலம் காவல் துறை, நீதி, சட்டம் ஒழுங்கு, நிதி அதிகாரங்கள் இலங்கையின் மாநில அவைக்குக் கிடையாது. இது மாநில அவைதானே(provincial council) தவிர, மாநில சட்டப் பேரவை (legislative Assembly) அல்ல. இலங்கை நாடாளுமன்றம் ஒற்றை அவை கொண்டது. அங்கு மாநிலங்கள் அவை கிடையாது. இலங்கை ஒற்றை அரசைக் (unitary state) கொண்டிருக்கிறது. அங்கு கூட்டரசு(federal state) கிடையாது. இந்தக் காளை மாட்டில் பால் கறக்கும் வித்தை காங்கிரசுக்காரர்களுக்கும் சி.பி.எம். கட்சியினர்க்கும்தான் தெரியும்! சாதாரண மனிதர்களுக்குத் தெரியாது!

1987 இல் வடக்கு – கிழக்கு மாநிலங்கள் இணைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் அதில் பங்கெடுக்கவில்லை. ஈ.பி. ஆர். எல் எப் தேர்தலில் பங்கெடுத்தது. அவ்வமைப்பின் வரதராசபெருமாள் முதலமைச்சர் ஆனார். கடைசியில் இந்தியாவின் கைப்பிள்ளையான வரதராசப்பெருமாள் 1889 இல் என்ன சொன்னார்? “ பெயருக்குத்தான் நான் முதலமைச்சர், ஒரு அதிகாரமும் இல்லை. என் அலுவலகத் திற்கு ஒரு நாற்காலி வாங்க வேண்டுமென்றாலும் கொழும்பில் அனுமதி பெற வேண்டியுள்ளது. அதிகாரமில்லாத இந்தக் கவுன்சிலை கலைத்துவிட்டேன். இனி, தனி ஈழம் தான் ஒரே தீர்வு. ஈழத்தைத் தனிநாடாக நான் பிரகடனம் செய்கிறேன்” என்று கூறிவிட்டு இந்திய இராணுவ ஊர்தியில் ஏறி இந்தியா வந்துவிட்டார்.

பின்னர் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாநில அவையின் முதலமைச் சராக கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தேர்ந்தெடுக்கப்பாட்டார். அவரும் கடைசியில் “எந்த அதிகாரமும் மாநில அவைக்குக் கொழும்பு வழங்க வில்லை” என்று ஊரறிய ஓலமிட்டார்.

வரதராசப் பெருமாளும் பிள்ளையானும் சாதிக்காததைச் சாதிக்க சம்பந்தனும் விக்னேசுவரனும் புறப்பட்டுள்ளார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டதை நாம் குறை சொல்லவில்லை. போலி நம்பிக்கைகளை விதைக்கிறார்கள்; அதைத்தான் திறனாய்வு செய்கிறோம். புதிய சகாப்தம் பிறந்துள்ளதாகவும், இனி தனிநாடு என்ற கோரிக்கை இல்லை என்றும் கூறுகிறார்கள்.

“மக்கள் இப்பொழுது கொடுத்திருக்கும் கட்டளை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் களுக்குரிய அதிகாரம் பெறுவதுதான்” என்கிறார் சம்பந்தர். 1977 இல் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு அதாவது தனித் தமிழ் ஈழத்திற்கு அப்போது மக்கள் கொடுத்த கட்டளையை விட இப்போது கொடுத்திருக்கும் கட்டளை பெரிது; அப்போது விகிதாச்சாரத் தேர்தல் முறை இல்லை. இப்போது அது இருக்கிறது என்கிறார். தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடுவதற்கான (கு)தர்க்கம் இது!

தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வோரை விக்னேசுவரன் கடுமையாகக் குறை கூறினார்.

“இது கணவன் – மனைவி சண்டை. அடுத்த வீட்டுக்காரர் இதில் புகுந்து, மணமுறிவு தான் தீர்வு என்று எப்படிச் சொல்லலாம்? அதுபோல் தமிழ்நாட்டிலிருப்பவர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லக் கூடாது” என்றார். இந்து நாளேட்டில் முதல் பக்கத்தில் வந்தது. இக்கூற்றுக்கு வலுவான எதிர்ப்புகள் வந்தபின், திருத்தம் சொன்னார்; வருத்தம் சொன்னார்.

வட மாநில அவை நிர்வாகத்தைக் கைப்பற்றியதன் மூலம் படிப்படியாகக் கூடுதல் அதிகாரம் பெறலாம் என்று சம்பந்தர் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் சிலரும் நினைக் கிறார்கள்.

 பல ஆண்டுகளுக்கு முன் கிழக்கு மாநிலத்தில் தேர்தல் நடந்தது பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். கருணாவும் பிள்ளையானும் மாநில நிர்வாகத்திற்குப் படிப்படியாகக் கூடுதல் அதிகாரம் வாங்கினார்களா? இல்லை.

தேசிய இனவிடுதலை இயக்கத்தைக் கவிழ்த்து விடுவது, பகைவனுக்குக் கீழே, சில்லறை அதிகாரங்களைப் பெறும் மாநில ஆட்சியில் அமர்த்துவதுதான்.

சம்மு காசுமீரின் இறையாண்மையை இலக்காகக் கொண்டு இயங்கிய சம்மு காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் சேக் அப்துல்லா அவர்களைப் பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ், பாதுகாப்புக் கைதியாகக் கொடைக்கானலில் வைத்தார். அன்றைய பிரதமர் இந்திராகாந்தி. பின்னர் அவரை சம்முகாசுமீர் முதல் அமைச்சர் பதவியை ஏற்கச் செய்து படிப்படியாக காசுமீருக்குக் கூடுதல் அதிகாரம் தருவதாக ஒப்பந்தம் போட்டு விடுதலை செய்தார். சேக் அப்துல்லாவும் ஒப்புக் கொண்டு சம்மு காசுமீர் முதல்வர் ஆனார். காசுமீருக்குக் கொஞ்சநஞ்சம் கூடுதலாக இருந்த அதிகாரத்தையும் பறித்தார்கள்.

சனநாயக வழிப்பட்ட பெருந்திரள் மக்கள் இயக்கத்தை நடத்திய சேக் அப்துல்லாவும் தேசிய மாநாட்டுக் கட்சியும் காசுமீர் விடுதலைக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டதாக அடுத்த தலைமுறை இளைஞர்கள் கருதினார்கள். அவர்கள் ஆயுத மெடுத்தார்கள். இந்திய இராணுவம், அவர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. ஆயுதப் போர் அங்கு தொடர்கிறது. அந்த இளைஞர்களை கைது செய்வது, சுடுவது ஆகிய மாநில அரசு வேலைகளை சேக் அப்துல்லாவின் மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு செய்தார். இப்போது பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு அதே வேலையைச் செய்கிறார். இதுதான் படிப்படியாக அதிகாரம் பெற முதலமைச்சர் பதவிக்குப் போனவர்களின் எதிர் பரிணாம வளர்ச்சி!

மிஜோரம் விடுதலைக்கு ஆயுதப் போர் நடத்தினார் லால்டெங்கா. இந்திராகாந்தி மகன் இராசீவ்காந்தி பிரதமராக இருந்த போது லால்டெங்காவுடன் ஒப்பந்தம் போட்டு அவரை முதலமைச்சர் ஆக்கினார். அடுத்த தேர்தலில் லால்டெங்காவைத் தோற் கடித்தார்கள். பின்னர் ஒரு சமயம் புது தில்லியில் ஐயா பழ. நெடுமாறன் அவர்களைப் பார்த்த லால்டெங்கா பிரபாகரனைப் பாராட்டிப் பேசினாராம். “நான் ஏமாந்துவிட்டேன்; இந்த இளம் வயதில் பிரபாகரன் ஏமாறவில்லை, மாகாணசபை ஆட்சியை ஏற்க மறுத்து விடுதலையில் உறுதியாக இருக்கிறார். அவரைப் பார்த்துப் பாராட்ட வேண்டும்” என்றாராம்.

முதலமைச்சர் பதவி ஏற்கச் சொல்லி இருவாய்ப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய அரசு வற்புறுத்தியது. பிரபாகரன் மறுத்துவிட்டார்.

அப்போது முதல்வர் பதவி ஏற்றிருந்தால் இன்றைக்கு அவர்க்கிருக்கும் புகழ் – சிறப்பு அனைத்தும் அப்போது மறைந்து போயிருக்கும். அது மட்டுமல்ல, தமிழீழ விடுதலை இலட்சியத்தை மாற்ற முடியாத ஒன்றாக மக்கள் மனதில் விதைத்திருக்கவும் முடியாது.

அங்கே இங்கே என்று வெளி மாநில அனுபவங்களைத் தேடுவதைவிடத் தமிழக அனுபவத்தையே ஆய்வு செய்யலாமே! “அடைந்தால் திராவிடநாடு – இல்லையேல் சுடுகாடு” என்று ஆர்ப்பரித்த தி.மு.க. சட்டமன்றத்தைக் கைப்பற்றி, தனிநாட்டு இலட்சியத்தை அடையப் போவதாகச் சொன்னது. அதன் பிறகு மாநிலத் தன்னாட்சி பெறப்போவதாகச் சொன்னது. ஆனால் சேக் அப்துல்லா மகனும் பேரனும் செய்கின்ற அதே காரியத்தை அது செய்கிறது.

இந்திய ஏகாதிப்பத்தியத்திகுக் கங்காணி வேலை, பார்த்து, தமிழின உணர்வாளர்களை ஒடுக்கும் வேலையைத் தி.மு.க. அரசும் செய்கிறது; அதன் உடன் பிறப்பான அ.இ.அ.தி.மு.க அரசும் செய்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்ட போது பிரபாகரன் அவர்கள் 4.8.1987 அன்று சுதுமலையில் இலட்சக்கணக்கான மக்கள் முன் பேசியதை இப்போது நினைவில் கொள்ள வேண்டும். “ இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் சிங்கள இனவாத பூதம் விழுங்கிவிடும்’’ என்றார். அப்போது அதுதான் நடந்தது; இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.

தமிழ் ஈழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி சிங்களப் பேரினவாத அரசுக்குக் கங்காணி வேலைப் பார்க்கத் தொடங்கினால் மறுபடியும்; அங்கு விடுதலைக்காக ஆயுதப் போராளிகள் உருவாகக் கூடும். படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு பக்கத் துணை களை உருவாக்கிக் கொண்டு வெல்லற்கரிய அமைப்பாய் வரலாம்! பொதுவாக சனநாயக வாய்ப்புகள் மறுக்கப்படும் போது ஆயுதத்தை நாடும் நிலை உருவாகிறது.

உரிமை இழந்தோர் அதைப் பெற ஆயுதப் போராட்டம் நடத்துவதைத் தங்களுக்குரிய வசதியாகத் தேர்தல் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள்தான் பெரிதும் இராணுவத்தில் சேர்ந்து உயிரை விடுகின்றனர். ஆயுதப் போராட்டத்தைக் காரணம் காட்டி சனநாயக உரிமைகளை மற்றவர்களுக்கும் மறுத்து எதேச்சதிகார ஆட்சி நடத்தக் கூடிய பொன்னான வாய்ப்பு அரசியல் தலைவர்களுக்குக் கிடைக்கிறது.

பன்னாட்டுச் சமூகம், வடக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள், இராசபட்சே கும்பலின் பாசிசத்திற்கு எதிரானது என்பதை உணர வேண்டும். பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைத்து இராசபட்சே கும்பலை பன்னாட்டுக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும். இந்தத் தேர்தல் வெற்றி பன்னாட்டுச் சமூகத்தின் கண்ணைத் திறந்தால் அது பெரிய நன்மையாக அமையும்.

Pin It

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரைப்பட நூற்றாண்டு விழாவை தமிழக அரசுடன் சேர்ந்து இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி முடித்திருக்கிறது.

இதுவரை இந்தியாவில் எங்கும் நடைபெறாத வகையில் மாநில அரசுடன் சேர்ந்து தென்னிந்திய வர்த்தக சபை ஒரு விழாவை நடத்தியிருக்கிறது. இந்த விழாவுக்காக தமிழக அரசு பத்து கோடி ரூபாய் வழங்கியிருப்பதால் அதை வெறும் திரைப்பட விழா என்று ஒதுக்கிவிட முடியாது. அடிப்படை சுகாதாரமும், கல்வியும், மருத்துவமும் மறுப்பட்டு வரும் நம் மாநில மக்களின் வரிப் பணம் பத்து கோடி இதில் செலவிடப்பட்டிருக்கிறது.

இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படத் துறை சாதனையாளர்கள் முறையாக கௌரவிக்கப்பட்டார்களா என்றால், அது தான் இல்லை.

அதிலும் தமிழக அரசு இணைந்து நடத்திய இந்த விழாவில் தெலுங்கு, கன்னடம் மற்றும் கேரளத் திரைப்படங்களுக்காக தனித் தனியாக விழா எடுக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் திரைப்படங்கள் கௌரவிக்கப்படவே இல்லை.

தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கான வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்கிற பெயரோடு இயங்குகிறது. இந்த வர்த்தக சபை நடத்துகிற இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்படத்துக்கென தனியாக விழா நடத்தப்படவில்லை என்றால் இதை எப்படி பொறுத்துக் கொள்வது?

ரஜினிக்கும் கமலுக்கும் விருது வழங்கினால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போலும். அறியாமையால் நிகழ்ந்திருக்கலாம் என்று சிலர் சப்பைக் கட்டு கட்டலாம். ஆனால் இந்திய அரசே சில மாதங்களுக்கு முன்பு நடத்திய இந்தியத் திரைப்படங்களின் நூற்றாண்டு விழாவில் ஒரு தமிழ்த் திரைப்படம் கூட திரையிடப்படவில்லை. இது எதிர்த்து தமிழ்த் திரைப்படத்துறை ஆளுமைகளிடம் ஒரு சிறு சலனம் கூட இல்லை. ஆக, இந்தியா என்றால் மட்டுமல்ல, தென்னிந்தியா என்றாலும் தமிழும், தமிழர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதுதானே உண்மை.

நூற்றாண்டு விழாவின் மூன்றாம் நாள் நடந்த கேரளத் திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் பாலசந்தர், “நான் மலையாளியாகப் பிறந்திருந்தால் இன்னும் அதிகமாக சாதித்திருப்பேன்” என்று பேசினார். இது அவருடையக் கருத்து. அதைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், அவருக்கு இன்று வரையிலும் வாழ்வளித்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திரைப்படத் துறைக்கு விழா எடுக்காததை பற்றி எந்தக் குற்ற உணர்வும் இன்றி பேசுகிறாரே! நன்றி மறப்பது நன்றன்று அல்லவா? தமிழ்த் திரைப்படங்களுக்கென விழா நடந்திருக்கும் பட்சத்தில், தமிழ்த் திரைப்பட ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டிருப்பார்களே? அதில் இயக்குநர் பாலசந்தரும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்தானே!

தமிழ்த் திரைப்படங்களுக்கு விழா நடந்திருந்தால், அமெரிக்காவில் இருந்து திரைப்பட ஒளிப்படக் கருவி (கேமரா) பாகங்களை விற்க வந்து தமிழ்த் திரைப்படங்களுக்குப் புதிய பரிணாமத்தை வழங்கிய எல்லீஸ் ஆர் டங்கன், தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் சூப்பர் ஸ்டார்கள் தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கே.பி. சுந்தராம்பாள், பாடல்களே இல்லாமல் முதல் முதலாக படம் (அந்த நாள்) எடுத்த வீணை எஸ்.பாலசந்தர் போன்றவர்கள் நினைவு கூறப்பட்டிருப்பார்களே?

1914ம் ஆண்டு தமிழ் நாட்டின் இரண்டாவது திரையரங்கான வெரைட்டி ஹால் (1914) கோவையில் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர் சாமிக்கண்ணு வின்சென்ட். இந்தியாவின் முதல் திரைப்படத்தை (ராஜா ஹரிசந்திரா) 1913ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே இயக்கி வெளியிட்ட மறு ஆண்டே வின்சென்ட் சொந்த வாழ்க்கையை சோதனைக்கு உள்ளாக்கி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். ஆனால் இந்தத் திரைப்பட விழாவில் வின்சென்ட் கௌரவிக்கப்படவில்லை.

தமிழகத்தின் முதல் திரைப்படத்தை (கீசகவதம்) இயக்கிய நடராஜ முதலியார் (1916) இந்த நூற்றாண்டு விழாவில் நினைவு கூறப்படவே இல்லை.

இந்தியத் திரைப்பட நூற்றாண்டு விழாவில் தமிழ்த் திரைப்பட முன்னோடிகள் மறக்கப்பட்டதையும் மறைக்கப்பட்டதையும் இடித்துக் கூற வேண்டிய தமிழ் நாட்டு நடிகர்கள் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் என்ன செய்து கொண்டிருந்தன?

இங்கே மட்டும்தான், நடிகர்கள் சங்கம் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்கிற பெயரில் இயங்கிக் கொணடிருக்கிறது. ஆந்திரத் திரைப்பட நடிகர்கள் ஆந்திரத் திரைப்பட நடிகர்கள் சங்கம் என்ற பெயரில்தான் சங்கம் அமைத்திருக்கிறார்கள். இதே நடைமுறைதான் கேரளத்திலும், கன்னடத்திலும் ஆனால் தமிழன் மட்டும் திராவிடத்தால் வீழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதானா?

இது ஒருபுறம் இருக்க, எல்லீஸ் டங்கன் இயக்கிய மந்திரகுமாரி, தமிழக அரசியலில் மட்டுமல்ல தமிழ்த் திரைபடங்களுக்குப் புதுபாதை அமைத்துக் கொடுத்த பராசக்தி, தமிழ் மொழி பிரயோகத்தால் இன்றும் திரை ரசிகர்களின் மனதில் நீங்காத மனோகரா, மற்றும் கண்ணகி படங்கள் இவ்விழாவில் புறக்கணிக்கப்பட்டது, அவற்றில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு இருக்கிறது என்பதால் தானே?

இது குறித்து கேள்வி எழுப்ப தமிழ்த் திரையுலகில் (படத் தொகுப்பாளர் லெனின் உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர) யாருக்கும் துணிச்சல் இல்லாமல் போனது வெட்கரமானது.

Pin It

இந்தியாவில் இராமாயணத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. இராமர் இலங்கைக்கு உண்மையில் பாலம் கட்டிச் சென்றாரா? இல்லையா? என்பது விவாதத்திற்கு உரியதாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இராமாயணக் கதை நிகழ்ச்சியை அறிஞர்கள் ஆய்வு வழியில் நின்று உண் மையை காண வேண்டியது காலத்தின் தேவை.

இராமாயணக் கதை உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்ச்சியா என்பது பற்றி ஆய்வு வரலாற்று அறிஞர் கள், அது பழமையான கதையாகும், அந்த பொருளில் தான் சமஸ்கிருத மொழியில் “இதிகாசம்’’ என்று குறிப் பிடப்படுகிறது என்கிறார்கள். பேராசிரியர் கே.ஏ.நீல கண்ட சாஸ்திரியார் தனது History of India Vol.I நூலில் பக்கம் 34இல் குறிப்பிடுவதை ‘சங்க கால வாழ்வியல்’ என்ற நூலில் பக்கம் 519இல் பேராசிரியர் என்.சுப்பிர மணியன் மேற்கோளாகத் தந்துள்ளார். “சமய நம்பிக் கைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால், இராமாயணம் தத்துவப் பொருள் பொதிந்த கதையுமன்று, வரலாறு மன்று. புராணக் கதையடிப்படையில் எழுந்த கவிதை யேயாம்’’ என்று இராமாயணம் வரலாறு அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

பேராசிரியர் ஏ.எல்.பாஷம் அவர்களின் The Wonder that was India நூல் பக்கம் 40-41இல் “ஆரியர்கள் மேலும் கிழக்கே சென்று (கங்கை, யமுனை) ஆற்றிடை நிலத்திற்கு கிழக்கே உள்ள கோசலையிலும் வாரணாசி என்ற காசியிலும் அரசுகள் நிறுவினர் : இரண்டாவது இந்திய இதிகாசமான் இராமாயணத்தின் கதாநாயகன் இராமன், அவனுடைய நாடாகிய கோசலை நாள டைவில் வலுப்பெற்றது. பிற்காலத்தில் மிகப் புகழ் பெற்ற இராமனையும், அவர் தந்தை தசரதனையும் பற்றி அக்காலத்து இலக்கியம் குறிப்பிடுவதேயில்லை. ஆதலால் அவர்கள் இருவரும் மிகச் சிற்றரசர்களாய் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர்களது சாதனை களை எவ்வாறோ மக்கள் நினைவிலிருத்தி யிருந்தனர் என்றும், அவற்றை விரிவுபடுத்தி எழுதி கிருத்துவ ஆண்டு தொடக்கத்தில் அவை இப்பொழுது காணப் பெறும் உருவில் இயற்றப்பட்டன என்றும் முடிவு கட்ட வேண்டும். இராமன் கோசலை மன்னனா என்பதே ஐயத்திற்குரியது. ஏனெனில் மிகப்பழைய இராமாயணக் கதையில் அவனை காசி மன்னனாகவே கூறியுள்ளது. காசி முன்பு ஒரு முக்கிய அரசாக இருந்தது. அக்கால இறுதியில் கோசலையால் வெல்லப் பட்டது என்று கூறப்பட்டுள்ளது உண் மையை தெளிவுபடுத்துவதாக உள்ளது.’’

மக்களிடம் வழங்கி வந்த ஒரு கதை பின்னர் பெருங்காப்பியமாக ஆக்கப்பட்டது. வால்மீகி, இராமாயணம் எழுதுவதற்கு முன்பு ஜாதக கதைகள் என்ற பெயரில் இராமா யண கதை வழங்கப்பட்டு வந்தது. இதனை வரலாற்று பேராசிரியை சுவிரா ஜெயஸீவால் “தசரத ஜாதகக் கதையில் வரும் இராம கதை கிடைத்துள்ள கதைகளில் மிகப் பழமையானது. அது வால்மீகியின் இராமய ணத்தி லிருந்து சில முக்கிய நிகழ்ச்சி குறிப்புகளில் மாறுபடு கிறது. தசரதன் அயோத்தி அரசன் அல்லன். வாரணாசி மன்னன் என்று கூறுவதுடன் இராமன், இலக்குமணன், பரதன், சீதை ஆகியோரையும் குறிப்பிடுகிறது. இராமன், இலக்குமணன், சீதை ஆகியோர் தசரதருடைய முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். பரதன் அவர்களுக்கு மாற்றாந்தாயின் மகன் என்று குறிப்பிடுகிறது. மாற் றாந்தாயின் தீய சதித்திட்டங்களிலி ருந்து தப்புவிக்கும் பொருட்டு தசரதன் இராமனையும், இலக்குவ னையும், இமயமலைப் பகுதிக்கு நாடு கடத்துகிறான். சீதை உடன் பிறந்த வரோடு தானும் செல்லவேண்டு மென்று வற்புறுத்துகிறாள். அவர் கள் நாடு கடத்தப் பட்டது வால்மீகி இராமாயணம் கூறுவது போல பதினான்கு ஆண்டுகள் அல்ல. பன்னிரண்டு ஆண்டுகளே. நாடு கடத்தப்பட்ட காலக்கெடு முடிந்த பின் தன் சகோதரியான சீதையை இராமன் மணம் புரிந்து கொண்டு பட்டத்தரசியாக ஆக்குகிறான். சீதை கவர்ந்து செல்லப்பட்டதோ. இலங்கைப் படையெடுப்போ அதில் சொல்லப் படவில்லை.’’ (வைணவத் தின் தோற்றமும், வளர்ச்சியும் பக்கம் 203-204).

வால்மீகி தனக்கு முந்தி வழங்கி வந்த இராமன் பற்றிய கதைகளை மாற்றியும், திருத்தியும் தன் கற்பனை திறத்தால் ஒரு காவியம் புனைந் துள்ளார். இராமாயணத்தில் கூறப் படும் லங்கா (Lanka) என்பது இலங்கை அல்ல. அது மத்திய பிர தேச மாநிலத்தில் உள்ள ஒரு இடம் என்று பல வரலாற்று, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த டி.பரமசிவம் ஐயர் Ramayana and Lanka என்ற நூலை 1940இல் எழுதி யுள்ளார். இதற்கு முன்பு எம்.வி. கிப்வே, Ravana’s Lanka Located in Central India (1928) என்ற கட்டுரையும், பேராசிரியர் ஹிராலால் “The Situation of Ravana’s Lanka” (1932) என்ற கட்டுரையும் எழுதியுள்ளார். தொல் லியல் பேராசிரியர் எச்.டி. சங்காலி யாவின் நூல் Ramay ana : Myth or Reality (1973) விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.

பேராசிரியர் எச்.டி.சங்காலியா “வால்மீகி விந்தியமலைக்கு தெற்கே உள்ள இந்தியாவின் தென்பகுதி யைப் பற்றி ஏதும் அறியாதவர். தென்பகுதி மக்களின் பழக்க வழக் கங்கள் பற்றி வால்மீகிக்கு ஏதும் தெரியாது’’. (பக்கம்.17) என்று குறிப்பிடுகின்றார். அதற்கு உதாரணமாக “வாலி இறந்தபின் அவன் உடல் எரிக்கப்படுகிறது என்று வால்மீகி குறிப்பிடுகிறார். ஆனால் இறந்தவர் உடலை எரிப்பது ஆரியர் வழக்கம். மிகப் பழங்காலத் தில் தென்னிந்தியாவில் வடக்கே கோதாவரி நதியிலிருந்து தெற்கே தாமிரபரணி வரையான பகுதியில் இறந்தவர் உடலை எரிக்கும் பழக்கம் கிடையாது.’’ (பக்கம்.17) என்று குறிப்பிடுகிறார்.

பேராசிரியர் எச்.டி.சங்காலியா “சீதையை தேட அனுமனுக்கு சுக்ரீவன் விவரம் தெரிவிக்கும் பொழுது கூறும் இடங்களை ஆய்வு செய்த ஹிராலால், முனைவர் ராமதாஸ், சர்தார் கிப், பரமசிவ ஐயர் ஆகியோர் செய்த முடிவு “லங்கா” என்பது சித்திர கூட மலைக்கு தெற்கே நர்மதா நதிக்கு வடக்கே உள்ள இடமாகும் என்று கூறுகிறார்.’’ மேலும் அவர் இந்த பகுதி சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதியாகும் என்றும், இதுகிழக்கு மத்திய பிரதேசம், மேற்கு ஒரிசா, மேற்கு வங்கம், தெற்கு பீகார் பகுதியில் உள்ளது என்றும் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார் (பக்கம். 46).

வால்மீகி இராமாயணம் பல அறிஞர்களால் ஆய்வு செய்யப் பட்டு, ஒரு செம்பதிப்பு பரோடா நகரில் உள்ள ஓரியண்டல் இன் ஸ்ட்டியூட்டால் 1960 முதல் 1969ஆம் ஆண்டு வரை ஆறு காண்டங்களும் வெளியிடப்பட் டன. எச்.டி.சங்காலியா தனது ஆய் வுக்கு இந்தப் பதிப்பையே பயன் படுத்தியதாக குறிப்பிடுகிறார். இந்த பதிப்பு இராமாயணத்தில் இடைச் செருகலாக சேர்க்கப்பட்ட பாடல் களை நீக்கி பதிப்பிக்கப்பட்டது. இந்த பதிப்பில் வால்மீகியின் வருணனை இயல்பாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.

எச்.டி.சங்காலியா இராவணன் மத்தியபிரதேசத்தில் உள்ள கோன்ட் (Gond) பழங்குடி மக்களின் அரசன். அந்த மக்களிடம் இரா வணன் இன்றும் மிகச்சிறப்பாக மதிக்கப்படுகிறான் என்றும், லங்கா என்பது உயர்ந்தப் பகுதி தீவு என்றும் குறிக்கப்படுகிறது. வானரர்கள் என்போர் சரவர் (Saravars) மற்றும் கோர்குஸ் (Korkus) என்ற பழங்குடி இனத்தவர் என்றும் குறிப்பிடுகிறார். (பக்கம் 47)

இலங்கையின் பழைய பெயர் களில் லங்கா (Lanka) என்பது காணப்படவில்லை இலங்கையின் பழைய பெயராக சிங்களா தீபா என்று கல்வெட்டுகளிலும், இலக்கியத்திலும் குறிப் பிடப்படுகிறது. வெளிநாட்டார் தப்ரபோன் (Taprobane) தாமிரபரணி என்று குறிப்பிடுகின்றனர் என்கி றார், எச்.டி.சங்காலியா (பக்கம்.49). வால்மீகி இராமாயணத்தில் வான ரங்கள் சண்டையிடும் போதும், சேது பாலம் கட்டும் போதும் பயன்படும் சாலா மரம் சோட்டா, நாக்பூர் பீடபூமியில் மட்டும் காணப்படும் ஒன்றாகும். (பக்கம் 48). லங்கா (Lanka) மற்றும் ராவணா (Ravana) என்ற சொற்கள் முன்டா மொழிச் சொல்லாகும். (பக்கம். 49) என்றும் குறிப்பிடுகிறார்.

அடுத்த இதழில் முடியும்....

Pin It

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது இயற்கையாக இருக்கும் காடுகள்தாம். காலங்காலமாகக் காடுகளை மக்கள் பாதுகாத்தும், பயன் படுத்தியும் வாழ்ந்து வருகிறார்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு காடுகளும், காடு சார்ந்த நிலமும் சமூகச் சொத்தாகவும், உரிமையாகவும் இருந்தது,

காடுகள் எவருக்கும் சொந்தமாக இருந்தது கிடையாது. இந்தியாவைக் கொள்ளை யடிக்க வந்த வெள்ளையர்கள் வன நிலங்களை தனி உடைமையாக்கினார்கள். வனத்தி லிருந்து கிடைக்கும் செல்வங்களை கொள்ளையடிக்கும் தந்திரங்களை கையாண்டார் கள். மக்களின் சமூகச் சொத்தாக இருந்த வனமும், வனம் சார்ந்த நிலமும் வணிகப் பொருளாக மாற்றப்பட்டது. அடர்ந்த காடுகள் பெருமளவில் வெட்டி அழிக்கப்பட்டன; வெள்ளையர் ஆட்சியின் போதுதான். வெள்ளையர் தங்கள் நாட்டிற்கு தேவையான தேக்கு, அகில், சந்தனம், ஈட்டி, கோங்கு, போன்ற மரங்களை கப்பல் கப்பலாக கொண்டு சென்றார்கள். ஆரம்பத்தில் இருப்புப் பாதை போடுவதற்கு வெள்ளையர்கள் காடுகளை அழித்து தேக்கு மரக் கட்டைகளைக் கொண்டு இருப்புப் பாதைப் போட்டார்கள். பழங்குடி மக்களிடமிருந்து வன நிலங்களைப் பறித்து பெரும் முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் நீண்ட கால குத்தகைக்கு (99 ஆண்டு) கொடுத்தார்கள். அதுவும் மிகக் குறைந்த குத்தகைக்கு வன நிலங்களைக் கொடுத்தார்கள்.

“சுதந்திர” இந்திய அரசும் வெள்ளையர்களின் வனக் கொள்கையையே கடைபிடித்தது. பழங்குடி மக்களிடமிருந்து காடுகள் பறிக்கப்பட்டன. தமிழக அரசும் இதே பாதையில்தான் சென்றது.

1995க்குப் பிறகு பழங்குடி மக்களை வன ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து பெருமளவில் வெளியேற்றியது. இதனை எதிர்த்துப் பழங்குடி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் நடத்தினர். இவற்றின் காரணமாக சில பாதுகாப்புகளைப் பெற்றனர்.

புலிகள் காப்பகம்

ஆயினும் அரசின் பழங்குடி மக்கள் பகைப் போக்கு புதிய வடிவங்களை எடுத்தது அவற்றுள் ஒன்றாக தமிழக அரசு கடந்த 31.12. 2007 அன்று அரசு ஆணை மூலம்(G.o. Ms. No 145) ஆனை மலைப் பகுதியில் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வனப் பகுதியை புலிகள் புகலிடமாக(critical wildlife habitat) அறிவித்து மேலும் 34 வனக் கிராமங்களில் சுமார் 7000 ஏழாயிரம் மக்களை வெளியேற்றப் போவதாகவும் இங்கு வாழும் பொதுமக்களுக்கு மறுவாழ்வு திட்டமாக குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 இலட்சம் வீதம் வழங்க போவதாகவும் வனத்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் நாளேடுகளில் செய்திகளை வெளியிட்டார்கள். இதே போன்று சத்திய மங்கலம் வனப் பகுதியையும் தற்போது புலிகள் காப்பகமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 1962 இல் முண்டந்துறை புலிகள் காப்பகம் 567.50 ச.கி. மீட்டர் பரப்பிலும் களக்காடு புலிகள் காப்பகம் 327. 61 ச.கி. மீட்டர் பரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த ஆணை வனச் சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டம் 1972 இல் 38 ஆவது பிரிவில் உட்பிரிவு 5(4)ன்படி எந்த ஒரு வனப்பகுதியையும் புலிகள் புகலிடமாக அறிவிக்கும் முன்பு அரசு ஒரு நிபுணர் குழுவை (விலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள) ஏற்படுத்தி அந்தக் குழுவின் ஆய்வறிக்கையைப் பெற்று எவ்வளவு பரப்பளவு கொண்ட வனப்பகுதி தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஆதிவாசி மக்களின் வனவுரி மைகள் எந்த வகையிலும் பாதிக்காமல் அங்கு வாழும் மக்களோடு கலந்து பேசி கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்திய பிறகே புகலிடமாக (critical wild life habitat) அறிவிக்க வேண்டும்.

ஆனால் தமிழக அரசோ நடுவண் அரசின் வனச் சட்ட விதிகளையெல்லாம் பின்பற்றாமல் ஆனைமலைப் பகுதியையும் சத்திய மங்கலம் வனப் பகுதியையும் புலிகள், புகலிடமாக அறிவித்தது. இது 1972 மற்றும் 2006 இல் இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய செயலாகும். சத்திய மங்கலம் வனப் பகுதியில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இதே போன்று நமது ஆதிவாசிகள் விடுதலை முன்னணியின் சார்பில் ஆனைமலைப் பகுதியில் துண்டறிக்கைகள் மூலம் பிரச்சாரம் நடத்தினோம். உடுமலைப் பேட்டையில் பழங்குடி மக்களை திரட்டி 01.12.2008 அன்று மாநாடு நடத்தினோம். நீலகிரி மாவட்டம். மசினக் குடியிலும் மற்றும் மலைக் கிராமங்களிலும் புலிகள் காப்பகத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இந்நிலையில் வனச் சட்டங்களுக்குப் புறம்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் அனைத்தையும் புலிகள் புகலிடமாக செயலலிதா அரசு அறிவித்துள்ளது. இதனால் சத்தியமங்கலம், களக்காடு முண்டாந்துறை, ஆனைமலை, முதுமலை(நீலகிரி) ஆகிய மலைகளில் வாழும் பல லட்சக் கணக்கான பழங்குடி மக்களும் மற்றும் இதர வனம் சார்ந்து வாழும் மக்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். புலிகள் காப்பகப் பகுதியில் மக்கள் சுதந்திரமாக காடுகளுக்குள் சென்று; தேன், கடுக்காய், நெல்லிக்காய் போன்ற சிறுவன மகசூல் (minor forest produce) பொருட்களை சேகரிக்க முடியவில்லை. வனத்து றையினர் தடைவிதித்துள்ளனர். இப்போது தேனி மாவட்டம் மேகமலையையும், கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளையும் புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கு செயலலிதா அரசு திட்டமிட்டு வருகிறது. புலிகள் காப்பக பகுதிகளிலுள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் யாவும் புலிகள் காப்பகத் திட்டத்தைக் கைவிடக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு தெரிவித்துள்ளன. அரசு இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. பழங்குடியினர் மற்றும் இதர வனவாழ் மக்களின் வனவுரிமை அங்கீகாரச் சட்டம் 2006 இன் படி கிராம சபை ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது. அப்படி அறிவித்தால் இச்சட்டம் பிரிவு 7 இன் படி கிரிமினல் குற்ற மாகும்.

புலிகள் காப்பகத்தில் நடப்பது என்ன?

புலிகளையும் கானுயிர்களையும் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் ஒரு புலிக்கு ரூபாய் இரண்டு கோடிகள் வீதம் செலவு செய்தோம் எனக் கணக்கு காட்டியது வனத்துறை, நடுவண் அரசின் தணிக்கைத் துறை இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. 2005 ஆம் வருடம் சரிஸ்கா புலிகள் காப்பகத்தை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இங்கு ஒரு புலிகூட இல்லை யென்பதை கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.

நடுவண் அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் 2001-2006 அறிக்கை தமிழகத்தில் நடந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியது. அதன் சாரம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்டம் மாஞ் சோலை வனப்பகுதியில் 8, 373. 57 ஏக்கர் நிலம் பாம்பே பர்மா டி.ரே.டி.ங் கம்பெனிக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் 99 வருட குத்தகைக்கு 1929 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டது. தேயிலை, காப்பி மற்றும் பணப்பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்ய வேண்டும். மரங்கள் தவிர பிற அனைத்தும் சாகுபடி செய்யலாமென்றும், மழை தரும் அடர்ந்த காடுகள் 970 ஏக்கர் நிலப்பரப்பில் சங்கிலியாறு பகுதியில் இருப்பதை அழிக்கக் கூடாது என்றும் அதை மீறி அழித்தால் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் நிபந்தனை விதித்து பாம்பே டையிங் முதலாளியின் பி.பி.டி.கம்பெனிக்கு குத்தகைக்கு வழங்கப் பட்டது. ஆனால் பி.பி.டி. நிறுவனம் அதை மீறி அடர்ந்த மழை தரும் காடுகளை அழித்து 249 ஏக்கர் சங்கிலியாறு நீர்ப்பிடிப்புப் பகுதியை அழித்து தேயிலைத் தோட்டமாக 1987 இல் மாற்றிவிட்டார்கள். இது குத்தகை ஒப்பந்ததிற்கு எதிரானது என தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது.

ஆனால் இன்று வரை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்து வன நிலத்தை மீட்டெடுக்க களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் களக்காடு முண்டத்துரை புலிகள் காப்பகத்தில் புலிகள் பற்றிய கணக்கெடுப்பு 1989 இல் 22 புலிகள் இருந்தது என்றும் அது 1993- 1995 இல் 16 புலிகளாக குறைந்துவிட்டன என்றும் 1997இல் 28 புலிகள் இருந்தன என்றும் 2001 இல் 20 புலிகள் இருந்தது என்றும் கூறுவது புலிகள் பற்றிய கணக்கெடுப்பு நம்பக் கூடியதாக இல்லை யென்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புலிகள் காப்பகத்தில் வாழும் காணி பழங்குடி மக்கள் இதுவரை புலிகளைப் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்கள்.

இதே போன்று முண்டந்துறை வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் புலிகளை பார்த்ததே இல்லை என்று உறுதிபடக் கூறுகிறார்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் எத்தனை புலிகள் உள்ளன, இதுவரை புலிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது? மாஞ்சோலை தேயிலை தோட்ட முதலாளி 249 ஏக்கர் அடர்ந்த காடுகளை வெட்டி அழித்திருப்பதாக 2001- 2006 சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே! அந்த நிலத்தை ஏன் மீட்கவில்லை? மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பாம்பே டையிங் முதலாளி நூஸ்லி வாடியாவுக்கு கொடுக்கப்பட்டதை ஏன் ரத்து செய்யவில்லை? தலைமைக் கணக்காயர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே அது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது என்று கேட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தகவல் கேட்டேன். புலிகள் காப்பக துணை இயக்குனரே இதுவெல்லாம் ரகசியமானது என்று பதில் தெரிவித்துள்ளார். தகவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளேன். பதிலைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It