வெறுங்கால் மருத்துவர்கள் என்பது எங்கள் தாரக மந்திரமாக மாறிவிட்டது என்கிறார்கள் ஆப்பிரிக்காவின் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குழந்தைகள் இறப்பைத் தவிர்ப்பதில் பெரும் புரட்சியையே இது நிகழ்த்திக்காட்டிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் உலக சுகாதாரக் கழகத்தின் வல்லுநர் ஃபிளாவியா பஸ்ட்ரியோ. இவர்களால் புகழாரம் சூட்டப்படும் இந்த வெறுங்கால் மருத்துவர்கள் வேறு யாருமல்ல, காடு, மலை, ஆறு என்று சீனாவின் கடினமான பகுதிகளில் ஆரம்ப சுகாதார வசதியைக் கொண்டு சேர்த்தவர்கள்தான். தங்கள் வசதியைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கு வேண்டுமானாலும் இவர்கள் பயணித்தார்கள். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஆறு மாதம் பயிற்சி பெற்று லட்சக்கணக்கான கிராமங்களுக்கு சென்று குறைந்தபட்ச மருத்துவ வசதியை மக்களுக்கு கொண்டு சேர்த்த இவர்களின் பணிதான் ஆப்பிரிக்காவுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

புரட்சிக்குப்பிறகு உடனடியாகச் செய்ய வேண்டிய பணியாக மருத்துவப் பணியை சீன அரசு பார்த்ததுதான் இதற்குக் காரணமாக இருந்தது. ஆனால் 1980களின் துவக்கத்தில் இந்த வெறுங்கால் மருத்துவர்கள் என்ற அம்சம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஏற்கெனவே இருந்த வெறுங்கால் மருத்துவர்களில் பெரும்பாலானோர் கூடுதல் பயிற்சிகள் மற்றும் முறையான தேர்வுகளை எழுதி கிராமப்புற மருத்துவர்களாக மாறிவிட்டனர்.

ஆனால் தற்போதைய தேவையைக் கணக்கில் கொண்டு இந்தப் புதுமையான முயற்சிக்கு ஆப்பிரிக்கா உயிர் கொடுக்கிறது. சீனாவின் வல்லுநர்களிடம் இது குறித்து ஆலோசனைகளைக் கேட்டுள்ளார்கள். தனியார் துறையிடம் விட்டால் வணிகமயமாக்கி விடுவார்கள் என்ற அம்சம்தான் இந்த முயற்சியை நோக்கி ஆப்பிரிக்க அரசுகளைத் தள்ளிவிட்டுள்ளது. எலும்பும் தோலுமாகக் குழந்தைகள் காட்சியளிப்பதுதான் எத்தியோப்பியாவின் அடையாளமாக இருந்து வருகிறது. வெறுங்கால் மருத்துவர்கள் இதை மாற்றி விடுவார்கள் என்கிறார் ஃபிளாவியா. குறைந்தபட்ச மருத்துவ வசதியை உத்தரவாதப்படுத்தும் நோக்கத்தில் வெறுங்கால்களோடு ஆப்பிரிக்க காடுகளையும், மலைகளையும் நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் கிளம்பிவிட்டார்கள்.

சோசலிச "அரேபா”!

சோசலிசப் பாதையில் சென்று கொண்டிருக்கையில் எந்தவொரு உத்தியையும் விட்டுவைக்க ஹியுகோ சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு தயாராக இல்லை. ஏழு சோசலிச ஓட்டல்களைத் திறந்துள்ளார்கள். முதல் ஓட்டல் ஜனவரி மாதத்தில் துவக்கப்பட்டது. ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு தற்போது தலைநகர் காரகாசில் ஏழாவது ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. தரமான உணவை நியாயமான விலையில் தருவதே இந்த ஓட்டல்களின் நோக்கமாக இருக்கப்போகிறது.

அரேபா என்பது லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரபலமான உணவாகும். மக்காச்சோளத்தைக் கொண்டு செய்யப்படும் ரொட்டிதான் அது. வெனிசுலா மக்களின் முக்கிய உணவுப்பொருளாக அது இருக்கிறது. அதை சாண்ட்விச் போன்று செய்து ஓட்டல்களில் தருவார்கள். ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை இந்த ஓட்டல்களால் விற்கப்பட்ட அரேபாக்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைத் தொட்டுவிட்டது.

வணிக ரீதியாக நடத்தப்பட்டு வந்த ஓட்டல் உரிமையாளர்கள், அரசின் இந்த முயற்சியை சாத்தியமற்ற ஒன்று என்று வர்ணித்தபோது மக்களும் அதை நம்பவே செய்தனர் என்கிறார் அந்நாட்டின் வணிகத்துறை அமைச்சர் ரிச்சர்டு கனான். சொல்லப்போனால் ஓரிரண்டு மாதங்கள் கழித்து அந்த உரிமையாளர்கள் பதற்றமடைந்துவிட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மக்களும் இரண்டு ஓட்டல்களில் கிடைக்கும் அரேபாக்களுக்கு செல்லமாக பெயர் சூட்டியுள்ளார்கள். வணிகரீதியான ஓட்டல்களில் கிடைக்கும் பண்டத்திற்கு முதலாளித்துவ அரேபா என்றும், அரசின் ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பண்டத்திற்கு சோசலிச அரேபா என்றும் பெயர் சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சோசலிச அரேபாவின் விலை 7. 50 ரூபாய் என்றால் முதலாளித்துவ அரேபா 20 முதல் 30 ரூபாய் வரை விற்கிறது. தரத்திலோ சோசலிச அரேபாதான் உயர்ந்து நிற்கிறது. சோசலிச ஓட்டல்களுக்கு வருபவர்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது என்கிறது அந்நாட்டின் நிதித்துறை. ஓட்டல்கள் எண்ணிக்கை பெருமளவில் பெருகப் போகிறது என்பது மக்களின் காதுகளில் தேனாகவும், முதலாளித்துவ அரேபா தயாரிப்பாளர்களின் காதுகளில் அபாய மணியாகவும் விழுந்துள்ளது.

ஜப்பானைப் பார்க்கலாமா. . ?

ஜப்பானைப் பாருங்கள் என்று நம்மூர்க்காரர்களில் பலரும் சொல்லிக் கொள்வதுண்டு. அங்கிருக்கும் கல்வி முறையைப் பார்த்து காப்பியடித்து விடாதீர்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை மற்ற நாடுகளிடம் சொல்லாத குறைதான். தற்போதுள்ள கல்விமுறையை மாற்றி விடுங்கள் என்று மூன்றாவது முறையாக ஜப்பானிடம் ஐ. நா. சபையின் குழந்தைகள் உரிமைகளுக்கான குழு எடுத்துச் சொல்லியுள்ளது.

1998 ஆம் ஆண்டிலேயே இதைச் சொல்லிவிட்டார்கள். ஜப்பான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. 2004ல் ஒருமுறை நினைவூட்டிப் பார்த்தார்கள். ம். . ஹ§ம். . . யாரும் நகரவில்லை. தற்போது மூன்றாவது முறையாகவும் சொல்லிப் பார்க்கிறார்கள். ஒருவரையருவர் கழுத்தறுக்கும் வகையில் போட்டி மனப்பான்மையை உருவாக்கும் கல்வி முறை குழந்தைகளை நல்ல குடிமகன்களாக உருவாக்காது என்பது ஐ. நா. சபைக்குழுவின் கணிப்பு.

குழந்தைகளின் கருத்தைக் கேட்கும் வகையிலும், அவர்கள் வருங்காலத்தில் முடிவு எடுக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கும் வகையிலும் கல்வித்திட்டத்தை மாற்றுங்கள் என்கிறார்கள். அதற்கு மாறாக தற்போதுள்ள அடுத்தவரைக் கழுத்தறுக்கும் போட்டியை உருவாக்கும் கல்விமுறையால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் நிலை, தற்கொலைகள், மனநிலை பாதிப்பு, படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. அரசின் கொள்கைகள் வறுமையை அதிகரித்துவிட்டது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாகும். இந்நிலையில் குழந்தைகளின் நலன் மற்றும் பிற சமூகநலத்திட்டங்களுக்கு ஜப்பானிய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை. போதிய நிதியை ஒதுக்கும் வகையில் பட்ஜெட் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் ஐ. நா. குழுவினர் வலியுறுத்தி வருகிறார்கள். என்ன. . . ஜப்பானைப் பாருங்கன்னு இனி சொல்லலாமா. . ? முடிவு உங்களுடையதாகவே இருக்கட்டும்.

- கணேஷ்

Pin It