கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழ்நாட்டிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது பழனி மலைத் தொடர்ச்சி. நிறைய மலைக் கிராமங்களையும் கொடைக்கானல் நகரையும் உள்ளடக்கியது இந்த மலைத் தொடர்ச்சி. இதில் சுமார் 700 சதுர கி.மீ வனப்பரப்பு உள்ளது. இது தவிர காப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் உள்ளது. இந்த பழனி மலைத் தொடர்ச்சியில் உள்ள வனப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனமாகவோ அல்லது வனக் காப்பகமாகவோ தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.
ஏராளமான உயிரினங்கள் இந்த மலைப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக மலை அணில்(Grizzled squirrel), வரையாடு (Nilgiri Thar), கேளையாடு (Muntjac), யானை, சீத்தல்(Chital), சிறுத்தைப் புலி(Leopard), கரடி மற்றும் ஒரு சில இடங்களில் அரிதாக புலியும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பறவைகளிலும் பல விதமான பறவைகள் இந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. குறிப்பாக இருவாச்சி(Hornbill) என்ற அரிதான பறவைகள் இங்கு உள்ளன.
இந்த மலைத் தொடர்ச்சியின் பல்வேறு இடங்களில் செழுமையான நீர் நிலைகளும் உள்ளன. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய அருவியும் தமிழ்நாட்டின் அதிக உயரமான அருவியுமான தாலையார் அருவி இங்கு உள்ளது. அதிகமாகும் போக்குவரத்தாலும், மரங்கள் வெட்டப்படுவதாலும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்து போடும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் இந்த மலைப் பகுதி சீர்கேடடைந்து வருகிறது. கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்த்தால் பெருமளவு மாசுபடுவதைத் தவிர்க்க முடியும்.
Palani Hills Conservation Council என்ற அமைப்பு பழனி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு தேனி வளர்ப்பு முறை பற்றி சொல்லித் தருவதோடு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இந்த மலைப் பகுதியில் மிச்சமிருக்கும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமெனில் நிறைய முயற்சிகளை செய்தாக வேண்டும். இணையத்தளம்: www.palnihills.org/
- விவரங்கள்
- பனித்துளி சங்கர்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தவளைகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதாவது கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது இந்தத் தவளை இனம். இதை விட ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இந்தத் தவளைகளில் மட்டும் மொத்தம் ஆறாயிரத்திற்கும் அதிகமான இனங்கள் இருக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்தத் தவளைகள் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்துகொள்ளும் திறமை கொண்டவை.
தவளைகள் நிலத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ குழிகள் அமைத்தோ அல்லது பாறைகளின் இடுக்குகளிலோதான் வாழ்ந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தவளை இனம் கூடு கட்டி வாழ்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! ஆம் நண்பர்களே..!! சில மாதங்களுக்கு முன்பு தென் இந்தியாவில்தான் இந்த அறிய வகை தவளை இனம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை தவளைகள் மிகவும் வினோதமான முறையில் புற்களினாலான கூடுகள் அமைத்து வாழ்கின்றன என்பது ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் வாழும் சில தவளை இனங்கள் எலியை விட மிக வேகமாக ஓடும் திறமை பெற்று இருப்பதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு முறை தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் ஆய்விற்காக பிடித்து வரப்பட்ட தவளைகளை, எலிகள் அடைக்கப்பட்ட ஒரே கூண்டில் போட்டு அடைத்திருக்கிறார்கள். அப்பொழுது பயத்தில் தவளைகள் அதிக ஓலி எழுப்பியதால் வேறு வழியின்றி தவளைகளின் பெட்டியை மாற்றுவதற்காக திறந்த பொழுது ஒரு தவளையும், எலியும் வெளியில் தப்பி ஓடிய பொழுது எலியை விட அதி வேகத்தில் தவளை ஓடுவது கண்டு வியந்த கண்டுபிடிப்பாளர்கள், மீண்டும் பல சோதனைகள் செய்து பார்த்ததில் எலியை விட தவளைகளின் வேகம் அதிகம் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
இந்தத் தவளை இனம்தான் இப்படியென்றால் இதைவிட இன்னொரு தவளை இனத்தின் செயல் மிகவும் வியப்பிற்குரியது. அது என்னவென்றால் இந்த இனத்துத் தவளைகள் தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் உறங்கும் திறமை உள்ளவையாம். பலருக்கு சில கேள்விகள் இதில் எல்லாம் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக உறங்கினால் உணவிற்காக என்ன செய்கின்றன என்று. இந்தத் தவளைகள் சுவாசிப்பதின் மூலம் தங்களின் உணவுகளை சரி செய்து கொள்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது
மனிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உபரித் தகவல். இந்தத் தகவல்களை விட மிகவும் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால் பொதுவாக தவளைகள் பூச்சிகளைத் தின்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது கேட்டு இருக்கிறோம். ஆனால் வட ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படும் நீர் நிலைகளில் உள்ள சில தவளை இனம் பாம்புகளையே முழுவதும் முழுங்கும் அளவிற்கு திறமையும் உருவமும் கொண்டிருக்கின்றன. இந்தவகை தவளைகளின் உமிழ் நீரில் மனிதர்களைக் கொல்லும் அளவிற்கு விஷத் தன்மை இருக்கிறதாம்.
- பனித்துளி சங்கர் (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
எறும்புகளின் கூட்டு வாழ்க்கையில் காணப்படும் ஒரு சுவையான நிகழ்வு இப்போது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களுடைய வாரிசுகளை பிரசவிக்கும் பொறுப்பை ஏற்கும் பெண் யார் என்பதை வேலைக்கார எறும்புகள்தான் முடிவு செய்கின்றன என்பதுதான் அந்த சுவையான நிகழ்வு.
ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த எறும்புக்கூட்டங்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டன. ஸ்பெயின் நாட்டு எறும்புக்கூட்டத்தில் மட்டும் இராணி எறும்பை வேலைக்கார எறும்புகளே தேர்ந்தெடுக்கின்றனவாம். இந்தப் போட்டியில் ஈடுபடும் மற்ற இராணி எறும்புகளை வேலைக்கார எறும்புகளே கொன்றுவிடுகின்றன. ஆனால் இங்கிலாந்து நாட்டின் எறும்புக்கூட்டம் இந்த அளவிற்கு தீவிரம் காட்டுவதில்லை. இராணி எறும்புகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அவை கீழ்படிந்து போய்விடுகின்றனவாம். லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் Proceedings of the Royal Society B இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
சிலவகை எறும்புகள் பயிர்களை அழித்தொழிக்கும் தன்மை உடையவை. இவை நாடுவிட்டு நாடு மட்டுமன்றி கண்டம் விட்டு கண்டம் பரவி ஏராளமான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. எறும்புகளின் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அவற்றின் சமூக கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாகவே அவை கண்டம் விட்டு கண்டம் பரவியுள்ளன. அழித்தொழிக்கும் பண்பில்லாத எறும்புக்கூட்டங்களின் சமூக கட்டமைப்பை தெரிந்துகொள்வதன் மூலம் மாற்று குழுக்களின் சமூக கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள செய்தி: ஸ்பானிஷ் எறும்புக்குழுக்கள் மட்டுமே ஒற்றைக்குடும்ப அமைப்பிலானவை. இங்கு ஒரே ஒரு இராணி எறும்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து எறும்புக்குழுக்கள் சிக்கலானவை. அங்கே பல குடும்பங்களின் கலவையாக எறும்புக்குழுக்கள் காணப்படுகின்றன. வாரிசுகளை உற்பத்தி செய்யும் பணியில் பல இராணி எறும்புகள் அனுமதிக்கப்படுகின்றன.
மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் சமூக குழுக்களாகவே வாழ்கின்றன. குழுவின் உறுப்பினர்களிடையே சச்சரவும், வாக்குவாதமும் உண்டாவது உறுதி. எறும்புக்கூட்டங்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கவை. இவ்வளவு காலம் அவை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அவற்றிற்கிடையே கூட்டுறவு இருக்கவேண்டியது மிகவும் அவசியம். தங்களுடைய குழுக்களில் ஏற்பட்ட சச்சரவுகளை அவை எவ்வாறு தீர்த்துக்கொண்டன என்பதை ஆராய்வது சுவையானது மட்டுமல்ல, முக்கியமானதும்கூட. கூட்டமாக வாழும் அனைத்து உயிரினங்களிலும், வாரிசுகளை பெற்றுக்கொடுக்கும் உரிமையை யாருக்குக்கொடுப்பது என்பதை முடிவுசெய்வதில் ஓர் ஒழுங்கு காணப்படுகிறது. காலாஹரி பாலைவனத்தில் வாழக்கூடிய மங்கூஸ் குடும்பத்தைச் சேர்ந்த மீர்காட் என்னும் பாலூட்டியின் அனைத்து பெண் உயிரிகளும் இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுத்த சில மீர்காட்டுகள் மட்டுமே வாரிசுகளை பெற்றுக்கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இது போன்றே பாலைவனத்தில் வாழும் mole rats இனத்தில் ஒரே ஒரு இராணி எலி மட்டுமே வாரிசுகளை உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றுள்ளது.
சிங்கக்கூட்டத்தில் குழுவில் உள்ள அனைத்து பெண் சிங்கங்களும் வாரிசுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. 'twig ant’ எனப்படும் குருத்து எறும்புகளை லீசெஸ்டர் விஞ்ஞானிகள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு எறும்புக்கூட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட இராணி எறும்புகள் காணப்பட்டன. ஆனால் ஸ்பானிஷ் எறும்புகளிடையே ஒரே கூட்டில் உள்ள பல இராணி எறும்புகளும் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலைப்பெற்றிருந்தாலும் ஒரே ஒரு இராணி எறும்பு மட்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டது. இந்த இராணி எறும்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை வேலைக்கார எறும்புகள் பெற்றிருந்தன.
ஒரு இராணி எறும்பைத்தவிர பிற இராணி எறும்புகளை அடித்துக்கொல்லுவதும், ஒரே ஒரு இராணி எறும்பு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் காணப்பட்டது. வேலைக்கார எறும்புகளின் இந்த ஆதிக்கம் எல்லா குருத்து எறும்புக்குழுக்களிலும் ஒன்றுபோல் இல்லை என்பதுதான் ஆய்வின் முடிவு. ஸ்பானிஷ் எறும்புகளின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து பகுதிகளில் உள்ள எறும்புக்குழுக்களில் காணப்படவில்லை. ஸ்பெயினில் எறும்புக்குழுக்கள் ஒரே குடும்பமாக இருக்கையில் பிற நாடுகளில் பலகுடும்ப எறும்புக்குழுக்கள் காணப்படுகின்றன. குருத்து எறும்புகளின் வியத்தகு இந்த நடத்தைக்கு மரபியல், சூழியல் காரணிகளின் தாக்கம் குறித்து இனிமேலும் ஆராய இருப்பதாக லீசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
தகவல்: மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/11/101102191839.htm
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
"தக்கவையே வாழும்'' என்பது டார்வினின் சித்தாந்தம். சுற்றச் சூழலுக்கு எது தக்கதாக இருக்கிறதோ அதுவே வெற்றியுடன் வாழும், ஏனையவை இயற்கைத் தேர்வில் வாழத் தகுதியிழந்து மறைந்து, சந்ததிகள் இல்லாமல் அழியும் என்பது டார்வின் விதி. நாய்களைப் பொருத்தவரை டார்வின் குறிப்பிடும் இயற்கைத் தேர்வினை விட மனிதர்களின் செயற்கைத் தேர்வே அவற்றின் பரிணாமத்தை நிர்ணயிக்கின்றன.
பூனை, நரி, ஓநாய், புனுகு பூனை, கரடி போன்ற விலங்குகளுக்கு நெருங்கிய இனம்தான் நாய்கள். இருந்தாலும் அவற்றின் தலை அமைப்புகளில் கடந்த சில மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்டிராத அளவுக்கு பிரமிப்பூட்டும் அளவுகளில், வடிவங்களில் நாய்களின் கபால அமைப்புகள் மாற்றமடைந்திருக்கின்றன. இத்தனை மாற்றங்களும் கடந்த சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
புல்டாக், பூச், டாபர்மேன், பாமரேனியன், கண்விழி பிதுங்கியிருக்கும் சிக்குவாக்குவா, கோல்லி, ராஜபாளையம் என்று குறைந்தது 500 வகை நாய் வகைகள் உலகில் மனிதனது செயற்கை இனவிருத்தி முறைகளால் தோன்றியுள்ளன.
நாய் ஒரு மாமிச பட்சனி. ஆனால் தன்மானமுள்ள எந்த ஒரு மாமிச பட்சனியாவது நாயின் தலை அமைப்பைப் பார்க்க நேர்ந்தால் அது அவமானத்தால் குன்றிப் போய்விடும். அந்த அளவுக்கு நாய்களின் தலை இஷ்ட்டத்திற்கு பல டிசைன்களில் மாற்றப்பட்டிருக்கிறது. வேட்டை ஆட வேண்டியதில்லை, கடித்துக் குதறி சாப்பிட வேண்டியதில்லை என்பதால் வீட்டு நாய்களின் வாய், பற்கள், கபாலம் ஆகியவை பிஸ்க்ட், கடலை, தயிர்சாதம் சாப்பிடும் வகையில் மிருதுவாகிவிட்டது. எஜமானனின் செருப்புத்தான் ஒரு நாய் தன் வாழ்நாளில் கடித்துக் குதறும் மிகவும் கெட்டியான பொருள் என்றால் அது மிகையாகாது.
மான்செஸ்ட்டர் பல்கலைக்கழக விலங்கியல் அறிஞர் டிரேக் என்பவர் மாமிசப் பட்சனிகளின் கபாலத்தில் குறிப்பிடத்தக்க 50 வகை அமைப்புகளை அளந்து அவை நாய்களிடம் எப்படி இருக்கிறது என்று கணக்கிட்டுப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சிதான் எஞ்சியது. அத்தனை தூரத்திற்கு நாய்களின் கபால அமைப்பு மாறியிருந்தது.
மனிதன் நாய்களின் திறமையை விட அவற்றின் வெளித் தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் டார்வினின் விதியில் சிறு திருத்தம் ஏற்பட்டது. வலுவுள்ளவை வாழும் என்பதற்கு பதிலாக அழகுள்ளவை வாழும் என்று மாறிவிட்டது. இது நாய்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்ளவும். ஏனெனில் இன்னமும் (நாய்களைத் தவிர) டார்வினின் தக்கவையே வாழும் என்ற கொள்கையே நிலவுகிறது.
- முனைவர் க.மணி (
- பறவைகளின் ரேடியேட்டர்
- மீன்களின் உலகம்
- அபசகுனமா? ஆஸ்திரேலியப் பறவையா?
- நான்கு கொம்பு மான் (Four horned antelope–Tetracerus quadricornis)
- சிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை
- புலிகளும் புரிதலும்
- சப்தங்கள் பொதுவானதா?
- திமிங்கல மயானம்
- நாடகமாடும் பாம்பு
- அதிசயத்தின் உச்சம் திமிங்கிலங்கள்
- சிலந்தியின் உருவ பேதங்களுக்கான காரணம்
- பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்
- மனிதர்க்கு ரோமம் மறைந்த கதை
- பச்சோந்தி ஏன் அடிக்கடி நிறம் மாறுகிறது?
- கவாத்து செய்வது எதற்காக?
- தப்பிப்பிழைக்குமா தவளையினம்?
- பூக்களின் வில்லன் யார்?
- மிருகங்களும் சிந்தித்து முடிவெடுக்கின்றன
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?