முப்பத்தைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது அரசு விதி. இந்த விதியை மீறுவதும் அரசுதான்.

அரசுப் பள்ளிகளில் பதினோராம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

govt school girlsஅதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் கூட பாடத்திற்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தான் தொடர்கிறது.

அந்த ஒரு ஆசிரியர் பணியிடத்திற்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் மாணவர்கள் அவதியுறும் நிலை உள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் மாணவர்கள் தேர்ச்சி விழுக்காட்டில் சரிவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சில தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்கிறார்கள்.

இந்த பெற்றோர் ஆசிரியர் கழக நியமன ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்த முடியாத சூழல்தான் நிலவி வருகிறது.

கல்விப் பணி மட்டுமல்லாமல் நிர்வாக பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறையோடு பள்ளிகள் இயங்கி வருகிறது. அதிக மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் நிர்வாக செயல்பாடுகளை மேற்கொள்ள அலுவலகப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. அலுவலகப் பணிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பணியாட்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஆயிரக்கணக்கில் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தூய்மைப் பணி செய்வதற்கு போதிய பணியாளர்களை அரசு நியமனம் செய்யாததால் தூய்மை பணியாளர்களையும் நியமனம் செய்ய வேண்டிய நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளது.

இந்நிலையில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என்று ஒரு பள்ளியின் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்காவது பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமனம் செய்ய வேண்டிய சூழல்தான் அரசுப் பள்ளிகளின் நிலை.

இவ்வளவு பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டியது இந்த பெற்றோர் ஆசிரியர் கழகமே.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் உளவியல் சிக்கலை தீர்ப்பதற்காக மாணவர்கள் குறித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிகளில் பணியாளர்களை பணியமர்த்தி சம்பளம் கொடுக்கும் அமைப்பாக மாறி வருகிறது.

பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் அரசியல்வாதிகளாகவும், ஊர் பெரும் புள்ளிகளாகவுமே இருக்கிறார்கள். சில பள்ளிகளில் கால நிர்ணயம் இல்லாமல் பல ஆண்டுகளாக ஒரு சிலரே தலைவராக, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தொடர்கிறார்கள்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைமைப் பதவி கௌரவம் மிக்க பதவியாக மாற்றப்பட்டு விட்டது.

பள்ளி நிர்வாகத்தில் கல்விச் சூழலில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பங்கு அதிகரித்து வருகிறது இந்நிலையில் கழகத்திற்கு என்று நிதி ஆதாரம் இல்லாத நிலையில் மாணவர்களிடமிருந்து பள்ளி செயற்கையின்போதும் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பெறும் போதும் பெரும் கட்டணம் கட்டாய நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது.

வசூலிக்கப்படும் கட்டாய நன்கொடை பணத்திற்கு ரசீது வழங்கப்படுவதில்லை.

பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களான பெற்றோர்களுக்கு வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லை.

பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் அல்லாத பள்ளி வளர்ச்சியில் பங்கெடுப்பதாக கூறிக்கொள்ளும் உள்ளூர் அரசியல் தலைவர்களே பெரும்பாலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் நிதி வரவு செலவுகள் குறித்த நிலையைக் கேட்க தயங்கும் நிலையே உள்ளது.

கட்டாய நன்கொடை வசூல் காரணமாக ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு சில பெற்றோர்கள் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் அவல நிலையைக் காணமுடிகிறது.

தனது உரிமையை மறந்து "நன்கொடையை குறைக்க முடியாதா" என்று ஒரு சில பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கூனிக் குறுகி நிற்பதை காண முடிகிறது.

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெற்றோர்கள் வணிகம் ஆகிப்போன தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.

இங்கு படிக்கும் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் அருமை உணர்ந்து மின்சாரமற்ற, கூரைகள் சிதைந்த வீடுகளில் வசித்துக் கொண்டு, தெருவிளக்கின் வெளிச்சத்தில் படித்து சாதனை புரிந்து வருகிறார்கள்.

ஏழை மக்களின் கடைசி புகலிடமாக விளங்கும் அரசுப் பள்ளிகளை அரசு மிகவும் மெத்தனமாக நடத்துவதால் பள்ளி மேம்பாட்டுக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் எடுத்துவரும் முயற்சிகள் மாணவர்களையே பாதிப்பதாக உள்ளது.

பதினோராம் வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு சுமார் ரூபாய் 1800 வரை கட்டாய நன்கொடையாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் வசூலிக்கப்படுகிறது.

"தனியார் பள்ளிகளில் பல ஆயிரம்களை கட்டித் தானே படிக்க வைக்கிறார்கள். உங்கள் பிள்ளையை படிக்க வைக்க இந்த சிறிய தொகையையாவது கொடுக்க மாட்டீர்களா" என்று பெற்றோர்களை மிரட்டி நன்கொடை வசூலிக்கப்படுகிறது.

ஒரு சில பள்ளிகளில் பள்ளி மேம்பாட்டுக்கான பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாலும், கட்டணம் நிர்ணயம் செய்து கட்டாய நன்கொடை பெறுவது பெற்றோர்களை நசுக்கும் செயலாகும்,

சேர்க்கையின் போது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் பள்ளி வளாகத்திற்குள் அமர்ந்துகொண்டு பெற்றோர்களிடம் நன்கொடை வசூலிப்பது வன்முறையாகும்.

வசூலிக்கும் பணத்திற்கு உரிய ரசீது வழங்காதது ஊழல் நிர்வாகத்திற்கு வழிவகுக்கும்.

பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகக்குழு பெற்றோர்களை உள்ளடக்கியதாக இல்லாததாலும் பெரும்பாலும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளாக இருப்பதாலும் பெற்றோர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகத்தினருக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது.

சீருடை வழங்குவது
புத்தகம் வழங்குவது
புத்தகப்பை வழங்குவது
மடிகணினி வழங்குவது
மிதிவண்டி வழங்குவது என பள்ளி சார்ந்த நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், உடனடியாக 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற தனது நிலைப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாமல் ஆசிரியர் நியமனத்தை செய்ய வேண்டும்.

அலுவலகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களை போதிய அளவிற்கு நியமனம் செய்ய வேண்டும்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவிற்கு பெற்றோர்களையே நியமனம் செய்ய அரசாணை வெளியிட வேண்டும்.

பள்ளி மாணவர் சேர்க்கையின்போது கட்டாய நன்கொடைக்கு தடை விதிக்க வேண்டும்.

பள்ளி மாணவர் சேர்க்கையின் போது நேர்மையான செயல்பாட்டை உறுதி செய்திட பெற்றோர்கள் ஆசிரியர்கள் அல்லாத பிறர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து கொண்டு சேர்க்கைக்கு இடையூறாக இருப்பதைத் தடுக்க வேண்டும்.

நாளுக்கு நாள் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை விழுக்காடு விழுந்து வரும் நிலையில் பல்வேறு முற்போக்காளர்களின் கடும் முயற்சியிலும், பரம ஏழைகளின் கடைசிப் புகலிடமாக அரசுப் பள்ளிகள் இருப்பதாலும் மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்விக்கென தனியாக வரி வசூல் செய்யும் மத்திய மாநில அரசுகள் கல்விக்கான சேவையிலிருந்து விடுபட எண்ணுவது கண்டனத்துக்குரியதாகும்.

தமிழக அரசு மேற்கண்ட கோரிக்கைகளின் மீது உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தமிழ்வழிக் கல்வி இயக்கம், பேராவூரணி

Pin It