முந்தைய பகுதிகள்:
1. வேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடைகள் ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் சட்டம் - 2019
2. மோடி - எடப்பாடியின் திட்டமல்ல... கார்ப்பரேட்டுகளின் செயல்திட்டம்!
“ஒப்பந்த விவசாய முறையினால், நமது விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் வளரும். வேளாண் உற்பத்தி பெருகும். இதன் மூலம் கிராமப்புற வறுமையும், ஊட்டச்சத்து குறைபாடும் ஒழியும்.” என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
பசுமைப் புரட்சி காலத்தில் அறிமுகமான வீரியரக விதை, ரசாயண உரம் மருந்துகள் மூலமே இந்தியாவில் உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே உணவுப் பொருள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாகவும், பிற வேளாண் பொருள்களின் உற்பத்தியும் அதிகரித்து வருவதாகவும் அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் இப்போதும் 40% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள்; உலகளாவிய பசி அட்டவணையில் உள்ள 120 நாடுகளில் இந்தியா 16-வது இடத்தில் உள்ளது!
அமெரிக்க வேளாண்மைத் துறையின் புள்ளி விவரங்களின் படியே, அமெரிக்காவின் மொத்த விவசாய உற்பத்தியில் 48% மட்டுமே ஒப்பந்த விவசாயம் மூலமாக எட்டப்படுகிறது. மீதி 52% விவசாய உற்பத்தி வழக்கமான முறையில், ஒப்பந்த விவசாயத்திற்கு வெளியில்தான் நடக்கிறது.
ஆனால், “உலக வல்லரசான அமெரிக்காவில் சுமார் 5 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். 20% அமெரிக்கக் குழந்தைகள் பட்டினிச் சூழலில் வாழ்கிறார்கள்” என bread for the world என்ற அமைப்பு கூறுகிறது!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒப்பந்த விவசாயத்தின் பாதகங்களைப் பட்டியலிடும் எர்கன் ரெபர், “இது பெரும்பாலும் ஏற்றுமதியையும், உலகச் சந்தையையும் சார்ந்திருக்கிறது. உள்நாட்டு உணவுத் தேவை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு இவை எந்தப் பங்களிப்பும் செய்வதில்லை” என்பதை வலியுறுத்துகிறார்.
எனவே ஒப்பந்த விவசாயத்தால் உணவு உற்பத்தி அதிகரிக்கப் போகிறது என்பதும், வறுமை ஒழிந்து விடும் என்பதும் கார்ப்பரேட்டுகளின் வடிகட்டிய பொய்! மேலும், அதிக உற்பத்தி என்பது மட்டும் வறுமையை ஒழித்து விடாது. அதிக உற்பத்தியின் பலன்களை அனுபவிப்பது கார்ப்பரேட்டுகளா? உழைப்பாளி மக்களா? என்பதில்தான் வறுமை ஒழிப்பிற்கான தீர்வு இருக்கிறது!
சாத்தானை வேதம் படிக்கச் சொல்லும் பண்டிதர்கள்!
சில நடுநிலை அறிவுஜீவிகள், “பலம் பொருந்திய கார்பரேட் நிறுவனங்கள், பலவீனமான சிறு விவசாயிகளிடம் ஒப்பந்தங்களை செய்து கொள்கின்றன. இதில் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பின்தங்கிய நாடுகளின் அரசுகளுக்கு ஆலோசனை கூறுகிறார்கள்!
அதாவது, “ஒப்பந்த விவசாயத்தை முறைப்படுத்தி பராமரிக்க வேண்டும்! ஒப்பந்த நிறுவனங்களின் விலை நிர்ணயம், பணப் பட்டுவாடா ஆகியவற்றைக் கண்காணித்து, தரச் சான்றிதழ் கொடுக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்! இது விவசாயிகள் சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கு உதவும்! விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான நிபந்தனைகளை ஒப்பந்த விதிகளில் சேர்க்க வேண்டும்!” என்று ஐடியாக்களை அள்ளி வீசுகிறார்கள்.
கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையை வாங்கித் தர முடியாத அரசு...
ரேஷன் அரிசியைக் கூட சரியான எடையில் வழங்க முடியாத அரசு...
கார்ப்பரேட்டுகளிடம் இருந்து மட்டும் விவசாயிகளுக்கு பலனைப் பெற்றுத் தந்து விடுமா?
16 வயதினிலே சப்பாணிக்கு பேண்ட் - சட்டை போட்டு ‘கோபாலகிருஷ்ணன்’ ஆக்கப் பார்க்கிறார்கள் இந்த அறிவுஜீவிகள்!
விவசாயத்தை ஒழிப்பதே வேளாண்துறையின் கொள்கை!
ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளின் விவசாய வளர்ச்சித் திட்டங்களின் இலக்கு, எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதற்கு உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும், சில பரிந்துரைகளை 2003-ல் இருந்தே முன்வைத்து வருகின்றன.
1) விவசாயத்தை நம்பி வாழும் கிராமப்புற மக்கள் தொகையை வெகுவாகக் குறைப்பது,
2) நகர்ப்புற தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான உழைப்பாளர்களை கிராமங்களில் இருந்து அதிகளவில் தயார்படுத்துவது,
3) நகர்ப்புற மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு அருகிலிருக்கும் கிராமங்களை நகரங்களோடு இணைக்கும் சாலைகள், போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவது,
4) நகரங்களில் வேலை தேடிக் குவியும் மக்களுக்கான குடியிருப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவது,
5) நகர்ப்பகுதிக்கு தொலைதூரத்திலுள்ள கிராமங்களில் விவசாயம் மற்றும் விவசாயமல்லாத வேலைவாய்ப்புத் திட்டங்களை அமுல்படுத்துவது.
ஆகியவை அதில் முக்கிய அம்சங்களாக வலியுறுத்தப் படுகிறது!
உலக வர்த்தகக் கழகத்தின் மேற்கண்ட பரிந்துரைகள்தான் இந்திய வேளாண்மைத் துறையின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. WTO-ல் இணைந்த பிறகு, நமது வேளாண்மைத் துறையில் நடைமுறைப் படுத்தப்பட்ட புதிய கொள்கைகளின் விளைவுகளே இதற்கு சாட்சியங்களாக உள்ளன.
மத்திய வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத் துறை 2015-ல் வெளியிட்ட ஒரு அறிக்கை,
“சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் எண்ணிக்கை 1951-ல் 72% ஆக இருந்தது. இது 2011-ல் 45% ஆக குறைந்து விட்டது! அதே சமயம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 28%-லிருந்து 56% ஆக அதிகரித்துள்ளது! தகுதியுள்ள கிராமப்புற தொழிலாளர்களில் 53% பேருக்கு மட்டுமே வருடந்தோறும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது!” என்கிறது.
GST கவுன்சிலின் உறுப்பினரும், மத்திய பட்ஜெட் மேலாண்மைக் குழுவின் உறுப்பினருமான நீல்சந்த் மிஸ்ரா, “ஒவ்வொரு ஆண்டும் 60 - 70 லட்சம் பேர் கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டும்” என்று அறிவிக்கிறார். ஆனால் “ஏற்கனவே ஒரு கோடி பேர்கள் வரை வெளியேறி வருகிறார்கள்” என்று தன்னார்வக் குழுக்கள் மதிப்பிடுகின்றன!
“விவசாயிகளின் மொத்த வருமானத்தில், விவசாயத்திலிருந்து 60% வருமானமும், விவசாயமல்லாத பிற வழிகளில் 40% வருமானமும் வருகிறது” என்று மத்திய அரசின் ‘அசோக் தல்வாய்’ கமிட்டி கூறுகிறது!
உலக வர்த்தகக் கழகத்தின் பரிந்துரைகளை இந்திய வேளாண்மைத் துறையில் அமுல்படுத்தியதால் ஏற்பட்ட ‘முன்னேற்றம்’ இதுதான்! இப்போது அறிமுகமாகியுள்ள ஒப்பந்த விவசாயச் சட்டம் என்பது, இந்த நிலைமையை மேலும் வேகப்படுத்துவதற்கான ஒரு கருவி... அவ்வளவுதான்!
நெருக்கடி தீரவில்லை, தீவிரமடைகிறது!
வளர்ந்த நாடுகளில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டதையடுத்து, நவீன தொழில்துறை எழுச்சி கண்டது. இதன் தாக்கம் விவசாயத் துறையிலும் எதிரொலித்தது. நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் விவசாயத்தை நம்பி வாழ்ந்த விவசாயக் கூலிகள் வேலையிழந்தனர். புதிய விவசாய முறைக்கு ஈடு கொடுக்க முடியாத சிறுவிவசாயிகளும் தங்களின் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் விளைவாக, விவசாயத்திலிருந்து வெளியேறிய மேற்கண்ட இரு பிரிவினரும் வேலைவாய்ப்பைத் தேடி நகரங்களில் குவியத் தொடங்கினர். அங்கு ஏற்கனவே தயார்நிலையில் இருந்த தொழில் துறையானது, இவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து தக்க வைத்துக் கொண்டது. மறுபுறத்தில், குறைந்த மக்கள் தொகையினர் மட்டும் ஈடுபடும் நவீன பண்ணைத் தொழிலாக விவசாயத் துறை நீடித்து வருகிறது!
இது தொழில் துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகளின், இயல்பான சமூக வளர்ச்சிப் போக்கால் ஏற்பட்ட முன்னேற்றமாகும். இந்த முன்னேறிய நாடுகளின் அனுபவத்தை அப்படியே எந்திரகதியாக காப்பியடித்து, இதனை பின்தங்கிய, வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கான வழிமுறையாகப் பரிந்துரைத்து உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும், அமுல்படுத்தி வருகின்றன! விவசாயத்தை விட்டு வெளியேறி, கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வதை வளர்ச்சி, முன்னேற்றத்தின் ஒரு அடையாளமாக இவர்கள் பரப்புகிறார்கள். ஆனால் நடைமுறையில் இது எதிர்மறையான சமூக பாதிப்புகளையே ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் வருடத்திற்கு 60 லட்சம் முதல் ஒரு கோடி பேர்கள், விவசாயத்திலிருந்து வெளியேறி நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். ஆனால், நகரங்களில் ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. மீதியுள்ளவர்கள் வேலையில்லாத அன்றாடங் காய்ச்சிகளாக வீதியில் விசிறி அடிக்கப் படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்நிய முதலீடுகளை அதிகளவு கொண்டு வருவதும், கார்பரேட் நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குவதும்தான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மந்திரக் கோல் என்று பறைசாற்றுகிறார்கள்! ஆனால், நவீன தொழில் நுட்பங்களுடன் இயங்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த அளவு மனித உழைப்பு மட்டுமே தேவைப்படுகிறது. இதனால்தான் அங்கு வேலையில் இருப்பவர்களையும் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்நாட்டு சிறு-குறு தொழில் துறைதான் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக இருந்தது.
தற்போது இந்த நிறுவனங்களும் கார்பரேட் நிறுவனங்களின் ஜாப் ஒர்க்கைப் பெற்று குறைந்த லாபத்தில்தான் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் போண்டியாகி இழுத்து மூடப்பட்டு விட்டது. இதனால் நகரங்களில் படித்த இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு குதிரைக் கொம்பாகி விட்டது. இதில் கிராமத்திலிருந்து வெளியேறி வருபவர்களுக்கு வேலை எங்கிருந்து கிடைக்கும்? யார் வேலை கொடுப்பது?
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை எல்லாம் அழித்து, ஒழித்து விட்டு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டமும் இல்லாமல், கோடிக்கணக்கான கிராமப்புற கூலி ஏழை விவசாயிகளை நகரங்களில் குவித்து வைப்பதும், அவர்களை பிழைப்புத் தேடியலையும் நாடோடிகளாக உருமாற்றுவதும் சமூக வளர்ச்சியா? சமூக சீர்குலைவா?
தற்போது அமுலாகி வரும் கார்பரேட் அரசியல் - பொருளாதாரக் கொள்கைக்குள் இக்கேள்விகளுக்கு விடை தேட முடியாது. ஏனென்றால் இவை கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தையே முதன்மை நோக்கமாகக் கொண்டவை.! மக்களின் நலனை குறிக்கோளாகக் கொண்டதல்ல! எனவே தற்போதைய விவசாய நெருக்கடியிலிருந்து விவசாயிகளையும், நாட்டையும் மீட்டு எடுப்பதற்கான வழிமுறையை இந்த அமைப்பு முறைக்குள் தேடுவது மூடத்தனம்! இதற்கு வெளியில்தான் நாம் விடை தேடியாக வேண்டும்! இதற்கு விவசாயம் சாராத தொழிலாளர்கள், சிறுதொழில் புரிவோர், மாணவர்கள், போன்ற கார்பரேட் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிற மக்களுடனும் இணைந்து போராடுவது அவசியம்!
பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் நம் விவசாயத்தைக் கைப்பற்றி, அதை தனது வர்த்தக சூதாட்டக் களமாக மாற்றுவதற்கு கார்ப்பரேட்டுகள் நடத்தி வரும் மேற்கண்ட சதிவலைகளின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளாமல், எந்தவொரு சங்கமும் விவசாயிகளுக்கு உண்மையான தலைமையாக இருக்க முடியாது!
தங்களின் வாழ்வையே நிர்மூலமாக்கி வரும் கார்பரேட் அரசியலையும், அதன் அடியாள் படையாக செயல்படும் ஆட்சியாளர்களின் துரோகத்தையும், கற்றுத் தெளியாமல், தற்போதைய நெருக்கடியிலிருந்து விவசாயிகள் விடுதலை பெறவும் முடியாது!
சில குறிப்புகள்:
அமெரிக்காவில் பெரும் நிலப்பரப்பில் நடக்கும் நவீன பண்ணை விவசாயம், கார்பரேட்டுகளின் ஒப்பந்த விவசாயம் ஆகியவற்றுக்கு அப்பால், அங்கு சிறு விவசாயிகள் பண்ணையும் இயங்கி வருகின்றன. “குடும்பப் பண்ணைகள்” (FAMILY FARMS) என்ற பெயரில் அறியப்படும் இவர்கள், பாதி நேரம் விவசாயத்திலும், மீதி நேரம் விவசாயம் அல்லாத பிற தொழில்களிலும் ஈடுபட்டு வாழ்கிறார்கள். கார்பரேட் விவசாயத்தின் பாதிப்புகள் பற்றி இவர்கள் familyfarmingahap.weebly.com என்ற இணைய தளத்தில் கூறுவதைக் கேளுங்கள்.
‘இயற்கை வளத்தை அழிக்கும் ரசாயண மருந்துகளை, மரபணு தொழில்நுட்பங்களை அதிகளவு பயன்படுத்தியும், ஹார்மோன் ஊக்க மருந்துகளை விலங்குகளுக்கு பயன்படுத்தியும் மிகையான உணவு உற்பத்தியைச் செய்கிறார்கள். இதன் மூலம் சிறிய பண்ணைகளை வேளாண் வர்த்தகத்திலிருந்து துரத்தி அடிக்கிறார்கள்”
“நவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கு 2 லட்சம் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். இதனை ஈடுகட்ட முடியாமல், ஒவ்வொரு வாரமும் 330 சிறுவிவசாயிகள் நிலத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இவர்களால் கைவிடப்பட்ட நிலங்கள் தரிசாகக் கிடக்கிறது.” மேலும், “1981-ல் 7.5 லட்சமாக இருந்த சிறு விவசாயப் பண்ணைகள், 2003-ல் இது 2 லட்சமாகக் குறைந்து விட்டது”
“ஒரே பயிரை, தொடர்ந்து விளைவிக்கும் ஒற்றைப் பயிர் செய்யும் முறையால் (monoculture), நிலங்கள் விரைவாக வளமிழந்து போகின்றன. இது மேலும் அதிகளவு உரம் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.”
“ஃபாஸ்ட்-புட் நிறுவனங்களின் சங்கிலித் தொடர் வர்த்தக முறையால், மொத்த உணவு விநியோக நிறுவனங்களும் கூட ஒழித்துக் கட்டப்படுகிறது. 1982-ல் அமெரிக்காவில் 28 பெரிய விநியோக நிறுவனங்கள் இருந்தது. 2003-ல் இது வெறும் 3 ஆகக் குறைந்து விட்டது.”
2) கார்ப்பரேட்டுகளின் மேல்-கீழான ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஆபத்துகளை உணர்ந்த அமெரிக்க விவசாயப் பண்ணைகள், தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களுக்குள் ஒருங்கிணைந்து கூட்டுறவுப் பண்ணைகளாக செயல்பட்டு வருகின்றன. NATIONAL FARMERS ORGANIZATION (NFO), மற்றும் AMERICAN AGRICULTURAL MARKETING ASSOCIATION (AAMA) ஆகியவை இத்தகைய அமைப்புக்களில் முக்கியமானவை.
இக்கூட்டுறவு அமைப்புகள் தங்களின் விளைபொருள்களை ஒருங்கிணைத்து தரம் பிரித்து, பதப்படுத்தி, சேமித்து வைத்துக் கொள்கின்றன. சந்தை நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப விலை, மற்றும் விற்பனைத் தொடர்பான நிபந்தனைகளையும் நிர்ணயித்துக் கொள்கின்றன. பின்னர் இதற்கேற்ப கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நேரடியாக பேரம் பேசி, அதிக விலைக்கு விற்று லாபமடைகின்றன!
மேலும், இந்த கூட்டுறவு அமைப்புகள், உள்நாட்டு விவசாயிகளின் நலனுக்கு எதிரான, ‘அமெரிக்க அரசின் இறக்குமதிக் கொள்கைகளை’ கைவிடச் செய்யுமளவுக்கு அரசியல் ரீதியாக பலம் பெற்றும் விளங்குகின்றன!
இந்தியாவில் உருவாக்கப்படும் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இத்தகைய சுயசார்பான, பேரம் பேசும் தகுதியுள்ள நிறுவனங்களாக வளர்க்கப்படுவதில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளை அண்டிப் பிழைக்கும் சவலைப் பிள்ளைகளாகவே பயிற்சி அளித்து வளர்க்கப் படுகிறார்கள்.
3) பஞ்சாப்பில் ஒப்பந்த அடிப்படையில் உருளைக்கிழங்கு விவசாயத்தில் ஈடுபட்ட பெப்சி நிறுவனம், 5 ஏக்கருக்கும் அதிக நிலமுடைய விவசாயிகளிடம் மட்டுமே ஒப்பந்தம் செய்து கொண்டது. சிறு விவசாயிகள் வலிந்து சென்று கேட்டபோதும் அவர்களின் விருப்பத்தை பெப்சி ஏற்க மறுத்து விட்டது.. இதற்கு பெப்சி நிறுவனம் கூறிய காரணங்கள், “பணக்கார விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஆகும் கூடுதல் செலவை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள். நிதித் தேவைகளை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள். பெப்சியிடம் கடன் கேட்டு நிற்க மாட்டார்கள்” என்பதுதான்.
எனவே ஒப்பந்த விவசாயத்தால் அனைத்து விவசாயிகளும் பலன் பெறுவார்கள் என்று நம்புவது மூடத்தனம்!
(முற்றும்)
- தேனி மாறன்