உண்மை கண்டறியும் சோதனைகள் என்று அழைக்கப்படும் மூளை வரைவு சோதனை பாலி கிராப் மற்றும் நார்கோ அனாலிசிஸ் ஆகியவை அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் இருப்பதால் அவற்றை தடை செய்யுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய உள்ளது.

நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சட்ட ஆணையம் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது. அதன் மிக முக்கிய பரிந்துரை உண்மை கண்டறியும் சோதனைகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்பதாகும். இத்தகைய சோதனைகள் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பெருமளவிற்கு உதவுவதில்லை என்பது ஒருபுறம் மற்றொரு புறம் இவை அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் உள்ளன என்று அது கூறியுள்ளது.

நார்கோ அனாலிசிஸ் என்று அழைக்கப்படும் சோதனை குற்றவாளியை ஆழ்நிலை மயக்கத்திற்கு அழைத்துச் சென்று அதன் பிறகு நடத்தப்படும் விசாரணையாகும். ஒருவர் ஆழ்நிலை மயக்கத்தில் இருக்கும் போது உண்மையை மட்டும்தான் கூறுவார் என்ற பொதுவான ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலேயே இச்சோதனை நடத்தப்படுகிறது.இச்சோதனை நடத்தப்படும்போது மனநல மருத்துவர்களின் மேற்பார்வை இருப்பது அவசியம் அவர்கள் கொடுக்கும் சில மருந்துகளைப் பயன்படுத்தியே இச்சோதனை நடத்தப்படும் ஆனால் தற்போது பெரும்பாலான மனநல மருத்துவர்கள் இச்சோதனைக்கு ஒத்துழைப்பதில்லையாம். இது நீதி நெறிகளுக்கு முரணானது என்று அவர்கள் கருதுகிறார்கள் இதனால் மருத்துவப் பயன்பாட்டுக்குக் கூட இச்சோதனை நடத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இச்சோதனைகள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை என்று போலீசாரும் கருதுகிறார்கள். ஒரு தேர்ந்த குற்றவாளி இச்சோதனையில் எளிதாக தப்பி விட ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சட்ட ஆணையம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுப்பதற்கு இந்திய தடய அறிவியல் அமைப்பு முக்கிய காரணமாகும் கடந்த சில ஆண்டுகளாக மிகப்பரலவான முறையில் உண்மை கண்டறியும் சோதனைகள் பயன்படுத்தப்படுவது குறித்து சட்ட ஆணையத்திடம் அவ்வமைப்புகவலை தெரிவித்திருந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இத்தகைய சோதனைகள் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன என்று அது சுட்டிகாட்டியுள்ளது.

இதையடுத்து காவல்துறை மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்த ஆணையம் உண்மை கண்டறியும் சோதனைகளைத் தடை செய்யப் பரிந்துரைத்துள்ளது. இச்சோதனைகள் அறிவியல் முறையில் அமைந்தவை அல்ல என்று அது கூறியுள்ளது.

(மாற்று மருத்துவம் - ஜன 2009 இதழில் இச்சோதனைகளைத் தடை செய்ய வலியுறுத்தி “உண்மை அறியும் சோதனையில் உண்மை உள்ளதா?” என்று தலையங்கக் கட்டுரை எழுதியிருந்ததை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். மீண்டும் ஒருமுறை அத்தலையங்கக் கட்டுரையை வாசித்துப் பார்த்தால் ‘மாற்றுமருத்துவத்தின்’ பார்வை தொலைநோக்கோடும் ஆழ்ந்தும் அமைந்திருப்பதை உணர முடியும்.)

Pin It