இன்றைய தலைமுறையினருக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சிக்கலுக்குள்ளான நாடாக இலங்கை திகழ்ந்துவருகிறது. அந்தநாடு விடுதலை பெற்ற 1948 முதல் சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் கேட்டு தமிழ் மக்கள் போராடி வந்துள்ளனர். சம உரிமையும் சகோதரத்துவ வாழ்வும் கேட்டு நடந்த ஜனநாயக போராட்டங்கள் அழித்தொழிக்கப்பட்டது. அதன்பின் ஆயுத போராட்ட காலம் துவங்கியது. இன்று இலங்கை பிரச்சனை புதிய நிலையை எட்டியுள்ளது. தனி ஈழம் என்ற கோரிக்கை எழுப்பப் படுவதற்கு முன்னரும் அதன் பின்னரும் இலங்கையை ஆட்சி செய்தவர்கள் எந்த வித நியாயத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவும் இல்லை. இன்று போராட்டக் குழுக்களை ஒடுக்கிவிட்டதாக ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் வாழ்க்கை நிலை குறித்து எதுவும் சொல்ல மறுக்கிறது.

ராஜபக்சே அறிவிப்பின் விளைவாக மூன்று லட்சம் தமிழர்கள் வவுனியா உள்ளிட்ட முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அதாவது அந்த பெயரில் அடைக்கப் பட்டுள்ளனர். முள்வேலியால் சூழப்பட்ட முகாம்களில், உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து அந்நிய தேசத்து அகதிகள் போல அந்த மண்ணில் பிறந்தவர்கள் ஒரு வேலை சோற்றிற்காக ஏங்கி நிற்பது நெஞ்சை குமுறச்செய்யும் காட்சிகளாக தமிழகத்தை வந்து சேர்கிறது. போர் முடிந்துவிட்டதே முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியமர்த்துவதில் ஏன் தாமதம்? என கேட்டால் கன்னிவெடிகளை அப்புறபடுத்துகிறோம் என்ற காரணத்தை இலங்கை அரசு சொல்கிறது. இது கடைந்தெடுத்த பொய் என எல்லோருக்கும் தெரியும்.

முகாம்களில் நடக்கும் அவலங்கள், சுகாதாரமற்ற சூழல், தினம் தொலைந்து போகும் மக்கள், 60 வயதை கடந்த முதியவர்களைக்கூட வெளியே அனுமதிக்காத போக்கு போன்ற கொடுமைகளை இந்திய அரசாங்கம் போல சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டே இருக்கிறது. விடுதலைப்புலிகள் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களும், போரில் சரணடைந்த இளைஞர்களும் எங்கே இருக்கிறார்களென யாருக்கும் தெரியாது. அங்கு என்னதான் நடக்கிறது என்று உலகிற்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது. சர்வதேச பத்திரிக்கையாளர்கள், ஐ.நா சபை உறுப்பினர்கள், ஏன்? இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட ராஜபக்சே அரசு முகாம்களை பார்க்க அனூமதிக்க மறுப்பது நியாயமற்ற செயல் மட்டுமல்ல, பாசிச நடவடிக்கையின் ஒரு அம்சமாகும். நம்பிக்கையான அளவிலும், அவசர முறையிலும் அங்கு துயர்துடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். ஆனால் யார் சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ளும் நிலையில் இலங்கை அரசு இல்லை என்பது வேதனையான ஒன்றாகும். அங்கு உடனடியாக

வன்னி பகுதி முகாம் மட்டுமல்லாமல் பலமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் அதிகமான, சொந்த நாட்டில் அகதிகள் போல நிற்கிற, அம்மண்ணின் மக்களின் துயர்துடைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்தும் பணியைத் துவக்க வேண்டும்.

குண்டுகளால் துளைக்கப்பட்டுள்ள அம்மண்ணில், மீண்டும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திட ஏற்பாடு செய்தல். விவசாயம் தழைத்தோங்கிய வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் மீண்டும் விளைநிலங்களை உருவாக்கிட வேண்டும். சந்தேகத்தின் பெயரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுவித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகள் தொடரப்பட்ட காலத்தில் தமிழ்மக்களுக்கு எதிராக இழைக் கப்பட்டது போல இப்போதும் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும்.

இவைகள் நடைபெற இந்திய அரசாங்கம் உறுதியுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசை தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும். இப்போது தமிழகத்தில் ஒரு ஒத்திசைவான காலம் மலர்ந்துள்ளது. இதை தமிழக அரசும் பயன்படுத்தி மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்க வேண்டும். உடன்பிறப்புகளுக்கும் பிரதமருக்கும் கடிதம் எழுதியே காலம் தள்ளுவது சரியல்ல. தமிழகத்தின் பல இடங்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் இலங்கை முகாம்களின் சுகாதாரத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. இவைகளை சீர்செய்திட தமிழக அரசு மனது வைத்தால் போதும்.

தமிழகத்தில் சில அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்வது போல “அவர்கள் வருவார்கள் மீண்டும் சுடுவார்கள்” என இனப்பற்றை வெறியேற்றி இனவெறியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட முயல்வது இலங்கை பிரச்சனையின் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்காது. அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமானது.

இலங்கை பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு என்பது சாத்தியமல்ல; அரசியல் தீர்வுதான் நிரந்தரமானது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தமிழர் பகுதிகளுக்குப் பரவலான சுயாட்சியும், தமிழர்களுக்கான அதிகாரம் வழங்கப்படுவதை உத்தரவாதம் செய்யும் வகையில் அந்த அரசியல் தீர்வு எட்டப்பட்ட வேண்டும்.

மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுடப்படுவது அன்றாட செய்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்பு இலங்கை இராணுவம் போர் நடப்பதால் தவறுதலாக சுடுவதாக சொல்லிக்கொண்டனர். ஆனால் போர் முடிந்த சூழலில் நமது மீனவர்கள் சுடப்படுவது உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனையில் உடன் தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இலங்கை தமிழர்கள் இன்னல்கள் தீரவும், தமிழக மீனவர்களை பாதுகாக்கவும் தமிழக இளைய சமூகம் எழுந்து நிற்க வேண்டியது காலம் விதிக்கின்ற கட்டளையாக நம்முன் உள்ளது.

-      ஆசிரியர் குழு

Pin It