குறுக்கு விசாரணைக் கூண்டில் இந்து என்.ராம்:
சென்ற இதழ் தொடர்ச்சி...

சமத்துவம், சனநாயகம் மற்றும் மனித உரிமைகள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கம் அல்லது கூட்டாட்சி வழிபட்ட சுயாட்சி ஆகியவற்றின் அடிப்படையில்  பிரபாகரன்  தன்  மக்களுக்கு  ஒரு    வருங்காலத்தை   அமைத்துக் கொடுக்க இந்தியாவுடன் இணைந்து பாடுபடுவார் என்று நம்பியதாக கார்டியன் கட்டுரையில் எழுதியுள்ளீர். சமத்துவம் என்கிறீரே, யாருக்கும் யாருக்கும் சமத்துவம்? சிங்களருக்கும் தமிழருக்குமான சமத்துவத்தைத்தான் சொல்கிறீர் என்றால்,  சிங்களத்துக்கும் தமிழுக்கும் சமத்துவம் தரும்படி எப்போதாவது நீர் கோரியதுண்டா? சிங்களத்துக்கு நிகராகத் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழியாகச் சட்டத்திலும் நடைமுறையிலும் இடம் பெறாமல் சிங்களருக்கும் தமிழருக்கும் எப்படிச் சமத்துவம் வர முடியும் என்பதை உம்மால் விளக்க முடியுமா?

சிறிலங்கா குடியரசு என்பது அதன் அரசமைப்பின் படி (மிகவும் மென்மையாகச் சொன்னால்) சிங்கள மொழிக்கும் பவுத்த மதத்திற்கும் முதன்மை  கொடுக்கிற  ஒன்று    என்பது    உமக்குத்   தெரியாதா?   ஒரு  மொழிக்கும்  ஒரு   மதத்திற்கும்  சிறப்புரிமை வழங்குகிற எந்த அரசமைப்பும் பிற மதத்தவரையும் பிற மொழிக்காரர்களையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கி விடும் என்ற அரசியல் பால பாடத்தைக் கூட கற்காதவரா நீர்?

இந்தியாவில் சமயச் சார்பின்மைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது போல் நீரும் உமது ஏடும் காட்டிக் கொள்வதை அறிவோம். குசராத்தில் மூவாயிரம் இசுலாமியரைப் படுகொலை செய்த நரேந்திர மோடிக் கெதிராகப்  பக்கம்  பக்கமாய்   எழுதித்   தள்ளுகிறீர்,   இந்துத்துவத்தை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டே சிங்கள பவுத்தப் பேரினவாதத்தை நியாயப்படுத்துகிறீர். நரேந்திர மோடியைக் கண்டிப்பதாகக் காட்டிக் கொண்டே பத்து மோடிகளின் சேர்க்கைக்கு நிகரான இராசபட்சரை நியாயப்படுத்துகிறீர். இந்த முரண்பாட்டுக்கு நீர் தரும் விளக்கம் என்ன? நரேந்திர மோடியைக் குறை சொல்வதானாலும் சரி, இராசபட்சரைத் தூக்கிக் கொண்டாடுவதானாலும் சரி, இந்திய வல்லாதிக்க நலன் காக்கவே இரண்டையும் செய்கிறீர் என்று குற்றம் சாட்டுகிறோம். நரேந்திர மோடியின் இந்துத்துவத்தைக் கட்டுக்குள் வைக்க விரும்புவதும் சரி, இராசபட்சரின் சிங்களப் பேரின வாதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் சரி, இரண்டுமே இந்தியத் தேசியத்துக்காகவும் அதன் விரிவாதிக்க நலனுக்காகவுமே என்பதை உம்மால் மறுக்க முடியுமா?

சமத்துவம், சனநாயகம், மனித உரிமைகள் என்று போகிற போக்கில் எழுதி விட்டுப் போகிறீர். உண்மையிலேயே இந்த விழுமியங்களில் உமக்கு நம்பிக்கை இருந்தால் உம்மால் சிங்களப் பேரினவாத அரசை ஆதரிக்க முடியுமா? இந்த விழுமியங்களைச் சிங்களப் பேரினவாத அரசு கிஞ்சிற்றும் மதிக்கவில்லை என்பதற்கு, உலக மனித உரிமை அமைப்புகள் அடுக்கடுக்கான சான்றுகளைத் தந்திருப்பது உமக்குத் தெரியாதா? இந்த விழுமியங்களில் உமக்கே உண்மையில் நம்பிக்கை இல்லை என்றும், சமத்துவம், சனநாயகம், மனித உரிமைகள் என்று காயத்ரி மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருக்கிறீர் என்றும் குற்றம் சாட்டுகிறோம், உம்மால் மறுக்க முடியுமா?

அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி வழிப்பட்ட சுயாட்சி என்றெல்லாம் எழுதுகிறீர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்று நிபந்தனை விதிக்கவும் செய்கிறீர். இந்த நிபந்தனைக்குட்பட்டு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வோ சுயாட்சியோ கிடைப்பதற்கு என்ன வழி என்பதை சிறிலங்கா அரசமைப்பின் அடிப்படையில் ஏட்டளவிலாவது விளக்கிச் சொல்வீரா? ஒன்றுபட்ட (United) இலங்கை என்பதே அந்த அரசமைப்பின் படி ஒற்றை ஆட்சி (Unitary) இலங்கைதான் என்பதை உம்மால் மறுக்க முடியுமா? ஒற்றையாட்சி அரசமைப்பைக் கூட்டாட்சி அரசமைப்பாக மாற்றுவதற்கான மாயவித்தை ஏதாவது உம்மிடம் உள்ளதா?

பிரிவினைக்கு மாற்றாக எதையும் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறீர். தமிழீழத் தனியரசுக்கு மாற்றாக 1976க்குப்பின் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் எதையாவது ஏற்றுக் கொண்டாரா? 1977 பொதுத் தேர்தலுக்குப் பின் தமிழீழ மக்கள் தனியரசுக்கு மாற்றாக எதையாவது ஏற்றுக் கொண்டார்களா? ஈழப் போராளி இயக்கங்கள் 1987 இந்திய‡இலங்கை ஒப்பந்தம் வரும் வரை தமிழீழத் தனியரசுக்கு மாற்றாக எதையாவது ஏற்றுக் கொண்டதுண்டா? இந்திய‡இலங்கை ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபையில் அதன் முதல்வர் ‡ உமது பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய வரதராஜ பெருமாள் ‡ இறுதியாக முன்மொழிந்து இயற்றிய தீர்மானமே தனித் தமிழீழப் பிரகடனம்தான் என்பதை மறந்து விட்டீரா? ஈழத் தமிழர்களுக்காக பிரபாகரன் ஒருவரைத் தவிர வேறு யாரும் தனிநாடு கேட்டதில்லை என்று நீர் பாசாங்கு செய்வது, சிக்கல் அனைத்துக்கும் அதனால் ஏற்பட்ட பேரழிவுக்கும் அந்த ஒருவர் மீது பழிபோடும் உள்நோக்கத்தோடுதான் என்று குற்றம் சாட்டுகிறோம், உம்மால் மறுக்க முடியமா?

2002 பிப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை வழங்கிய வாய்ப்பைப் பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றும், அமைதி முயற்சியை முறியடிக்க இயன்றதனைத்தும் செய்தார் என்றும் கார்டியன் கட்டுரையில் எழுதியுள்ளீர். 2001 திசம்பரில் புலிகள் தாமாகவே போர்நிறுத்தம் அறிவித்தார்கள் என்பதையும் ஆனையிறவு வெற்றிக்குப்பின் அவர்கள் படையியல் நோக்கில் வலுவான நிலையில் இருந்ததால் வேறு வழியின்றி சிங்கள அரசும் போர்நிறுத்தத்துக்கு உடன்பட நேரிட்டது என்பதும் வரலாற்று உண்மைகள் அல்லவா?

2002 பிப்ரவரி போர்நிறுத்த உடன்படிக்கை விடுதலைப் புலிகளுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கி விட்டதாகக் குறை கூறப்பட்டது என்கிறீர். அது என்ன அதிகப்படியான சலுகை என்பதை உம்மால் எடுத்துக்காட்ட முடியுமா? போர்நிறுத்த உடன்படிக்கையின் முக்கியக் கூறுகளைப் பட்டியலிட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தாமல் ஏமாற்றியது புலிகளா, சிங்கள அரசா என்பதைக் காட்ட முற்படுவீரா?

தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டதே,  நீக்கியதா? கல்விக் கூடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் படையை நிறுத்தி, சுற்று வட்டாரத்தை அதியுயர் பாதுகாப்பு வளையம் என்று அறிவித்து, அப்பகுதிக்குப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தது அல்லவா, இந்த அதியுயர் பாதுகாப்பு வளையங்களைக் கலைத்து விடுவதாக சிங்கள அரசு ஒப்புக் கொண்டதே, கலைத்ததா?

போராளிக் குழுக்களாகத் தொடங்கி, அரசின் கூலிப் படைகளாக மாறிப் போன ஈ.பி.டி.பி., ஈ.என்.டி.எல்.எப். புளோட் போன்ற ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதாக சிங்கள அரசு ஒப்புக் கொண்டதே, களைந்ததா? களைய வில்லை என்பது மட்டுமன்று, கருணா தலைமையில் ஒரு புதிய ஒட்டுக் குழுவை வளர்க்கவும் செய்தது என்ற உண்மையை உம்மால் மறுக்க முடியுமா?

மீன்பிடித் தொழிலுக்கான தடைநீக்கம், அதியுயர் பாதுகாப்பு வளையங்களைக்  கலைத்தல், ஒட்டுக் குழுக்களை ஆயுதக் களைவு செய்தல் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளும் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பதற்கு யார் பொறுப்பு? புலிகளா அல்லது சிங்கள அரசா?

அமைதிக் காலத்தைப் பயன்படுத்தி பிரபாகரன் ஆயுதங்கள் சேகரித்தார் என்றும், புலிக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசுக் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றம் சாட்டுகிறீர். போர்நிறுத்தக் காலத்தில் இரு தரப்பினரும் புதிய ஆயுதம் சேகரிக்கக் கூடாது என்று ஏதாவது உடன்பாடு இருந்ததா? போர்நிறுத்தக் காலத்தில் சிறிலங்கா அரசு புதிய ஆயுதம் ஏதும் சேகரிக்கவில்லை என்று உம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

நார்வே அரசை அனுசரணையாளராகக் கொண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதும், போர்நிறுத்தத்தை ஒரு பன்னாட்டுக் குழு கண்காணித்தது என்பதும் உமக்குத் தெரியுமல்லவா? இதன் வழியாக சிறிலங்கா அரசு புலிகளின் போட்டி அரசை மெய்ந் நடப்பில் அங்கீகரித்து விட்டது என்பதும் உண்மையல்லவா?அரசக் கட்டமைப்பு ஒன்றை அங்கீகரித்த பின், அதை வலுப்படுத்தும் முயற்சியை எப்படிக் குற்றஞ் சொல்ல முடியும்? இரு தரப்புகளும் அதனதன் அரசக் கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்குப் போர்நிறுத்த உடன்படிக்கையில் என்ன தடை உள்ளது?

1991இல் பிரபாகரன் புலிப்படைக் குழு ஒன்றை அனுப்பி இராசீவ் காந்தியைப் படுகொலை செய்து இந்தியாவை நிரந்தரப் பகையாக்கி கொண்டார் என்றும், இது மிகப் பெரிய முட்டாள்தனம் என்றும் சொல்கிறீர். கொலை செய்யப்படும் அளவிற்கு இராசீவ் காந்தி என்ன குற்றம் செய்தார் என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து சொல்ல மாட்டீரா? இராசீவ் காந்தி தான் செய்த முட்டாள்தனத்தினால் தமிழீழ மக்களைப் பகைத்துக் கொண்டார் என்ற உண்மையை மறைப்பதற்காக பிரபாகரன் இந்தியாவைப் பகைத்துக் கொண்டதாகப் புரட்டிப் பேசுகிறீர் என்ற குற்றச் சாட்டை உம்மால் மறுக்க முடியுமா?

இராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டது 1991 மே 21இல்; பிரபாகரனைக் கொலை செய்யும் படி இராசீவ் காந்தி அமைதிப் படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டது 1987 செப்டம்பர் 1415இல் இதை உம்மால் மறுக்க முடியுமா? அர்கிரத் சிங் எழுதிய ‘சிறிலங்காவில் தலையீடு’(Intervention in SriLanka) நூலைப் படித்தீரா?

இராசீவ் காந்தி பிரபாகரனை வஞ்சகமாகக் கொலை செய்ய இந்தியத் தூதர் தீட்சித் வழியாக அமைதிப் படைத் தளபதிக்கு ஆணையிட்ட நேரத்தில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் பகையோ மோதலோ இல்லை என்பதை உம்மால் மறுக்க முடியுமா? பகைமையையும் மோதலையையும் முதலில் தொடங்கியது இந்திய அரசுதான் என்று இதிலிருந்தே தெரியவில்லையா?

தமிழீழ மக்களின் இனச் சிக்கல் தொடர்பாக அவர்கள் சார்பில் எந்த ஒப்புதலும் பங்கேற்பும் இல்லாமல் இந்திய, இலங்கை அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டதுதான் மிகப் பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போதும் கூட நீர் உணரவில்லையா? அது முட்டாள்தனம் இல்லையயன்றால் ஒருங்கே தமிழர்களையும் சிங்களர்களையும் பகைத்துக் கொள்ள அது வழிவகுத்ததே, எப்படி?

பிரபாகரனின் சந்தேக நோயும், எதிர்ப்பைச் சகித்துக் கொள்ளாமையும்தான் கர்னல் கருணாவின் கலகத்திற்கும் அமைப்பு உடைவதற்கும் காரணம் என்கிறீர். இயக்கத்தின் குறிக்கோளுக்குக் கருணா இரண்டகம் செய்தது காரணம் இல்லை என்று பொருளாகிறது. நீர் சொல்வது உண்மை என்றால், பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற பிறகும் கருணா தமிழீழ விடுதலைக்கான களத்தில் நின்று போராடியிருக்க வேண்டும். பிரபாகரனை விடச் சிறந்த முறையில் போராடுவதன் மூலம் தமிழீழ மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்ததா? கருணா தமிழீழக் குறிக்கோளைக் கைவிட்டுச் சிங்கள அரசின் கையாளாக மாறிய நிகழ்வு, பிரபாகரனின் முடிவு சரியானதே என்பதை மெய்ப்பிக்கவில்லையா? ஒரு போராளித் தலைவனின் எச்சரிக்கை உணர்வுக்கு சந்தேக நோய் என்பதும், இரண்டகத்தைக் களையயடுப்பதற்கு எதிர்ப்பைச் சகித்துக் கொள்ளாமை என்பதும்தான் உம் அகராதி தரும் பொருள் விளக்கமா? தொடக்கத்தில் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ என்ற பெயரில் அமைப்பு நடத்திய கருணா இப்போது சிங்களப் பேரினவாத ஆளும்கட்சியின் அங்கமாகிவிட்ட பிறகும் அவரை இனத் துரோகியாகக் கருதுவதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?

2005 குடியரசுத் தலைவர் தேர்தலில் புலிக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்தலைப் புறக்கணித்தது இரணில் விக்கிரமசிங்கரைத் தோற்கடித்து இராசபட்சர் வெற்றிபெறுவதற்கு வழி செய்தது என்றும், இந்தப் புறக்கணிப்பு பகுத்தறிவுக்கு ஒவ்வாத படுபயங்கர முட்டாள்தனம் என்றும் கார்டியன் கட்டுரையில் சாடியுள்ளீர். இரணில் விக்கிரம சிங்கரைப் போர்நிறுத்தத்தின் சிற்பி என்று புகழ்கின்றீர். அதாவது இராசபட்சர் தேர்தலில் போட்டியிடும் போதே போர்நிறுத்தத்தின் பகைவராகத்தான் இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர். இராசபட்சர் ஆட்சிக்கு வந்தால் அமைதியைக் கெடுத்து விடுவார் என்பது உமது கணிப்பு. அந்தக் கணிப்பு பலித்து இராசபட்சர் போர்நிறுத்தத்தை மீறிய போது நீர் அதனைக் கண்டித்திருக்க வேண்டும் அல்லவா? அமைதியைக் கெடுத்தவரை எவ்வாறு ஆதரித்தீர்? இன்று வரை எவ்வாறு ஆதரிக்கிறீர்?

சிங்கள ஆட்சியாளர் எவராயினும், சந்திரிகா ஆனாலும் இரணில் விக்கிரம சிங்கர் ஆனாலும், இராசபட்சர் ஆனாலும் நீர் போய் ஒட்டிக் கொள்கிறீரே, எப்படி? இந்தத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஆட்சிப் பொறுப்பில் இருந்தால், நெருங்குவதும் எதிர்க்கட்சியாகி விட்டால் அரவமின்றி விலகிக் கொள்வதும் உமக்குக் கைவந்த கலையோ?

உமக்கு ‘சிறிலங்கா ரத்னா’ விருது கொடுத்த சந்திரிகா இப்போது எங்கே இருக்கிறார், என்ன சொல்கிறார்? போர் நிறுத்தத்தின் சிற்பி என்றும், அமைதி விரும்பி என்றும் உம்மால் பாராட்டப் பெற்ற இரணில் விக்ரமசிங்கர் இப்போது எங்கே இருக்கிறார், என்ன சொல்கிறார்? என்று எண்ணிப் பார்த்தீரா? தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற போர், முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைப்பு ஆகிய பொருட்பாடுகளில் இரணில் விக்கிரம சிங்கர் இராசபட்சரைக் கடுமையாகச் சாடி வருவது உமக்குத் தெரியுமா? உமது கணிப்பின்படி அமைதி விரும்பியான விக்கிரம சிங்கருக்கும் சண்டைப் பிரியரான இராசபட்சருக்கும் இடையிலான அரசியல் போராட்டத்தில் நீர் அமைதி விரும்பிக்கெதிராகச் சண்டைப் பிரியரை ஆதரிப்பது ஏன்?

இலங்கை அதிபர் இராசபட்சரின் அழைப்பின் பேரில் சூன் 30ஆம் நாள் அங்கு சென்று, அவரைப் பேட்டி கண்டு, வவுனியாவுக்குப் பறந்து அங்கு ஓர் இடைத் தங்கல் முகாமைப் பார்வையிட்டுத் திரும்பினீர். நீர் பார்வையிட்ட முகாம் அண்மையில் நடைபெற்ற போரில் அகதிகளாக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள முகாமா? அல்லது பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டவர்களின் முகாமா? என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டீரா?

இந்து ஏட்டில் நீர் வெளியிட்டுள்ள படங்களிலிருந்தும், ஜல்னியர் விகடனில் வந்துள்ள உமது பேட்டி மற்றும் முகாம் தொடர்பான படங்களிலிருந்தும், அது பழைய முகாம் என்பதும், உம்மைப் போன்றவர்களுக்குக் காட்டுவதற்கான காட்சி முகாம் என்பதும் தெளிவாகிறது. இப்படி ஒரு காட்சி முகாமைக் காட்டி அவர்கள் உம்மை ஏமாற்றினார்களா? அல்லது அதைப் படம் பிடித்துக் காட்டி நீர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறீரா?

இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழர் அகதி முகாமை விட வன்னி முகாம்கள் மேம்பட்டிருப்பதாகக் சொல்கிறீர். இந்திய முகாம்களைப் பற்றி இதற்கு முன் எப்போதாவது நீர் கவலைப்பட்டதுண்டா? இலங்கைத் தமிழ் அகதிகளின் மனித உரிமைகளுக்காகவும் அடிப்படைத் தேவைகளுக்காகவும் நீர் எப்போதாவது குரல் கொடுத்ததுண்டா?

நலம்புரி முகாம்கள் என்று சொல்லப்படும் இந்த வன்னி முகாம்கள் உண்மையில் சிறை முகாம்களே என்பது உமக்குத் தெரியாதா? எவ்விதக் குற்றச் சாட்டுமின்றி மனிதர்களை இப்படிச் சிறைமுகாம்களில் அடைத்து வைக்க இலங்கையின் எந்தச் சட்டத்தில் வழி வகை உள்ளது?

உமது இந்து அலுவலகத்திற்குள் தமிழகக் காவல் துறையினர் நுழைந்து, பத்திரிகையாளர் ஒருவரைத் தேடிப் பிடிக்க முற்பட்ட போது அவர்களிடம் “வாரண்டு இருக்கிறதா?” என்று சீறினீரே, நினைவிருக்கிறதா? மூன்று இலட்சம் மக்களைச் சிறைமுகாமில் அடைப்பதற்கு வாரண்டு இருக்கிறதா? என்று இராசபட்சரிடம் நீர் கேட்காதது ஏன்? சர்வதேசச் சட்டங்களும் உள்நாட்டுச் சட்டங்களும் அந்தத் தமிழ் மக்களுக்கு மட்டும் பொருந்த மாட்டா என்பதுதான் உமது நிலைப்பாடா?

வன்னி முகாம்களில் கழிப்பறை தொடர்பாக ஒரு சிக்கல் உள்ளது என்று இந்து பேட்டியில் இராசபட்சர் ஒப்புக் கொள்கிறார். அந்த ஒரு சிக்கல் எத்தகையது தெரியுமா உமக்கு? 800 பேருக்கு ஒரு கழிப்பறை மட்டுமே இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். உமது வீட்டிலும் அலுவலகத்திலும் எத்தனைப் பேருக்கு எத்தனைக் கழிப்பறை என்பதோடு இந்த கணக்கை ஒப்பிட்டுப் பார்ப்பீரா? குற்றமிழைத்துச் சிறைப்படுகிறவர்களுக்குக் கூட அரசு கழிப்பறை வசதி செய்து தந்தாக வேண்டும் என்னும் போது ஒரு குற்றமும் செய்யாமல் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்குக் குறைந்த பட்சக் கழிப்பறை வசதிகூட அரசு செய்து தர வேண்டாமா? இந்தக் கேள்வியை இராசபட்சரிடம் நீர் கேட்டிருக்க வேண்டாமா?

கழிப்பறை வசதி தொடர்பான சிக்கலுக்கு இராசபட்சர் ஐ.நா. மீது பழிபோடுகிறார், நீரும் அதற்குத் தலையாட்டி விட்டு இங்கு வந்து ஐ.நா. தான் காரணம் என்று பேட்டி கொடுக்கின்றீர். இந்தியாவில் இருக்கிற ஒரு சிறைச் சாலையிலோ வேறு பொது இடத்திலோ போதிய கழிப்பறை வசதி இல்லாமைக்கு இந்திய பிரதமரோ அல்லது ஒரு மாநில முதல்வரோ ஐ.நா. மீது பழி போட்டால் நீர் அதை ஏற்றுக் கொள்வீரா?

வன்னி முகாமில் அடைபட்டிருப்போரை அவரவர் சொந்த இடங்களுக்கு உடனே அனுப்ப முடியாது என்பதற்கு இராசபட்சர் கண்ணி வெடிகளைக் காரணம் காட்டுகிறார். கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்கள் அம்மக்களுக்கே நன்கு தெரியும் என்பதும், கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு அவர்களே உதவ முடியும் என்பதும் இராசபட்சருக்குத் தெரியாதா? கண்ணிவெடி என்பது அம்மக்களைச் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல விடாமல் தடுப்பதற்கான நொண்டிச் சாக்குதான் என்பது உமக்குத் தெரியாதா? உள்நாட்டு அகதிகளின் மீள் குடியமர்த்தத்திற்குக் கண்ணி வெடிதான் தடை என்றால், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதியுயர் பாதுகாப்பு வளையங்கள் அமைப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டிருப்பது ஏன்?

முள்ளிவாய்க்காலில் கடைசி வரை தங்கி நின்று மருத்துவச் சேவை புரிந்த மூன்று மருத்துவர்களும் பாதுகாப்பு வளையப் பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது பொய் என்று இராசபட்சர் பேட்டியின் போது அவரது செயலர் லலித் வீரதுங்கா உம்மிடம் சொல்கிறார். இது பிரண்ட்çலைனில் முரளிதர் ரெட்டியும் கார்டியனில் நீரும் எழுதியதற்கு முரண்பாடாக இல்லையா? பாதுகாப்பு வளையத்தில் சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாக முரளிதர் ரெட்டி எழுதுகிறார். பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்விதத்தும் குறைவானதன்று என நீரும் கார்டியனில் எழுதுகிறீர். ஆனால் பொது மக்கள் கொல்லப்பட்டதாகவோ காயமடைந்ததாகவோ சொல்வது பொய் என்று இராசபட்சரும் அவரது செயலரும் வலியுறுத்திச் சொல்லும் போது வாய் பொத்திக் கேட்டுக் கொள்கிறீர், ஏன்?

பேட்டியில் இராசபட்சர் சொல்கிறார்: “எனது கோட்பாடு இதுதான்: இலங்கையில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை. நாட்டை நேசிப்பவர்களும், நேசிக்காதவர்களும் மட்டுமே உள்ளனர்.”” சிறுபான்மை இனம் என்று எதுவும் இல்லையயன்றால் பெரும்பான்மை இனமும் இருக்க முடியாதல்லவா? அதாவது இலங்கையில் சிங்களர்களோதமிழர்களோயாரும் இல்லை என்று பொருள். பௌத்தர்களோஇந்துக்களோ இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ யாரும் இல்லை என்று பொருள். அப்படியானால் இராசபட்சர் சிங்கள பௌத்தர் இல்லையா? இந்தக் கேள்வியை நீர் ஏன் கேட்கவில்லை? இராசபட்சரின் உண்மையான நோக்கம் தமிழர்களோ முஸ்லீம்களோ யாரும் இல்லை என்று வாதிடுவதின் மூலம் இனச் சிக்கலைத் தீர்த்துக் கட்டுவதுதான் என்பதுகூட உமக்கு விளங்கவில்லையா? விளங்கினாலும் தமிழன் ஒழிந்தால் சரி என்று அமைதி காத்தீரா?

கார்டியன் கட்டுரையில் சமத்துவம் பற்றி எழுதினீர். ஆனால் இராசபட்சரைச் சந்தித்த போது இருமொழிகளுக்கும் சமத்துவம் கொடுப்பீரா என்ற கேள்வியை நீர் கேட்காதது ஏன்?

கார்டியன் கட்டுரையில் கூட்டாட்சி வழிப்பட்ட சுயாட்சியின் தேவை பற்றி எழுதுகிறீர். ஆனால் பேட்டியில் இராசபட்சர் “இந்த நாட்டில் கூட்டாட்சிக் கொள்கைக்கு இடமே இல்லை” என்று திட்டவட்டமாக அறிவிக்கும் போது நீர் வாதத்திற்காகக் கூட மறுப்புச் சொல்லவில்லையே, ஏன்? இனக்குழுக்கள் ஒன்று கலக்க வேண்டும், சிங்களர்களும் தமிழர்களும் இசுலாமியர்களும் கலப்புத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், இதுதான் இனச் சிக்கலுக்குத் தீர்வு என்ற இராசபட்சரின் முன்மொழிவு உமக்கு உடன்பாடானதா?

சிறுபான்மையர் யாரும் இல்லை என்றும் இனக்கலப்பு நடைபெற வேண்டுமென்றும் இராசபட்சர் சொல்வதன் உண்மையான உள்நோக்கம் சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு தமிழர் தாயகத்தை ஒழித்துக் கட்டுவதுதான் என்ற உண்மை எல்லாருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும் போது உமக்கு மட்டும் விளங்கவில்லையா? அல்லது நீரும் இந்தச் சூழ்ச்சிக்கு உடந்தையா?

இந்து ஏடு விடுதலைப் புலிகளைக் கருத்து ரீதியாகவே எதிர்ப்பதாக ஜல்னியர் விகடன் பேட்டியில் கூறியுள்ளீர். விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்களோடு உமக்குள்ள உறவும் கருத்து ரீதியான உறவுதான் என்று இதற்கு பொருள் கொள்ளலாமா?

இலங்கையில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் ஒவ்வொரு சிங்களத் தலைவரோடும் அவர் அதிகாரத்தில் இருக்கும் வரை நீர் நெருங்கி இருப்பதன் இரகசியம் என்ன? இதுவும் வெறும் கருத்து ரீதியாகத்தானா?

இந்து ஏடு இலங்கைச் செய்திகளை வெளியிடும்போது நடுநிலை காப்பதில்லை என்ற குற்றச் சாட்டை நீர் மறுக்கிறீர். இருதரப்புச் செய்திகளையும் வெளியிடுவதாகச் சொல்லிக் கொள்கிறீர். நான்காம் ஈழப் போரின் போது சிறிலங்கா அரசு ஜெனிவா ஒப்பந்தத்துக்கு மாறாகப் பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகள் வீசுவதாக பி.பி.சியும் சி.என்.என்‡னும் செய்தி அறிவித்தன. உமது இந்து ஏடு ஒரு மூலையில் இரு வரிச் செய்தியாகக் கூட இதை வெளியிடவில்லையே, ஏன்?

கடந்த பல ஆண்டுகளாகவே சிங்கள இனவெறி அரசை உமது இந்து ஏடு நேரிடையாக ஆதரித்து வருவதும் தமிழர்களுக்கெதிரான செய்திகளையும் கருத்துகளையும் மட்டுமே தாங்கி வருவதும் தொடர்ந்து இந்து படிக்கிற ஒவ்வொருவருக்கும் தெரியும். அப்படி இல்லை என்று சாதிக்கிறீரே, நீர் இந்து படிப்பதில்லையா?

ஒடுக்கப்பட்ட தமிழர்களின் கோணத்திலிருந்து எழுதப்பட்ட ஒரே ஒரு கட்டுரையையாவது இந்து வெளியிட்டதாக உம்மால் காட்ட முடியுமா? சிங்கள அரசின் கொடுஞ்செயல்களைக் குறை சொல்லி ஆசிரியருக்கு எழுதப்படும் கடிதங்களையும் கூட தணிக்கை செய்கிறீர் என்பதை மறுக்க முடியுமா?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் பொதுமக்களிடையே காணப்படும் பரிவுணர்ச்சியைக் கூட உம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதைக்கூட  விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவாளர்களின் சூழ்ச்சித் திட்டம் என்று குற்றம் சாட்டுகிறீர் (2008 அக்டோபர் 17 இந்து). இந்தக் குற்றச் சாட்டின் மூலம் தமிழ் மக்களின் இன உணர்வைக் கொச்சைப்படுத்துகிற உமக்கு நம் நாடு, நம் ஏடு என்று தமிழ்நாட்டின் வரைபடத்தைப் போட்டு விளம்பரப்படுத்திக் கொள்ள உரிமை ஏது?

அப்பாவித் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு புரியும் கொடுமைகளைச் செய்திகளாக வெளியிடாமல், சிங்களப் படையினர்க் கெதிராகப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களை மட்டுமே வெளியிட்டு வந்தீரே, ஏன்?

“நம்பத்தக்கதும் செயல்படுத்தக் கூடியதுமான ஓர் அரசியல் தீர்வு இப்போது கண்ணுக் கெட்டும் தொலைவில் இருப்பதால், விடுதலைப் புலிகளுக்கெதிராக இராணுவ நடவடிக்கைகள் தொடங்குவது கொழும்புவிற்கு எளிதாகி விட்டது. ஒரு தேசமாக உயிர்பிழைத்து வாழ்வதற்கு அடிப்படை அச்சுறுத்தலாக அமைகிற எந்த பயங்கரவாத அமைப்பையும் ஒழித்துக்கட்ட இந்தியாவுக்கு இருப்பது போலவே சிறிலங்காவிற்கும் இறைமை சார்ந்த உரிமை உண்டு என்பதே உண்மை”” (2008 அக்டோபர் 17 இந்து) என்று எழுதுகிறீர். இது இறைமையின் பெயரால் அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துதல் அல்லாமல் வேறென்ன? பயங்கரவாத அமைப்பை இராணுவ நடவடிக்கை மூலம் ஒழித்துக் கட்டுவதுதான் பயங்கரவாதத்துக்குத் தீர்வு என்று யாரிடமிருந்து கற்றுக் கொண்டீர்? அமெரிக்க அதிபராய் இருந்த புஷ்´டமிருந்தா?

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் வன்முறையாளர்கள் என்றும் திரும்பத் திரும்ப படம் பிடித்துக் காட்டுகிறீர். நீர் உண்மையிலே வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரானவரா? உமது ஆதரவுக்கும் போற்றுதலுக்கும் உரிய கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் அகிம்சாவாதியா? பயங்காரவாதம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாதா? கருணாவின் ஒட்டுக் குழுவினர் குழந்தைகளைக் கட்டாயப்படுத்திப் படையில் சேர்த்ததாகவும், பயங்கரவாத உத்திகளைப் பயன்படுத்தியதாகவும், புலிகளை ஒழிப்பதன் பெயரால் அப்பாவித் தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாகக் கொலை செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைப் பொய் என்கிறீரா? கருணா விடுதலைப் புலியாக இருந்த பொழுது பயங்கரவாதி, சிங்கள அரசின் கைக்கூலியான பின் அமைதி விரும்பி என்பதுதான் உமது நிலைப்பாடா?

சென்னையில் 2006 மார்ச் 2ஆம் நாள் பிரண்ட்லைன் ஏடு மீண்டும் தொடங்கப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சீரும் சிறப்பும் வாய்ந்த விருந்தினர்களின் பட்டியலை மறு நாள் இந்து நாளேடு வெளியிட்டது. அந்தப் பட்டியலில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எஸ்.பி. தியாகராஜன், அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவர் சாந்தா, துயர்தணிப்பு ஆணையர் சந்தானம், முன்னாள் அரசுச் செயலர் பி. முராரி, தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் எம். கிருஷ்ணசாமி, அயல்நாட்டுத் தூதர்கள், தொழிலதிபர்கள்,    சமூக அறிவியலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு நடுவில் இடம் பெற்றவர் டக்ளஸ் தேவானந்தா ‡ அப்போதும் இப்போதும் சிறிலங்கா அமைச்சர்களில் ஒருவர். இந்த டக்ளஸ் தேவானந்தா உமக்கு நெருங்கிய கூட்டாளி என்பதும், அடிக்கடி உம்மைப் பார்த்து அறிவுரை பெற்றுச் செல்கிறவர் என்பதும் ஊரறிந்த செய்திகள், இந்த டக்ளஸ் தேவானந்தா பயங்கரவாதம் என்றால் என்னவென்றே தெரியாத அமைதியான அரசியல் தலைவர் என்று உம்மால் சொல்ல முடியுமா?

உமது நெருங்கிய நண்பர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்வரலாறு உமக்குத் தெரியாமல் இருக்க முடியாது. டக்ளஸ் தேவானந்தாவும் அவருடைய கூட்டாளிகளும் சென்னை சூளைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைமையகமாகச் செயல்பட்ட வீட்டில் தங்கியிருந்த பொழுது, அங்கே ஒரு தீபாவாளி நாளில் மக்களிடம் வம்பு செய்து சண்டை வளர்க்கப் போய், டக்ளஸ் வீட்டுக்குள் சென்று தானியங்கித் துப்பாக்கியை எடுத்து வந்து திருநாவுக்கரசு என்பவரைச் சுட்டுக் கொன்று மேலும் நால்வரைக் காயப்படுத்தியதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறீரா?

1987 சனவரியில் பிணை விடுதலை பெற்ற டக்ளஸ் தேவானந்தா பத்து வயதுச் சிறுவன் ஒருவனைக் கடத்திப் போய் ஏழு இலட்சம் ரூபாய் பிணைத் தொகை கேட்டதாக 1988 நவம்பரில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதும், பிறகு அவர் கைது செய்யப்பட்டு 1989 சனவரியில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டதும், ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டதும் உமக்குத் தெரியுமா? ஏழைத் தமிழ் இளைஞரைக் கொலை செய்து பத்து வயது ஈழச் சிறுவனைக் கடத்திய டக்ளஸ் தேவானந்தா உமக்கு நெருங்கிய கூட்டாளி, நீர் நடத்தும் விழாவில் முக்கிய விருந்தினர் என்பதிலிருந்து உம்மைப் பற்றியும் உமது இலங்கை அரசியலைப்  பற்றியும் என்ன புரிந்து கொள்வது?

கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்ற இனத் துரோகிகளுக்கும் கேடுகெட்ட சமூக விரோதக் குற்றவாளிகளுக்கும் நீர் கொடுத்து வரும் ஆதரவின் தொடர்ச்சியாகவே சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட விஜயேந்திரருக்கு (காஞ்சி மடம்) நீர் சாரதி வேலை பார்த்தீர் என்று புரிந்து கொள்ளலாமா?

சரியோ  தவறோ தமிழ் மக்கள் தங்கள் தலைவராகப் பிரபாகரனையே மதித்தார்கள் என்று இராசபட்சரே உமக்களித்த பேட்டியில் ஒப்புக் கொண்டிருப்பதைக் கவனீத்தீரா? அவர் தமிழீழத்தின் தேசியத் தலைவர் என்பதற்கு இதற்கு மேலும் சான்று தேவையா? கருணா, டக்ளஸ் தேவானந்தா, விஜயேந்திரர் போன்ற சமூக விரோதக் குற்றவாளிகளையயல்லாம் பாதுகாத்துக் கொண்டு, இனக் கொலைஞன் இராசபட்சனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் உமக்கு மாற்றாரும் ஏற்றுக் கொள்ளும் மாபெரும் தேசியத் தலைவனைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதி ஏது?

பாரம்பரியம் மிக்கதென்று சொல்லப்படும் இந்து ஏட்டை சிங்களப் பேரினவாதப் பாசிசத்தின் ஊதுகுழலாகச் சீரழித்து விட்டீர், ‘இந்தியாவின் தேசிய நாளிதழை’ தமிழ்நாட்டின் இனப் பகை நாளிதழாகக் கெடுத்து விட்டீர். இந்த மாற்றத்தின் அடையாளமாக உமது இலச்சினையில் இடம்பெற்றுள்ள காமதேனுப் பசுவையும் பட்டத்து யானையையும் நீக்கி விட்டு, சிங்களனின் வாளேந்திய சிங்கங்களை இடம் பெறச் செய்வீரா?  நீர் ‘சிறிலங்கா ரத்னா’ ஆனது போல் இந்துவை சிங்கள தேசிய நாளிதழ் என்று அறிவித்துக் கொள்வீரா?

Pin It