சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய தொழிற் சாலைகள் அமைக்கும் முன், அதனால் ஏற்படக்கூடிய  பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கலந்துரையாடல் செய்வதற்கான விதிமுறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வகுக்கப் பட்டுள்ளது.

ஆனால் நடைமுறையில் இந்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் அனைத்தும் அரசு அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கை காரணமாக கேலிக்கூத்தாக அரங் கேறுவதே வாடிக்கை. இத்தகைய கேலிக்கூத்து ஒன்று தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான கிங்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் குறித்த  கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வடசேரி சென்றுள்ளார். ஆனால் அங்கு நடந்த வன்முறை மற்றும் அதிகாரிகளின் முறையற்ற நடவடிக்கை காரணமாக கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி விட்டார். வடசேரி கிராமத்தில் கிங் கெமிகல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு பற்றிய வரலாற்றை அவர் விளக்கினார்:

வடசேரியில் நெல், தென்னை, உளுந்து, கடலை, சோளம் போன்றவை பயிர் செய்யப் படுகின்றன. இவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை நம்பியே பயிரிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டில் கிங் கெமிக்கல்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அங்கு அசெட்டிலின் உட்பட பல ரசாயனப் பொருட்கள் தயாரிக்கப் பட்டதாக கூறப் படுகிறது. இதன் பயனாக வடசேரிப்பகுதியில் இருந்த நிலத்தடி நீர் மாசுபட்டது. பயிர்களின் இயல்பும், வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிறுவனம் 1996ம் ஆண்டு மூடப்பட்டது.

இந்த ஆலை வளாகத்தில் தற்போது எரிசாராய ஆலையை அமைக்க அந்த நிறுவனத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த செய்த அறிந்த அப்பகுதி மக்கள், இந்த ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்த எரிசாராய ஆலையில் நாள் ஒன்றுக்கு 1.25 லட்சம் லிட்டர் எரிசாராயம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு சுமார் 17.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கு அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரைத்தான் அந்த ஆலை நம்பியுள்ளது. இந்த 17.5 லட்சம் லிட்டர் தண்ணீரில், 1.25 லட்சம் லிட்டர் எரிசாராயம் தயாரித்தப்பின், மீதியுள்ள சுமார் 16.25 லட்சம் லிட்டர் மாசுபட்ட தண்ணீரை அந்த ஆலை நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை

வடசேரி பகுதியில் விவசாயத்துக்கு பயன்பட வேண்டிய தண்ணீரை சுரண்டுவதுடன், அந்நீரை மாசுபடுத்தி மீண்டும் நிலத்திற்குள் செலுத்தி மண்ணையும் சூழலையும் மாசுபடுத்தும் வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் இந்த எரிசாராய ஆலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய ஆலை வளாகத்துக்குள்ளேயே அந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அப்பகுதியில் காவல்துறையும் ஏராளமான வெளியூர் ஆட்களும் வடசேரியில் குவிக்கப்பட்டனர். இதனால் உள்ளூர்வாசிகள் சற்று அச்சத்துடனே இருக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் தங்கள் ஊரின் சூழல் சீர்கெட்டுவிடும் என்பதால், ஏப்ரல் 9ந் தேதி அன்று மக்கள் பெருமளவு திரண்டனர்.

அப்போது அரிவாளோடு தோன்றிய சிலர் கண் இமைக்கும் நேரத்தில் விவசாயிகளின் கூட்டத்தில் நுழைந்து இரண்டு விவசாயிகளை சரமாரியாக வெட்டிப்போட்டுவிட்டு, அந்த ஆலைக்குள்ளேயே அடைக்கலம் புகுந்துள்ளனர்.  இந்த சந்தர்ப்பத்தை வசமாக பயன்படுத்திக் கொண்ட காவல்துறையினர் அப்பகுதி விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதனால் அந்த கருத்துக்கேட்பு கூட்டத்தை புறக்கணிப்பதாக முடிவு செய்து விட்டு வடசேரியைவிட்டு வெளியேறிவிட்டேன்!“ என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

நம்மாழ்வாரைப் போலவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த மற்ற சூழலியல் ஆர்வலர்களும் ஊரை விட்டு வெளியேறிய பின்னர், எதிர்கருத்து கூறுவதற்கு ஆளே இல்லாத நிலையில், கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி, அப்பகுதி மக்கள் அந்த ஆலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் - தமிழ்நாடு அமைப்பின் தலைவர்கள் வடசேரி கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  இந்த அறிக்கையில் திருச்சி சரக காவல்துறை ஐ.ஜி. திருஞானம், கண்காணிப்பாளர் செந்தில்வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காக ஒரு சார்பாக செயல்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காவல்துறையினர் தேவையின்றி, அத்துமீறி நடத்திய தடியடியில் கலைச்செல்வி என்ற பெண்ணின் கண்பார்வை பறிபோகும் ஆபத்தில் இருக்கிறது.

ஆலை நிர்வாகிகளின் சொந்த ஊரிலிருந்து கொண்டுவரப்பட்டு வடசேரி மக்களை தாக்கிய ரவுடிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, வடசேரியில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சுமத்தி கைது செய்துள்ளதாகவும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில் வடசேரியில் எரிசாராய ஆலை செயல்படுவதை அப்பகுதி மக்கள் வரவேற்பதாக கருத்து கேட்புக் கூட்டம் நடத்திய அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் உரிய பாதுகாப்புடன் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஏப்ரல் 9ம் தேதி நடந்த கருத்து கேட்பு கூட்டத்தின் அறிக்கையை நிறுத்தி வைத்து உத்தவிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் சூழலுக்கு எதிரான செயல்பாடுகளில் தனியார் துறையும், அரசு அமைப்புகளும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக மக்களுக்கு எதிரான செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன. சூழல் குறித்த விழிப்புணர்வும், அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகள் குறித்த அக்கறையும் பரவலாக்கப்படவேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது

Pin It