ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நாட்டு மக்களுக்கே சொந்தம். மக்களின் வாழ்விற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழலையும் தாக்காத வண்ணம் அவ்வளங்களை முறையாக வரம்போடு பயன்படுத்த வேண்டியது ஒரு மக்கள்நல அரசின் கடமை. இந்திய ஒன்றியமோ மக்களை வெளியேற்றி, மக்களின் வளங்களைப் பெருமுதலாளிகள் வரம்பின்றிக் கொள்ளையடிக்க ஏதுவான மக்கள் விரோதத் திட்டங்களையே மக்கள்நலத் திட்டங்களாகக் கண்கவர் வண்ணங்களில் விளம்பரப்படுத்தி அரங்கேற்றுகிறது. அதன் பெரும் நீட்சியாகவே வந்துள்ள ஐட்ரோகார்பன் திட்டம் நம்மை அச்சுறுத்துகிறது.

protest against frackingஉலக அளவில் இந்தியா கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்களை அதிகம் நுகரும் மூன்றாவது நாடாக உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்தே 34.4% எரிபொருள் கிடைக்கிறது. .கச்சா எண்ணெய் இறக்குமதி 2015-16இல் 78.5%இலிருந்து 81%ஆக உயர்ந்த நிலையில்,இந்தியாவின் மரபுசார் எரிபொருட்களின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில் 2022க்குள் 10% கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்துடன் இதுவரை நடைமுறையிலிருந்த புதிய துரப்பண உரிமத் திட்டத்திற்கு (NELP) பதிலாக ஐட்ரோ கார்பன் துரப்பண உரிமத் திட்டம் (HELP) மார்ச் 2016இல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியாவின் மொத்தப் படிமப் பரப்பு 3.14 மில்லியன் சதுர கிமீ.

ஐட்ரோ கார்பன் என்பது ஹைட்ரஜன், கார்பன் கொண்ட கரிமச் சேர்மங்கள் அனைத்துக்குமான பொதுப் பெயர். மீத்தேன்,-சமையல் எரிவாயு, நிலக்கரி, களிமப் பாறை வாயு, கச்சா எண்ணெய் அனைத்துமே ஐட்ரோ கார்பன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

மரபுசார் எரிபொருட்கள்: கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற --- இதுவரை பெருமளவில் பயன்பாட்டிலுள்ள எரிபொருட்கள்.

மரபுசாரா எரிபொருட்கள்: களிமப் பாறை வாயு (Shale gas), களிமப் பாறை எண்ணெய், வாயு நீர்மம், இறுகிய வாயு போன்ற --- அண்மைக் காலமாய் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் எரிபொருட்கள்.

துரப்பணத் திட்டங்கள்: இந்தியாவில் 1970கள் வரை எண்ணெய் எரிவாயு துரப்பணப் பணிகளுக்கான உரிமங்கள் தேசிய எண்ணெய் நிறுவனங்களான எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) மற்றும் இந்திய எண்ணெய் (OIL) நியமன அடிப்படையில் வழங்கப்பட்டது.

இதனால் இந்தக் காலகட்டம் நியமனக் காலம் என அழைக்கப்படுகிறது.

1980-1997 காலத்தில் ஐட்ரோகார்பன் வளங்களைக் கண்டறிவதற்காக 28 ஆய்வு மண்டலங்கள் தனியார்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன, ஐட்ரோகார்பன் கண்டறியப்பட்ட பின் அந்த மண்டலங்களில் இணைந்து செயல்பட ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் நிறுவனங்கள்உரிமம் பெற்றிருந்தன. இதில் 5 பொதுத்துறை நிறுவனங்கள், 15 தனியார் நிறுவனங்கள், 15 வெளிநாட்டு நிறுவனங்கள் என மொத்தம் 35 நிறுவனங்கள் ஈடுபட்டன.

1991பொருளாதாரச் சீர்திருத்தத்திற்குப் பிறகு நவீன தாராளமயத்தின் அடிப்படையில் எண்ணெய், எரிவாயு துரப்பணப் பணிகளைத் தனியாரிடம் தாரை வார்க்கவும், அந்நிய முதலீட்டை ஈர்க்கவும் 1997ல் புதியதுரப்பண உரிமத் திட்டம் கொண்டுவரப்பட்டது (HELP). 1999இல் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் மத்திய ஐட்ரோகார்பன் இயக்குநரகம் எண்ணெய் வயல்களை அடையாளம் செய்து, அதை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டது. 9 ஏலச்சுற்றுகளில் 254 துரப்பண மண்டலங்களுக்கு ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டன. இதில் ரிலையன்ஸ், எஸ்ஸார், ஜுபிலண்ட் போன்ற 58 தனியார் நிறுவனங்களும், 48 வெளிநட்டு நிறுவனங்கள், 11 பொதுத்துறை நிறுவனங்கள் என 117 நிறுவனங்கள் பங்கேற்றன.

புதிய துரப்பண உரிமத் திட்டத்தில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன், களிமப்பாறை வாயு,களிமப்பாறை எண்ணெய் என ஒவ்வொரு வகை ஐட்ரோகார்பன் எடுக்கவும் தனித்தனி உரிமம் பெற வேண்டும்

நியமனக் காலத்தின் 28 மண்டலங்கள், புதிய துரப்பண உரிமத் திட்டத்தின் 254 மண்டலங்கள், கண்டறிந்த வயல்கள் என மொத்தமுள்ள 311 மண்டலங்களில் தற்போது 178 மண்டலங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. புதிய துரப்பண உரிமத் திட்டத்தில் உற்பத்தி பகிர்வும் அடிப்படையில் நிறுவனங்கள் துரப்பணப் பணிகளை மேற்கொண்டன. இதன்படி தனியார் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மூலதனத்தை முழுவதும் ஈட்டிய பிறகே அரசுடன் வருவாய் பகிரப்பட்டது. இதில் தனியார் நிறுவனங்களின் முறைகேடுகளினாலும் உற்பத்தி மூலதனத்தைஊதிப்பெருக்கிக் காட்டி அதிக லாபம் பெற்றதாலும் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அந்நிய முதலீடும் அரசு எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாட்டின் படிம வளங்களை தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்கள் விருப்பம் போல் கொள்ளையடிக்கவும், விரும்பிய விலையில் விற்கவும், சந்தைபடுத்தி லாபம் பெறவும் ஏதுவாக விதிகளை மேலும் எளிமையாக்கி தளர்த்தி அந்நிய முதலீடுகளை அதிகம் ஈர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஐட்ரோகார்பன் துரப்பண உரிமத் திட்டத்திற்கு மார்ச் 2016இல் அனுமதியளிக்கப்பட்டது, அரசால் கண்டறியப்பட்ட மண்டலங்களை, வருவாய் பங்கீடு அடிப்படையில் தனியாரிடம் விற்கும் திறந்த வெளி உரிமத் திட்டம் 2017 ஜூனில் கொண்டுவரப்பட்டது.

ஐட்ரோகார்பன் துரப்பண உரிமத் திட்டத்தில் மரபுசார், மரபுசாரா எரிபொருட்கள் என பூமிக்கடியில் உள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரிப் படுகை மீத்தேன், களிமப்பாறை எண்ணெய், களிமப்பாறை வாயு, வாயு நீர்மங்கள் என எல்லா வகை ஐட்ரோகார்பன்களை எடுப்பதற்கும், தயாரிப்பதற்கும் ஒற்றை உரிமம்.பெற்றாலே போதும்.

நிறுவனர்கள் நாட்டின் எரிபொருள் வளங்கள் குறித்த இருபரிமாண, முப்பரிமாண வரைபடங்கள் கொண்ட தேசிய தகவல் தொகுப்பகத்தை (National Data Repository), முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விரும்பிய இடங்களைத் தேர்ந்தெடுத்து அரசிடம் உரிமம் பெறுவதற்கு விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் (EOI), பிறகு அது ஏலத்திற்கு விடப்படும், எந்த நிறுவனம் அதிகப் பங்கை அரசுக்கு அளிக்கிறதோ அந்த நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்படும். 

துரப்பணத் திட்டங்களால் சீரழியும் தமிழகம்:

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை ஓ.என்.ஜி.சி சரியாகக் கடைபிடிப்பதில்லை.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் அதை சரியாக அமுல்படுத்தவில்லை. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் சரியாகப் பராமரிக்கப்படாமல் நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்களிலிருந்து எண்ணெய் கசிந்து வயல் வெளிகளையும் பாசனக் கால்வாய்களையும், நிலத்தடி நீரையும் பல முறை சேதப்படுத்தியுள்ளது. இந்த நிலங்களைமறு சீரமைக்க முடியவில்லை, பல முறை முறையீடு செய்தும் மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகையே கிடைத்தது. விளைநிலங்கள், நீராதாரம் அனைத்தும் பாழாக்கப்பட்ட நிலையில் எரிவாயு கசிவு, தீப்பற்றும் அபாயம் என மக்கள் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

நெடுவாசல்:

2015 ஃபிப்ரவரியில் அரசு சிறு கண்டறிந்த வயல் உட்பட எல்லா ஐட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கியது. சிறு கண்டறிந்த வயல்களுக்கான ஏலத்தில் தமிழ்நாட்டின் நெடுவாசல் (10 ச.கிமீ), புதுச்சேரியின் காரைக்கால் (10.4 ச.கிமீ) உட்பட 31 இடங்களுக்கான ஒப்பந்தங்கள் 22 நிறுவனங்களுக்கு (15 புதிய நிறுவனங்கள்) வழங்கப்பட்டது. நெடுவாசல் திட்டத்திற்கான சூழலியல் தாக்கீது மேற்கொள்ளப்படவில்லை..காவிரி டெல்டாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி வெளியிடப்பட்ட சூழலியல் தாக்கீது அறிக்கைகளில் நெடுவாசல் இடம்பெறவேயில்லை..

ஜெம் என்ற தனியார் நிறுவனத்திடம், நெடுவாசலில் ஐட்ரோகார்பன் படிமங்களிலிருந்து எண்ணெய், எரிவாயு எடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மக்களின் கடும் போரட்டத்திற்குப் பிறகு ஜெம் நிறுவனம், திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

கதிராமங்கலம்:

2002இல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி, எண்ணெய் எடுக்கும் திட்டத்தைக் கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது. 9 இடங்களில் இதற்கான குழாய்களை அமைத்துத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அங்கிருந்துதான் குத்தாலத்திலுள்ள எண்ணெய் வயல் கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் வெடித்து விபத்து ஏற்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே அப்பகுதியின் நீராதாரம் கடுமையாகக் குறைந்து, எண்ணெய் கலந்து மாசடைவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017இல் கதிராமங்கலத்தில் விளைநிலங்களில் ஐட்ரோகார்பன்களை வெளியெடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு குழாய்களை பதித்ததை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஐட்ரோகார்பன் திட்டம்:

ஐட்ரோகார்பன் துரப்பண உரிமத் திட்டத்தின்படி நாடு முழுவதும் புதிய எண்ணெய் வளப் பகுதிகளை அடையாளமிட்டு, அங்கு ஆய்வு மற்றும் துரப்பணப் பணிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச ஏல அறிவிப்பு, ஐட்ரோகார்பன் இயக்குநரகம் (DGH) மூலமாக கடந்த ஜனவரி 19ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழகத்தின் மூன்று மண்டலங்கள் உட்பட மொத்தம் 59,282 சதுர கி.மீ. பரப்புக் கொண்ட 55 சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் முதல்கட்டமாக 1000-க்கும் மேற்பட்ட கிணறுகள் அமைக்க ஏலம் விடப்பட்டது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தைக் காவிரி வடிநிலத்தைச் சேர்ந்த மூன்று மண்டலங்களில் செயல்படுத்தவுள்ளனர்.

1) முதல் மண்டலத்தில், குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரையிலான 731 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில்ஐட்ரோ கார்பன் எடுப்பதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு வழங்கப் பட்டுள்ளது.

2) மரக்காணம் முதல் கடலூர் வரையிலும்

3) பரங்கிப்பேட்டை முதல் வேதாரண்யம் வரையிலுமாக இரண்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2, 574 சதுர கிலோ மீட்டர் கடற்பரப்பைக் கொண்ட இந்த மண்டலங்களுக்குள் ஐட்ரோகார்பன் எடுக்கும் உரிமம் வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது

.      இத்திட்டத்தால் விவசாயத்தையும், மீன்பிடிப்பையும் மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகும். இதனால் விளை நிலங்களும், நிலத்தடி நீரும் நஞ்சாகி வேளாண் மண்டலங்கள் பாலைவனமாகி கடல்வளம் அழியும் அபாயம் உள்ளது.

அபாயகரமான நீரழுத்த விரிசல் முறை:

dangers of frackingமரபுசார் எரிபொருட்களான எண்ணெய், எரிவாயு தயாரிப்பிற்கு 1500 முதல் 6000 மீ துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப்படும். பூமிக்கு மிக ஆழத்திலுள்ள மரபுசாரா எரி பொருட்களான படிம மீத்தேன், களிமப் பாறை வாயு, களிமப் பாறை எண்ணெய், வாயு நீர்மங்கள், இறுகிய வாயு ஆகியவை அபாயகரமான நீரழுத்த விரிசல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இது பூமிக்குள் ஒரு பூகம்பத்தை- நில அதிர்வை ஏற்படுத்தும் முறை. நீரழுத்த விரிசல் முறையில் 10 ஆயிரம் மீட்டருக்கும் கீழே பூமிக்குள் ஆழமாக துளையிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரைதுளை போடப்படும். பின்னர் பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண்துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். பின்பு பூமியின் மேலிருந்து மிகுந்த அழுத்தத்தில் வேதி நுண் துகள்கள் கலந்த நீர் துளைக்குள் செலுத்தப்படும். அவ்வாறு செலுத்தும்போது பக்கவாட்டு துளைகளில் செல்லும் நீரானது அந்த துளைகளின் மேலும் கீழும் விரிசல்களை உண்டாக்கும். அந்த விரிசல்கள் வழியே அடைபட்டு கிடந்த எரிவாயு நீரில் ஒன்றாகக் கலக்கும். அவற்றை உறிஞ்சி பூமியின் மேல்பரப்புக்கு எடுத்து வந்து நீர் தனியாக, வாயு தனியாக சுத்திகரிக்கப்பட்டு பிரித்து எடுக்கப்படும். ஒரு முறை ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் செய்ய 15 கோடி லிட்டரிலிருந்து 20 கோடி லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.

நீரழுத்த விரிசலுக்கு உபயோகிக்கும் திரவத்தில் 0.5 - 2% வரை டன் கணக்கில் எதிலின் கிளைகால், மெதனால், ஐட்ரோ குளோரிக் அமிலம், ஃபார்மால்டிஹைடு, அக்ரலமைடு, உயிர்க் கொல்லிகள் என சுமார் 600 வகையான ரசாயனங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அதன் கழிவுநீரில் ஆர்சனிக் காரீயம், பாதரசம், கேட்மியம், குரோமியம், பேரியம் போன்ற உலோகங்களும், ஸ்ட்ரான்சியம், யுரேனியம், ரேடியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களும் காணப்படுகின்றன.

இவை புற்றுநோய், நரம்பியல் குறைபாடு, ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது. குழந்தைப் பிறப்பையும், வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கிறது.

நில மட்டத்தில் ஓசோன் அதிகம் வெளிப்படுத்தப்படுவதால் தாவரங்களின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. நிலம், நீர், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகிறது.

இதனால் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. பாறை அடுக்குகளிடையே உள்ள நீர் எண்ணெய், வாயுக்களை நீக்கும் போது அழுத்தம் குறைந்து, நிலச்சரிவையும், நிலநடுக்கத்தையும், ஏற்படுத்திக் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது.

நிலத்தடி நீரிலும், வளி மண்டலத்திலும் மீத்தேன் கலக்கும் அபாயம் உள்ளது.

மீத்தேன் சிறிய அளவில் வெளிவந்தால் கூட பெருமளவில் உலக வெப்பமயமாதலை அதிகமாக்கும் .கார்பன்டை ஆக்ஸைடை விட 21 மடங்கு அதிகமாகப் பசுமைக் குடில் விளைவை ஏற்படுத்தும். மீத்தேன் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடை விட 220 மடங்கு குறைவாகவே உள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட பாரிஸ் ஒப்பந்த நியதிகளுக்கு முற்றிலும் புறம்பானது.

பாரிஸ் ஒப்பந்தம் :இந்த நூற்றாண்டிற்குள் உலகின் வெப்பத்தைத் தொழில் மயமாக்கலுக்கு முன் இருந்த வெப்பத்தை விட 2 பாகைக்குள் கட்டுக்குள் வைக்கவேண்டும்.

பேரழிவை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய இந்தத் தொழில்நுட்பத்தை எதிர்த்து உலகெங்கும் மக்கள் போராட்டம்

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்பி மற்றும் மிஸ்ஸோரி நீர்ப்படுகைகளின் கரையோரம் வசிக்கும் அமெரிக்கவாழ் பழங்குடியின மக்கள்.அந்த பகுதிகளில், டகோடா பைப்லைன் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நீரழுத்த விரிசலுக்குத் தடை:

ஃபிரான்ஸ், பல்கேரியா, இத்தாலி, அயர்லாந்து, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்திலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நியூயார்க், மேரிலாந்திலும் தடைசெய்ப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, ஸ்பெயினின் சில பகுதிகளிலும், இந்த முறை தடை செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இரண்டு திட்டங்கள் கைவிடப்பட்டன.

நியூஜெர்சி இத்திட்டத்தின் கழிவுகளைத் தன் பகுதிக்குள் விடாமல் தடை செய்தது.

நிலநடுக்க அபாயம்:

நீரழுத்த விரிசலால் ஐக்கிய முடியரசில் 2 இடங்களிலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒகலஹாமோவில் அர்க்காண்சஸ் மாகாணத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒகியோவில் மட்டும் ஒரு மாதத்தில் 77 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இது தொடர்பான ஒரு விபத்து நடந்து கொண்டுதான் உள்ளது. மார்செல்ஸில் பெருமளவில் இயற்கை எரிவாயு உள்ளதால் இயற்கை வேளாண்ப் பகுதிகளான அவை தொடர்ந்து நாசமாக்கப்பட்டு வருகிறது.

பூமிக்கு மேலே மீத்தேன் வாயுவைத் தயாரிக்கப் பல்வேறு வழிகள் உள்ள போது பூமிக்குள் பூகம்ப0000ங்களை ஏற்படுத்தும் நீரழுத்த விரிசல் ஒரு காலாவதியான தொழில்நுட்பம். மேலும் காலநிலை மாற்றத்தைத் தடுக்க புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் வளங்களுக்கான புதியதொழில்நுட்பங்களே இன்றைய காலத்திற்குகந்த தொழில்நுட்பங்களாக அமையும். பேரழிவை ஏற்படுத்தும் இத்திட்டங்களுக்கு விடைகொடுத்து நம் பூமித் தாயைக் காப்போம்.

- சமந்தா

Pin It