ஹாரீஸ் சிலாய்த்ஸிக் 1992 முதல் 1995 வரை போஸ்னியாவின் பிரதமராக இருந்தவர். இவருடைய தந்தையார் போஸ்னியாவிலேயே மிகப்பெரிய மசூதியின் தலைமையில் இருந்தவர். தாய்வழிப் பாட்டனார் சமய நீதிபதியாக இருந்தவர். சிலாய்த்ஸிக் லிபியாவில் பயின்றவர். முறையான சமயக் கல்வியும் பெற்றவர்.

--------------------------

இன்றைய இஸ்லாத் 50 வருடங்களுக்கு முன்பிருந்த இஸ்லாத் போன்றது இல்லை. போஸ்னியா, ஈரான், எகிப்து, மலேசியா, பாகிஸ்தான் என்று பல்வேறு மாறுபட்ட இஸ்லாமியச் சமூகங்கள் - ஒவ்வொன்றும் தனித்தனி உலகங்கள் - தமக்கேயுரிய வழிகளில் நவீனத்துவத்திற்குள் அடியெடுத்துவைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. 

ஆனால், பதட்டமும் நிலவுகிறது. கல்விப் பரவல், தகவல் தொடர்பு சாதனங்கள், நெடுந்தூரப் பயணங்கள், இவை விளைவித்த புரட்சிகள் சாதாரண முஸ்லீம்களுக்கு நவீனத்துவத்தின் பொருள் மயமான பகட்டுச் சின்னங்களை அவர்களது வாழ்வில் அறிமுகம் செய்து வைத்துள்ளன என்றாலும் இந்த யதார்த்தங்கள் மக்கட் பிரிவினரில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தினரைத் தவிர ஏனையோருக்கு எட்டாக்கனியாகவே உள்ளன என்ற நடப்பு உண்மையும் நிலவுகிறது.

இதனால், சலிப்பும் சோர்வும் சினமுமே எங்கும் பரவியிருக்கிறது. தமது கனவுகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த இடைவெளியை மக்கள் தமது பண்பாடு, மதம் போன்ற, தாம் நம்பிக்கை வைத்திருப்பவற்றை பற்றிக்கொள்வதன் வழி நிறைவு செய்துகொள்கின்றனர். ஒரு மதம் என்ற வகையில் பரந்த பண்புடையதாக இருப்பதாலேயே இஸ்லாத் இதம் தருவதாக உள்ளது. வாழ்வின் எல்லா அம்சங்களுக்கும் சூழல்களுக்கும் வழிகாட்டுவதாக, குறிப்பாக, மேற்கின் ஆன்மச் சூன்யத்திற்கு பதில் சொல்வதாக இஸ்லாத் இருக்கிறது.

இத்தகைய அனைத்தும் தழுவிய நம்பிக்கை, சோர்வும் கோபமும் மேலோங்க, வன்மை தொனிக்க, சிலரால் முன்னிறுத்தப்படும்போது, மேற்கு அதை ஆபத்தான “அடிப்படைவாதமாகப்” பார்க்கிறது. கிழக்கின் முஸ்லீம்களைப் போல, மேற்கத்தியர்களின் மூளைகளும் இந்நாட்களில் முற்சாய்வுகளுக்குள் ஒளிந்து கொண்டும் முத்திரைகள் குத்தியும் மட்டுமே தங்களுடைய உலகங்களை ஒழுங்கமைத்துக்கொள்ள முடியும் என்ற அளவுக்கு, சூழல் அளவுக்கதிகமான தகவல்களால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரப் பிரதேசங்களின் நிழலுருவங்கள் அவற்றின் யதார்த்தங்களாகவே கொள்ளப்படுகின்றன. மேற்கிலிருந்து கிழக்கைப் பார்ப்பதோ அல்லது கிழக்கிலிருந்து மேற்கை நோக்குவதோ, சிக்கல்களையும் செறிவுகளையும் கிரகித்துக் கொள்ள முயற்சிப்பது என்பது இன்றைய அவசரகதி உலகத்தில் சாத்தியமற்ற, தேவையற்ற ஊதாரித்தனமான செயலாகவே நோக்கப்படுகிறது. ஊடகங்களின் பெருக்கமும் வேகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களை இணைப்பதாக இருக்கிறது. ஆனால், மக்களோ மனதளவில் அதற்குத் தயாராக இல்லை. மானுட இயல்பு படிப்படியாக, மெதுவாக வளர்ச்சியடைவதாகவே உள்ளது. தன்னைச் செழுமைப்படுத்திக்கொள்ள, மாற்றத்தைக் கிரகித்துக் கொள்ள மனிதனுக்கு அவகாசம் தேவைப்படுகிறது.

தகவல்கள் உதவிகரமானவையாக இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில், ஊழிப்பெருவெள்ளமாக அவை பெருகும்போது, அதன் வேகம், பொய்யான கருத்துக்களையும் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உருவாக்குவதால் மிகவும் ஆபத்தானதாகவும் ஆகிவிடலாம். தகவமைத்து வாழவேண்டுமென்றால், நாம் அனைவருமே சற்று வேகத்தைக் குறைத்துக் கொண்டு, குறைவானவற்றோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒப்புரவாள்கை நெறி

எல்லா மாபெரும் மதங்களின் வரலாறுகளிலும் நாம் காண்பதைப் போலவே, மோசமான வாழ்நிலைகளில், எதிர்கால நம்பிக்கைகள் எதுவும் இல்லாத சூழலில் தள்ளப்பட்டவர்களிடையே நிலவியது போலவே, இஸ்லாமிய உலகிலும் ஒப்புரவாள்கையற்ற சூழல் நிலவுகிறது என்பதும் உண்மைதான். என்றாலும், இன்றைய சிக்கலான செறிவான உலகில், எந்த ஒரு மதத்தினரையும் சரியாக மதிப்பிடவேண்டுமென்றால், அவற்றின் அடிப்படையான அருளுரை என்ன என்பதையே காண வேண்டும். வரலாறு நெடுக, இஸ்லாத்தின் அருளுரை, அரவணைத்தல் என்பதே தவிர விலக்கி வைத்தல் அல்ல.

தனது இந்த அருளுரையால், மிகவும் மாறுபட்ட பல்வேறு பண்பாடுகளையும் இணைத்ததன் காரணமாக உருவான இஸ்லாத்தின் ஒப்புரவாள்கை நெறி, அதை “நாகரீகத்தின் பின்னைய மனிதன்” என்று அழைக்கப்பட வித்திட்டிருக்கிறது. கடுமையான பாலைவனத்தில் தோன்றியதாகவே இருந்தாலும் பாக்தாத், டமாஸ்கஸ், டாஷ்கண்ட், பகு, கெய்ரோ போன்ற மாபெரும் வணிக நகரங்களின் பலதரப்பட்ட மக்களைச் சேர்ந்த மதமாக அது மாறியது. ஐரோப்பிய மையப்பகுதியின் விவசாயத்தை மட்டுமே சார்ந்த மூடுண்ட நாகரீகத்தைப் போலல்லாமல் இஸ்லாத், மத்தியத்தரைக் கடல் பகுதியில், திறந்த மனப்பாங்குடைய நாகரீகமாகத் தோன்றி வலுப்பெற்றது.

இஸ்லாத்தின் இந்த ஒப்புரவாள்கை நெறி, போஸ்னியாவின் நீண்ட நெடிய வரலாற்றில் கலந்து பரிணமித்துள்ள ஒரே காரணத்தாலேயே, செர்பியர்கள், க்ரொயேசியர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனத்தூய்மைவாத “உயிரியல் அடிப்படைவாதத்தின்” சூழலிலும்கூட போஸ்னிய மக்கள், வன்மை மிகுந்த  அடிப்படைவாதத்திற்குப் பலியாவார்கள் என்ற அச்சம் எனக்கு எழவே இல்லை. இன்று, போஸ்னியாவின் பெரும்பான்மையான மக்கள் அரசிலிருந்து விலகிய, முற்றிலும் சுயேச்சையான மதச் சமூகத்தையே விரும்புகிறார்கள். எனது விருப்பமும் அதுதான்.

போஸ்னியாவிற்கு இஸ்லாத் வருவதற்கு முன்பாகவே, நாங்கள் எங்களுடைய ஒப்புரவாள்கை நெறிக்காக  மட்டுமல்லாமல் சமயத்திற்கு முரணானவர்களாகவும் கலகாரர்களாகவும்கூட அறியப்பட்டிருக்கிறோம். மார்டின் லூதர் “மூலமுதல் சீர்திருத்தவாத திருச்சபை” என்று அழைக்கும் அளவிற்கு போஸ்னிய திருச்சபை முரண்பட்டு நின்றது. பலரும் கருதுவதைப் போல, ஒட்டமான் துருக்கியர்களால் நாங்கள் இஸ்லாத்திற்கு வலுவில் மாற்றப்படவில்லை. கிறித்துவத்தின்பால் கொண்டிருந்த நம்பிக்கைகள் தகர்ந்து போனதாலேயே எமது மக்கள் தாமாகவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்திற்கு மாறினர்.

மூலம்: ஹாரீஸ் சிலாய்த்ஸிக்
மொழிபெயர்ப்பு: வளர்மதி

 

Pin It