பின் தொடர்கிறேன்

குழந்தையின் நிழல்களை

முற்றத்தில் அவை கைபிசைந்து திரிகின்றன

 

மழலை உருக்கொள்ளும் மதிய வெயிலில்

நிழல்கள் பிடிக்கு சிக்காது

 

ஆகப்பெரிய மனித நிழல் விரல்களில் நகங்களைக் கொண்டிருக்கும்

 

வாயிடுக்கில் பகலை ஒளித்துக்கொள்ளும்

சிறுவர்கள் . . .

சிறுமிகள் . . .

வாழ்க

 

புசிப்பேன் இருட்டில் அவர்கள் விட்டுச்சென்ற தடங்களை

எவருக்கும் தரவிரும்பாத முத்தங்களை . . .

 

 ***** 

ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

மணிச்சத்தம் நிறைந்த கொலைக் குரல்

முத்தங்கள் வெம்பிச் சரிகின்றன

விரல்கள் உதிர்ந்து விழ

உன் புன்னகை ரோகியாக்குகிறது

 

கண்ணே

நிதானம் பற்றிய உன் வகுப்புகளில்

என் பெயரை யாரோ போல் உச்சரிக்கிறாய்

 

இடைவெளிகள்

தின்று கொழுக்கிறது மௌனங்களை

 

பிணம்; மற்றும்

உடல்

இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது

பொருத்தமான

என்

பெயர்

 

 ****** 

இதைச்

சொல்ல முடியவில்லை

எப்பொழுதும்

யாராவது

யாரிடமிருந்தாவது . . .

எதையாவது பிடுங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்

செடியிலிருந்து மலரை பிடுங்குவது போல

காதலியின் துயரம் படிந்த இதயத்தைப் பிடுங்குவது போல

துரோகியின் கண்ணீரைப் பிடுங்குவது போல

நண்பனின் புன்னகையைப் பிடுங்குவது போல

 

எப்பொழுதும்

யாராவது

யாரிடமிருந்தாவது

எதையோ நா பிடுங்கியபடியே இருக்கிறார்கள்

 

இன்று பார்த்தேன் . . .

ஒரு தகப்பன்

தன் பிரியமான குழந்தையை அதன் பிரியத்திற்குரிய

தாயிடமிருந்து பட்டென பிடுங்கிச் சென்றான்

 

நான் அக்கணத்தைப் பார்க்கும் தருணத்தில்

பறிகொடுத்தவள்

பிடுங்கிச் சென்றாள் என்னிடமிருந்து

வலி நிரம்பிய புன்னகையை.

 

 ****** 

 

அருந்தப்போகும் இக்கனவின் கடைசிச்சொட்டைத் தானமிடுகிறேன்

நனைந்து குளிரட்டும் பூமி

 

பறவைகள் ஓயாது நடந்துகொண்டிருக்கின்றன

விரிந்த கைகளில் பறவைகள் எச்சமிட்டு பறக்கின்றன

 

நல்லது

எனதருமை மக்களே

நீங்கள் உறங்கும் தருணத்தில்

மாயவலை வீசும் இரு கண்களோடு

தன்

 

நினைவுகளின் கல்லறைச் செங்கல்களை சுடுவது பற்றியா . . .

ஒரு

கல்லில் நீங்கள் குறி செய்து கடவுளாக்கினீர்கள்

நானோ

விரல்களில் உளியேந்தி என் குறியைச் சிதைக்கிறேன்

ஆகக் கடைசியில்

கடவுளைக் குழப்பத்தில் ஆழ்த்துவதுதான்

என் விதி.

- வசுமித்ர

Pin It