யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாகச் சிங்கள அரசு உலகுக்கு அறிவித்த போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் காயங்களோடும் ஒப்பாரி ஓலங்களோடும் நின்றவர்கள் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்.

யுத்தம் நடந்து கொண்டிருந்த போதும் சரி, முடிவுற்ற போதும் சரி, அம்மக்கள் நம்பிக்கையை இழக்காமல், இழந்த மண்ணை வெறுமையோடு பார்த்த வண்ணம் அங்கேயே கிடந்தார்கள். பாதுகாப்புப் பகுதிக்கு வந்து பின்பும் குண்டு வீச்சு நிற்கவில்லை. பீதிநிறைந்த கண்களோடும், பசி பட்டினியோடும் நின்றிருந்த அம்மக்களைச் சிங்கள இராணுவத்தினர் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றனர்.

அப்படி அம்மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்லும் போது என்ன நடந்தது தெரியுமா?

பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் பாரபட்சம் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைக் கீழே போட்டுவிட்டு, கைகளைத் தூக்கியவாறே ஆடைகள் களையப்பட்டு அம்மணமாக இராணுவ பகுதிக்குள்ளே விடப்பட்டார்கள்.

என்ன காரணம் தெரியுமா?

அந்த மக்களோடு மக்களாகக் கரும்புலிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தினாலும் நடத்துவார்கள் என்கிற அச்சத்தில்தான் சிங்கள இராணுவத்தினர் இம்மாதிரி மனிதத் தன்மையற்ற போர் மரபுகளை மீறிய கொடுஞ்செயல்களைச் செய்தனராம்.

தாய்க்கு முன்னே மகன், தந்தைக்கு முன்னே மகள், பேரன், பேத்தி என்று மனித உறவுகளையே அம்மணமாக்கிக் கூனிக் குறுகவைத்த அந்தக் கொடுஞ்செயலை நாம் மறந்துவிட முடியுமா?

மனித நேயமே மரணித்து விட்டதற்கான கடைசி சாட்சியான அந்த முள்ளிவாய்க்காலை யாரும் மறந்துவிட முடியாது. “அந்த முள்ளிவாய்க் கால் போன்று 100 முள்ளிவாய்க்கால்களைத் தமிழர்கள் சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரான சம்பிர ரணவக்க. தான் சார்ந்த ஜாதிக யஹல உறுமய கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதுதான் தமிழர் களுக்கெதிரான இந்த இனவெறிப் பேச்சைக் கக்கியிருக்கிறார் ரணவக்க.

கடந்த மாதம் தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் பேசும்போது, “வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும்” என்று பேசியதற் காகத்தான் சம்பிக ரணவக்க, நூறு முள்ளிவாய்க்கால்களைத் தமிழர்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரித் துள்ளார்.

இன்னும் தமிழர்கள் முள்வேலிக் குள்ளிலிருந்து மீளவில்லை. போராளிகள் என்னும் பெயரில் சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பூசா கொடுஞ்சிறையிலிருந்தோ, மணிக்பார்ம் சிறையிலிருந்தோ விடுதலை ஆக முடியவில்லை. யுத்தத்தில் காயம் அடைந்த வர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை. அவரரவர் சொந்தக் காணிகளில் உள்ள சிதைந்துபோன சொந்த வீடுகளைக் கட்டிமுடிக்கவில்லை; அங்கே குடியேறவும் முடியவில்லை. அதற்குள்ளாக இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்கள் உருவாகுமென்று கொக்கரித்துள்ளார் சிங்கள அமைச்சர்.

தமிழர்களின் முழுநிலமாக இருந்த இலங்கைத் தீவும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோனபின்பும், தமிழர்களின் விடுதலை தாகம் மட்டும் இன்னும் பட்டுப்போகவில்லை. தமீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் விதைத்த அந்த விடுதலை நெருப்பு இன்னும் அந்த மண்ணில் கனன்று கொண்டுதான் இருக்கிறது. அந்த விடுதலை நெருப்பை சம்பிக ரணவக்க போன்ற இனவெறியர்கள் ஊதிப் பெருக்கி வருகிறார்கள். இன்னும் அவர்கள் ஒருமுறையன்று, நூறு முறை பேசட்டும்; இனவெறியைத் தூண்டட்டும். அப்போதுதான் இனவெறிக்கெதிரான விடுதலைத் தீ மீண்டும் வீறுகொண்டு பரவும். அதற்குத் தமிழர்கள் இன்னும் ஒற்றுமையை நோக்கிப் பயணிக்கத் தேவையுள்ளது.

யுத்தம் முடிவுற்றதாக அறிவித்த பிறகு, அந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து மிச்சமிருந்த மக்களை ஒரே இடத்தில் அமர்த்தி முள்வேலி முகாம்களுக்குள் அனுப்பும் முன், பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றைச் சொல்லச் சொல்லி, ஐந்து ஐந்து நபர்களாக இராணுவப் பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது 5 பேர் இராணுவப் பகுதிக்குச் சென்ற பிறகு, காலியான அந்த இடத்தில் நிற்பதற்கு மக்கள் முண்டியடித்தனர். அந்த முண்டியடிப்பில் இராணுவ வண்டிகளே ஆட்டம் கண்டன. உடனே சிங்கள இராணுவ அதிகாரி ஒருவன் வாகனத்தின் மேல் ஏறி நின்று, “அட, பறத் தமிழ் நாய்களே, நீங்கள் எல்லோரும் புலிகளோடு ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு கல்லை எடுத்து எறிந்திருந்தாலே ஓடிப்போய் இருப்போமே” என்று கத்தினானாம்.

தமிழர்கள் ஒன்று சேர்ந்து கல்லெடுக்கக்கூட வேண்டாம், ஒன்று சேர்ந்து சொல்லெடுத்தாலே போதும், அது வரை சம்பிக ரணவக்காக்கள் இனவெறியைத் தூண்டுவது நல்லதுதான். இன்னும் தூண்டட்டும்.

ஜுலை 05 - கரும்புலி மில்லர் நினைவு நாள்

உலக விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வரிசையில் விடுதலைப் புலிகளுக்கு தனிச்சிறப்பும், தன்னி கரில்லா இடமும் உண்டு. தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வகுத்த ஆயுதப் போராட்ட முறைகளை உலக நாடுகளின் உயர் இராணுவ தளபதிகள் கூட எண்ணிப்பார்க்க முடியாது. தரைப்படை, கடற்படை, வான்படை என்பதுதான் பொதுவாக எல்லா நாடுகளின் இராணுவக் கட்டமைப் பாக இருக்கும். உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றான இந்திய இராணுவத்தில்கூட முப்படைகள் தான் இருக்கின்றன. ஆனால் புலிகளின் இராணுவத்தில் நான்காவதாக ஒரு படைப் பிரிவும் இருந்தது. அதுதான் கரும்புலிகள் படை. இப்படையின் வீரர்களிடம் ஆயுதங்கள் இருக்காது. காரணம் கரும்புலி வீரர்களின் உடல்களே ஆயுதங்களாக, உயிராயுதங்களாக மாறும். எதிரி முகாம்களைத் தேடிச் சென்று வெடிக்கும். பகை முடிக்கும்.

முதன்முதலில் நெல்லியடியில் வெடித்து சிங்கள இனவெறியர்களை நடுங்கவைத்த உயிராயுதம் கரும்புலி மில்லர். 1987ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் நாள், நெல்லியடி ஆயுதக் கிடங்கின் மீது ஒரு சரக்குந்து மோதி வெடித்துச் சிதறியது. உடல் முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சரக்குந்தை ஓட்டிச் சென்றவர் கரும்புலி மில்லர். அணைக்க முடியாத அளவுக்கு ஆயுதக் கிடங்கு பற்றி எரிந்தது. மாவீரன் மில்லரின் சாம்பல்கூட கிடைக்க வில்லை. சிங்கள இனவெறியன் ஜெயவர்தனேவின் தலையில் பேரிடியாய் இறங்கிய முதல் கரும்புலி தாக்குதல் இதுதான்.

 மில்லரின் தாயாரிடம், இறுதிக் காரியங்கள் செய்வதற்கு உங்கள் மகனின் சாம்பல் கூட கிடைக்கவில்லையே என்று உங்களுக்கு வருத்தமாயில்லையா என்று ஒரு முறை கேட்கப்பட்டது. அந்த மாவீரனின் தாய் இப்படி மறுமொழி சொன்னாராம்:

தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரும் ஒரு முறை நின்று, இதோ இவர்தான் மில்லரின் தாய் என்று சொல்லி கையயடுத்துக் கும்பிட்டுச் செல்கிறார்களே இதைவிட எனக்கு வேறு எது மகிழ்ச்சியைத் தந்துவிடும்

ஜுலை 5 - கரும்புலி மில்லரின் நினைவு நாள்.

Pin It