டாக்டர் உ.வே. சாமிநாதையர் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை ஆசிரியர் பணியிலும், பழந்தமிழ் நூல் பதிப்புப் பணியிலும் ஈடுபட்டு உழைத்துக் கழித்திருக்கிறார். வாழ்நாளின் இறுதிக் காலங்களில் தான் கட்டுரைகள் பல எழுதி வெளியிட்டிருக்கிறார். உத்தமதானபுரத்திலிருந்து மாயூரம் சென்று (1870) மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர் களிடம் மாணவராகச் சேர்ந்து பயின்ற காலம் தொடங்கி, கல்லூரிகளில் (1880 - 1919) தமிழாசிரியராகப் பணி யாற்றியது வரையிலான அனுபவங்களையும்,
இந்தப் பணிகளுக்கிடையில் செய்துவந்த பழந்தமிழ் நூல் பதிப்பாக்கத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும், ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இறுதிக் காலங்களில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக 1930 - 1942 எனும் கால இடை வெளியில்தான் சாமிநாதையரின் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. பன்னிரண்டு ஆண்டு கால இடைவெளியில் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். சாமிநாதையரின் வயதைக்கொண்டு நோக்கும் பொழுது 75ஆம் வயது முதல் 87ஆம் வயது வரை யிலான காலப்பகுதியில்தான் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
திருவாவடுதுறை மடத்தில் மாணவராக இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள், கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றியபோது சந்தித்த மாணவர்கள், ஆசிரியர்களுள் சிலரைப் பற்றியும், ஆளுமைகள், பெற்ற அனுபவங்கள் பற்றியும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார். பழந்தமிழ் நூல்பதிப்புப் பணியின்போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்த கட்டுரைகளும் சாமிநாதையர் கட்டுரைத் தொகுப்பினுள் உள்ளன.
தம் குடும்ப முன்னோர்களுள் சிலரைப் பற்றியும், தமக்கு ஆசிரியராக இருந்து விளங்கியவர்களுள் சிலரைப் பற்றியும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டிருக்கிறார். சாமிநாதையர் பழந்தமிழ் நூற்பதிப்புப் பணியின்பொருட்டுச் சுவடிகளைத் தேடிப் பல ஊர்களுக்குப் பயணம்மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பயண அனுபவங்களைத் தாம் பதிப்பித்த நூல்களின் முகவுரையில் குறிப்பிட்டிருந்தாலும் பிற் காலங்களில் அந்த அனுபவங்களைக் கட்டுரை களாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்து (1903) ஆசிரியர் பணியை ஏற்ற பின்னர் பல பெரும் ஆளுமைகளின் நட்பு அவருக்குக் கிடைக்கப்பெறுகிறது. அந்த நட்பு எல்லைக்குள் பேராளுமைகளாக விளங்கிய பலர் இருந்தனர். அவற்றுள் சிலரைக் குறித்துக் கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கிறார் சாமிநாதையர். சென்னைக்கு வந்த பின்னர் அவருடைய பதிப்புப் பணியானது விரைவும், செழுமையும் பெற்றிருக்கின்றன. அந்த அனுபவங்களையெல்லாம் கட்டுரைகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.
உ.வே.சா. எழுதி வெளியிட்டுள்ள கட்டுரை களைப் பொருண்மை நிலைநின்று வகைப்படுத்தி நோக்கும்பொழுது ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது. சுமார் இருபத்தைந்து கட்டுரைகளுக்கும் மேல் ஆளுமைகள் பற்றியனவாக இருப்பது கவனிக்கத் தக்கதாகும். ஊர்களின் வரலாறு, கலை, மகளிர் தொடர்பான கட்டுரைகளும் பெருமளவு உள்ளன. தமிழின் தனிச்சிறப்பு, சமயம், மனிதம் போற்றும் பொருண்மைகளிலும் கட்டுரைகள் காணப்படு கின்றன.
உ.வே.சா. பல்வேறு இதழ்களில் எழுதி வெளியிட்டுவந்த கட்டுரைகள், பிற்காலத்தில் அவர் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்ட, நான் கண்டதும் கேட்டதும் (முதல் பதிப்பு, 1936, இரண்டாம் பதிப்பு, 1938), புதியதும் பழையதும் (முதல் பதிப்பு, 1936, இரண்டாம் பதிப்பு, 1939), நினைவு மஞ்சரி (முதல் தொகுதி, முதல் பதிப்பு, 1940), நல்லுரைக்கோவை (நான்கு தொகுதிகள், முதல் பதிப்பு, 1937, 1938, 1939) ஆகிய தொகுப்பு நூல்களில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பு நூல்களில் 139 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
உ.வே.சா. தாம் தொகுத்து வெளியிட்ட தொகுப்புகளில் இடம்பெறாத கட்டுரைகள் சிலவும் உள்ளன. அந்த வகையில் கீழ்வரும் பதின்மூன்று கட்டுரைகள் உள்ளன.
- சாதுரிய வசனங்கள், கலைமகள், தொகுதி 22, பகுதி 132, 1942, இவரைப் பற்றிப் பொன்னம்பலப் பிள்ளையின் திருப்பணி எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதி, கலைமகள், தொகுதி 17, பகுதி 97 - 102, 1940இல் வெளியிட்டுள்ளார்.
- மஹாலிங்க சாஸ்திரிகள், கலைமகள், தொகுதி 22, பகுதி 131, 1942
- சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், கலைமகள், தொகுதி 23, பகுதி 136, 1943
- ராஜா ஸர் அண்ணாமலை செட்டியார்,Annamalai Chettiyar, Commemoration, (vo1. 2)
- தமிழ் மகள் திருநாள் (சதாபிஷேக ஏற்புரை), கலைமகள், தொகுதி 7, பகுதி 37 - 42, 1935
- திருவிடைமருதூர் வசந்தமகோற்சவம், தென்னிந்திய வர்த்தமானி, தஞ்சை, 16.6.1904
- கரிகாற் சோழன், சிவநேசன் ஆண்டுமலர், திங்கள் 4, 1932
- வல்வில் ஓரி, கலைமகள், தொகுதி 18, பகுதி 104, 1940
- புலவர் புகழ், சிவநேசன், ஆண்டு 7, திங்கள் 10, 1934
- தமிழ்நூல்களும் வைத்தியமும், 1935ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் அகஸ்தியர் திருநாளில் செய்த பிரசங்கத்தின் ஒருபகுதி இது. இக்கட்டுரை கலைமகள், தொகுதி 23, பகுதி 138, 1943இல் வெளிவந்துள்ளது.
- தமிழ் அன்பர் மகாநாடு (வேண்டுகோள்), சித்தாந்தம், மலர் 6, இதழ் 11, 1933; 23 அக்டோபர், 1933இல் சிவநேசன் பத்திரிகை யிலும் வெளிவந்ததுள்ளது.
- தமிழ்க்கல்வி, சிவநேசன், ஆண்டு 7, திங்கள் 1, 1933
- நல்லொழுக்கம், விவேகபோதினி, அக்டோபர் - நவம்பர், 1916, இந்தக் கட்டுரை சங்கராபரணம் நரசையர் பற்றியனவாகும். இவரைக் குறித்துக் கலைமகள், தொகுதி 7, பகுதி 37 - 42, 1935-இல் ‘சங்கராபரணம் நரசையர்’ என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
எட்டு கட்டுரைகள் 1937இல் வெளிவந்த செய்யுள் வாசகத் திரட்டு (பாகம் - 2) எனும் தொகுப்பு நூலில் உள்ளன; இத்தொகுப்பு நூல் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்த வித்துவான் கீ. விசுவநாதையர் அவர்களும் இணைந்து பதிப்பித்து வெளியிட்டதாகும். இந்நூல் அன்றைக்குத் தமிழ் பயின்றுவந்த மாணவர்களுக்குப் பயன்படும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள கட்டுரைகள்,
- சங்கத் தமிழ்
- ஐவகை நிலங்கள்
- கல்வி முறை
- கௌதம புத்தரும் அவருடைய உபதேசங்களும்
- யூகியின் ஆற்றல்
- திருச்சிற்றம்பலம்
- தமிழ் உரைநடை
- பணத்தின் வரலாறு
என்பனவாகும்.
கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகாவைத்தியநாதையர், வித்துவான் தியாகராச செட்டியார் ஆகியோர்களைப் பற்றி கலைமகள் இதழில் தொடர்களாக எழுதி வெளி யிட்டு வந்து, பின்னர் இதே பெயர்களில் தனித் தனி நூலாக வெளியிட்டிருக்கிறார். வித்துவான் தியாகராச செட்டியாரைப் பற்றிய வரலாறு கலைமகள் இதழில் விக்கரம வருடம் தை மாதம் முதல் சித்ராபானு வருடம் ஐப்பசி மாதம் (1940 - 1942) வரையில் தொடராக எழுதி வெளியிட்டுவந்திருக்கிறார்; இது அவர் மறைவிற்குப் பின்னர் அவரது திருமகனார் கலியாணசுந்தர ஐயரால் நூலாகத் தொகுத்து வெளியிடப்பட்டிருக்கிறது. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவின் நூல் வடிவமாகும்.
நான் கண்டதும் கேட்டதும், புதியதும் பழையதும், நினைவு மஞ்சரி, நல்லுரைக்கோவை ஆகிய தொகுப்புகளில் உள்ள 139 கட்டுரைகளுடன் செய்யுள் வாசகத் திரட்டிலுள்ள எட்டுக் கட்டுரைகள், தொகுப்பில் இடம்பெறாத பதின்மூன்று கட்டுரை களையும் ஒருங்கே சேர்த்து நோக்கும்பொழுது 160 கட்டுரைகள் உ.வே.சா. எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அக்கட்டுரைகளை நம் புரிதலுக்காகக் கீழ்வருமாறு வகைப்படுத்தி நோக்குவது வசதியாக இருக்கும்.
ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள்
- குமரகுருபரர் (நல்லுரைக்கோவை - 2)
- கூத்தரும் குலோத்துங்கனும் (நல்லுரைக் கோவை - 3)
- சங்கராபரணம் நரசையர் (புதியதும் பழையதும்)
- சிவசிதம்பரம் (நல்லுரைக்கோவை - 4)
- சுப்பிரமணிய பாரதியார் (நினைவு மஞ்சரி - 2)
- தாசில் அனந்தராமையர் (நல்லுரைக் கோவை - 4)
- ராஜா கனபாடிகள் (நினைவு மஞ்சரி - 2)
- திவான் ஸர். அ. சேஷையா சாஸ்தியார் (நல்லுரைக்கோவை- 3)
- பாபநாச முதலியார் (நினைவு மஞ்சரி - 2)
- பூண்டி அரங்கநாதமுதியார் (நல்லுரைக் கோவை - 1)
- பெரிய திருக்குன்றம் சுப்பராமையர் (நினைவு மஞ்சரி - 1)
- பெரிய வைத்தியநாதையர் (நல்லுரைக் கோவை - 2)
- பொன்னம்பலப் பிள்ளையின் திருப்பணி (நினைவு மஞ்சரி - 1) (பொன்னம்பலப் பிள்ளை பற்றிய கட்டுரை)
- மணி ஐயர் (நினைவு மஞ்சரி - 1)
- மருதபாண்டியர் (நான் கண்டதும் கேட்டதும்)
- ராமதாசர் (நல்லுரைக்கோவை - 4)
- வண்டானம் முத்துசாமி ஐயர் (புதியதும் பழையதும்)
- வன்றொண்டர் (நல்லுரைக்கோவை - 1) (நாராயாண செட்டியார் பற்றிய கட்டுரை)
- வி. கிருஷ்ணசாமி ஐயர் (நினைவு மஞ்சரி - 1)
- வேங்கடராம பாகவதர் (நல்லுரைக் கோவை - 4)
- ஜட்ஜ் முத்துசாமி ஐயர் பழமை பாராட்டியது (நல்லுரைக்கோவை - 2) (ஜட்ஜ் முத்துசாமி ஐயர் பற்றிய கட்டுரை)
- ஸர். பொன்னம்பல இராமநாததுரை (நினைவு மஞ்சரி - 2)
- ஸ்ரீமுத்துசாமி தீக்ஷிதர் (நல்லுரைக் கோவை - 2)
- வித்துவான் தியாகராச செட்டியார் (நல்லுரைக்கோவை - 4)
- நான் கேட்டபடி (நல்லுரைக்கோவை - 2) (ஆறுமுகநாவலர் பற்றிய கட்டுரை)
ஊர் பற்றிய கட்டுரைகள்
- அரியிலூர் (நல்லுரைக் கோவை -1)
- உடையார்பாளையம் (நல்லுரைக்கோவை - 2)
- கும்பகோணம் (நினைவு மஞ்சரி - 2)
- சில ஊர்களைப் பற்றிய குறிப்புகள் (திருப்பனந்தாள், திருவேட்டீசுவரன் பேட்டை, வேலூர், திருச்சிராப்பள்ளி) (நினைவு மஞ்சரி - 2)
- திருமலைராயன் பட்டணம் (நினைவு மஞ்சரி - 2)
ஏடு தேடிய அனுபவம் பற்றிய கட்டுரைகள்
- இன்னும் அறியேன் (நல்லுரைக்கோவை - 3)
- உதிர்ந்த மலர்கள் (நல்லுரைக்கோவை - 4)
- திருக்குறளால் வந்த பயன் (புதியதும் பழையதும்)
- திருமலைராயன் பட்டினத்தில் ஏடு தேடியது (நல்லுரைக்கோவை - 3)
- நிலவில் மலர்ந்த முல்லை (நல்லுரைக் கோவை - 2)
- பரம்பரைக்குணம் (நான் கண்டதும் கேட்டதும்)
- மாவிந்த புராணம் (நினைவு மஞ்சரி - 1)
கல்லூரிப்பணிக்கால அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள்
- அடுத்த குறள் (நினைவு மஞ்சரி - 1)
- அப்படிச் சொல்லமாமா (நல்லுரைக் கோவை - 1)
- ஆத்திரத்திற்கு ஏற்ற தண்டனை (நினைவு மஞ்சரி - 2)
- என்னுடைய ஞாபகங்கள் (நினைவு மஞ்சரி - 2)
- கிணற்றில் விழுந்த மிருகம் (புதியதும் பழையதும்)
- சிறைநீக்கிய செய்யுள் (புதியதும் பழையதும்)
- திருடனைப் பிடித்த விநோதம் (நல்லுரைக் கோவை - 4)
- பழைய மேஜை (நல்லுரைக்கோவை - 4)
- பெற்ற மனம் (நினைவு மஞ்சரி - 1)
- மன்னார்சாமி (நினைவு மஞ்சரி - 1)
- மாணாக்கர் விளையாட்டுகள் (நல்லுரைக் கோவை - 3)
- வில்லைச் சேவகன் (நினைவு மஞ்சரி - 2)
- ஸ்வாமி இருக்கிறார் (புதியதும் பழையதும்)
நூலாராய்ச்சி அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள்
- அந்தத் தொடிசு (நினைவு மஞ்சரி - 1)
- கடல்கடந்து வந்த தமிழ் (நினைவு மஞ்சரி - 1)
- கள்ளனும் புலியும் (நினைவு மஞ்சரி - 2)
- கும்மாயம் (நல்லுரைக்கோவை - 4)
- படக்காட்சி (நல்லுரைக்கோவை - 4)
- பவ்ய ஜீவன் (நல்லுரைக்கோவை - 4)
- மணிமேகலையும் மும்மணியும் (நினைவு மஞ்சரி - 1)
திருவாவடுதுறை மடத்திலிருந்தபொழுது கிடைத்த அனுபவங்கள் பற்றிய கட்டுரைகள்
- அழைத்த காரணம் (நல்லுரைக் கோவை - 3)
- ஆவலும் அதிர்ஷ்டமும் (நினைவு மஞ்சரி -1)
- இடையன் எறிந்த மரம் (நினைவு மஞ்சரி -1)
- எங்கள் பாவம் (நினைவு மஞ்சரி -1)
- ஏழையின் தமிழன்பு (புதியதும் பழையதும்)
- சிறந்த குருபக்தி (புதியதும் பழையதும்)
- டிங்கினானே (நான் கண்டதும் கேட்டதும்)
- தமிழ்தந்த வளம் (நான் கண்டதும் கேட்டதும்)
- தர்ம சங்கடம் (புதியதும் பழையதும்)
- தருக்கடங்கின எழுத்தாளர் (புதியதும் பழையதும்)
- பாலைப் பழம் (நல்லுரைக்கோவை - 4)
- மாம்பழப் பாட்டு (புதியதும் பழையதும்)
கலைகள் தொடர்பான கட்டுரைகள்
- ஆடல்பாடல் (நல்லுரைக்கோவை -1)
- கலைகள் (நல்லுரைக்கோவை -2)
- சங்கீதப் பயிற்சி (நினைவு மஞ்சரி - 2)
- நகரங்களும் ஆலயங்களும் (நினைவு மஞ்சரி - 2)
- நாடக இலக்கியங்கள் (நினைவு மஞ்சரி - 2)
- பண்டைத்தமிழர் இசையும் இசைக் கருவிகளும் (நல்லுரைக்கோவை - 3)
- வெங்கனூர்க் கோயிற் சிற்பம் (நான் கண்டதும் கேட்டதும்)
மகளிர் தொடர்பான கட்டுரைகள்
- கண்ணீர் துடைத்த கரம் (புதியதும் பழையதும்)
- தமிழ் நாட்டுப் பெண்பாலார் (நல்லுரைக் கோவை - 2)
- பாவலர் மானங்காத்த பாவை (நினைவு மஞ்சரி - 2)
- பூசைத் தாயார் (நினைவு மஞ்சரி - 1)
- பெண்கள் கடமை (நல்லுரைக்கோவை - 3)
- பொன்காத்த கிழவி (நல்லுரைக்கோவை - 1)
- மகளிர் கல்வியும் கலைமகள் பெருமையும் (நினைவு மஞ்சரி - 2) இக்கட்டுரை சிறுநூலாக (1.6.1939) வெளிவந்துள்ளது.
தமிழின் சிறப்புகளைச் சுட்டும் கட்டுரைகள்
- அபசாரத்திற்கு உபசாரம் (நல்லுரைக் கோவை - 3)
- அவன் யார் (நல்லுரைக்கோவை - 4)
- எது தமிழ்? (நினைவு மஞ்சரி - 2)
- தமிழ் வளர்ச்சி (நல்லுரைக்கோவை - 2)
- தமிழ்நாட்டு வணிகர் (நல்லுரைக்கோவை - 2)
- பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்கள் (நல்லுரைக்கோவை - 1)
- பண்டைத் தமிழர் (நல்லுரைக்கோவை -4)
- புலவர் தைரியம் (நினைவு மஞ்சரி - 2)
சமயம் சார்ந்த கட்டுரைகள்
- அம்பலப்புளி (நினைவு மஞ்சரி - 2)
- அன்னம் படைத்த வயல் (நல்லுரைக் கோவை - 3)
- இராவுத்தர் (நல்லுரைக்கோவை - 2)
- சைவமும் தமிழும் (நினைவு மஞ்சரி - 2)
- ஹரதத்தரின் சிவபக்தி (நினைவு மஞ்சரி - 2)
- செண்டலங்காரர் (நினைவு மஞ்சரி - 1)
மனிதம் போற்றும் கட்டுரைகள்
- அபூர்வ தண்டனை (நல்லுரைக்கோவை - 4)
- அவன் போய்விட்டான் (புதியதும் பழையதும்)
- என்ன வேண்டும் (புதியதும் பழையதும்)
- ஒரு குமரன் (நல்லுரைக்கோவை - 3)
- தருமம் தலைகாக்கும் (நல்லுரைக் கோவை - 1)
- பங்கா இழுத்த பாவலர் (நான் கண்டதும் கேட்டதும்)
- யானையின் கண்ணீர் (நல்லுரைக் கோவை - 4)
வித்துவான்கள் பற்றிய கட்டுரைகள்
- உத்தம சம்பாவனை (நினைவு மஞ்சரி - 1)
- கிர்ர்ர்ரனி (நினைவு மஞ்சரி - 1)
- தலைமுறைக்கும் போதும் (புதியதும் பழையதும்)
- மானங்காத்த மைந்தர் (நான் கண்டதும் கேட்டதும்)
- ராஜா கனபாடிகள் (நினைவுமஞ்சரி - 2)
- வறுமைப்புலி (நான் கண்டதும் கேட்டதும்)
பொதுவான கட்டுரைகள்
- அகத்தைக் காட்டும் முகம் (புதியதும் பழையதும்)
- அழையா விருந்து (நல்லுரைக்கோவை - 3)
- அன்னமும் சொன்னமும் (நினைவு மஞ்சரி - 1)
- ஆளுக்கேற்ற மதிப்பு (புதியதும் பழையதும்)
- இந்திய இலக்கியக் கழகம் (நல்லுரைக் கோவை - 3)
- இரண்டு புலவர்கள் (நல்லுரைக்கோவை - 4)
- இளவரசர் துறவு (நினைவு மஞ்சரி - 2)
- உயிர் மீட்சி (நினைவு மஞ்சரி - 1)
- எனது நோக்கம் (நல்லுரைக்கோவை -2)
- ஒருவன்தானா? (நினைவு மஞ்சரி - 1)
- கச்சியப்பனை உதைத்த கால் (நல்லுரைக் கோவை - 3)
- கல்யாணப் படித்துறை (புதியதும் பழையதும்)
- குதிரையை அடக்கிய குப்பச்சி (நினைவு மஞ்சரி - 2)
- தடைப்பட்டு நிறைவேறிய கல்யாணம் (நினைவு மஞ்சரி - 2)
- தாய் நாடு (நினைவு மஞ்சரி - 1)
- தொண்டைமான் சத்திரம் (நல்லுரைக் கோவை -2)
- நாயகர் மீட்சி (நினைவு மஞ்சரி - 1)
- நான் சாமியாராக இருக்க மாட்டேன் (புதியதும் பழையதும்)
- பரிவட்டத்தியானம் (நான் கண்டதும் கேட்டதும்)
- பிச்சைப் பாட்டு (நல்லுரைக்கோவை - 4)
- பிறை முழுமதியானது (புதியதும் பழையதும்)
- பொறாமைத் தீ (நல்லுரைக்கோவை - 4)
- மந்திரியின் தந்திரம் (நல்லுரைக்கோவை - 4)
- மல்லரை வென்ற மாங்குடியார் (நினைவு மஞ்சரி - 1)
- முள்ளால் எழுதிய ஓலை (நான் கண்டதும் கேட்டதும்)
- மூப்பனார் தேசத்து ராஜா (நல்லுரைக் கோவை - 3)
- ராஜ வைத்தியம் (நல்லுரைக்கோவை - 2)
- லாடு லட்டுச் சுமை (நான் கண்டதும் கேட்டதும்)
- விதியின் திறம் (நான் கண்டதும் கேட்டதும்)
இந்தக் கட்டுரைகளுள், உ.வே. சாமிநாதையர் பல்வேறு விழாக்களில் தலைமை வகித்து ஆற்றிய உரைகளும் கட்டுரைகளாக வடிவமைத்து இடம் பெறச் செய்யப்பெற்றுள்ளன. அந்த வகையில் கீழ்வரும் பதினாறு கட்டுரைகள் உள்ளன.
- இந்திய இலக்கியக் கழகம், சென்னையில் நிகழ்ந்த பாரதீய ஸாஹித்யபரிஷத்தின் முதலாவது மகாநாட்டு வரவேற்புப் பிரசங்கம், 27.3.37
- எது தமிழ்? திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலைய துவக்க நாளான 29.09.41இல் படிக்கப்பெற்றது
- கும்பகோணம், 1931ஆம் ஆண்டு கும்ப கோணம் கல்லூரியில் ஆற்றிய உரை
- குமரகுருபரர், கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் 1929ஆம் ஆண்டு செய்த பிரங்கமொன்றன் பகுதி
- சங்கீதப் பயிற்சி, ஜனவரி, 1937இல் சென்னை சங்கீதக் கழகத்தின் பரிசளிப்பு விழாவில் தலைமைவகித்து ஆற்றிய உரை
- சில ஊர்களைப் பற்றிய குறிப்புகள் (திருப்பனந்தாள், திருவேட்டீசுவரன் பேட்டை, வேலூர், திருச்சிராப்பள்ளி), கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் நடைபெற்ற திருப்பனந்தாள் ஆயிரம் ரூபாய்ப் பரிசளிப்புக் கூட்டத்தில் தலைமை வகித்து செய்த பிரசங்கத்தின் ஒரு பகுதி
- சுப்பிரமணிய பாரதியார், 1936இல் அகில இந்திய காங்கிரசின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில், சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய படம் திறக்கப்பட்டபோது ஆற்றிய உரை
- சைவமும் தமிழும், 17.9.1936இல் புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் செய்த பிரசங்கம்
- தமிழ் நாட்டுப் பெண்பாலார், 28.1.1937இல் மயிலாப்பூர் மகளிர் சபையின் (Ladies Club) ஆதரவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்த பிரசங்கம்; இது கலைமகள், தொகுதி 11, பகுதி 61 - 66, 1937இல் வெளிவந்துள்ளது
- தமிழ் வளர்ச்சி, 23, டிசம்பர், 1933இல் நடை பெற்ற தமிழன்பர் மகாநாட்டில் ஆற்றிய வரவேற்புப் பிரசங்கம்
- தமிழ் நூல்களும் வைத்தியமும், 1935ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், அகஸ்தியர் திருநாளில் செய்த பிரசங்கத்தின் ஒரு பகுதி; இது கலைமகள், தொகுதி 23, பகுதி 138, 1943இல் வெளிவந்துள்ளது.
- தமிழ் மகள் திருநாள், சதாபிஷேக ஏற்புரை, இது கலைமகள், தொகுதி 7, பகுதி 37 - 42, 1935இல் வெளிவந்துள்ளது.
- பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்கள், புரசபாக்கம் ஸர். எம். ஸி. டி. முத்தைய செட்டியார் ஹைஸ்கூல் ஆசிரியர் சங்கத்தின் முதற் பிரசங்கமாக 20-7-36-ல் செய்யப் பட்டது
- பண்டைத் தமிழர், மன்னார்குடி, கௌமார குருகுலத்தில் 1932ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்த பிரசங்கம்; இது சுதேச மித்திரன் இதழில், 16, ஆகஸ்டு, 1936இல் வெளிவந்துள்ளது; கௌமார குருகுலக் கல்விப் பிரசுரத்தில் சிறுநூலாகவும் வெளி யிட்டுள்ளார். பதிப்பாண்டு புலப்பட வில்லை
- பண்டைத்தமிழர் இசையும் இசைக் கருவிகளும், 1929ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி சென்னை ஒய்.எம்.ஸி.ஏ. மண்டபத்தில் கோடைக்கால இந்திய சங்கீதப் பள்ளிக்கூடத்தின் ஆதரவில் செய்த பிரசங்கம், இக்கட்டுரை 1929இல் சுதேச மித்திரன் இதழிலும், 1929, இதே ஆண்டு செந்தமிழ் இதழ் தொகுதி 27, பகுதி 6லும் வெளிவந்துள்ளது
- மகளிர் கல்வியும் கலைமகள் பெருமையும், 1-6-1939இல் புதுக்கோட்டை சமஸ்தானம் கொப்பனாப்பட்டி, கலைமகள் கல்லூரியின் கலைமகள் திருக்கோயில் திறப்பு விழாவில் தலைமை வகித்துப் பேசிய முன்னுரை; இக்கட்டுரை சிறுநூலாகவும் வெளிவந்து உள்ளது
உ.வே. சாமிநாதையர் தாம் எழுதிய மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரத்தில் இடம்பெற்றிருந்த சில பகுதிகளை எடுத்துக் கட்டுரை களாக அமைத்துத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருக்கிறார். அந்தவகையில் இந்த ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
- ஏழையின் தமிழன்பு, ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதல் பாகம்
- சிறந்த குருபக்தி, ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதல் பாகம்
- தர்ம சங்கடம், ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரம், இரண்டாம் பாகம்
- தருக்கடங்கின எழுத்தாளர், ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், முதல் பாகம்
- மாம்பழப் பாட்டு, ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், இரண்டாம் பாகம்
சங்கராபரணம் நரசையர் எனும் கட்டுரை கலைமகள், தொகுதி 7, பகுதி 37 - 42, 1935இல் வெளி வந்துள்ளது. இவரைப் பற்றி விவேகபோதினி இதழில் (அக்டோபர் - நவம்பர், 1916இல்) நல்லொழுக்கம் எனும் தலைப்பில் ஒருகட்டுரை எழுதி வெளி யிட்டிருக்கிறார்.
சாதுரிய வசனங்கள் எனும் ஒரு கட்டுரை எழுதி, கலைமகள், தொகுதி 22, பகுதி 132, 1942இல் வெளி யிட்டுள்ளார். இது பொன்னம்பலப் பிள்ளையைப் பற்றிய கட்டுரையாகும். இவரைப் பற்றிப் பொன்னம்பலப் பிள்ளையின் திருப்பணி எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், அக் கட்டுரை கலைமகள், தொகுதி 17, பகுதி 97 - 102, 1940இல் வெளிவந்துள்ளது.
உ.வே. சாமிநாதையரின் கட்டுரைகள் ஆடல் பாடல், ஆனந்த போதினி, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், சக்தி, சித்தாந்தம், சிவநேசன், சுதேச மித்திரன், தனவணிகன், தாருல் இஸ்லாம், தினமணி, தென்னிந்திய வர்த்தமானி, மணிக்கொடி, விவேக போதினி, ஜயபாரதி, ஜோதி, ஹனுமான் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவற்றுள் கலை மகள் இதழில் மட்டும் மிக அதிகமாகன கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
- அகத்தைக் காட்டும் முகம் (புதியதும் பழையதும், 1936)
- ஆளுக்கேற்ற மதிப்பு (புதியதும் பழையதும், 1936)
- கண்ணீர் துடைத்த கரம் (புதியதும் பழையதும், 1936
- கல்யாணப் படித்துறை (புதியதும் பழையதும், 1936)
- கிணற்றில் விழுந்த மிருகம் (புதியதும் பழையதும், 1936)
- சிறைநீக்கிய செய்யுள் (புதியதும் பழையதும், 1936)
- திருக்குறளால் வந்த பயன் (புதியதும் பழையதும், 1936)
- நகரங்களும் ஆலயங்களும் (நினைவு மஞ்சரி, பாகம் - 2, 1942)
- நாடக இலக்கியங்கள் (நினைவு மஞ்சரி, பாகம் - 2, 1942)
- நான் கேட்டபடி (நல்லுரைக்கோவை, பாகம் - 2, 1937)
- நான் சாமியாராக இருக்க மாட்டேன் (புதியதும் பழையதும், 1936)
- பிறை முழுமதியானது (புதியதும் பழையதும், 1936)
- ஸ்வாமி இருக்கிறார் (புதியதும் பழையதும், 1936)
இந்தப் பதின்மூன்று கட்டுரைகள், இதழ்களில் வெளியிடப்பெறாமல் தொகுப்பில் இடம்பெறச் செய்யப்பெற்றனவா? அல்லது இதழ்களில் வெளியிடப் பெற்றுத் தொகுப்பில் இடம்பெறச்செய்யப் பெற்றனவா? என்பதைத் தற்பொழுதுவரை அறியமுடியவில்லை. தேடுதல் தொடரும் நிலையில் கிடைக்கப்பெறலாம்.
தாம் எழுதிய கட்டுரைகளை முறையாகத் தொகுத்து நூலாக்கம் செய்த தமிழறிஞர்களுள் உ.வே.சாமிநாதையர் முதன்மையானவராகத் திகழ்கிறார். நூல் பதிப்புப் பணியையும் ஆசிரியர் பணியையும் நன்கு திட்டமிட்டு செய்த வரலாற்றை அவரின் முகவுரைகள், சுயசரிதைகளின் வழியாக அறிந்தகொள்ள முடிகிறது. அப்பணிகளைப் போன்றே நன்கு திட்டமிட்டுத் தேர்ந்து, ஆராய்ந்து கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பதை அவரின் கட்டுரைகளை நிரல்படுத்தி நோக்கும்பொழுது அறிந்துகொள்ள முடிகிறது.
இதனினும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக நமக்குப் புலப்படுவது, தாம் எழுதிய கட்டுரைகளை முறையாகப் பாதுகாத்து, திரட்டித் தொகுத்து நூலாக்கம் செய்து எதிர்கால ஆய்வுலகத்திற்குப் பயன்படும் வகையில் பதிப்பித்து வெளியிட்ட பணியையும் உ.வே.சாமிநாதையர் செய்திருப்ப தாகும். டாக்டர் உ.வே.சாமிநாதையர் தாம் செய்யக் கருதிய தமிழ்ப் பணியினைத் தேர்ந்து தெளிவாகத் திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்குப் பழந்தமிழ் நூல் பதிப்புகள் மட்டுமல்ல, அவர் எழுதி வெளியிட்டுள்ள கட்டுரைகளும் சான்றுகளாக விளங்குகின்றன.
துணைநின்ற நூல்கள்
- நினைவு மஞ்சரி, (முதற் பாகம்), மகா மகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1940
- நல்லுரைக்கோவை (நான்காம் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக் கூடம், 1939
- நல்லுரைக்கோவை (முதல் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக் கூடம், 1937
- நல்லுரைக்கோவை (இரண்டாம் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக் கூடம், 1937
- நல்லுரைக்கோவை (மூன்றாம் தொகுதி), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கார்டியன் அச்சுக் கூடம், 1938
- நான் கண்டதும் கேட்டது, ஆசிரியர்: மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர், முதற் பதிப்பு, சென்னை: கேஸரி அச்சுக் கூடம், 1936
- புதியதும் பழையதும் (கட்டுரைத் தொகுப்பு), மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் எழுதியது, சென்னை: கேசரி அச்சுக்கூடம், 1936
- நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்), மகா மகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் எழுதியது, இது மேற்படி ஐயரவர்கள் குமாரர் எஸ். கலியாணசுந்தர ஐயரால் பதிப்பிக்கப் பெற்றது, சென்னை: கபீர் அச்சுக்கூடம், 1942
(உ.வே.சாமிநாதையர், 1918, மே, 15, புதுச் சேரியில் நடைபெற்ற சங்கர ஜெயந்தி விழாவிற்குச் சென்று தலைமை வகித்துச் சிலப்பதிகாரத்தைப் பற்றி உரை நிகழ்த்தியிருக்கிறார்; அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகாகவி பாரதியாரைச் சந்தித்து மகாமகோபாத்தியாய பட்டம்பெற்றபோது தம்மைப் பாராட்டிப் பாடிய பாடல்களுக்காக நன்றி பாராட்டியிருக்கிறார்)