வாழ்க்கையில் சில குத்துகள் மறக்க முடியாதது.

சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்தச் சமயங்களில் நடுமுதுகில் உண்டாகும் வலியைவிட அவன் மூலமாக கிடைத்த  ஏமாற்றம், உடனடியாக அவனை பிடிக்க முடியாமல் போன இயலாமை போன்ற மன வலிகளும் சேர்ந்து கண்ணீரை வரவழைக்கும்.

அதுபோன்ற மறக்க முடியாத முதுகு குத்தல்களை  உலகின் எல்லா தேசங்களுக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வரலாறு எப்போதாவாது கொடுத்து கதிகலங்க வைக்கும். அப்போழுது எழும் அம்மக்களின் வேதனை ததும்பும் கண்ணீரானது அவர்களது பிற்கால எழுச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமையும்.ஒன்று அது போராகவோ, பூகம்பமாகவோ, கொள்ளை நோயாகவா,பெரும் பொருளாதார  வீழ்ச்சியாகவோ அல்லது சுனாமியாக வோகூட அந்த குத்து இருக்கலாம்.

அது போலத்தான் ஜப்பானியரின் எழுச்சிக்கு அடிப்படை காரணமாக இரண்டு  முதுகு குத்தல்களை வரலாறு வழங்கியிருக்கிறது.  ஒன்று அனைவரும் அறிந்த இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நிகழ்ந்த ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம். இன்னொன்று அதற்கும் முன்பாக 1923ல் ஏற்பட்ட பெரும் பூகம்பம். கிட்டதட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை அந்தப் பூகம்பம் பலிவாங்கியது. இந்த வரலாற்று  துயரமான சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குபின்  பூகம்பம் நடந்த இடங்களை பலரும் சென்று பார்த்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். சுற்றிலும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலினூடே இரண்டு சிறுவர்களும் உள்ளம் நடுங்கியபடி நடந்து சென்றனர். அதில் ஒருவர் அகிரா குரசேவா.  இன்னொருவர் அவரது அண்ணன். அகிராவுக்கு அப்போது 13வயது. அண்ணன் ஹெய்கோவுக்கு 17 வயது. சுற்றிலும் உயிருக்கு போராடியபடி கேட்கும் மனிதர்களின் மிருகங்களின் அழுகுரல்களை  கேட்டதும் அகிரா தலையை திருப்பி  பார்க்க முயற்சிக்க அண்ணன் ஹியூகோ திரும்பாதே அவரிடம் கத்தி  தலையை முன்னோக்கி திருப்புவாரம்.

பிற்காலத்தில் தன் படங்களில் அதிகமாக  காணப்படும் அந்த  திகிலுணர்வு மற்றும்  பயமூட்டும் தன்மைகளுக்கு  தன் மனதில் ஆழப்பதிந்த அந்த சிறுவயது நிகழ்ச்சிதான் காரணம் என குரசேவா பிற்பாடு கூறியிருக்கிறார். மட்டு மல்லாமல் தொடர்ந்த அவரது வாழ்வும் ஒருபயங்கரத்தை அவருக்கு முதுகில் சுமக்கவைத்த படியேதான் இருந்தது.

1910ல் இசாமு மற்றும் ஷிமா குரசேவா எனும் தம்பதியின் நான்காவது மகனாக டோக்கியாவை அடுத்த ஒரு புறநகர் ஒன்றில் பிறந்தவர் குரசேவா.

அவரது  அண்ணன் ஹியூகோ தன் இளவயதில் பென்ஷியாக வேலைசெய்துவந்தவர்.  ஊமைப்படங்கள் ஓடும்போது பின்னாலிருந்து கதையை விவரிப்பவருக்கு பெயர் தான் பென்ஷி. ஒரு கட்டத்தில் சத்த சினிமா வந்தபிறகு பென்ஷிக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். ஸ்டுடியோக்களின் முன் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நிகழ்த்தினர். அகிராவின் அண்ணன் ஹியூகோதான் அதற்கு தலைமைதாங்கி போராட்டங்களை நடத்தினார். ஆனாலும் என்ன பலன்... போன வேலை போனதுதான். அந்த மன உளைச்சலில் அகிராவின் அண்ணன் ஹியூகோ தற்கொலை செய்து கொள்ள நான்குமாதங்கள் கழித்து காரணமே இல்லாமல் அவரது சகோதரர்கள் மற்ற இருவரும் ஒன்றன் பின் ஒருவராக சொல்லி வைத்தார் போல இறந்து போக அகிரகுரோசோவா  திகிலுடன் தனிமரமாக நின்றார். மரணம் அவர் முதுகின் பின்னால் ஒரு கேள்வியாக நிற்க பீதி அவரது ஒவ்வொரு நிமிடத்தையுமாக ஆக்கிரமித்துக்கொண்டது.

அதன்பிறகு அவர் மெல்ல திரைப்படத்துறைக்குள் நுழைந்து அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய இயக்குனர் யமமோட்டொவிடம் உதவியாளராக இணைந்து பின் 1943ல் சஞ்சுரோ சுகாட்டா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானபின் அவரது சிறுவயது பீதி, மரணத்தின் விளிம்பு, அச்சத்தின் மறு எல்லை அவரது திரைப்படங்களில் காட்சிமொழிகளில் பரிணமிக்கத் துவங்கியது. அவரது பெரும்பாண்மையான படங்கள் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இயற்கைக்குமான போரட்டமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கருதப்படுகிறது.

1950ல் அவர் இயக்கத்தில்  ரோஷமான் வெளியானபிறகுதான் உலகசினிமாவுக்கு ஜப்பான் பரிச்சயமாக துவங்கியது என்றாலும் பல நல்ல இயக்குனர்கள் அவருக்கும் முன்பாக ஜப்பானிய சினிமாவையும் அதன் கலாசாரத்தையும் போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.இத்தனைக்கும் சினிமா ஜப்பானுக்குள் 1896லேயே நுழைந்து மெல்ல படங்களை தயாரிக்க துவங்கியிருந்தாலும் அவை பெரும்பாலும் அவர்களது காபுகி நாடகவகை போலவே இருந்தன. கென்ஷி மிசோகுச்சி (Kenji Mizoguchi) மற்றும் யசுஜிரொ ஓசு (Yasujiro Ozu) ஆகியோர்தான் ஓரளவு அதனை மவுன படங்களின் காலத்திலேயே மீட்டெடுத்தவர்கள்.

அதிலும் ஓசு ஜப்பானிய சினிமாவின் நியோரியலிஸ தந்தை என போற்றப்பட்டவர். அவரது திரைப்படங்களில் மனித உறவுகள் மற்றும் ஜப்பானிய கலாசாரத்தின் தொன்மங்கள் ஆகியவை அழுத்தமாகவும் எதார்த்த பாணியிலும் பின்பற்றப்பட்டு வந்தன. ஆனாலும் அவர்களது படங்கள் உலக அரங்கை அது வரை எட்டாமல்தான் இருந்தது. ரோஷமான் வெளியாகி உலக சினிமா ரசிகர்களின் பார்வை ஜப்பானிய சினிமாவின் மேல் கவனத்தை குவிக்க துவங்கியபின்தான் ஓசுவுடன் இன்னும் சில இயக்குனர்கள் அறியப்பட துவங்கினர்.

இன்றும் இந்தியாவில் எப்படி சில நல்ல சினிமா ரசிகர்கள்  ரே வை ஏற்காமல் கட்டக்கை தீவிரபடைப்பாளியாக முன்னிறுத்துகிறார்களோ அது போல ஜப்பானில் இன்றும் பலர் குரோசாவை ஏற்காமல் ஓசுதான் ஜப்பானிய சினிமாவின் தந்தை என புகழ்வர். ரோஷமானின் வெற்றிக்குப் பிறகு  அடுத்த பத்து வருடத்தில்  மூன்று   ஜப்பானிய திரைப்படங்கள் உலகசினிமாவை உலுக்கி எடுத்தன. அதில் ஒன்று அகிராகுரசேவாவின் செவன் சாமுராய் (Seven Samurai), இன்னொன்று ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி (Tokyo Story).

இன்றுவரை உலகின் தலைசிறந்த நூறுபடங்களுக்குள் இந்த இரண்டு படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத் தகுந்தது.  மூன்றாவது திரைப்படம் ஒருவணிகப்படம். அணு ஆயுத எதிர்ப்பை முன்னிறுத்தி வெளியான கோஜ்ரா (Gojira) எனும் இப்படம் பிற்பாடு ஹாலிவுட்டில் காட்சில்லா (Godzilla) எனப் பெயரிடப்பட்டு உலகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் ஓடி ஜப்பானிய சினிமாவுக்கு பெரிய வணிக சந்தையையும் ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் ஹாலிவுட்டுக்கு நிகராக தங்களாலும் படமெடுக்க முடியும் என ஜப்பானியர்கள் இப்படத்தின் மூலம் காலரை தூக்கிவிட்டு போரின் முலம் இழந்த தன்நம்பிக்கையை  மீட்டுக்கொண்டனர்.

ரோஷமான், செவன் சாமுராய், ரெட் பியர்ட் போன்ற குரசேவாவின் தலைசிறந்த படைப்புகளின்  வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த மிபுனே எனும் கலைஞனை  உலகின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உலகசினிமா அடையாளம் கண்டு கொண்டது.

அடிப்படையில் குரசேவா இலக்கியங்களின் மிகப்பெரும் காதலராக இருந்தார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளிலிருந்து மட்டுமே மூன்று திரைப்படங்களை மீட்டுருவாக்கம் செய்தார். அவரது கிங்லியர் (King Lear), நாட்கம் ரான் (Ran திரைப்படமாகவும், மேக்பெத் நாடகம் (Macbeth) த்ரோன் ஆப் ப்ளட்டாகவும் (Throne of blood), ஹேம்லட் (Hamlet) நாடகம், பேட்ஸ்லீப் வெல் (The Bad Sleep Well)எனும் படமாகவும் உருவாக்கம் செய்தார். மட்டுமல்லாமல் தஸ்தாயெவெஸ்கியின் மற்றொரு படைப்பான இடியட் எனும் நாவலையும் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் நாடகத்தை தழுவி லோயர் டெப்த்ஸ் போன்ற படைப்புகளையும் எடுத்தார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இகிரு கூட டால்ஸ்டாயின் சிறுகதை ஒன்றை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம். அது போல அவரது ஓவ்வொருபடத்திலும் பருவநிலைகளில் ஏதானும் ஒன்று பிரதான பாத்திரமாக இடம் பிடிக்கும் ரோஷமானில் மழை, டெர்சு உஜாலாவில் பனிப்புயல், ஸ்ட்ரே டாக் படத்தில் வெப்பம் ஆகியவை குறியீடுகளாக படம் முழுக்க பின்புலத்தில் இயங்கும்.

குரசேவாவின் திரைப்படங்கள் ஒரு சினிமா கற்கும் மாணவனுக்கு மிகச்சிறந்த பாடம். உலகின் வேறேந்த இயக்குனரின்  படங்களையும் இதற்கான முழுதகுதியுடன் ஏற்க முடியாது. கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை ஒலிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்து துறைகளுக்கும் அவரது படங்கள் மட்டுமே இலக்கணம்.அவரது திரைப்படங்கள் அனைத்துமே மனிதவாழ்வின் அவலங்களை அதன் புதிர்களை, குழப்பங்களை, மாயைகளை, கற்பனைகளை, அழுக்கை, வெளிச்சத்தை, அதன் இருட்டை மட்டுமே தொடர்ச் சியாக தேடிக்கொண்டிருந்தன.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அதன் சமன்பாட்டை  இடையறாமல் தேடுவதாக அவரது திரைப்படங்கள் இருந்தன. அதன் காரணமாகத் தான் உலகின் தலைசிறந்த இயக்குனர் என பலராலும் இன்றுவரை ஏகமனதாக கருதப்படுகிறார்.அவரது திரைப்படங்கள் வடிவத்தில் மேற்கையும் உள்ளடக்கத்தில் கிழக்கையும் ஒரு புள்ளியில் இணைப்பவையாக இருப்பதும் அவருக்கு கிடைத்த ஒருமித்த கைதட்டல் களுக்கு இன்னொரு காரணம்.

எல்லாக்காலத்திலும் சூரியனால் ஒளி மறைக்கப்படும். பகல் விண்மீன்கள் போல சில அதீத மேதைகளின் புகழானது பல திறமையாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான புகழை தடுத்துவிடும். இது போன்ற விபத்து மொசார்ட் காலத்தில் பல இசை மேதைகளுக்கு நிகழ்ந்த தாக கூறுவர்.

அது போலத்தான் குரசேவாவின் அதீத புகழ் காரணமாக கிடைக்கவேண்டிய நியாயமான பேரும் புகழும் கிடைக்காது போன ஜப்பானிய சினிமாவின் மற்றொரு கலைஞர் கோபயாஷி. கோபாயாஷியின் படங்களும்  பெரும்பாலும் சாமுராய் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுபவை ஆனாலும் அதில் அகிராவின் படைப்பாளுமைக்கு இணையான ஒரு செறிவான காட்சிமொழி அவரது படங்களில் காணப்படும். இன்னும் சொல்லப்போனால் செறிவிலும் காட்சி அணுகு முறையிலும் கோபாயாஷியிடம் குரசேவாவைவிடவும் கூடுதலான இறுக்கம் தொனிக்கும். ஆனால் குரசேவாவிடம் இருந்த இலக்கியத்தன்மை  மற்றும் உலகளாவிய பார்வைகள் ஜப்பானின் இதர இயக்குனர்களின் படங்களில் தேடிப்பார்த்தாலும் காணக் கிடைக்கவில்லை.

குரசேவாவின் காலத்தில் அவருக்குபின்னால் வந்து பரவலான கவனத்தை ஈர்த்த மற்ற சில இயக்குனர்களில் நகிஷா ஓஷியாமாவும், ஷோகை இமாமுராவும் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள். இவர்கள் ஓஷியாமவின் திரைப்படங்களின் பாலுறவுக்காட்சிகளையும் அதற்கு பின்னால் இயங்கும் மனித மனத்தின் நுண்மைகளையும் சித்தரித்தன. உலகம் காதல் வழியாக காமத்தை அடைந்த போது காமத்தின் வழியாக காதலையும் அதன் உயிர்பறிக்கும் தன்மையையும்  அவரது படங்கள் விவரிப்பதாக அமைந்தன.

ஹிரோஷி டேஷிகரா என்பவர் இயக்கத்தில் வெளியான வுமன் இந்த டியூன்ஸ்  (Woman in the Dunes- 1964) எனும் படம் 1964ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசை வென்று ஜப்பானியசினிமாவின் தரத்தை தக்க வைத்துக் கொண்டது.

இப்படியாக குரசேவாவின் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னுமாக பல இயக்குனர்கள் ஜப்பானிய சினிமாவின் தரத்தை உலகுக்கு எடுத்துசென்றிருப்பினும் எவரும் குரசேவா அளவுக்கு படைப்பில் உச்சத்தை அடையவில்லை. உலகில் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து இலக்கியதரத்தையும் மனிதவாழ்வின் பேருண்மைகளையும் தேடிய இயக்குனர்கள் பட்டியலில் குரசேவாவுக்கே முதலிடம். அவரது திரைப்படங்கள் ஒன்றிலிருந்து ஒன்று அனைத்திலிருந்தும் முழுமையாக வேறுபட்டன. அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உலக சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களான பெர்க்மன், தார்க்கோவ்ஸ்க்கி  போன்றவர்களிடமிருந்து அவர் விலகிநிற்கும் இடம் இதுதான். மேலும் அவர்களது படங்கள் உண்மையை  இயற்கையின் வழியாகவும் ஆன்மிகத்தின் வாயிலாகவும் தேடியபோது குரசேவா மட்டுமே அதனை எளிய மனிதர்களின் துயரத்தின் வாயிலாக அவர்களது வேதனையின் முனகல் வழியாக இதனை இடையறாது தேடினார்.

அது போல படைப்பொழுங்கின்  மீதான அவரது காதல் அண்டசராசரத்தின் வடிவங்களுக்கு அப்பாலும் இயங்க கூடியது. அதன் காரணமாக அவர் பல துன்பங் களையும் துயரங்களையும்  அவராகவே வருத்திக்கொண்டார். 1975ல் வெளியான டெர்சு உசாலாவில் அவர் எதிர்பார்த்த பனிப்புற்கள் வளர்வதற்கு ஏறக்குறைய ஓரிருவருடங்கள் வரை வெறுமனே காத்திருந்தார். 1971ல் அவர் ஒருமுறை ஜப்பானிய மரபுப்படி ஹரகிரி எனும் தற்கொலைமுயற்சிக்கு ஈடுபட்டு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

அகிராகுரசேவாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர்களான ஸ்பீல்பெர்க், ஜார்ஜ் லூகாஸ் மற்றும் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா ஆகியோர் அகிராவை தங்களது குருவாக கருதினர்.

குரசேவாவின் படங்கள் பெரும்பாலும் அமெரிக்க இயக்குனரான ஜான் போர்டின் தீவிர பாதிப்பிலிருந்து துவங்கியவை என்பது கூட இதற்கான உளவியல் காரணமாக இருக்கலாம். தனது குருவுக்கு செய்யும் காணிக்கையாக ஸ்பீல்பெர்க் ஒருபடத்தை எடுக்க அன்பு அழைப்புவிடுத்தார். 1990ல் வெளியான குரசேவாவின் ட்ராம்ஸ் எனும் அத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல இயக்குனரான மார்டின் ஸ்கோர்சி ஒரு முக்கியப்பாத்திரத்தில் பங்கேற்று தன்பங்கிற்கு குருகாணிக்கை செய்துகொண்டார்.

குரசேவா பெற்ற பரிசுகள் எதுவும் அவரது படங்களுக்கு ஈடாகாது. அவர் பற்றிய தகவல்கள் பகிர வேண்டியவை அல்லது தேடிக்கண்டடைய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை அவரே எழுதிய some thing like an autobiography எனும் நூலை படிப்பதன் மூலம் ஓரளவு நிறைவேறும்.

வரும் ஆண்டு மார்ச் 23 லிருந்து அகிராகுரசேவின் நூற்றாண்டு துவக்கம் பெறுகிறது. இன்றும் அவர் அறிவு உலகிற்கு இளமையானவராகத்தன் காட்சியளிக்கிறார்.

அடுத்த இதழில்

இத்தாலியின் இரண்டு இளமை காற்று

- அஜயன் பாலா

(புத்தகம் பேசுது பிப்ரவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It