கடந்த 24ந் தேதி சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கருப்பனம்பட்டி பறையர் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், பரமத்திக் கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணோடு பேசிக் கொண்டிருந்த காரணத்திற்காக சாதிவெறியர்களால் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். வாழப்பாடியில் சோமப்பட்டி கிராமத்தில் வன்னியப் பெண்ணை தலித் இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டதன் பின்னணியில் தலித் மக்களின் வீடுகள் சாதிவெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்டதும் நடந்துள்ளது.

gokulraj 400கோகுல்ராஜ் கடந்த ஆண்டில்தான் திருச்செங் கோட்டில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இந்நிலையில் சுவாதியும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த இடத்தில் யுவராஜ் மற்றும் ஏழு பேர் கொண்ட கும்பல் கோகுல்ராஜையும், சுவாதியையும் எந்த சாதி என்று விசாரித்துவிட்டு கோகுல்ராஜை மட்டும் இழுத்துச் சென்றுள்ளனர். அந்த வாகனத்தில் தீரன் சின்னமலைப் படமும் தீரன் சின்னமலைப் பேரவையின் கொடியும் இருந்ததாக சுவாதி கூறியுள்ளார். அவை கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

தீரன் சின்னமலைப் பேரவைத் தலைவர் யுவராஜ் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த கும்பல்தான் கோகுல்ராஜைக் கடத்தியதாக கோகுல்ராஜ் உறவினர்களும், சுவாதியும் திருச்செங்கோடு காவல்நிலையத்தில் நேரில் சென்று புகார் கொடுத்திருக்கிறார்கள். யுவராஜ் தனது செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.தலை துண்டிக்கப்பட்ட கோகுல்ராஜ் சடலத்தை நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

கோகுல்ராஜ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக  அவரை அடித்துத் துன்புறுத்தி தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஒரு வீடியோவைப் பதிவு செய்து வாட்சப், முகநூலில் உலவவிட்டிருக்கிறது அந்த சாதிவெறிக் கும்பல். தருமபுரி இளவரசனின் கொலையைத் தற்கொலை என சோடித்ததுபோல் இதனையும்  சோடிக்க செய்த முயற்சியே இது.

காவல்துறை இதைச் சந்தேகத்திற்குரிய மரணமாகவே இழுத்தடித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் பகுசன் சமாஜ் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் சிறப்பு மருத்துவக்குழு மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் மனித உரிமைகள் ஆணைய இணை இயக்குனர் தலையிட்டு விசாரிக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத் தலையீடு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தலையீடு, மக்கள் இயக்கங்களின் போராட்டம் ஆகியவற்றினால் பத்து நாட்கள் கழித்து இந்த கொலை தொடர்பான 6 பேரைக் கைதுசெய்து, யுவராஜ் உள்ளிட்ட மூவரைத் தேடி வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி நீதிமன்றத்தில் செய்த முறையீடும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய தொடர் போராட்டமும் சாதி ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும் கூட்டாய் முன்னெடுத்த போராட்டமும் குற்ற வாளிகளைப் பிடிப்பதற்கு வெகுவான அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது.

அதே நேரத்தில், தலித் மக்களின் விடுதலைக்காகப் போராடும் இந்த இயக்கங்களோ கோகுல்ராஜ் விவகாரத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து தன் சுய அடையாளத்திற்காக போட்டிப் போட்டுக்கொண்டதும் நடந்துள்ளது. சாதிவெறிச் சக்திகளும், சாதிச் சங்கங்களும் தலித் அல்லாதோர் கூட்டியக்கத்தின் மூலம் தலித் மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கும் நிலையில், இப்படியான நடைமுறைகள்,  முற்போக்கு முகாமில் நிலவும் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றன. இதுபோன்றவை தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாகி வரும் தலித் மக்களுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதேயாகும்.

ஆதிக்கச் சாதிவெறி இயக்கங்கள் தனது சாதிப் பெருமையையும் தனது சாதிப் பெண்கள் மானத்தையும் காப்பதாகச் சொல்லிக்கொண்டு  சாதிவெறி அரசியலை இளைஞர் மத்தியில் ஊட்டி தேர்தல் மூலம் அதிகாரத்தில் பங்குபெற்று சுயலாபத்திற்காக சமூகத்தில் வன்முறையை ஊக்குவிக்கின்றன. பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதைப் பற்றியோ,  முதலாளித்துவ சுரண்டல் முறையினால் வறுமையில் வாழும் தன் சொந்த சாதி மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ இந்த சாதிவெறி சக்திகள் கவலைப்பட்டதே கிடையாது. சாதியை வைத்து பிழைப்புவாத அரசியல் செய்யும்  இத்தகைய சாதிக் கட்சிகள், ஆளும் வர்க்கத்தோடு பேரம் பேசும் நோக்கம் கொண்டது என்பதை தருமபுரி தேர்தல் நமக்கு விளக்கியது. தமிழகத்தில் கடந்த 2013 முதல் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான தீவிரமான எதிர்ப்பு அரசியல் தளத்திலும் கிளம்பியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசு தலித்துகள் வன்னியப் பெண்களைக் காதலிப்பதாக  ஏமாற்றி  பணம் பறிப்பதாகவும், காடுவெட்டி குரு ‘‘வன்னியப் பெண்களைக் கட்டுபவனை வெட்ட வேண்டும்” எனவும் தலித் மக்களை இழிவுப்படுத்தியும் வன்முறையைத் தூண்டிவிட்டும் பேசினர். இராமதாசு தமிழகம் முழுவதும் உள்ள ஆதிக்கச் சாதி இயக்கங்களை ஒருங்கிணைத்து அனைத்து சமுதாயக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார்.

 தலித் இளைஞர்கள் திட்டமிட்டு இடைச்சாதிப் பெண்களைக் காதலிப்பதாகவும் அது நாடகக் காதல் என்றும் நாடகக் காதலைத் தடுக்க திருமணத்தின் போது பெற்றோர்களின் அனுமதி வேண்டும் எனவும் பெண்களின் திருமண வயதை  21 ஆக உயர்த்த வேண்டும் எனவும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அச்சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் இராமதாசு கொக்கரித்ததோடு அதனைத் தமிழகத்தில் உள்ள சாதி ஆதிக்க வெறிக் கட்சிகளையும் வழிமொழியச் செய்தார்.

இராமதாசின் வழியைப் பின்பற்றி கொங்கு மண்டலத்தில் இருந்து ஈஸ்வரன், மணிகண்டன் போன்ற  கவுண்டர் சாதிவெறி சக்திகள் ஊடகங்களில் தோன்றி சாதிப்பெருமை பேசியும் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவர்கள்   என்று சொல்வதன் மூலம் தலித்களைப் பிறப்பால் தாழ்ந்தவர்கள்  என இழிவுபடுத்தினார்கள். ஊடகங்கள் இவற்றைச் சனநாயகம் என்ற போர்வையில் ஒலிபரப்பி சாதி ஆதிக்க அரசியலை அங்கீகரிக்கின்றன. தமிழகத்தில் நடைபெற்று வருகிற அ.தி.மு.க ஆட்சி  சாதிவெறி சக்திகளுக்கு சாமரம் வீசி வருகிறது. 

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 44 பேர் சாதிவெறியால் மட்டும் படுகொலை செய்யப்-பட்டதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாதிவெறி சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கும்    மாறாக குற்றங்கள் அனுமதிக்கப்படுவதும் அதற்கெதிரான வழக்குகள் பதிவு செய்யப்படாமல்  இழுத்தடிக்கப்படுகிறது. அழுத்தம் கொடுக்கப்படும் புகார்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்கின்றனர். ஆனால், அப்போது, தலித் மக்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தனக்கே உரித்தான பாணியில் மனுதர்ம ஆட்சியை அதிமுக நடத்திக் கொண்டிருக்கிறது.

தலித் மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல்கள் நடக்கும்போது சில தலித் இயக்கங்கள் தலையிடுவதும் சாதிவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடுவதும் என காட்டிவிட்டு தேர்தல் காலங்களில் சாதிவெறிக் கட்சிகளுடனும் தலித் மக்களுக்கு எதிராக செயல்படும் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுடன் இடங்களுக்காகவும், பணத்திற்காகவும் சமரசம் செய்து கொள்கின்றன. கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பில் கவனம் செலுத்துவதில்லை எனவும், தலித் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் 90க்குப் பிறகு எழுந்த  தலித் இயக்கங்கள் குறை சொல்கின்றன. கம்யூனிஸ்டுகளின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, இயக்கங்களால்  பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள சனநாயக சக்திகளிடம் சாதி ஒழிப்புக்கான விவாதங்கள் உருவாகியிருப்பதை உணராதவர்கள் போல் நடந்துக் கொள்கிறார்கள்.

சாதிவெறிச் சக்திகளையும் சாதிவெறிக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி அதிமு.க, தி.மு.க ஆகிய இருபெரும் ஆளும் வர்க்கக் கட்சிகளை எதிர்த்து சனநாயக இயக்கங்களும்  இடதுசாரிகளும் தலித் இயக்கங்களும் ஒன்றிணைந்து போராடுவதே தேவை.  மேலும் வட மாவட்டங்களில் வன்னிய சாதிவெறி மூலம் அரசியல் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டதுபோல, கொங்கு மண்டலத்திலும் கவுண்டர் அடையாளத்துடன் செயல்படும் சாதிவெறிக் கட்சிகள், சாதி சங்கங்கள் சாதிய வன்மத்தின்மூலம் ஓர் அரசியல் உருவம்பெற்று தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கக் கூடும். அதனை முறியடிப்பது உடனடி அவசியம்.

கோகுல்ராஜ் படுகொலையில் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். தீரன் சின்னமலை பேரவையைப் போன்ற சாதிவெறியைத் தூண்டி கொலைசெய்யும் சாதிவெறி சங்கங்களைத் தடை செய்ய வேண்டும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தவும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Pin It