இது சென்னை நகரமெங்கும் தி.மு.க சார்பில் ஒட்டியுள்ள சுவரொட்டி. இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை கிடைத்து விட்டதா? அதைக் கலைஞர் பெற்றுத் தந்தாரா? என்ன விடுதலை? தேசிய விடுதலையா? இன விடுதலையா? எப்போது கிடைத்தது? அதைக் கலைஞர் பெற்றுத் தந்தாரா? எப்படி? ஈழ விடுதலை எல்லாம் இனி நடக்கப் போவதில்லை என்றுதான் கலைஞர் அறிவித்து விட்டாரே, இப்போது எப்படி விடுதலை பெற்றுத் தருவார்?

முல்லைத் தீவிலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் புலம் பெயர்ந்து சென்று, போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள இராணுவத்திடம் சிக்கி வன்னி முகாம்களில் அடைபட்டிருக்கும் மூன்று இலட்சம் தமிழர்களை அவரவர் சொந்த இடத்துக்கே திருப்பி அனுப்புவதைத்தான் தி.மு.க சுவரொட்டி விடுதலை என்று சொல்கிறது போலும். சரி, இதுவும் ஒரு வகை விடுதலைதான்! சிறையிலிருந்து விடுதலை!

 ஆனால் இந்த விடுதலை எத்தனைப் பேருக்கு? எப்போது? டி.ஆர்.பாலு தலைமையிலான ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை சென்று வந்து அறிக்கை அளித்த பின் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு ‡ இலங்கையின் உள்நாட்டு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களில் 58,000 பேர் 15 நாளில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் சொந்த இடத்துக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிபர் இராசபட்சர் தமிழக நா.உ. குழுவிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழக முதல்வர் சொல்வது உண்மையாக இருந்து, இராசபட்சரும் வாக்குத் தவறவில்லை என்றால் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் 58,000 பேர் 15 நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்பலாம். எஞ்சிய இரண்டு லட்சம் பேருக்கு விடுதலை உண்டா? எப்போது? இது பற்றி நா.உ. குழுவோ முதலமைச்சரோ எதுவும் சொல்லவில்லை.

இன்னும் 15 நாளில் 58 ஆயிரம் பேருக்கு விடுதலை என்பதற்கு இலங்கைத் தமிழர்கள் நான்கே நாட்களில் விடுதலை என்று பொருள் கண்ட புலவர் யாரோ?

சரி, கலைஞர் சொன்னதாவது உண்மையா? ஏடுகளில் வந்துள்ளபடி, நா.உ. குழு அறிக்கையில் அப்படித் திட்டவட்டமாகச் சொல்லப்படவில்லை. அது ஒரு நம்பிக்கையாக மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. இராசபட்சரின் ஊதுகுழலான இந்து மட்டும்தான் கலைஞர் சொன்னது போல் இராசபட்சர் உறுதியளித்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது. இதை வைத்து ஆசிரியவுரையும் தீட்டி விட்டது - கலைஞரின் அரசியல் வித்தகத்தைப் போற்றி!

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். கலைஞரின் புளுகும் இந்துவின் புரட்டும் ஒரு நாளைக்குக் கூட தாங்கவில்லை. கொழும்பில் ஒரு பன்னாட்டு மாநாட்டில் பேசும் போது தமிழர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்து மீள்குடியமர்த்தம் செய்வதற்கு நீண்டகாலம் ஆகும் என்று கூறியுள்ளார். கண்ணி வெடிகளை அகற்றுவது எளிதல்ல என்பதே அவர் சொல்லியுள்ள காரணம்.

சிறிலங்காவின் செய்தித் துறை அமைச்சர் அனுரா பிரியதர்சன் யாப்பா 58 ஆயிரம் தமிழர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளார்.

வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள முகாம்களிலிருந்து கடந்த சில நாட்களில் விடுதலை செய்யப்பட்ட சில ஆயிரம் தமிழர்களும் யாழ்ப்பாணம் பகுதிக்கே அனுப்பப்பட்டுள்ளார்கள். 1995 முதற்கொண்டு இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வளையங்கள் அமைப்பதற்காக விரட்டியடிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் ஒரு பகுதியினர்தான் இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள். இவர்களில் யாரும் அண்மையப் போரில் அகதிகளாக்கப்பட்டவர்கள் அல்ல.

முல்லைத் தீவு, கிளிநொச்சிப் பகுதிகளிலிருந்து அகதிகளாக்கப்பட்டு முகாமில் இருப்பவர்கள் நிலைதான் படுமோசம், படுபயங்கரம். இம்மக்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள். பல குடும்பங்கள் புலிக் குடும்பங்கள் அல்லது மாவீரர் குடும்பங்கள். எனவேதான் இவர்களைத் திட்டமிட்டே துன்புறுத்தி அழித்து வருகிறது இராசபட்சரின் ஆட்சி. இந்த மக்களின் உடனடி விடுதலைதான்.  நம் அவசர கோரிக்கை இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவே சிங்கள ஆட்சியாளர்கள் வேறு சில முகாம்களிலிருந்து வேறு சிலரை விடுவித்துப் படம் காட்டுகிறார்கள். இந்தத் திசை திருப்பலுக்குத் தமிழக நா.உ. குழுவின் பயணத்தையும் கருணாநிதியின் இரண்டகக் குணத்தையும் விளம்பர மோகத்தையும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

கருணாநிதி தெரிந்தே புளுகக் கூடியவர்தான். சென்ற ஏப்பிரல் 27இல் காலை முதல் நடுப்பகல் வரை 5 மணி நேர சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து அவர் நடத்திய நாடகத்தை மறக்க முடியுமா?

போர் நின்று விட்டது, இது  என் போராட்டத்தின் சாதனை என்றார். போரை நிறுத்தவில்லை, கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதைத்தான் நிறுத்தியுள்ளோம் என்று சிங்கள அரசு அறிவித்தது. ஆனால் அதைக் கூட அவர்கள் செய்யவில்லை. கடைசி மூன்று நாளில் மட்டும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. இனப் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த போதே, தில்லி சென்று பதவிக்காக சக்கர நாற்காலியில் சுழன்றவர்தான் கருணாநிதி.

முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சிங்கள ஆட்சியாளர்களிடம் கெஞ்சிப் பெறக் கூடியதன்று. அதற்கு வாய்ப்பே இல்லை. சிங்கள அரசையும் அதன் கொலைக் கூட்டாளியான இந்திய அரசையும் உறுதியாக எதிர்த்துப் போராடுவதன் மூலமே தமிழ் மக்களை விடுவிக்க முடியும்.

வேறு குறுக்கு வழி தேடுகிறவர்கள் யாரானாலும் அவர்களின் நோக்கம் ஐயத்திற்குரியதே.

ஏமாற்றுகிறவர்கள் திருந்தப் போவதில்லை, ஏமாறாமலிருக்கத் தமிழர்கள்தாம் கற்றுக் கொள்ள வேண்டும். 

Pin It