“கறுப்பினத் தலைவரே வருக! வருக!” என்ற தலைப்பில் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி தினமணி நாளேட்டில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்தியர் ஒவ்வொருவரும் ஒபாமாவை வரவேற்க வேண்டும் என்பதாக அக்கட்டுரை முடிக்கப்பட்டிருந்தது. வேறு எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவில் கறுப்பின மக்கள் வெள்ளை இனத்தவரால் வட அமெரிக்காவில் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பது வரலாற்று உண்மை.
கென்யா நாட்டினரான கறுப்பினத் தந்தைக்கும், அமெரிக்காவின் வெள்ளையினத் தாய்க்கும் பிறந்தவர் பாரக் ஒபாமா. தோற்றத்தால் ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பு இனத்தவர்போல் ஒபாமா இருக்கிறார். கறுப்பினத் தோற்றங்கொண்ட ஒபாமா வட அமெரிக்காவின் குடி அரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால், அவர் உலகின் ஒரே வல்லரசாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டின் ஆட்சித் தலைவர். இவருக்கு முன் அமெரிக்காவின் குடிஅரசு தலைவர்களாக இருந்த ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் முதலானவர்களைப் போலவே அமெரிக்காவின் ஏகாதிபத்தியக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார் என்கிற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.
பாரக் ஒபாமா நவம்பர் மாதம் இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா. சப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆசிய சனநாயக நாடுகளில் சுற்றுப்பயணம் என்ற பெயரிடப்பட்ட இப்பயணத்திற்காக அமெரிக்காவிலிருந்து புறப்படுமுன் “அமெரிக்காவின் ஏற்றமதி குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், இறக்குமதி அதிகமாகி வருகிறது. எனவே, எற்றுமதியைப் பெருக்குவதும் அதன்மூலம் அமெரிக்காவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் இப்பயணத்தின் நோக்கம்” என்று ஒபாமா கூறினார். இதற்காக ஒபாமாவின் பயணக் குழுவில் சிறிதும் பெரியதுமான 200 பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை இயக்குநர்கள் இடம்பெற்றிருந்தனர்.
ஒபாமா இந்தியாவில் இருந்தபொழுது 1,000 கோடி டாலர் (உருபா 46,000 கோடி) மதிப்புள்ள பொருள்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனால் அமெரிக்காவில் 53,670 பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்று ஒபாமா கூறுகிறார்.
இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் சி.17 குளோப் மாஸ்டர் (C.17 Globe Master) எனப்படும் 10 விமானங்களை 5800 கோடி டாலர் மதிப்பில் அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய விமானப்படைக்குக் குண்டு வீசக்கூடிய 126 போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளன. 2006இல் சி17 குளோப் மாஸ்டர் விமானங்களை அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன், அமெரிக்க இராணுவத்திற்காக வாங்குவதில்லையென்று முடிவு செய்தது. ஆனால், இந்த விமானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் நெருக்குதலால் இவற்றைத் தயாரிக்க அமெரிக்க அரசு அனுமதித்தது. இவற்றை இந்தியா, தென்கொரியா, இந்தோனேசியாவில் விற்பதற்கான ஒப்பந்தம் செய்வது ஒபாமா பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
2009 சூலையில் “பயன்படுத்துவோரைக் கண்காணிக்கும் ஒப்பந்தம்” (End user monitoring agreement) என்பதை இந்தியா அமெரிக்காவுடன் செய்துகொண்டது. இதன்படி அமெரிக்காவிலிருந்து வாங்கும் ஆயுதங்களின் வடிவமைப்பை இந்தியா மாற்றக்கூடாது. இவற்றிற்கான உதிரிப் பாகங்களை இந்தியா தயாரிக்கக் கூடாது. அமெரிக்காவிடம்தான் இவற்றை வாங்க வேண்டும். இந்த ஒப்பந்தப்படி அமெரிக்க ஆய்வாளர்கள் இந்தியாவில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை ஆய்வு செய்யலாம்.
மேலும், Logistical Support Agreement (LSA), Communications Interoperablity and Security Memorandum of Agreement (CISMoA) எனப்படும் இரண்டு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அப்போதுதான் இரண்டு நாடுகளுக்குமிடையில் ஆழமான நட்புறவு வளரும் என்று அமெரிக்கா சொல்கிறது. இவ்விரண்டு ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பமிடுவதால், முகாமையான இடங்களில் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைக்கப்
படும். அமெரிக்காவில் மிகப்பெரிய தொழில், ஆயுத உற்பத்தியாகும். அதிக இலாபம் தரும் தொழிலாகவும் அது இருக்கிறது. எனவே, அமெரிக்க ஏகாதிபத்திய அரசு மூலம் மூன்றாம் உலக நாடுகள் ஆயுதங்களை வாங்குமாறு ஆயுத உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன. இதனால் உலகில் உள்நாட்டுப் போர்களும், அண்டை நாடுகளுடனான போர்களும் அதிகமாகிவருகின்றன.
2006இல் புஷ் இந்தியாவிற்கு வந்தபோது வேளாண்மையில் அமெரிக்காவுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்திய வேளாண்மையை மேம்படுத்துவது என்ற பெயரால் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் வேளாண் இடுபொருள்கள் உற்பத்தியிலும், தானியக் கொள்முதல் செய்வதிலும் மொத்தச் சில்லறை வணிகத்திலும் அனுமதிப்பட்டன. தற்போது ஒபாமா வருகையின்போது வேளாண்மை ஒப்பந்தம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பசுமை மாறாப் புரட்சி (Evergreen Revolution) என்று பெயரிடப்பெற்றுள்ளது.
வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல் அவற்றை ஆய்வு செய்தல், செயல்படுத்துதல் மூலம் உணவுப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல்; வானிலை மற்றும் பயிர் சாகுபடி தொடர்பான முன்னறிவிப்புகள் செய்தல்; விளைபொருள்களை உண்ணும் பொருள்களாக மாற்றும் செய்முறைகளை மேம்படுத்துதல், நீர்போன்ற இயற்கை ஆதாரங்களைச் சிக்கனமான முறையில் பயன்படுத்துதல்; அறுவடைக்குப்பின் விளைபொருள்களைச் சீராகப் பாதுகாத்தல்; சந்தைப்படுத்தல் நிறுவனங்களை மேம்படுத்தல் முதலானவற்றில் அமெரிக்கா இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது. மான்சான்டோ, வால்மார்ட் போன்ற அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் இந்திய வேளாண்மையில் மேலும் அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழிசெய்கிறது.
8.11.2010 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் ஒபாமா உரையாற்றினார். அப்போது அய்க்கிய நாடுகள் மன்றத்தில் பாதுகாப்பு அவையில் நிலையான உறுப்பினராக வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கையை முழுமையாக அமெரிக்கா ஆதரிக்கும் என்று அறிவித்தார். தெற்காசியாவில் தானொரு பெரும் வல்லரசாக வளர்ந்திருப்பதற்கான நற்சான்றாக அது இருக்கும் என்று இந்தியா கருதுகிறது. அதனால் எந்த நாட்டிற்கு இந்தியப் பிரதமர் சென்றாலும் பாதுகாப்பு அவையில் இந்தியா நிலையான உறுப்பினராவதை ஆதரிக்க வேண்டும் என்று அந்நாட்டிடம் கோருகிறார்.
அண்மையில் வெளியிடப்பட்ட 2010 ஆண்டுக்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் (ழனுசு) 169 நாடுகளில் இந்தியா 119ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது. அதாவது மனித மேம்பாட்டு வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள 50 நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. விழுக்காட்டின்படிக் கணக்கிட்டாலும், மக்கள் எண்ணிக்கையின்படிப் பார்த்தாலும், உலகில் வறுமையில், எழுத்தறிவின்மையில், ஊட்டச்சத்துக் குறைவில், நோய்களுக்கு ஆளாவோர் என்பதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இதையெல்லாம் மூடிமறைக்க வல்லரசு என்கிற முகமூடியை மாட்டிக்கொள்ள முயல்கிறது இந்திய அரசு.
தன்னுடைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளில் நிலையான கூட்டாளியாக இருக்கும் சப்பான் பாதுகாப்பு அவையில் நிலையான உறுப்பினராவதை முன்பு அமெரிக்கா தீவிரமாக ஆதரித்தது. அதன்பின் பிரேசிலை இதுபோல் ஆதரித்தது. பிரேசில் நடுநிலையான அயலுறவுக் கொள்கையை 2000 முதல் பின்பற்றத் தொடங்கியதால், பிரேசிலை ஆதரிப்பதை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் ஒபாமாவின் அறிவிப்பு இந்தியாவின் வெகு மக்களை ஏமாற்றுவதற்கான ஓர் அரசியல் உத்தியேயாகும்.
இந்தியா, அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையை அடியொற்றி நடந்தால்தான் பாதுகாப்பு அவையில் நிலையான இடம் என்கிற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என்பதை ஒபாமா மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானும், மியான்மரும் சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றன. எனவே, அந்நாடுகளைத் தனிமைப்படுத்த வேண்டும். மியான்மரில் நவம்பர் முதல் கிழமையில் நடந்த தேர்தல் போலியானது என்று ஒபாமா கூறினார்.
ஈரானுடனும், மியான்மருடனும், இந்தியா நீண்டகாலமாக நல்லுறவைப் பேணிவருகிறது. மியான்மரில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கருத்துரைத்தால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்காகப் போராடிவரும் போராளிகளுக்கு மியான்மர் அரசு ஆயுதமும் பயிற்சியும் அளித்து நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று இந்தியா கருதுகிறது. அதனால்தான் நவம்பரில் மியான்மரில் நடந்த தேர்தல்பற்றி இந்திய அரசு கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால், இத்தேர்தல் முடிவைச் சீனா வரவேற்றுள்ளது.
இந்தியா, ஈரானுடனான பொருளாதார உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு அவையும், அமெரிக்காவும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுடன் கூடுதலாக இந்தியா ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்கா இந்தியாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. அமெரிக்காவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து ரிலையன்ஸ் போன்ற பல பெரிய இந்திய நிறுவனங்கள் ஈரானுடனான வணிகத்தை நிறுத்திக்கொண்டன. முன்பு அமெரிக்காவின் அயலுறவு அமைச்சராக இருந்த கண்டலிசாரைஸ், ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்திலிருந்து இந்தியா விலக வேண்டும் என்று சொன்னார். அமெரிக்க - இந்திய அணு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு இது ஒரு நிபந்தனைபோல் விதிக்கப்பட்டது. உடனே மன்மோகன்சிங் அரசு இத்திட்டத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மன்மோகன்சிங் ஈரான் நாட்டுக்குப் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அமெரிக்க எசமான் ஒபாமா இந்தியாவுக்கு வருவதற்குமுன் ஈரானுக்குச் சென்றால் அதை அமெரிக்கா விரும்பாது எனக் கருதி ஈரான் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார். அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று. ஆனால், ஒபாமா நிருவாகத்தின் கருத்தைப் புறக்கணித்துவிட்டு, தென்கொரியா ஈரானுடன் வலிமையான பொளாதார உறவு கொண்டுள்ளது.
சீனாவுக்கு எதிராகச் செயல்படுவதற்காகக் கிழக்காசிய நாடுகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதும் ஒபாமா பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இந்த சீன எதிர்ப்பு அணிக்கு இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. சீனாவைச் சீண்டிப்பார்ப்பதற்காகவே இந்தியாவுக்குப் பாதுகாப்பு அவையில் நிலையான இடம் பெறுவதற்கான ஆதரவை இந்திய நாடாளுமன்றத்தில் ஒபாமா அறிவித்தார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துரைத்துள்ளனர். இந்தியாவுக்கோ, அல்லது வேறொரு நாட்டுக்கோ பாதுகாப்பு அவையில் நிலையான இடம் தந்தாலும், தற்போது நிலையாக உள்ள ஐந்து நாடுகளும் தமக்குள்ள இரத்து செய்யும் அதிகாரத்தை (வீட்டோ) புதியதாகச் சேர்த்துக்கொள்ளப்படும் நாடுகளுக்கு வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.
மேலும், அணுசக்திப் பொருள்கள் வழங்கும் நாடுகள் குழு (NSG), ஏவுகணைத் தொழில்நுட்பக்கட்டுப்பாட்டுக்குழு, ஆஸ்திரேலியா குழு என்பனவற்றில் இந்தியா உறுப்பு நாடாவதற்கு அமெரிக்கா முன்முயற்சி மேற்கொள்ளும் என்று ஒபாமா இந்திய அரசுக்கு உறுதியளித்தார். இந்த வாக்குறுதியும் எளிதில் நிறைவேறாத வகையில் இக்குழுக்களின் சட்ட விதிகள் உள்ளன. எல்லா நாடுகளும் ஒருமனதாக ஒத்துக்கொண்டால்தான் புதிய நாட்டை உறுப்பினராகச் சேர்க்க முடியும். எனவே, அமெரிக்கா ஆதரிப்பதால்மட்டுமே இவற்றில் எளிதில் இந்தியா உறுப்பினராகிவிடமுடியாது.
“பயங்கரவாதிகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்” என்று ஒபாமா கூறினார். பாகிஸ்தான் தனிநாடானது முதல், சோவியத்து நாடும், சீனாவும், இந்தியாவும், ஆப்கனிஸ்தானும் பாகிஸ்தான் எல்லைப்புற நாடுகளாக அமைந்துள்ளதை மய்யப்படுத்தித் தன் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவதற்காக பாகிஸ்தானில் தொடர்ந்து இராணுவ ஆட்சியே இருக்குமாறு அமெரிக்கா செய்தது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் உருவாவதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும். ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று இப்போது ஒபாமா பசப்புகிறார். இந்தியாவிலிருக்கும்போது இப்படிப் பேசும் ஒபாமா பாகிஸ்தானுக்குச் செல்லும்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவார்.இந்தியாவின் எதிர்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஏராளமான ஆயுத உதவிகள் செய்து வருகிறது.
மும்பைத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒபாமா சொல்கிறார். ஆனால், 2001 செப்டம்பர் 11 அன்று நியுயார்க் நகரின் உலக வணிக இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டபின், பாகிஸ்தானில் உளவு வேலை செய்ய ஹெட்லி என்பவரை அமெரிக்கா அனுப்பியது. இவர்தான் மும்பைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர். இதை இவரே ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால் அமெரிக்கக் குடிமகனான ஹெட்லி பற்றிய முழுமையான தகவல்களை ஒபாமா நிருவாகம் இந்தியாவுக்கு அளிக்க மறுத்துவருகிறது. ஹெட்லி விவகாரம் குறித்து ஒபாமாவும் மன்மோகன்சிங்கும் பேசினர் என்று செய்தி வெளிவந்துள்ளது. இதேபோன்று போபால் நச்சு வாயு கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்கத் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவில் விசாரணைக்கு உட்படுத்திட அமெரிக்கா தொடர்ந்து மறுத்துவருகிறது. போபால் நகரில் பல ஆயிரம் மக்களின் கொடிய சாவுக்குக் காரணமான ஆண்டர்சன்பற்றி மன்மோகன் சிங் ஒபாமாவிடம் பேசவில்லை.
உலகில் சனநாயகம் காக்கப்படவும், பேணப்படவும் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என்று 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் புஷ்- மன்மோகன்சிங் கூட்டறிக்கைகள் முரசறைந்தன. இதனடிப்படையில் தெரிந்தும் தெரியாமலும் இந்தியா அமெரிக்காவின் சொல்படி பல இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது. இரு நாடுகளின் கூட்டுப்படை ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன. இந்தியப் படை என்பது அமெரிக்காவின் செல்வாக்கின்கீழ் சென்றுகொண்டிருக்கின்றது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின், அமெரிக்க ஏகாதிபத்திய அரசு உலக நாடுகள் பலவற்றில் சனநாயக அழிப்பு வேலைகளில் சி.ஐ.ஏ. மூலமும், தன் இராணுவம் மூலமும் ஈடுபட்டு வருகிறது. இந்த நவம்பர் மாதம் ஒபாமா இந்தோனேசியாவிற்குச் சென்றார். 1965இல் இந்தோனிசிய நாட்டில் அமெரிக்க சி.ஐ.ஏ.வின் சூழ்ச்சித் திட்டத்தின்படி ஐந்து இலட்சம் கம்யூனிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். 1973இல் தென் அமெரிக்க நாடான சிலியில் ஆட்சிக்கு வந்த அலன்டே சி.ஐ.ஏ. வால் படுகொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் பொம்மை இராணுவக் கொடுங்கோல் ஆட்சி நிறுவப்பட்டது.
9/11 தாக்குதலுக்குப்பின், உலகில் எந்த ஒருவரையும், ஒரு குழுவையும், ஒரு நாட்டையும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறித் தாக்குதல் நடத்தும் உரிமை அமெரிக்க அரசுக்கு இருக்கிறது என்று புஷ் அறிவித்தார். இதேபோன்று 2010 நவம்பரில் ஒபாமா நிருவாகம் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில், “அமெரிக்க நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கருதப்படும் எவரையும், உலகில் எந்த மூலையில் இருந்தாலும், அவரைக் கொல்வதற்கான உரிமை அமெரிக்காவுக்கு இருக்கிறது. இதில் மறு ஆய்வுக்கே இடமில்லை”என்று தெரிவித்துள்ளது. எனவே, யார் குடியரசு தலைவராக இருந்தாலும் அமெரிக்கா, ஓர் ஏகாதிபத்திய வல்லாதிக்க அரசாகவே செயல்படும்.
ஈராக்கில் 2003 முதல் 2009 வரை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 1,09,032 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பொதுமக்கள் 66,081 பேர். எதிரிகள் என்று அமெரிக்கப்படையால் முத்திரை குத்தப்பட்டவர்கள் 23,984. சதாம் உசேனின் இராணுவத்தினர் 15,196. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினர் 3771. 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா குண்டுமழை பொழிந்து வருகிறது. எனவே, உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்க- சனநாயகத்தைக் காக்க என்ற பெயரில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவதற்காகவேயாகும். இதில் இந்தியா, அமெரிக்காவின் முதன்மையான கூட்டாளியாகச் செயல்பட்டுவருவது, இந்திய இறையாண்மையையும், சனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைப்பதாகும்.
ஒபாமாவின் இந்திய வருகை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் வளமும் வலிமையும் சேர்ப்பதாகவே அமைந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பதில் பெருமிதம் கொள்ளும் போக்கு இந்தியாவில் மேலும் வளர்ந்துள்ளது.