முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து ‘நீட்’டுக்கு தமிழகம் தயாராகி விட்டதுபோல ஒரு கருத்துருவாக்கம் நடக்கிறது. எப்படி தமிழக மாணவர்கள் அதில் அதிக அளவு தேர்ச்சி பெற முடிந்தது என்பதை ஆராய்ந்தால் மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தடையாகவே இருக்கிறது என்ற உண்மை விளங்கும்.

‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ - கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும் ஒன்று. அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த் தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூக வலை தளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல்.

இந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டு களாகவே நீட் தேர்வில் முதுநிலைப் படிப்பில் தமிழகம்தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இவர்களில் யாருமே இளநிலைப் படிப்பில் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று வந்தவர்கள் இல்லை.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை 2016ஆம் ஆண்டு வரை தமிழக மருத்துவக் கவுன்சில் நடத்தி வந்தது. 2017 முதல் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியதால் தமிழக மாணவர்கள் அதில் கலந்து கொண்டு, தேர்வெழுதி வருகின்றனர். 2017இல் 61.3 சதவிகிதம், 2018இல் 61.7 மற்றும் 2019இல் 65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, “தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு எழுதாதவர்கள். இவர்கள் அதிகளவில் போட்டி போட்டுத் தேர்வெழுதி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இளநிலைப் படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் மட்டுமே தகுதியான மருத்துவர்கள் கிடைப்பார்கள் என்பது மாயை, நல்ல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாலே தரமான மருத்துவர்களாக உருவாக முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றனர். நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் +1 மற்றும் +2 வகுப்புக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப் பயிற்சிக் கட்டணத்தை ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களால் கட்ட முடியுமா?” என்கிறார்.

“முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் அதிகளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தமிழ் நாட்டில் இடம் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறும் வெளி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவில் சேர்ந்துள்ளனர். இதனால், தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மொழி மற்றும் இதர பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர்” என்கிறார் சமூக சமத்துவத் துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 2017இல் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 38.83 சதவிகிதம். 2018இல் தேர்ச்சி விகிதம் 39.56. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு 35ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழக மருத்துவக் கலந்தாய்வில் சி.பி.எஸ்.இ. மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர் களுமே அதிக அளவில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 3,500 மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 2017ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. 2018ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிப் பயிற்சியளித்தது. தமிழக அரசு, தேர்வின் முடிவில் தகுதி மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,337 பேர் என்று சாதனையாகச் சொல்லியது தமிழக அரசு. ஆனால், மருத்துவச் சேர்க்கைகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 8 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது என்பதே உண்மை என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

Pin It