இதழ் தோறும் இறப்புச் செய்திகளும் இரங்கலுரைகளும் செவ்வணக்கங்களும் பதிவு செய்வது வருத்தமளித்தாலும், நிலையாமையின் பேருண்மையை நமக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது.ஆனால் சென்ற இதழுக்கும் இந்த இதழுக்கும் இடையில் இத்தனை மாமனிதர்களை இப்படி அடுத்தடுத்துப் பிரிய நேரிட்டது எதிர்பாராத ஒன்று.

இன்று ஒரு தகவல் என்று தொடர்ந்து 14 ஆண்டு காலம் வானொலி வழியே சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்துக் கொண்டிருந்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். பிற்காலத்தில் அவரோடு சிறிது பழகவும் சில நிகழ்ச்சிகளில் சேர்ந்து கலந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்த போது, ‘இவர் நம்ம ஆளு’ என்ற உணர்வு ஏற்பட்டது. ஆம், தமிழ் உணர்வாலும் முற்போக்குச் சிந்தனையாலும் அவர் நம்ம ஆளுதான்.

நாத்திகம் இராமசாமி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், பிறகு திராவிடர் கழகத்திலும், பிறகு காமராசரிடம் பற்றுக் கொண்டு காங்கிரசிலும் சேர்ந்து செயல்பட்டார். மாணவப் பருவத்தில் நான் அவரோடு சேர்ந்து பல காங்கிரசுக் கூட்டங்களுக்குச் சென்றதுண்டு. அவர் நாத்திகம் ஏட்டைத் தொடர்ந்து 50 ஆண்டுக்கு மேல் நடத்தியவர், சமூகநீதிக் கொள்கையில் உறுதி காத்தவர். இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது நம்மைப் போலவே  கொதிப்புற்றவர். திரு பழ.நெடுமாறன் தலைமையில் அமைக்கப் பெற்ற 26 தமிழர் உயிர்காப்பு நிதிக்குழுவிலும் அவர் இடம் பெற்றார்.தோழர் நாத்திக நந்தனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது படத்தைத்  திறந்து வைத்தார். நாத்திகம் இராமசாமி உடலுக்கு நானும் தோழர்களும் நேரில் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.

ஒரு நாத்திகர் என்ற முறையிலும், மோசடிப் பேர்வழி சத்யசாய் பாபாவை அம்பலப்படுத்தியவர் என்ற முறையிலும் பிரேமானந்தைப் பற்றி நிறையப் படித்திருப்பினும் அவரோடு நேரில் பழகும் வாய்ப்பு மட்டும் அமையவே இல்லை.

ஆந்திரத்தைச் சேர்ந்த தோழர் பாலகோபால் மிகச் சிறந்த மனித உரிமைப் போராளி. திருவனந்தபுரத்தில் மரண தண்டனைக்கு எதிரான மாநாட்டில்  கிருஷ்ணய்யரும் பாலகோபாலும் ஆற்றிய உரைகளைத்  தமிழாக்கம் செய்து தமிழ்த் தேசம் இதழில் வெளியிட்டோம். அந்த இரு உரைகளையும் சேர்த்து தோழர் தஞ்சை அமரன் ‘மாண்டொழிக மரண தண்டனை’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தமிழ் நாட்டிலும் வெளியிலும் பல இடங்களில் பாலகோபாலோடு சேர்ந்து மனித உரிமைக் கூட்டங்களில் உரையாற்றியதும், அவரது உரையைத்  தமிழில் மொழி பெயர்த்ததும் மறக்க முடியாத அனுபவம். அவரது அழைப்பின் பேரில் ஐதராபாத் சென்று மரணதண்டனை எதிர்ப்பு மாநாட்டில் பேசியதும் அவரது வீட்டில் தங்கியதும் நேற்று நடந்தது போல் நினைவில் உள்ளன. அவரது மறைவு ஒரு குறுஞ்செய்தியாக வந்தபோது நம்பக் கடினமாய் இருந்தது.

மறைந்த மாமனிதர்கள் அனைவருக்கும் சமூகநீதித் தமிழ்த் தேசம் வழியாகத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் செவ்வணக்கம்!.

 

Pin It