இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) வேட்பாளர் கோத்தபய ராஜபட்சே வெற்றி பெற்றிருக்கின்றார். அவர் மொத்த வாக்குகளில் 52 சதவீதம் அதாவது 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) வேட்பாளர் சஜித் பிரேமதாச 42 சதவீதம் அதாவது 5.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கோத்தபய ராஜபட்சே பெற்ற வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் பெளத்த சிங்கள மக்களின் வாக்குகள் ஆகும். இந்தத் தேர்தலில் பெரும்பாலான தமிழ் மக்கள் முழுமையாகவே இனவெறி ராஜபட்சே குடும்பத்தை புறக்கணித்து விட்டார்கள். இருப்பினும் களத்தில் வேறு வலிமையான ஜனநாயக சக்திகள் இல்லாத சூழ்நிலையில், அதனால் எந்தவித நல்விளைவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்பற்றுப் போய்விட்டது. களத்தில் நின்ற வேட்பாளர்கள் யாருமே இன்று தமிழர்கள் சந்தித்துக் கொண்டு இருக்கும் துயர நிலையை போக்குபவர்களாக இல்லை என்பதோடு, மிகத் தீவிரமாக சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்து, பன்னாட்டு ஏகபோகத்திற்குப் பட்டுக் கம்பளம் விரிப்பவர்களாகவுமே இருந்தனர்.

rajapakse brothersசென்ற தேர்தலில் தமிழ் மற்றும் சிங்கள மக்களால் தங்களை மீட்க வந்த ரட்சிப்பராக நினைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆட்சிக் காலம் முழுவதும் இலங்கையில் நிலவி வந்த கடுமையான பொருளாதார நெருக்கடியையோ, வேலையில்லாத் திண்டாட்டத்தையோ,விலைவாசி உயர்வையோ தீர்க்க எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தொழிலாளி வர்க்கம் மட்டுமல்லாமல் இலங்கையின் முதலாளித்துவ வர்க்கமும் கூட கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. கடந்த ஆண்டு 3.2 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சியானது இந்த ஆண்டு 2.7 சதவீதமாகக் குறைந்தது. அதே போல நாட்டின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 83 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே பணப் பற்றாக்குறையை சரி செய்ய சிறிசேன - விக்ரமசிங்க நிர்வாகம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிணை எடுப்புக்கான நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதோடு சிக்கனக் கோரிக்கைகளையும் அமுல்படுத்துவதற்கு உறுதி அளித்தது. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் மற்றும் சமூக நலத் திட்டங்களை வெட்டிக் குறைத்தல் உட்பட பொருளாதார மறுசீரமைப்பை செய்யவும் உறுதியளித்திருந்தது. இது போன்ற செயல்கள் தோற்றுவித்த நெருக்கடியானது இயல்பாகவே மக்கள் மத்தியில் ராஜபட்சே போன்ற பிற்போக்குவாத பாசிச சக்திகளின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்துள்ளது.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய தவ்ஹீத் ஜம்மாத் அமைப்பால் ஏப்ரல் 21, ஈஸ்டர் அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வானது ஏற்கெனவே ஈழத் தமிழர்கள் அனைவருமே புலி ஆதரவாளர்கள் என்றும், முஸ்லிம்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்றும் குற்றம்சாட்டி அவர்களைத் தனிமைப்படுத்தும் அரசியலை முன்னெடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி போன்ற பெளத்த வெறிக் கட்சிகளுக்கு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. இலங்கையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், தீவிரவாதத்தின் பிடியில் இருந்து சிங்கள மக்களை மீட்டெடுக்கவும் ஒரு வலிமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என்ற முழக்கம்தான் இந்தத் தேர்தலில் பிரதான முழக்கமாக முன்னெடுக்கப்பட்டது. ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பு விடயத்தில் மிக கவனக் குறைவாக இருந்ததன் காரணமாகவே இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது என்ற எண்ணத்தை ராஜபட்சே குடும்பம் பெளத்த சிங்கள வெறியர்கள் மத்தியில் மிக வீச்சாக கொண்டு சென்றுவிட்டது.

பெரும்பான்மை சிங்கள மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றில் இருந்தும், அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதலில் இருந்தும் தங்களை மீட்டெடுக்க, கடுமையான நடவடிக்கைகள் எடுத்து நாட்டை சீர்படுத்த ஒரு பாசிச மனநிலை கொண்ட நபரால்தான் முடியும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதன் வெளிப்பாடே தற்போதைய தேர்தல் முடிவுகள்.

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமுல்படுத்தியதால் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை போன்றவை எப்படி இந்திய மக்களை காங்கிரசு அரசைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் பாசிச சர்வாதிகார மோடியை தேர்ந்தெடுக்க காரணமாக இருந்ததோ, அது போன்றே இலங்கை மக்கள் தற்போது 2009 இல் பல லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த இனவெறியனான கோத்தபய ராஜபட்சேவைத் தேர்தெடுத்து இருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் பாசிச சக்திகளின் மேல் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்றால் ஹிட்லர் போன்ற ஒரு பாசிஸ்ட் நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசியல் தெளிவற்ற மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது. ஆனால் பாசிச சக்திகள் எப்பொழுதுமே முதலாளித்துவத்துடனும், பிற்போக்கு சக்திகளுடனும் இணைந்தே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றன என்ற வரலாற்று உண்மையை அவர்கள் காணத் தவறி விடுகின்றார்கள். இப்படி பாசிச சக்திகளின் மேல் நம்பிக்கை கொண்டு தேர்ந்தெடுத்த மக்கள் தங்களின் பழைய வாழ்நிலையைவிட மிக மோசமான வாழ்நிலைக்கே தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமும் இந்தியாதான்.

மோடி வந்தால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என நினைத்து நம்பி ஓட்டு போட்டு அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற வைத்த மக்கள் இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. இதுவரை சந்தித்திராத கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நாடு தற்போது தள்ளப்பட்டிருக்கின்றது. இதுதான் உண்மை.

மக்கள் தங்கள் மீது ஆளும்வர்க்கம் திட்டமிட்டே திணிக்கும் நெருக்கடிக்கான தீர்வு என்பது, அப்படி தங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கும்பல்களை அதற்கு எதிரான பாட்டாளி வர்க்க அரசியலைக் கொண்டு போராட்டத்தின் மூலம் வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஆனால் பேஸ்புக், வாட்ஸ்அப் தலைமுறைகளுக்கு போராட்டம் என்பதும், ஆர்ப்பாட்டம் என்பதும், சித்தாந்த ரீதியாக செயல்படுவது என்பதும் கசப்பான ஒன்றாகவே இருக்கின்றது. சோம்பேறிக் கும்பலாகவும், டீக்கடை அரசியல் பேசும் வெட்டிகளாகவும், பொறுக்கித் தின்பதற்கான அரசியலின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவும், சாதி, மத, இன, அரசியலால் எளிதில் தூண்டப் படுபவர்களாகவுமே உள்ளார்கள். அதுபோன்ற அற்பக் கூட்டம்தான் பாசிஸ்ட்டுகளையும், முதலாளித்துவ அடிவருடிகளையும், சாதி, மத, இன வெறியர்களையும், அரசியலற்ற லும்பன்களையும் தீர்வாக முன்நிறுத்தி மக்களை இருக்கும் நெருக்கடியில் இருந்து இன்னும் மோசமான நெருக்கடிக்குத் தள்ளக் கூடியவர்கள். அதுதான் தற்போது இலங்கையிலும் நடந்துள்ளது.

ஆனாலும் ஒட்டுமொத்தமாக சிங்கள மக்கள் முழுவதும் தமிழ் மக்களை வெறுக்கின்றார்கள் என்றோ, இல்லை தமிழ் மக்கள் அனைவருமே சிங்கள மக்களை வெறுக்கின்றார்கள் என்றோ இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து நாம் முடிவு செய்துவிடக் கூடாது. கடந்த காலங்களிலும் பல்வேறு தொழிலாளர் போராட்டங்கள் இரண்டு தரப்பு மக்களாலும் ஒன்று கலந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு தரப்பு மக்களும் கடுமையான அரசு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றார்கள். தனியார்மயத்தையும், தாராள மயத்தையும், உழைப்புச் சுரண்டலையும் எதிர்த்து யார் போராடினாலும் அவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்திற்கு எதிரிகள்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படியான ஒற்றுமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் திட்டமிட்டு இனவெறி அரசியலும், மதவெறி அரசியலும் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது சிங்கள மக்கள் மத்தியில் எழுச்சி பெற்றிருக்கும் பாசிச ஆதரவு என்பது கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், ஏப்ரல் 21, ஈஸ்டர் அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் போன்றவற்றாலும் ஏற்பட்ட ஒன்றாகும். இந்த உணர்வு மட்டம் நிச்சயமாக நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பில்லை. காரணம் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் கோத்தபய ராஜபட்சே அமெரிக்க அடிமை என்பதும், ஜனநாயகத்தை நசுக்கும் கொலைவெறி பிடித்த பாசிஸ்ட் என்பதும் ஏற்கெனவே தெரிந்த உண்மைகள். எனவே இருக்கும் நெருக்கடிக்கு எந்தவித உருப்படியான தீர்வும் இது போன்ற பாசிஸ்ட்களிடம் இருக்கப் போவதில்லை. மோடியால் இந்தியாவிற்கு ஏற்பட்ட நிலைமைதான் கோத்தபய ராஜபட்சேவால் இலங்கைக்கு ஏற்படப் போகின்றது.

எனவே இலங்கையில் உள்ள ஜனநாயக சக்திகள் மதம் கடந்து சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையைக் கட்டமைப்பதன் மூலம் ஆளும் அரசின் மீது வரும் காலங்களில் ஏற்படப் போகும் அதிருப்தியை முழுவதுமாகப் பயன்படுத்தி பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.

- செ.கார்கி

Pin It