கமழும் கல்வி நீரோடை என்னும் தலைப்பில் 2011, மார்ச் 6,7, 8 ஆகிய தேதிகளில் வெளிவந்த முரசொலி ஏட்டில் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள். கடிதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்வி ஒப்பாரும் மிக்காரும் இல்லா வளர்ச்சியை பெற்றுவிட்டதைப் போன்ற தோற்றத்தை புள்ளிவிவரங்கள் மூலம் நிறுவ முயன்றுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, அவர்கள் பின்பற்றுகின்ற புதிய தாராளமயக் கொள்கைகளை அப்படியே தமிழகத்திலும் பின்பற்றுகின்ற திமுகவின் ஆட்சியில் கல்வி குழம்பிய குட்டையாக மாறிப் போயிருப்பதை நிருபிக்க புள்ளிவிவரங்கள் தேவையில்லை.

உள்ளங்கை நெல்லிக்கனி போல தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் தனியார் பள்ளி முற்றுகைகளும், தனியார் கல்லூரிகளுக்கெதிரான போராட்டங்களுமே பறைசாற்றும்.கல்வி வியாபாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாது கல்வி வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் தயங்கிய, தடுமாறிய அரசுதான் திமுக அரசு. திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றபொழுது தமிழகத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 285. ஐந்தாண்டுகளுக்கு பிறகு தற்போது 488. இந்த வளர்ச்சி பறைசாற்றுவது எதை? கல்வி வியாபாரத்தின் வேகத்தை, அதில் திமுக அரசு காட்டிய அக்கறையை. இதில் கொழுத்த இலாபம் அடைந்தவர்கள் திமுக அமைச்சர்கள்.

இதனால், தனியார் பொறியியல் கல்வி முதலாளிகளை பெரும்பாலான தமிழக அமைச்சர்கள் ஆதரிக்கின்றனர்.ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லை, தகுதியான ஆசிரியர்கள் இல்லை, அரசு நிர்ணயித்ததை விட பலமடங்கு கட்டண வசூல், மாணவர் ஜனநாயகமில்லை, பெற்றோர்களுக்கு உரிய மரியாதை இல்லை என்ற கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான போராட்டங்கள் இந்த கல்லூரிகளில் நடந்து வருகிறது.தகுதியும், தரமுமில்லாத சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் பெருக்கத்தை பார்த்து மனமுடைந்து தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கணேசன் அவர்கள், தமிழகத்தில் படித்துமுடித்து வரும் பொறியியல் பட்டதாரிகளில் 20 சதம் பேரே வேலைவாய்ப்பிற்கு தகுதியடைந்தவராக உள்ளனர் என வாய்மொழி வாக்குமூலம் தந்துள்ளார்.

மறுபுறம், அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படவேண்டும் என வலுவாய் எழுந்த போராட்டங்களுக்கு பணிந்து இந்த அரசு அறிவித்த அறிவிப்புகள் ஒய்யார கொண்டையிலே, தாழம்பூவாம் அதன் உள்ளே இருப்பது ஈறும் பேணாம் என்ற கதைக்கு உதாரணமாகின. புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் என்ற அறிவிப்போடு துவங்கப்பட்ட 14 பொறியியல் கல்லூரிகளும் உண்மையில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாகவே துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.ஏற்கனவே நிதிச்சுமையில் தள்ளாடும் பல்கலைக் கழகங்கள் புதிய பொறியியல் கல்லூரிகளின் கதையோ அதோ கதி ஆகியுள்ளன. சொந்த கட்டடம் உரிய அடிப்படை வசதிகள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், தரம் வாய்ந்த ஆய்வகங்கள், மாணவர் திறன் வளர்க்கும் ஏற்பாடுகள், விடுதி வசதி என எதுவுமின்றி தத்தளிக்கின்றன இந்தக் கல்லூரிகள், கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளையில் ஆரம்பிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற்சாலையில் உள்ள ஷிப்ட் முறையில் காலை ஷிப்ட் மற்றும் மாலை ஷிப்ட் என பள்ளி மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கி செயல்பட்டு வருகின்றது.

புதிதாக குளித்தலையில் துவங்கப்பட்ட அரசு கலைக்கல்லூரி அங்குள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகின்றது. இது தான் அரசுக் கல்லூரிகளின் கதி.பள்ளிக் கல்வித்துறை கல்வி வியாபாரத்தால் கசக்கி பிழியப்பட்டு வருகின்றது. முழுமையான சமச்சீர்க் கல்வி வேண்டும் என்ற மாணவர் சங்கத்தின் கோரிக்கை பெரும் முழக்கமாய் மாறி தடியடிபட்டு போராட்டமாய் உருவெடுத்தது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் “தமிழகத்தில் நான்கு வகையான பள்ளிக் கல்வி முறைகள் இருப்பதாகவும் அவை வேறுபட்ட வாரியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இதன் விளைவாக பள்ளிக் கல்வியின் தரமானது சமச்சீரான முறையில் இல்லை.

பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு பள்ளிக் கல்விமுறையில் சமச்சீரான முறையை உருவாக்குவது இன்றியமையாததாக உள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் “யார் மனதும் புண்படாமலே தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்ற கலைஞரின் பொடிப்பேச்சோடு அறிவிக்கப்பட்ட சமச்சீர் கல்வி உண்மையிலேயே சமச்சீரை உருவாக்கவில்லை. தமிழக பள்ளிக்கல்வியில் நிலவிய வேறுபாடுகளுக்கு ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்படியே சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.2010 ஜூலை 15, காமராஜர் பிறந்த நாள் அன்று தமிழக முதல்வர் 18 பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை அரசு துவக்கும் என்று அறிவித்தார்.

இப்பள்ளிகளில் ஆங்கில வழிகளில் தான் பயிற்றுவிக்கப்படும் என்று தமிழினத் தலைவர் அறிவித்தார். இது 1956 ல் இயற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்திற்கும் 2006 தமிழ் கற்கும் சட்டத்திற்கும் சமச்சீர் கல்வி சட்டத்திற்கும் எதிரான அறிவிப்பாகும்.அரசு நியமித்த தனியார் பள்ளி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை எந்த தனியார் பள்ளியும் மதிக்கவில்லை.இதனால், அமைதியாய் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த மத்தியதர வர்க்க பெற்றோர்கள் மாநிலம் முழுவதும் வீதிக்கு வந்து போராடினர். 2010 ஆகஸ்ட் வரைமட்டும் 21 பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு பள்ளி மீது கூட அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.அரசுப் பள்ளிகளோ வழக்கம்போல புறக்கணிக்கப்பட்டன. சென்னையில் இக்காலகட்டத்தில் 30 மாநகராட்சி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. அரசு நல விடுதிகளின் வசதிகளோ அவலங்களின் உறைவிடங்களாய் மாறிவிட்டன. மாணவர் எண்ணிக்கைக்கேற்ப அறைகள், உரிய கட்டமைப்பு, கழிவறை, விடுதிப் பணியாளர்கள், குளியலறை, குடிநீர்வசதி, நூலகம் என்று எதுவும் அரசு நல விடுதிகளில் இல்லை. தரமற்ற உணவை சாலைகளில் கொட்டி மாணவர்கள் போராடியபோது மனமிறங்காதது தான் கலைஞரின் சாதனை. நுழைவுத்தேர்வு குழப்பங்கள், கல்வி உதவிக்தொகை மானியம் வெட்டு, அந்நியப் பல்கலைக் கழகம் நாடு முழுக்க பெருகியது என மாநிலங்களின் உரிமையை மீறும் மத்திய அரசின் உத்தரவுகளை அமைச்சரவையில் மௌனமாய் உட்கார்ந்து கை உயர்த்தி மாநில சுயாட்சிக்கு புதிய அர்த்தம் சொன்னதுதான் திமுகவின் சாதனை...

பூஜ்ஜியங்களின் ராஜ்ஜியம் 

176000 கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எத்தனை பூஜ்ஜியங்கள் வரும் என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.ஆனால் திமுக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் தலைவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? (இந்தியன் எக்ஸ்பிரஸ் 2011 மார்ச் 9, சொல்லும் செய்தியைப் படிப்பீர். 2011 மார்ச் 10ல் கட்டம் கட்டிய செய்தி) கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் ஒரு பஞ்சாயத்து தலைவரும் விண்ணப்பித்திருந்தார் அவரிடம் தலைவர் (கருணாநிதி) கேட்ட கேள்வி.. நீ எவ்வளவு செலவழிப்பாய் பதில் 3 கோடி. உடனே தலைவர் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் என்றார்.. திண்டாடிப்போன வேட்பாளர் விரல்விட்டு எண்ணியும், தவறான பதிலை அளித்தார். பின்னர் வெளியே வந்து நேர்காணலுக்காகக் காத்திருந்தவர்களிடம் கோடிகளுக்கு பூஜ்ஜியங்களை சரியாகக் கேட்டாலும் கேட்பார் என்று சொன்னாராம்.. சிரிப்பாய் சிரிக்கிறது பூஜ்ஜியங்கள்...

Pin It