கிர்கிஸ்தான் குடியரசின் தென் பகுதியில் உள்ள ஆஷ் ஜாலாலபாத் நகரங்களில் ஜூன் 11, 2010 முதல் நடந்த இனக் கலவரத்தில் 170 நபர்கள் கொல்லப்பட்டு, 1700 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளதோடு, ஏராளமானப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். அரசு வெளியிட்ட இவ்விவரம் மிகக் குறைவே எனவும் ஐந்து லட்சம் பேர்கள், குறிப்பாக உஸ்பெக் இன மக்கள் பாதிப்பு அடைந்து இருப்பார்கள் என அரசு சாரா நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2010 ஜூலை மூன்றாவது வாரத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இவ்வன்முறை வெடிப்பதற்கு காரணம் என்ன? எப்படியான நிலைமையை கிர்கிஸ்தான் அரசு கட்டுக்குள் கொண்டுவரமுடியம்? அமெரிக்காவும், இனக் கலவரப் பிரச்சனையில் எவ்வாறு நடந்து கொள்ளப்போகின்றன? இந்த இனக்கலவர நிகழ்வின் மூலம் மத்திய ஆசியாவும் உலகமும் என்னவகையான படிப்பினைகளை கற்றுக்கொள்ளப்போகின்றன?

கிர்கிஸ்தானில் இனக்கலவரம் வெடிப்பது இதுவொன்றும் முதல்தடவை அல்ல. தற்போது அரசியல் அகதியாகவும், அமெரிக்காவின் உதவியுடன் வண்ணப்புரட்சி மூலம் ஆட்சியை 2005இல் கைப்பற்றிய கிர்கிஸ்தானின் முன்னாள் அதிபர் குர்பான்பெக் பாகியெவ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களை பொதுமக்கள் எதிர்த்தபோது ஏப்ரல் 2010 அரசு ராணுவத்தால் 80பேர்கள் கொல்லப்பட்டனர். பாகியெவ்விற்கு முன்பிருந்த அதிபர் அக்சார் அகயெவ் காலத்தில் நடந்த பல கலவரங்களில் பலநூறு மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பாகியெவ்விடம் அதிகாரத்தை இழந்தவர் ரஷியாவில் அரசியல் அகதியாக இருந்து வருகிறார். சோவியத் யூனியன் 1990இல் சிதைந்த பிறகு உஸ்பெக் கிர்கிஸ் இனக் கலவரங்கள் தீவிர மடைந்தன. உஸ்பெக்கிஸ் தானுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையே உள்ள நநிநீர் தாவா பிரச்சனையில் ஏற்படும் வன்முறைகளாலும் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு வந்துள்ளனர். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒரு நிகழ்வுதான் ஜூன் 2010 இல் நடந்த இனக்கலவரமாகும்.

முதலாவதாக தெருச்சண்டையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் குழுவின் மூலம் பரவலான வன்முறையாக மாறியது எனவும், சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பல்கள், கடத்தல் பணம் சம்மந்தமாக தங்களுக்குள் மோதிக் கொண்டதால் பிறகு அது இனக் கலவரமாக மாறியது எனவும், முகமூடி அணிந்த ஒருவன் உஸ்பெக், கிர்கிஸ் இன மக்களை தாக்கியபடி சென்றதின் மூலம் இரண்டு மக்களும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. ஊடகங்களின் தகவல்படி ஜாலாலாபாத்தில் இருந்த உஸ்பெக் இன வழக்கறிஞர் கிர்கிஸ் இன மக்களை அடியாட்களை கொண்டு தாக்கியபோது, இர்கிஸ் இனமக்கள் எதிர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியதால் பிறகு கலவரமாக மாறிவிட்டது.

மத்திய ஆசியாவில் பல்வேறு இன மக்கள், பல வேறுபட்ட கலாச்சார பண்பாடுகளுடன் வாழ்ந்து வருவதாலும் திருமதி. ஆதன்பயெவா தலைமையிலான இடைக்கால அரசுக்கும் முன்னாள் ஜனாதிபதி பாகியெங்விற்கும் இடையே உள்ள அரசியல் வேறுபாடுகள்தான் இனக்கலவரங்களுக்கு உண்மையான காரணம் எனலாம். பாகியெவ், அவரது தம்பிகள் இவர்களின் வம்சாவழியினர், இலண்டனில் வாழ்ந்து வருகின்ற பாகியெவ்வின் மகள் இவர்கள்தான் இக்கலவரங்களை தூண்டிவிட்டு, அதற்கு பணம், பொருள் உதவி செய்து வருவதாக ஆதன்பயெவா குற்றம் சுமத்தி உள்ளார்.

தெற்கு கிர்கிஸ்தானில் தொடர்ச்சியாக இனக்கலவர வன்முறைகள் நடந்து வருவதை சுட்டிக்காட்டி பாகியெவ்வும், அவரின் ஆதரவாளர்களும் இடைக்கால அரசு வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இடைக்கால அரசு ஊழலுக்கு எதிரான சட்டமுன்வரைவை கொண்டுவர உள்ளதால் பாகியெவ் குழுவினர் சட்டத்தை எளிதில் நிறைவேற்ற முடியாமல் செய்யவே இனக்கலவரங்களை தூண்டுவதாக எதிர்தரப்பு கூறி வருகிறது. மேலும் வரும் மாதத்தில் ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் தாஷ்கண்டில் நடக்க உள்ளதால், இச்சமயத்தில் இனக் கலவரங்களை நடத்துவதின் மூலம் இடைக்கால அரசு பலவீனமானது என காட்ட பாகியெவ் முயற்சித்து வருவதாக தெரிகிறது. பாகியெவ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரின் மூன்று தம்பிகளையும் அரசின் மிக உயர்ந்த பதவிகளில் அமர்த்தியதால் பதவிகளை பயன்படுத்தி அவர்கள் புரிந்த ஊழல்களை இடைக்கால அரசுகள் வெளிக்கொணர முயற்சிப்பதால் இவர்கள் இனக்கலவரங்களை வேண்டும் என்றே திட்டமிட்டு நடத்தி வருவதாகத் தெரிகிறது.

பாகியெவ் மீதான இக்குற்றச்சாட்டுகள் அவர் பதவியேற்ற 2005ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கிவிட்டது. சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி தெற்கு கிர்கிஸ்தான் பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள் பாகியெவ்விற்கு ஆதரவாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர். கிர்கிஸ் இன மக்கள், உஸ்பெக் இன மக்களை தாக்கும்போது ராணுவம் கிர்கிஸ் இன மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதோடு, கிர்கிஸ் ராணுவ வீரர்கள் உஸ்பெக் இன பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதின் மூலம் அவர்களை அகதிகளாகச் செய்வதில் முன்நின்று வருகின்றனர். இதன் பின்னால் இடைக்கால அரசின் உயரதிகாரிகள் சிலர் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.

ஊடகங்களின் கருத்துப்படி கலவரங்கள் இன ரீதியான காரணங்களாலும் ஏற்படுகின்றன. பிரதான துருக்கி இனத்தின் இரண்டு பிரிவாக உஸ்பெக், கிர்கிஸ் இனங்கள் இருந்தாலும், இவைகள் வெவ்வேறு மொழிகள் பேசி வருகின்றன. உஸ்பெக் இனம் கிர்கிஸ்தானில் மிகப்பெரிய சிறுபான்மை இனமாகும். மொத்த மக்கள் தொகையில் 14 சதமாக உள்ளனர். தென் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியாக உஸ்பெக் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதரா ஏற்றத்தாழ்வுகளும், இன மோதல்களுக்கு மிக வலுவான காரணமாக உள்ளது. உஸ்பெக் இன மக்கள் பெரும்பாலும் நகரங்களில் வசிப்பவர்களில் வணிகம் செய்பவர்களாகவும் உள்ளனர். கிர்கிஸ் இன மக்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்களாகவும், விவசாயக் கூலி வேலை செய்பவர்களாகவும் வாழ்ந்து வருவதால், கிர்கிஸ் இன மக்களின் வெறுப்பும், கோபமும் இயல்பாகவே உஸ்பெக் இனமக்களிடம் திரும்பி அவர்களின் வீடுகள், வணிக வளாகங்கள், வாகனங்களை கொளுத்துவதில் போய் முடிந்துள்ளன. இவ் வகையான தாக்குதல்களின் போது “கிர்கிஸ்தான் கிர்கிஸ் இன மக்களுக்கே’’ என கூச்சலிட்டதின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளமுடியும். பொருளா தார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை வேறுபாடுகளை சுயநல அரசியல் சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்கின்றன.

மத்திய ஆசியாவின் உணவு களஞ்சியம் எனப்படுகின்ற கிர்கிஸ் தானின் தெற்கு பகுதியில் உள்ள ஃபர்க்கான் பள்ளத் தாக்கில்தான் விவசாயம் வளமாக நடந்து வருகிறது. சோவியத் யூனியன் சிதைவிற்கு பின்னர் கூட்டுப்பண்ணைகள் மற்றும் அரசு பண்ணைகளின் நிலம் அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் கைகளுக்கு மாறியவுடன் இப்பகுதி மக்கள் பெரும் அளவில் கூலி விவசாயிகளாக மாறிப்போயினர். எனவே, இங்கு விவசாய உற்பத்தியும் பெரும் அளவில் குறைந்து போனது. இதனால் வேலையின்மையும், வறுமையும் இப்பகுதியில் வளர்ந்த காரணத்தால் பெரும் அளவிலான கிர்கிஸ் இன மக்கள் ரஷியாவுக்கு இடம் பெயர்ந்து அங்கு பல்வேறு வகையான அடிமட்ட வேலைகளை செய்து, கடந்த இருபதாண்டுகளாக தங்களின் குடும்பங்களைக் காப்பாற்றி வருகின்றனர். நாற்பது சத கிர்கிஸ் இன மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதால், அவர்களின் தாக்குதல் இலக்கு பொருளாதராத்தின் மீது இயல்பாகவே திரும்பிவிட்டது.

தனது அரசாங்கத்தை ஆதரிக்கின்ற, கலவரத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு பகுதி உஸ்பெக் மக்களை திருமதி. ரோசா ஆதன்பயெவா சந்தித்து தேவையான உதவிகளை செய்வதாக வாக்களித்தும், உஸ்பெக்கிஸ்தான் கிர்கிஸ்தான் எல்லை பகுதிகளில் இருந்த உஸ்பெக் இனமக்களில் வெகுசிலரே தங்களின் பழைய வாழ்விடங்களுக்கு திரும்பி உள்ளனர். உஸ்பெக்கிஸ்தான் ஜனாதிபதி இஸ்லாம் கர்மவ் இடைக்கால அரசை குற்றம் சாட்டாமல் கலவரங்களுக்கு மூன்றாவது சக்திதான் காரணம் எனக் கூறி இருப்பதன் மூலமும் வன்முறைகள் இனப்பிரச்சனையால் ஏற்பட்டதல்ல எனவும் கூறியுள்ளார்.

இடைக்கால அரசின் உறுதியற்றத்தன்மையாலும், வளர்ச்சி திட்டங்களில் போதுமான கவனம் செலுத்தாதன் விளைவுகள் தான் ஜூன் இனக்கலவரங்களாகும். மத்திய கிர்கிஸ் நகரமான பிஸ்க்கெக் பலவீனமாக இருப்பதோடு பல்வேறு அரசியல் குழுக்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து அவர்களோடு ஒரு அரசமைப்பை நிறுவிக் கொண்டு உள்ளனர். 35 லட்சம் ஜனத்தொகை கொண்ட நாட்டில் நூற்றுக்கும் மேலான அரசியல் கட்சிகளும், அத்தகைய அளவில் வேறுபட்ட அரசியல் பார்வைகளும் கொள்கைகளும் உள்ளன. இவ்விஷயமே ஒரு பொதுத்தன்மையான கொள்கை திட்டத்தை அமல்படுத்திட தடையாக இருக்கிறது. வெளிநாட்டு ராணுவ உதவியுடன் இனக் கலவரங்களை கட்டுப்படுத்த நினைத்தாலும் உள்ளூரில் அதற்கு வரவேற்பு இல்லை. ஐ. நா. சபை உடனடியாக இனக்கலவரத்தை இடைக்கால அரசு தடுத்து நிறுத்தாவிடில் உடந்தையாக இருந்து வருகிறது என கருதவேண்டி இருக்கும் என அறிவித்துள்ளது.

நிலைமைகள் கட்டுக்கடங்காமல் சென்றவுடன் திருமதி ஆதன்பயெவா ரஷிய அதிபர் திமித்ரி மெததேவ்விடம் ராணுவ உதவி கேட்டு வருகிறார். மெததேவ் ரஷிய ராணுவத்தை அனுப்புவதில் எடுக்காமல், ஆர்மேனியா பெலரூஸ் கசுக்கிஸ்தான், தனுக்கிஸ்தான் உஸ்பெக்இஸ்தா ஆகிய நாடுகளின் கூட்டு பாதுகாப்பு படையை அனுப்பவே விரும்புகிறார். மேலும், 2008ல் ரஷியா ஜார்ஜியாவில் படையெடுத்தபோது மேற்குலக அறிவுவாதிகள் எதிர்த்ததை மனதில் கொண்டே இப்பிரச்சனையில் போதுமான இடைவெளியில் நின்றுகொள்ள நினைக்கிறார். ரஷியா நிபுணர் ஃபிரைன் ஏயிட்மோர் நிலைநிறுத்தவே ரஷியா விரும்புகிறது. தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கு அல்ல” என கூறுகிறார். மத்திய ஆசியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கிர்கிஸ்தான் இருப்பதால் மாஸ்கோவும், வாஷிங்டனும் தங்களின் படைத்தளத்தை கிர்கிஸ்தானில் நிறுத்தி வைத்துள்ளன. மேலும் இவ்விரு நாடுகளும் கிர்கிஸ்தானின் வளங்களை பகிர்ந்து கொள்ளவே நினைப்பதால் அந்நாட்டில் அரசியல் உறுதியற்ற தன்மை இருக்கவே விரும்புகின்றன. எனவே, இவை இரண்டு நாடுகளும் பணம் மற்றும் பொருள் உதவிகள் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றன. ரோசா ஆதன்பயெவா கேட்டுக்கொண்ட ராணுவ உதவியை செய்யத் தயாரில்லை.

ஆதன்பயெவா மாஸ்கோவுடன் நெருக்கமாக இருந்து வந்தாலும் மெததேவ் மேற்கு உலகின் பக்கமே நின்று கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவும் தங்களின் சொந்த நலன்களுக்காகவே ஆதன்பயெவா வை ஆதரிக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகம், சுதந்திரமான செய்தித்துறை, ஒற்றைத் தன்மையான சர்வாதிகார ஆட்சி முறைக்கு முடிவு கட்டுதல் போன்ற நடவடிக்கைகளை இடைக்கால அரசு எடுத்து வருவதாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் யுத்தத்திற்கு பயன்படுவதாலும் தான் வாஷிங்டன் ஆதன்பயெவாவை ஆதரிக்கிறது.

இவை இல்லாமல் போதைப்பொருள் கடத்தல், குற்றவாளிகளை ஒழிப்பது அரசியல் நிலைதன்மையை உருவாக்குவது, பொருளாதார செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது என பல்வேறு சிக்கல்கள் இடைக்கால அரசுக்கு உள்ளன. தெற்கு கிர்கிஸ்தான் நகரங்களுக்கு, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கதே. சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவிகள் மூலம் கிர்கிஸ் தான் பழைய நிலைமைக்கு திரும்புவிடும் என நம்பலாம். சில நகரங்களில் கிர்கிஸ் உஸ்பெக் இன மக்கள் இணைந்து அனைவருக்கும் நிவாரண பொருட்கள் கிடைக்க ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதும் வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது.

அரசியல் நிர்ணய சட்டத்தை திருமதி ரோசா ஆதன்பயெவா உறுதியாகவும் உடனடியாகவும் நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்தால் கிர்கிஸ்தான் நிலையற்ற தன்மையில் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. பெரும்பாலான உஸ்பெக் இனமக்கள் நிலைமைகள் இன்னும் சீரடையவில்¬ எனக் கருதுவதால் சட்டமுன் வடிவை ஆதரிக்க முன்வர மறுக்கிறார்கள். எனவே, மற்ற மத்திய ஆசியா நாடுகளின் அரசியல் தலைவர்கள் இச்சட்டத்தை நிறைவேற்ற உதவினால் மட்டுமே அந்நாட்டில் நிலையான ஜனநாயகக் தன்மை கொண்ட அரசை நிறுவுவதற்கு தங்களின் கடமையை ஆற்றியதாக எதிர்காலம் நினைவு கொள்ளும். தெற்கு கிர்கிஸ்தானில் வெடித்த இனக்கலவரம் மற்ற மத்திய ஆசிய நாடுகளுக்கு பரவாமல் இருப்பது நமக்கு மகிழ்ச்சியேயாகும். ஆனால், இனவாத, அடிப்படைவாதிகள் ஃபெர்க்கானா பள்ளத்தாக்கில் இருக்கும் வரை உஸ்பெக்கிஸ்தான், கிர்கிஸ்தான், தாவிக்கிஸ்தான் நாடுகளில் வன்முறைகள் பரவுவதை தடுக்க முடியாது. இதனைமத்திய ஆசியாவின் ஆட்சியாளர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

திருமதி, ரோசா ஆதன்பயெவா மத்திய ஆசியாவின் ஆட்சி பொறுப்புக்கு வந்த முதல்பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்கியதோடு, ஜூலை 03, 2010இல் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதுடன் இடைக்கால அரசு முழு தன்மையான அரசாக மாறிவரும். அச்சமயம் நிலையான அரசை நிறுவுவதில அவர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். இனக்கலவரங்கள் இன்றைக்கு கட்டுப்படுத்தி இருந்தாலும், முழுமையாக நிறுத்தப்படவில்¬. சட்ட திருத்தம் அக்டோபர் 2010ல் நிறைவேற்றபட்ட பிறகு ஜனாதிபதியின் அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்படுவதற்கும், மாஸ்கோ உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உதவ வேண்டும். இவ்வாறு செய்வதில்தான் மேற்குநாடுகளின் நலன்களும் அடங்கியிருக்கின்றன.

(உதவியவை: Economics and Political weekly, July 2010, Frontline, July 16, 2010)

- ஆர்.இரவி

Pin It