பெண்ணுக்குத் தாலி தேவையா? தேவையில்லையா? என்ற விவாதம் தமிழக அரசியல் அரங்கில் முன்னுக்கு வந்துள்ளது. தாலி பற்றி சிந்திப்பதற்கு முன் நடக்கும் சில பிழையான விவாதங்களைக் காண்போம்.

1) தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தாலி அணியும் பழக்கம் தொடக்க காலந்தொட்டு இருந்து வருகிறது. அது தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்று சொல்வது.

2) குடும்பத் தலைவிக்கு மட்டும் குடும்ப உறவின் புனிதக் குறியீடு தாலி மிகவும் அவசியமானது என்று பேசுவது.

3) பெண்ணின் சமூக பொருளாதார நிலையைப் பற்றி பேசாமல் ஒரு பக்கம் தாலி அணிவது குடும்பப் பெண்ணுக்கு புனிதம் என்றும், இன்னொரு பக்கத்தில் தாலி மறுத்தல்தான் முற்போக்கு என்றும் பேசுவது. எப்படியாயினும் இன்றைக்கு எதார்த்தத்தில் பெண்கள் தாலி அணிகிறார்கள். இது எப்படி வந்தது என்று ஆராய்வோம்.

தாய்வழியில் இருந்து தந்தைவழி சமூகம்:

ஆரம்பத்தில் சிறு சிறு கூட்டமாக வேட்டையாடி நாடோடியாக அலைந்து திரிந்த மனித சமூகம் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கூட்டத்தைப் பெருக்கியது. பின்னர் புதுப்புது வேட்டைக்கருவிகளைக் கண்டறிந்து முன்னேறி உற்பத்தி கருவிகளைக் கண்டுபிடித்த மனித சமூகம் நீருள்ள பகுதிகளில் நிலையான உணவு உற்பத்தியில் ஈடுபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு முறையையும் சில ஒழுங்குமுறைகளையும் உருவாக்கியது.

உற்பத்தி செய்த உணவு தானியங்கள், கால்நடைகள், செல்வங்கள் பொதுவில் தாயின் கட்டுப்பாட்டில் நுகரப்பட்டன. இத்தகைய இனக்குழு சமூக அமைப்பில் உறைவிடமும் பொதுவாகவே இருந்தது. அதனால் இந்த தாய்வழிச் சமூகத்தில் குழந்தைகள் தாயின் வழிப்பட்டு மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டனவேயன்றி தந்தை வழிப்பட்டல்ல, அதற்கான கேள்வியும் இங்கே எழவில்லை. குடும்பம் என்ற அமைப்பும் தோன்றவில்லை அல்லது அதற்கான தேவையில்லை. தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தைவழி சமூக அமைப்பாக மாறிய பின்னர் குடும்ப அமைப்பு முறையும், தனிக்குடும்பத்திற்கென உறைவிடமும் தோன்றியது. இந்த மாற்றத்திற்கான அடிப்படை காரணம் முன்பு சமூகத்திடம் இருந்த சொத்து, இப்பொழுது தனி நபர்களிடம் கைமாறியதே.

இதனால் தன்னிடம் உள்ள சொத்து அடுத்த தலைமுறையில் யாருக்கு? என்ற வினா எழுந்தபோது தந்தை வழி குழந்தைகளுக்கு என்றானது. தந்தை வழி சமூக அமைப்பின் வளர்ச்சியிலேயே குடும்ப அமைப்பில் பெண்ணுக்கு கற்பு, தாலி என்பவை வலியுறுத்தப்பட்டன. கற்பு, விபச்சாரம், கள்ளக் காதல் இவை யாவும் ஒரே காலகட்டத்தில் வந்தவை என்று ஆய்வுகள் சொல்கின்றன. ’சொத்து’ என்ற ஒன்று இல்லாத காலத்தில் இருந்து தனிச் சொத்து என்ற காலத்திற்குள் மனித சமூகம் நுழையும் பொழுதே இவை யாவும் உருப்பெற்றன. தொடர்ச்சியான உற்பத்திக் கருவிகள், உற்பத்தியின் வளர்ச்சியால் உருவான மிகையான பொதுச் சொத்தை தன்னுடைய ஆயுத பலத்தால் வசப்படுத்தி உழைக்காமல் அந்த இனக்குழுவைக் கட்டுபடுத்தும் தலைமைப் பொறுப்பிற்கு ஒரு பிரிவு வந்தது. மற்றவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து ஒடுக்கி பெரும்பான்மையினரை உழைக்கும் பிரிவினராக மாற்றியது. பொதுச்சொத்து இப்போது இவர்களின் தனிச்சொத்தானது. தனிச்சொத்துப் பிரிவினரைப் பாதுகாக்கவும், உழைப்புப் பிரிவினரை அடக்கி ஒடுக்கவும் சமூக நிர்வாகத்தை கவனிக்கவும் அரசு உருவாகியது.

இப்படியான பல்வேறு இனக்குழுக்களின் சிறுசிறு கூட்டங்கள்தான் பிற்காலத்தில் ஒரு சிற்றரசின் கீழ் ஒரே ஊரில் பல்வேறு சாதியினராக சேர்ந்து சாதிய நிலவுடைமைச் சமூகமாக வாழ்ந்துவருகின்றனர். அதனால் இனக் குழுத் தன்மை சாதியச் சமூகத்திலும் நீடிக்கிறது. செல்வத்தின் மீதான பங்கீடு சாதி வாரியான ஏற்றத்தாழ்வோடு உள்ளது. இந்த தனிச்சொத்து சமூக அமைப்போடு தொடர்புடைய குடும்ப அமைப்பின் இறுக்கமும் அதிகமாகியுள்ளது. இதனால் பண்பாட்டுத்தளத்தில் கதைகள், வழக்காறுகள் குடும்ப அமைப்பை மிக முக்கியம் என்று வலியிறுத்துகின்றன. இதற்காக சில கடவுளர்களும் கூட தோன்றி குடும்பத்தலைவி கற்புக்கரசியாக இருக்க வேண்டும், தாலி மிகவும் புனிதம் என்று கூட சொல்லிவருகின்றார்கள்.

முதலாளிய வளர்ச்சியும் குடும்ப அமைப்பில் நடந்த மாற்றமும்முதலாளித்துவ யுகத்தில் மனித சமூகம்நுழைந்தவுடன் குடும்ப உற்பத்தியில் விலங்கிடப்பட்டபெண்கள் சமூக உற்பத்திக்கு இழுத்துவரப் பட்டனர்.மூலதனத்தின் பெருக்கத்திற்கு பெண்களின் உழைப்புச்சக்தியும் தவிர்க்க முடியாத தேவை என்றானது. இதன்தொடர்ச்சியாக முன்பு மறுக்கப்பட்டிருந்த அரசியல்உரிமைகளுக்கான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன அரசியல் அரங்கில் பெண்கள் பங்கேற்கத்தொடங்கியுள்ளனர்

இதை தொடர்ந்து குடும்ப அமைப்பிலும் மாற்றம் வர ஆரம்பித்தது. ஆணும் பெண்ணும் சமமாக இருவருமே மோதிரம் மாற்றிக் கொள்வதும், திருமணம் பண்ணிக்கொள்ளாமலே இணையர்களாக வாழ்வதும் இன்றைய நிலையில் மேற்குலக நாடுகளில் நடந்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் காலனியானதிலிருந்து இந்தியாவில் முதலாளித்துவம் வளரத் தொடங்கியது. இது நம்முடைய சாதிய சமூக பொருளியல் அமைப்பில் உள்ளீடாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலத்தில் அடிமை உழைப்பாளிகளாக இருந்த பலர் இப்போது சுதந்திரக் கூலிகளாக நகர்ப்புறத்தில் குடியேறினார்கள். இந்த மாற்றம் தான் பண்பாட்டுத்தளத்தில் நமது குடும்ப அமைப்பிலும் மாற்றத்தை கோரி நின்றது. நிலத்தில் வேலை பார்த்தோ வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தோ அதுவரை குடும்ப அமைப்புக்குள் சிக்கி இருந்த பெண்கள் பொருளாதாரத்தில் ஆண்களை மட்டும் சார்ந்து வாழ வைக்கப்பட்டார்கள். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சீர்திருத்த பரப்புரைகளும், செயல்பாடுகளும் பெண்களின் தன்மான உணர்வை உயர்த்திப் பிடித்தன.

பெண்ணுரிமைக்கான போரட்டங்கள் முன்னுக்கு வந்தன . குடும்ப அமைப்பில் ஆணும் பெண்ணும் சமத்தன்மையை வலியுறுத்தி பெண்களுக்கு தாலி அணியாத சுயமரியாதைத் திருமணங்களைச் செய்து காட்டியது திராவிடர் இயக்கம். ஆக பொருளியல் அடிப்படையிலான உற்பத்தி மற்றும் சமூக அமைப்பின் வளர்ச்சிப் போக்கில்தான் குடும்ப அமைப்பும் மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அதற்கென்று தனியாக பெரிய வளர்ச்சி என்று எதுவும் இல்லை.இந்த பண்பாட்டு அசைவு சமூக அரசியல் பொருளாதாரத் தளத்தில் நடக்கும் மாற்றத்தைப் பொருத்தே நடக்கிறது. அதேவேளை இப்பண்பாடு அந்தப் பொருளாதார அமைப்பைக் காக்கப் பயன்படும் வேலியாகவும் இருக்கும்.

தமிழர் பண்பாட்டில் தாலி:

சங்க காலத்தில் மட்டுமல்ல ‘தாலி’ என்ற அணிகலன் குடும்ப உறவின் குறியீடாக 10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் எந்தப் பெண்ணும் அணியவில்லை என்று தமிழ் ஆய்வறிஞர்களும், கல்வெட்டு செப்பேடுகள், பல தரவுகள் அடிப்படையில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யும் வரலாற்றியல் ஆய்வாளர்களும் ஏற்கனவே மெய்ப்பித்த உண்மை. ‘தாலி எனும் வார்த்தை’ தொங்கும் அணிகலனைக் குறிக்கிறது. கழுத்தில், காதில், அரைஞான் கயிற்றில் என ஆணும் பெண்ணும் தொங்கவிடும்படி அணிந்த அணிகலன்களைத்தான் ‘தாலி’ என்று குறிப்பிட்டுள்ளார்கள் நம் முன்னோர்கள். 10ம் நூற்றாண்டுக்கு பின்னரே தாலி நம் சமூகத்தில் திருமணச் சடங்கில் அணிய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதுவும் சாதிக்கு ஒரு சடங்கும் தாலியும் இங்குண்டு. துணைவனை இழந்த இளம் விதவைப் பெண்களை ”தாலி அறுத்தவள்”, ”முண்டச்சி” என்ற சாதிகளும் இங்குண்டு. துணைவனுடன் கருத்து வேறுபாடென்றால் பிரித்து தாலியை ‘‘அறுத்து கட்டும்” சாதிகளும் இங்குண்டு. தாலி புனிதமானது என்றால் தான் விரும்பிய வேறு சாதி ஆணை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டதற்காக அதே தாலியை அறுத்து போலி சாதி கவுரவத்திற்காக அவர்களைக் கொலை செய்யும் அளவிற்கு செல்வது ஏன்? சாதியோடு பண வலிமை பிரதானமாக உள்ள சமூகத்தில் தாலியின் புனிதமும், கற்பும் அதற்கு துணைசெய்யத்தான் என்பது கண்கூடு. தாலியைக் கற்போடு பிணைத்து “பண்பாட்டை” காப்பாற்ற நினைப்பவர்கள் சாதியை காப்பற்ற நினைப்பவர்கள்தான்.

 பெண்கள் தாலியை அகற்றுவது தவறா?

பெண்கள் தாலியை வைத்துதான் குடும்ப உறவில் துணைவனிடம் அன்பையும் உண்மையையும் காட்ட வேண்டுமா என்ன? அது இல்லாமலேயே அன்போடும் அறனோடும் இல்லறம் நடத்தினால், குடும்ப அமைப்பில் சமமற்ற தன்மையை வலியுறுத்தும் தாலி வேண்டாம் என்றால் தடுப்பதற்கு சனநாயக நாட்டில் எவருக்கும் உரிமை இல்லை? இன்றைய நவீன காலகட்டத்தை விட்டுவிட்டு காட்டுமிராண்டி நாடோடி கால காட்டத்திற்கு பின்னோக்கி செல்ல விரும்புவோர் யாருமுண்டோ? அதுபோல சமூக வளர்ச்சிற்கேற்ப ஆரோக்கியாமன மாற்றங்களும் பிறக்க வேண்டாமா?

இறுதியாக சமூக அமைப்பில் நடக்கும் மாற்றம் தான் குடும்ப அமைப்பில் மாற்றத்தை, குடும்பத்தில் சமத்துவத்தைக் கோரி நிற்கிறது. ஆக பெண்கள் ”தாலி அகற்றல்” போன்ற போராட்டங்கள் மூலம் குடும்ப அமைப்பில் சமத்துவத்தை அடையப் போராடுவது சமூக அமைப்பில் ஏற்படப்போகும் சமத்துவத்தின் வெற்றியில் தான் முழுமையடைய முடியும். சாதிய ஏற்றத்தாழ்வான பொருளியல் கட்டமைப்புக்கு மாற்றாக சமூக சமத்துவத்தை நோக்கிய நம் போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம். அதற்கான சனநாயகப் பண்பாட்டை வளர்த்தெடுப்போம்.

தாலிதான் பொண்ணுக்கு வேலியா?

காக்க வாரான் காவிப்பயல் போலியா

சமூகநீதி மண்ணிது வெளியேநீ போறீயா

Pin It