நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களுடைய உணவு, உடை, பழக்கவழக்கங்கள் யாவை என்பவற்றை அறிந்து கொள்வது வரலாறு என்று கருதப்பட்டது. இப்போது நடைபெறும் மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடங்களுக்குத் தரும் முக்கியத்துவம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுக்குத் தருவதில்லை; இது வருந்தத்தக்க நிலை தான்.

நாடு, கட்சி, மனிதவாழ்வு எனப் பலவற்றிலும் வரலாறு உண்டு. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடு என்பன போன்ற பகுதிகளைப் பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். பின்னர் முகலாயர், ஆங்கிலேயர் என்பவர்களால் ஆளப்பட்டு, 1947 முதல் சுதந்தரம் பெற்று, தேர்தல் முறையில் மக்களை ஆளும் நிலைப்பாடு உண்டு. இந்த முறையிலும் மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. 2019 டிசம்பர் இதழில் தோழர் ஆனைமுத்து அவர்களால் தலையங்கக் கட்டுரை விரிவான தகவல்களைத் தந்துள்ளது; சிந்திக்க வேண்டுகிறேன்.

கட்சி வரலாறு என்னும் போது தேசியக் காங்கிரசு வெள்ளையார்களால் தோற்றுவிக்கப்பட்டு, பின் எண்ணற்ற கட்சிகள் நடைமுறையில் உள்ளன. காங்கிரசுத் தலைவர் பொறுப்பில் இருந்த பெரியார் மனிதநேயம் காக்கத் தனிக்கட்சி ஆரம்பித்து, அதுவும் இப்போது பல பிரிவுகளாக உள்ளது. கட்சிகளின் வரலாறுகளை - தத்துவங்களை இப்போது மக்கள் பலர் சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.

மனிதவாழ்வு என்பதின் வரலாற்றைக், கற்கால மக்கள் முதல் இன்றைய அறிவியல் வாழ்வு வரை எழுத நீளும். ஆசிரியர் பணி புரிந்தவர் என்ற நிலையில் 1940-இல் பிறந்து, 1960-இல் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து 1998-இல் பணிநிறைவு பெற்ற நான், கல்வி நிலை என்பதன் மாறுபாடுகளை - வரலாற்றினைத் தெரிவிக்க விழைகிறேன். இக்கருத்தினைக் கூறும்போது சுயவிளம்பரம் என்று எண்ணக் கூடாது என்று அன்போடு கூறிக்கொள்ளுகிறேன்.

1960-இல் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அப்போதிருந்த நகராட்சியின் ஆசிரியர் பணியில் சேர, சுமார் 400 பயிற்சி பெற்ற ஆசிரி யர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் நேர்காணல் நிகழ்வுக்கு வந்தனர். அங்கிருந்த அலுவலர், ஆரம்பப் பள்ளியில் பணிபுரிய (2), உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிய (3) ஆதி திராவிடர் நலப் பள்ளியில் பணிபுரிய விருப்பப் படுவோர் தனித்தனியே விண்ணப்பங்கள் எழுதிக் கொடுங்கள் என்றார். அதன்படியே விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அத்தனை பேருக்கும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

இப்போது, இலட்சக்கணக்கில் ஆசிரியர் பணிக்குப் பயிற்சி பெற்று 10, 15 ஆண்டுகளாக ஏங்கித் தவிக்கும் நிலை - இப்படி எல்லாத் துறைகளிலும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் ஏங்கித் தவிக்கும் நிலை.

1960-இல் இருந்த பாடங்களுக்கும் தற்போதுள்ள பாடங்களுக்கும் பல மாற்றங்கள் உண்டு. அவற்றை அடுத்து வரும் சிந்தனையாளன் இதழ் பிப்ரவரி யிலிருந்து எழுதுகிறேன்.

Pin It