வேட்டுச்சத்தம் மானத்த பொளந்தது. சாரா அண்ணன் என்னப் பாத்தாரு. மறுபடியும் வேட்டுச்சத்தம் மானத்த பொளந்தது. “என்னடா கோவாலு''ன் னாரு. நான் கம்முனு இருந்தன்.

சாரா அண்ணன் கெணத்துல தண்ணி கீழ இறங்கிடிச்சி. அதனால கெணத்த ஒட்டி ரெண்டாள் ஒசரத்துக்கு பள்ளம் வெட்டனம். ஆள் வெச்சிதான். இப்ப மோட்டாரு பம்பு செட்ட நாங்க ரெண்டு பேரே சேந்து உன்னப்புடி என்னப்புடின்னு அலாக்கா எறக்கி கரண்ட்டும் கொடுத்துட்டம். இப்ப ஓஸ் பைப்பும் புட்பாலும் தண்ணியில இறங்கி நிக்குது. இனிமேலு தண்ணி ஜோரா எடுக்கும். அவருக்கு உத்தாசப் பண்ணத்தான் நான் வந்தன். ஆருகிட்ட யும் வளவளன்னு பேசறதே புடிக்கல எனக்கு. ஆனா அவரு பாவம். என் மேல ரொம்ப பாசம் அவருக்கு. அவரு எங்க போனாலும் என்னைக் கூட் டிட்டுப் போவாரு. நான் எது சொன்னா ளும் கேப்பாரு. அவரோட தங்கச்சி அம்மா அப்பா சொல்றதைவிட நான் சொல்றதுதான் பெருசு அவருக்கு.

மறுபடியும் வேட்டுச்சத்தம் கொல்லை மேட்டையே பொளந்துகட்டற மாதிரி இருந்திச்சி. புதுசா வெட்டன மண்ணு படிகட்டுல ஏறி நின்னு பாத்தாரு. நானும் அவரோட ஒட்டி நின்னென். எங்க மாருக்குமேல தர இருந்தது. மொதல்ல தெரிஞ்சது ஆடுதுறை 38தான். காணி அளவுக்கு காத்துல சொகமா அசைஞ்சிகினு இருந்திச்சி. அதுக்கந்தாண்டை பூரா மஞ்சம் புல்லுங்க. அப்புறம்தான் அதோ சந்தரா அக்கா வூட்டுக்காரரு பொணம் போய்க்கிட்டிருக்கு.

டண்ட னக்கர டண்ட னக்கரன்னு மோளச் சத்தத்தோட போய்னு இருந் திச்சு. சாரா அண்ணன் திரும்பாமலேயே “ஆரு வூட்டு பொணம்''னாரு. நானும் அசகொள்ளாம, “சந்தரா அக்கா வூட்டுக்காரருதான் செத்துட்டாருபோல வெடிகாத்தால கரும்புத் தோட்டத் துக்கு தண்ணி எறைக்கப் போனபோது நல்லபாம்பு தட்டிசிருச்சாம்.''

“அடப்பாவமே சந்தரா வூட்டுக்காரன் ரொம்ப நல்லவன்னு பேசிக்கிட்டாங் களே அவனுக்கா இந்த கதி. பாவம் சந்தரா பொண்ணு''ன்னவரு என்னைத் திரும்பிப் பார்த்து, “அதுக்கு நீ ஏன் அழுது வக்கற''ன்னாரு. நான் கம்னு இருந்தன். கண்ணுல வந்த தண்ணிய தொடச்சி விட்டாரு.

புது வக்கப்போரு பக்கத்துல இருந்த தொவர மௌõரு செமைங்க பக்கம் வந்தம். “நெல்லு அவிக்கணுன்னியே எத்தினி வேணுமோ எடுத்துக் கோன்னு'' பெரிய பெரிய சொமைங் களா “ம்ம்ம்.....'' முக்கிகினே தள்ளித் தள்ளிவிட்டாரு.

“ஒன்னு போருன்னே''ன்னு ஒரு சொமைய மாட்டு வண்டிகிட்ட தள்ளினேன்.

“அட ரெண்டு எடுத்துட்டு போடா பாதியில பத்தாம போச்சின்னா மறுபடியும் அலையணும்....''

ரெண்டு சொமைய வண்டியில ஏத்தினு செவுள் ரெண்டையும் நுகத்தடியில பூட்னன்.

“நீயும் வண்டியில ஏறுனா போலாம்''ன்னேன்.

அவரு என்னை உத்து பாத்தாரு.

“மச்சான் டூ வீலர் எடுத்துக்கிட்டு வருவான். நான் அதுல வந்துர்றேன். நீ போ.... அதுக்கு முன்னால ஒரு கேள்வி''ன்னாரு. ஒரு சிகரெட்ட எடுத்து பத்த வச்சிகினு ஒரு பாறையில ஏறி உக்காந்தாரு. “சரி அந்த சந்தரா வூட்டுக்காரன் பொணம் போம்போது நீ ஏன் அழுத'' தம்ம லேசா இழுத்து ஸ்டைலா புகைய வுட்டாரு. எனக்கு சாரா அண்ணனை ரொம்பப்புடிக்கும். அவரு புகைவுடற ஸ்டைலே அலாதி. சிங்கம் போல ஒரு தேஜஸ். அதுல எதிராளிய அடிமை கொல்ற அன்பு விழிங்க. பெருந்தன்மையான தோரண. அவரையே நான் பாத்துகினு இருந் தேன்.

“சொல்லுடா''ன்னாரு.

வண்டிய வுட்டு கீழே எறங்கி அவரு கிட்ட வந்தன்.

“அண்ணே நான் சொல்றத பொறு மையா கேப்பீங்களா ஒன்னும் இல்ல. போனவாரம் அந்த சக்கிலிபாளையத் துல சுப்பம்மா ஒட்டந்தழைய அரைச்சி துன்னுட்டு செத்துட்டா. அதுக்கு மிந்தி வாரம் எந்தங்கச்சி காய்ச்சல்ல படுத்தவ கண்ணை மூடிட்டா. தோ இன்னிக்கு சந்தரா வூட்டுக்காரன் நல்லபாம்பு தீண்டி பொசுக்குனு போய்ட்டான். கொஞ்சமாவது வைத்தியம் செஞ்சி ருந்தா கண்டிப்பா உயிர் பொழுச்சிகினு இருப்பான். மூனு சாவுமே வைத்தியம் பண்ண முடியாம போனதுதான். நான் சொல்றது இப்போ நடந்தது. இதுக்கு முன்னால நிறைய இருக்குது. நம்ப ஊருக்கு ஒரு ஆஸ்பத்திரி இல்லை யேன்னு நெனச்சேன். அழுதேன். வேற ஒன்னும் இல்லண்ணே. இன்னொரு விஷயம்னே நம்பூருக்கு மறுமலர்ச்சி நலத் திட்டம்னு ஒரு கோடி ரூபா அரசாங்கம் கொடுத்திருக்காம். அபி விருத்தித் திட்டம் நலத்திட்டம்னு கிராமத்துக்கு வேண்டிய எத வேண்ணா லும் செஞ்சுக்கலாம்னு வந்திருக்காம். நேத்து பஞ்சாயத்து தலைவரு வூட்டுக் கழனிக்கு எரு அடிக்க வண்டிஓட்டிகினு போயிருந்தேன். அப்ப பேசிகிட்டாங்க. கவுன்சிலரு மெம்பருங்ககிட்ட சொல் லிட்டேயிருந்தாரு; ஏதோ ரோடு வேலை செய்யலாம்னு. தலைவரு மெம்பருங்க எல்லாம் கோடி ரூபாய பிரிச்சி பிரிச்சி சக்கிலிபாளையம், செம்படத்தெரு, கொசத்தெரு, வாணி யத்தெரு, கவுண்டர் தெரு, செட்டியார் தெரு, ஒட்டத்தெரு, பெரிய தெரு, முதலியார்தெரு, அம்பட்டந்தெரு, வண்ணாரத்தெரு, புதுப்பறச்சேரி, பழையப் பறச்சேரின்னு எல்லாத்துக் கும் புதுசா ரோடு போடலாம்னு பேசி கிட்டிருந்தாரு. எனக்க ஒரு ரோசணை தோணிச்சி. அந்த கோடி ரூபாய்ல இந்த ஊருக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணா எப்படியிருக்கும்னு நெனச்சேன். அங்க பேசினா வண்டிக்காரன் வந்த வேலைய வுட்டுட்டு மிஞ்சின பதார்த்தம் மாதிரி வாயாடறான்னு திட்டுவாங்க. அத னாலதான் கொடுத்த "சத்தங்காசை' ஜோபியில போட்டுகினு வண்டிய ஓட்டிகினு வந்துட்டன். தோ உங்கிட்ட சொல்றன். நீதான் இத எப்படி செய்ய ணுமோ யாராருகிட்ட பேசணுமோ ஏற்பாடு பண்ணணும். நான் உனக்கு முழு உத்தாசையா இருப்பண் ணேன்னு'' சொன்னன்.

அவரு தம்ம தூக்கியெறிஞ்சிட்டு பாறைய வுட்டு கீழ குதிச்சி என் கையப் புடிச்சி என்னை அவ்வளவு ஒரு அன்பா பாத்தாரு, “நீ ரொம்ப நல்லவன்டான் னாரு. கவர்ன்மெண்ட் பணம் ஒரு கோடி ரூபா நம்பூருக்கு வரப்போவு துன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்த யோசனை எனக்கு வரலையே. ஒன்னு தெரியுமா எங்கே நல்ல விஷயம் மின்னல் மாதிரி தெரிச்சி வருதோ அதக்கண்டு எல்லோரும் ஆச்சரியப்படு வாங்க. மொதல்வேலையா அத ஏத்துக் குவாங்க. இதை யூனியன் பிடிஓ...... கவுன்சிலரு, மெம்பரு தலைவரு எல்லாருகிட்டயும் நாம்ப பேசுவோம். கண்டிப்பா பலன் கெடைக்கும். கவலைப்படாம போடான்னாரு.

“டேய்டேய் ஒரு நிமிஷம் இங்க வாடா கையை காட்டு ஒரு வண்டியோட்டற வன் பெயிண்ட் அடிக்கறவன் கையில வாட்ச் இல்லைன்னா நல்லா இல் லையே இந்தா இப்படி கையைக் காட்டுன்னாரு. வேணான்னேன் வலுக் கட்டாயமா கையை இழுத்து வாட்சைக் கட்டிவிட்டுட்டாரு. அவருக்கு நான் என்ன பெரிசா செஞ்சிட்டேன். நம்ப பேர்ல இவ்வளவு அன்பு காட்டறா ரேன்னு தோணிச்சி. புதுப்புது சைக் கிள்ல வெறும் பேர் எழுதிகினு இருந்த என்னை கூப்பிட்டு அவரோட அரண் மனை மாதிரி இருக்கற வீட்டுக்கு டிசைன் டிசைனா பெயிண்ட் அடிக் கவச்சி இன்னிக்கு ஒரு பெயிண்டரா கோயில் கோபுரத்துல இருக்கற சிலைக் கெல்லாம் போய் பெயிண்ட் அடிச்சி என்னோட திறமைய காட்றேன்னா அதுக்கு அவர்தானே காரணம்.

காலங்காலமா நம்ப பேர் சொல்ற மாதிரி ஆத்தா மாரியாத்தாவோட படம் ஒன்னு கோட்டமேட்டு மதில்ல வரைஞ்சி வக்கணும்னு ரெண்டு வரு ஷத்துக்கு முந்தியே ஜௌண்டில்மரம் துரிஞ்சமரம் பீரோஜா, பட்ரோஜால் லாம் அடந்து கெடக்கிற எங்கூட்டு தோட்டத்து குழியில ஊரவச்ச சுண்ணாம்பு அது. கிளிஞ்சலை நல்லா சுட்டு ஒரு கல்கூட இல்லாம நல்ல மாவு பதத்துல நீத்தி வச்ச சுண்ணாம்பும்கூட.

அன்னகூடை நிறைய ரொப்பிகினு காட்டுமொகனைல இருக்கற ஆத்தங் கரை கோட்ட மேட்டு மதிலுக்கு போனன். ரொம்ப பெரிசு அது. ரெண்டு ஏணிய போட்டு ஏறி நின்னு சுண்ணாம் போட மணலைக் கலந்து மொதல் பூச்சை முடிச்சேன். இரண்டாவது பூச் சுல நைஸ் மணலைக் கலந்து பூசுனேன். அப்புறம்தான் மை மாதிரி இருந்த சுண்ணாம்பை பூசினேன். அப்பாடா பொம்ம வரையறதுக்கு ஏத்த மாதிரி வந்துடுச்சி. அந்தச் சுண்ணாம்பு சாந்துல முழுசா மனச நிறுத்தி சாரா அண்ண னோட மொகத்த கோட்டுருவமா வரைஞ்சேன். வங்கி வங்கியா உசந்து நிக்கற கோர முடி. படர்ந்த நெத்தி. வில்லுமாதிரி புருவம். கருணையும் இரக்கமும் அடர்ந்த அன்பு விழிங்க. கூரான பெரிய மூக்கு. தைரியமா நிமிந்து நிக்கற மீசை. அப்புறம் சின்ன உதடுங்க. பெருந்தன்மையான தாடை பாவம். மாராண்ட வந்து நிறுத்தினேன். ஈரம் காயரத்துக்கு முன்னாடியே வர் ணங்களையும் பாத்து பாத்து தீட்னன். சுண்ணாம்பு சாந்து அடுக்கு அடுக்கா இருந்ததால நிறுத்தி நிதானமா அழுத்தி வரைய வரைய ஈர சுவத்துல சுண் ணாம்பு ஓவியம் உறுதியா பதிஞ்சது. காஞ்ச பிறகு நல்லாவே வந்திருந்தது அதுபோதும். வீட்டுக்குத் திரும்பி னென். இனிமே பச்சையம்மா கோவி லுக்கு போறவங்க யாரும் ஏழு கன்னி மாரு செலையப் பாத்து பயப்படத் தேவையில்ல. ஏன்னா அங்கதான் சாரா அண்ணனோட சித்திர உருவம் இருக் குதே. அது பாத்துக்கும் எல்லாரையும்னு நெனச்சேன்.

மாட்டுக்கு தண்ணி காம்பிச்சிட்டு ரெண்டு மாட்டுக்கும் வைக்க அள்ளி போட்டுட்டு ஒட்டுத்திண்ணையில செத்த அசந்தன். கண்ணு சொருவிச்சி அவ்ளோ அசதி.

மறுநா நெல்லு அவிச்சிகினு இருந் தென். வானத்துல மேகமெல்லாம் அசகொள்ளாம பெரிசு பெரிசா மலை மலையா நின்னுருந்திச்சி. சாரா அண் ணனோட படம் நல்லா வந்திருந்திரச் சிங்கற பெரும ஒரு பக்கம் இருந்தாலும் மூளைக்காய்ச்சல்னாலவா இல்ல என்ன காய்ச்சல்னே தெரியல ஏதோ ஒன்னு என் தங்கச்சிய என் செல்லத்த அடிச்சி போட்டுடிச்சேன்னு கவலை ஒரு பக்கம் வலிவலியா என்னை அரிச்சி கிட்டு இருந்திச்சி. நான் உடைச்சி உடைச்சி கொடுத்த தொவர மௌõர அம்மா நெல்லு கொப்பரைய தாங்கி நிக்கற எஃகு சிலிண்டருங்க இடை இடையில நெருப்புல போட்டாங்க. அது திகுதிகுன்னு எரிஞ்சது. நெருப்பு நாக்குங்க பாம்பு மாதிரி படம் எடுத்து ஆடிச்சிங்க. ஜ்வாலையையே நான் பாத்துகினு இருந்தேன்.

அந்த செஞ்சுவாலையை பாக்கப் பாக்க எங்கண்ணு மெல்ல மெல்ல செவக்க ஆரம்பிச்சது. மினிஸ்டருங்க எம்எல்ஏங்க... அதிகாரிங்க எம்பிங்க எல்லாருகிட்டயும் எத்தினி எத்தினி விண்ணப்பங்க இந்தக் கையால எழுதி எழுதி கொடுத்திருப்பேன். போன ஒரு முறையே ஆஸ்பத்திரி வந்திருக்கணும். ஏன்னா இந்த கிராமத்தோட தொகுதி எம்எல்ஏதான் சுகாதார அமைச்சரு. ஓட்டு வாங்கிகிட்டு நன்றி கூட்டத்துக்கு வந்த கையோட சொன்னாரு எதுவா இருந்தாலும் பதினைஞ்சி பைசா கார்டு போடுங்க. நான் செய்யறன்னாரு. கார்டு விலை இருபத்தி அஞ்சி ஆவர வரைக்கும் வாராவாரம் எழுதி எழுதிப் போட்டு காசுதான் வீணாப்போச்சி. கார்டுதான் காணாமப்போச்சி. அதுக் கப்புறம் மறுபடியும் மறுபடியும் தேர் தல் வந்துகினே இருந்தது. மறுபடியும் மறுபடியும் எம்எல்ஏங்க எம்பிங்க வந்தாங்க. மறுபடியும் மறுபடியும் மனு கொடுத்துகினே இருந்தென். அவங்கள் லாம் மறுபடியும் மறுபடியும் கண்டுக் காம போய்ட்டே இருந்துட்டாங்க. இந்த மொர ஊருக்கு வந்திருக்கிற மறு மலர்ச்சி திட்டத்துல செய்ய வேண்டியது ஆஸ்பத்திரி மட்டுந்தான்னு நான் முடிவு செஞ்சன். இதுக்கு எது தடை வந்தாலும் அத ஒரு கை பாத்துற வேண்டியதுதான்.

தங்கச்சி கருமாதிக்கு அப்படி இப் படின்னு அலைஞ்சதாலே ரெண்டு நாளு வீட்லயே வேலை சரியாயிருந்தது. அதுக்கப்புறம் நாலாநாளுதான் வண்டிச் சத்தம் ஆரம்பிச்சேன். நடுவுல ஒரு நா சாரா அண்ணன் என்னைத் தேடி வந்த தாக சொன்னாங்க. ஆனா நா வூட்ல இல்ல அப்ப. சின்னமுத்து தம்பியோட மல்லாக்கொட்டை மூட்டைங்களை ஏத்திகினு லோட்டரிக்கு போனன். ஊருக்கு ஆஸ்பத்திரி வருது வருதுன்னு ஊரே பேசிகிதுன்னு அங்க பேசிகிட் டாங்க. மல்லாட்ட உடைக்கற தெய்வ சிகாமணிகூட சொன்னான், நம்பூருக்கு ஆஸ்பத்திரி வரப்போவுது அதுக்கு சாராதான் டீக்கடைல தெரு முக்குல லைப்ரரி வாசல்ல மந்தவெளி கொடிக் கம்பத்துங்கீழல்லாம் நின்னு நின்னு எல்லாருகிட்டயும் பேசுதுன்னு. எனக்கு கொஞ்சம் தெம்பு வந்துச்சி. தண்ட பாணி செட்டியார் வீடு கட்டறார்னு செங்கல் சத்தம் அடிக்கப் போயிருந் தேன். என்னடா ஊருக்கு ஆஸ்பத்திரி வரணும்னு ஒத்தக்கால்ல நிக்கறயா மேன்னாங்க. லோட்டரிக்கு சம்முவம் அண்ணன்ந்து மல்லாகொட்ட ஏந்தி கினு போனன். அங்க தெய்வசிகாமணி “நீயும் சாராவும் ஊருக்கு ஆஸ்பத்திரிய கொண்டாந்துட்டுதான் மறு வேலைய பாப்பீங்களாமேன்னான். புதுசா கட்டற டூரிங் டாக்கீஸ்க்கு தரை டிக்கட் உக்கார மணல் அடிக்கப் போனன் அங்க வச்சி கொட்டா மொதலாளி பரவாயில் லைடா உன்னை மாதிரி ஆளுங்கள் லாம் இறங்கி நின்னாதான் ஆஸ்பத்திரி வரும்டான்னாரு.

பள்ளிக்கூடத்து எட்மாஸ்டரு கூட ஒரு நா வழியில கூப்பிட்டு சர்க்கார் கெணத் துக்கிட்ட வச்சி விசாரிச்சாரு இந்த முயற்சிய வுட்டுராதீங்க. சாரங்கபாணி ஊரு முழுக்க கௌப்பி வுட்டுட்டான். ஆஸ்பத்திரி வரப்போவுதுன்னு வரப் போவுதுன்னு. நீங்க ரெண்டு பேரும் சேந்து அத உண்மையாக்கிடணும்னு சொன்னாரு. எனக்கு குஜாலமா கூட இருந்திச்சி. ஏன் தெரியுமா ஏன் ஒரு வார்த்தைய பெரிசா எடுத்துக்கிட்டு அத ஊரு பூரா பரப்பிடுச்சே சாரா அண்ணன் எவ்வளவு பெரிய விஷயம். இத்தினிக் கும் அவங்க வீட்ல கரும்ப வெட்டற போதுதான் கழிச்ச சோகைங்களை வண்டி வண்டியா ஏந்திகினு அவங்க வீட்டு பக்கத்து காலி மனையில போட்டு போட்டு போன ஒரு வாரத்துல தான் எங்களுக்கு பழக்கமே. அப்புறம் அவங்க வீட்ல ஏதோ விசேஷம்னு பெயிண்ட் அடிக்கப் போம்போதுதான் என்னோட ஒரு ஒரு வளைவையும் நெளிவையும் கோட்டையும் கலரை யும் பிரஷ்ஷோட பொறுமையும் வேகத்தையும் அழகையும் பாத்து என்னை நல்லா பாராட்டனாரு. வாடகை சைக்கிளுக்கு பேரு எழுதி கினு இருந்த என்னை கூப்பிட்டு அரண் மனை மாதிரி ஒரு வூட்டை கொடுத்து அடிறா பெயிண்டைன்னா எப்படியிருக் கும். அதான் அதான் முழு திறமையும் முழு கவனத்தையும் அர்ப்பணிச்சென். நல்ல சாப்பாடு. நல்ல கவனிப்பு. தெனம் தெனம் சாயங்காலம் பெயிண்ட் அடிச்ச அன்னன்னிக்கு சாயங்கால மெல்லாம் மதகுல போய் குளிப்பன். அப்ப அவரு வருவாரு, பேசுவாரு, உலகம், அரசியல், சினிமா, பெயிண்ட், சொந்தபந்தம், சமுதாயம்னு ஏதாவது பேசினே இருப்பம். தோ இப்ப அவ் வளவு ஒரு அந்நியோன்யமா ஆயிட் டாரு. ஒரே வாரத்துல ஊருக்கு ஆஸ்பத் திரி வர்றதைப்பத்தி என் பேச்சை ஊரு பூரா பரப்பிவிட்டுட்டாருன்னா பாத்துக் கோங்களேன்.

2

சாரா அண்ணன் கூப்பிடறாருன்னு குளத்தங்கரைக்கு போனன். நிழல் நிழலா கிடந்த பாதையெல்லாம் பழுப்பு பழுப்பு ஆல இலைங்க பச்ச ஆல இலைங்க விழுந்து கிடந்துச்சி. நல்ல இலைங்களா பாத்து ஆச்சாரி தெரு பாட்டிங்க ரெண்டு பேரு (அதுல ஒருத்தங்க எங்க வீட்டுக்கு வந்து கைமுறுக்கு சுட்டு தந்துட்டு போவாங்க அப்பப்ப. . . ) தங்களோட கூடைங் கள்ல எடுத்து போட்டுகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு என்ன குறை. பெரிய பெரிய மாடி ஊடுங்க இருக்கு. தங்க நகை செய்யறதுல நல்ல வரும்படி. ஆனாக்கா இந்தப் பாட்டிங்க வயசான காலத்துலயும் இலை தச்சி வித்தாவது கை செலவுக்கு அடுத்தவங்களை எதிர்பார்க்காத தன்மைய நெனச்சி ஆதரவா சிரிச்சிக்கிட்டேன்.

நீளநீளமான படிகட்டுல உக்கார்ந்துகினு தண்ணியையே பாத்துகினு இருந்த சாரா அண்ணன் சருகு சத்தம் சலசலக்க என்னைப் பாத்தாரு. “தெள்ளோடை நெலத்த விலைக்கு பேசறதுக்காக ஒரு வாரமா அலைஞ்சிட்டிருந்தேன். அதான் உன்னை பாக்கமுடியல கோபாலு. அந்த நெலத்தையும் வாங் கிட்டா இந்த ஊருலயே அதிக நெலம் நம்புலுதுதான் தெரியுமா. அப்புறம் காட்டுமுனை கோட்டை மேட்டு மதில்ல நீ வரைஞ்சி வச்சிருக்கற என் னோட படம் அரும கோபாலு. உன்னை என்ன சொல்றதுன்னே தெரியல எனக்கு. இது கையில்ல, அந்த பிரம்ம தேவனோட எழுதுகோல் கோபா லுன்னு என்னோட கையை எடுத்து கண்ல ஒத்திகிட்டாரு சாரா அண்ணன். அப்புறம் இருந்து மெல்ல பேசனாரு, “உனக்கு தெரியும் அந்த தெள்ளோட நெலத்த வாங்கணும்னு நான் எவ்வளவு ஆசையாயிருந்தேன்னு. என்னவோ அது கைவிட்டு போயிடுமோன்னு பயமாயிருக்கு கோபாலு. திடுதிப்புனு நீ வரைஞ்ச படத்த பாத்ததும் எல்லா ஆசையும் பறந்தோடிடிச்சி. நான் இந்த உலகத்தையே வாங்கிட்ட மாதிரி ஆயிடிச்சி கோபாலு'' என்று மேலும் சிரிச்சவரு சொன்னாரு, “நாம இப்ப நம்ம யூனியன் பிடிஓவைப் பாக்கப் போறோம்''னு.

விறுவிறுன்னு நடந்தே போனோம்.

“ஒரு பிடிஓங்கற மொறைல நான் சொல்றது இதான். நீங்க இந்த விவ காரத்த விட்டுறத்து நல்லது. ஏன்னா இந்த ஊரோட உபதலைவர், மெம்ப ருங்க கட்சிக்காரங்க எல்லாம் உக்காந்து கிட்டு இருக்காங்க. ஊழலை ஒழிப் போம் ஒழிப்போம்னு ஒரு வேலையும் டெண்டரும் வராததால ஆளுங்கட்சி மெம்பருங்க தலைவருங்க எல்லாம் கடுப்பாஇருக்காங்க. இந்த மறுமலர்ச்சி திட்டத்துலதான் நாலு காசு பாக்க ணும்னு ஆசப்படறாங்க. அதிகாரிங்க ளுக்கு ஒரு பத்து இருபது பர்சன்ட் கெடைச்சா அதுவே பெரிய விஷயம். நடுவுல நீங்கவேற வந்து குறுக்குசால் ஓட்டாதீங்க. நாளைக்கு மனு வாங்க கலெக்டரு சில முக்கியமான ஊருங்க ளுக்கு நேர்லயே வர்ராரு. அதுல நம்பூரும் ஒன்னு. முடிஞ்சா ஒரு மனு கொடுத்து விடுங்க பாக்கலாம்.''

சாரா அண்ணன் வேகமாய் ஓடிப்போய் பிடிஓவின் சட்டையைப் பிடித்தார். “என்ன தைரியம் இருந்தா என்னை மாதிரி ஒரு பப்ளிக் எதிருக்கவே மறு மலர்ச்சி திட்டத்துல காசு பாக்கணும்னு சொல்லுவே. நாளைக்கு கலெக்டர் வரட்டும் உங்களை எல்லாரையும் ஒன்னுல ரெண்டு பாத்துடறேன்''ன்னு எகிறும்போது பஞ்சாயத்து போர்டு மெம்பருங்க அவரை இழுத்து விட்டாங்க. “என்ன சாரங்கபாணி இது ரசாபாசம் ஆக்கிட்ட.''

“நீங்க சொம்மாருங்க எல்லாரும் சேந்து பொதுமக்களை ஏய்க்க பாக்கறீங்களா அதுக்கு நான் வுடமாட்டன்.''

“சரி போப்பா உன்னால ஆனதை பாத்துக்கோ போ''ன்னாங்க.

நாங்க ரெண்டு பேரும் மந்தவெளில டீக்கடைல ஒரு கல்யாண பத்தியில பஜார்ல லைப்ரரி வாசல்னு எங்க பாத்தாலும் இதப்பத்தி பேசனோம். எங்க ஆதரவு உங்களுக்கு உண்டுன்னு ஜனங்க சொன்னாங்க.

கொல்லக் கெணத்துல தண்ணீர் சேந்திகினு இருக்கும்போது சாயந்தரம் ஆறு இருக்கும். அந்திக்கருக்கலில் குளிக்கறது ரொம்ப இதம் எனக்கு. ஒரு ஆள் வந்தான். காதோட ஒரு சமாச் சாரம் சொன்னான். சாயங்காலம் ஒரு மொற குளிச்சிட்டா நான் எங்கியும் வெளியில போறதில்ல. அதனால “சாரா அண்ணங்கிட்ட இப்போ வரமுடியாதாம். நாளைக்கு வரன்னு சொல்லிடு''ன்னு சொன்னன். அதுக்கு “எனக்கு வேலையிருக்கு அத நீயே போய் சொல்லிட்டு வந்துன்னு''ன்னு சொல்லிட்டு அவன் போய்ட்டான்.

சரி எதுனா முக்கியமான விசயமாத் தான் இருக்கும்னு வண்டிய பூட்டிகிட்டு கிளம்பிட்டன்.

காட்டு மொகனைல சாரா அண்ணன் நின்னிட்டிருந்தாரு. இருட்டாயிருந்தா லும் லாந்தர் வெளிச்சத்துல அவரு மொகம் நல்லா தெரிஞ்சது.

இலுப்புத்தோப்பு மச்சூட்ல ஊர்த் தலைவரு உல்லாசமா இருக்கற எடத் துக்குத்தான் இப்போ போறோம்னாரு. என்ன விசயம்னேன். “தலைவரு எங் கிட்ட தனியே பேசணும்னு சொன்னா ராம்'' “தனியாத்தானே உங்கிட்ட பேசணும்னு கூப்பிட்டிருக்காரு அப்ப நா எதுக்கு''ன்னேன். “ஒன்னுமில்ல எதுக்கும் ஒரு பந்தோபஸ்துக்குத் தான்ன்னாரு. “கவலைய வுடுங் கன்னு'' ஒரு மொளக்குச்சிய வண்டியி லிருந்து கழட்டி எடுத்து ஒரு சொழட்டு சொழட்டி காம்பிச்சேன். எவன்னா கைய வச்சா அவ்வளவுதான் அவனை ஒரே போடுதான்னேன். “ஹிஹி ஹின்னு'' சிரிச்சி அது போதும்னாரு.

ரொம்ப தூரம் போய்கிட்டே இருந் தோம். ஒரு இடம் வந்ததும் வண்டிய நிறுத்துன்னாரு. “நீ வராத நான் போறன். அதோ இருக்கு ஊர்த் தலைவரு மாங்கொல்லை வூடு. எதுனான்னா ஓன்னு சத்தம் போடறேன் அப்புறம் வாடான்னாரு.''

அவரு மெல்ல நடந்தாரு.

எடுத்து வந்த லாந்தரை நல்லா ஏத்தி கிட்டேன். எனக்கு இருட்டு பயமாயி ருந்திச்சி. எதிர்ல காட்டுக்குள்ள ஒரு ஒத்தையடிப்பாதை போச்சி. இந்த மாதிரி காட்டுங்குள்ள தனியே போற இந்த மாதிரி ஒத்தையடி பாதைங்க ளுக்குத்தான் எவ்ளோ தகிரியம். எனக்கு அதிசயமாகிருந்தது.

கா மணி நேரம். அர மணிநேரம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சி. வானத்துல வேற அப்பப்ப மின்னலும் இடிச்சத்தமும் கடமுடா தடமுடான்னு ஒரே ரகளை. அப்படி என்னதான் பேசினாங்க. ஒருக்கா சாரா அண்ணனை அடிச்சிப் போட்டுட்டாங்களா? அடப்பாவிங் களா! சதிப் பன்னீட்டீங்களேடா... நினைச்சபோதே எனக்கு பகீல்னு ஆயி ருச்சி. எனக்கு அப்பவே தோணிச்சி. கூடவே போலாம்னு. இப்ப இந்த மாதிரி ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுச்சே. நாளைக்கு அப்புறம் எப்படி ஆஸ்பத்திரி வேலைங்களை முன்ன நின்னு முயற்சி பண்றது. எனக்கு ஆஸ்பத்திரி முக்கியம். எனக்கு இன்னா எனக்கு இல்லை. எங்க ஜனங்களுக்கு. எங்க ஊருக்கு எங்க வட்டா ரத்துக்கு. ஆஸ்பத்திரி வேலைலை எது குறுக்க நின்னாலும் ஒரு கை பாத்துர வேண்டியதுதான். அதுவும் சாரா அண்ணன் எவ்வளவு நல்லவரு.

லாந்தர எடுத்துக்கினு எறங்கி நடந்தேன்.

எதிர்ல ஏதோ சத்தம் யாரதுன்னேன்.

சலசலன்னு சருகுல கால்வச்சி நடந்து வர்ற சத்தம்.

நான்தான்டான்னு குரல். சாரா அண் ணனோட குரல்தான். அப்பாடான்னு ஒரு நிம்மதி. அவரு மொகம் அவ்ளோ சந்தோஷமாயிருந்திச்சி.

அவரோட சிரிச்ச மொகத்த பாத்தபிறகு தான் எம்மொகமும் மலர்ந்துச்சி. ஏன்னே இவ்வளவு நேரம்னேன். “சொல் றேன் ஆனா நான் சொல்றதையெல் லாம் பொறுமையா கேப்பியா''ன்னாரு.

“கண்டிப்பா கேக்கறேண்ணே இந்த உலகத்துல இப்ப எனக்கு இருக்கற ஒரே துணை நீதாண்ணே. நீ சொல்லுண்ணே எதுவொன்னாலும் சொல்லுண்ணே கேக்கறேன்''ன்னேன்.

வண்டிய கிளப்பினன். மாடுங்க இருட் டுல லாந்தரு வெளிச்சம் மட்டும் விழற பாதைல மெரளாம போச்சிங்க.

ஆத்தங்கரை மொகனைக்கு வந்தோம். பச்சம்மா கோவில் கன்னிமாரு சிலை கிட்டே வண்டி வந்ததுமே வண்டிய நிறுத்துறான்னாரு. கோட்டமேட்டு மதிலுகிட்ட வந்ததுமே வண்டிய நிறுத்துனேன்.

அவரு பேச ஆரம்பிச்சாரு.

“தலைவரு எங்கிட்ட எவ்ளோ மரியா தையா பேசனாரு தெரியுமா. நான் தெள்ளோடை நிலத்த இழந்ததைப் பத்தி அத மீக்க பாடுபடறதப் பத்தி அதுக்கு காசில்லாம நிக்கறத பத்தி நான் கஷ்டத்துல இருக்கறது பத்தி யெல்லாம் அவரு பேசனாரு தெரியுமா அதோட இல்ல. நாளைக்கு அத மொத வேலை யாவாங்க சொல்லி நான் கேட்ட விலைக்கே கொடுக்க ஏற்பாடு பண்ண அவராச்சின்னும் ரிஜிஸ்தர் செலவு மொதகொண்டு எல்லாத்துக்கும் தான் பொறுப்புன்னு சொன்னாரு கோபாலு. இப்போதைக்கு கை செலவுக்கு வச்சுக் கோன்னு ஒரு பத்தாயிரத்த லபக்குன்னு எடுத்து கொடுத்துட்டாரு கோபாலு. ஆனா இதுல பத்துக்காசு எனக்கு வேணாம் கோபாலு. இது உனக்குத் தான். நாளைக்கு நீயும் இந்த ஒட்ட மாட்டு வண்டியையும் காளைங்க என்ன விலை ஆனாலும் வாங்கிக்கோ கோபாலு. . . மேல எவ்வளவு ஆனா லும் நான் வாங்கித்தரேன். ஆனா ஒன்னு என்னைப் பாத்து தலைவரு சொன் னாரு கோபாலு. அந்த கோபாலு பைய னோட சேராத மொட்ட பெட்டிசன் எழுதிகினு உருபடி இல்லாம திரிஞ்சி கின இருக்கறவன். அவனோட சேந்து நீயும் திரிஞ்சி கடைசில கெட்டு கீரை விக்கத்தான் போகணும்னு சொன்னாரு கோபாலு. நீ நல்லபடியா செட்லு ஆக றதுக்கு இன்னும் எவ்வளவு வேணுமோ கேளு கையோட வாங்கிட்டு வந்துட றேன் கோபாலு. என்ன கோபாலு அப்படி பாக்குற...''

“அப்போ இந்த மொறையும் நம் பூருக்கு ஆஸ்பத்திரி வராதா. . .''

“என்ன கோபாலு. அப்படி கேட்டுட்ட. . . இந்த மொற இல்லன்னா அடுத்த மொற. ஒன்னு தெரியுமா ஆஸ்பத்தி ரின்னா யாருனா ஒருத்தன்தான் காண்ட் ராக்ட் எடுத்து சம்பாதிக்க முடியும். அதையும் முழுசா பில்டிங் கட்டி நிக்க வக்கணும். கொடுக்கற காசு கிட்டத் தட்ட சரியா போயிடும்.. ஆனா ஊருக் குள்ள ரோடு போடறதுன்னா ஏதோ ஒன்னும் பாதியுமா போட்டா கேக்கற துக்கு ஆளு இல்ல. ஒரு பர்லாங்குன்னு ஒர்க் ஆர்டரு போட்டா ஒரு பத்து பதினைஞ்சி கட்சிக்காரங்க குடும்பமா வது ஒழுங்கா அனுபவிக்கும். வேணும்னா நீயும் நானும்கூட ஒரு ஒரு பர்லாங் வேலையும் வாங்கிக்கலாம். அந்த அளவுக்கு பேசிட்டு வந்திருக் கேன். தரன்னு சொல்லியிருக்காரு. ஆஸ்பத்திரி கட்டலாம். இந்த ஸ்கீம் இல்லைன்னா அடுத்த ஸ்கீம்.. . . .''

“இப்படியே நிறைய ஸ்கீம் போயி டிச்சின்னே. அப்போ நாளைக்கு கலெக் டரு வந்தா மனு கொடுக்க வேணான்றீங்களா. . .''

“முடியாதுன்னேன். கலெக்டர் நாளைக்கு நம்பூருக்கு வரப்போறதில்லை. வரவே ணான்னு போன்ல சொல்லியாச்சி. ஏன் தெரியுமா. . ரோடெல்லாம் சரியில்ல குண்டும் குழியுமா இருக்கு. நேரா வளத்தி கிரா மத்தை மட்டும் பாத்துட்டு அப்படியே மெயின் ரஸ்தாவுலேயே போக ஏற்பாடு பண்ணியாச்சி. அது மட்டுமில்லாம நடுரோட்ல பஸ் ஒன்னு விழுந்து ரோடு பிளாக் ஆகியிருக்குன்னு சொல்லியாச்சி. அவரும் சரின்னு சொல் லிட்டாராம். . .''

“அப்போ முடியாதுன்றீங்களா. . .''

“முடியும் கோபாலு நீயும் நானும் நல்லா வாழ முடியும். இந்தா இத வச்சுக்க. என்ன கோபாலு அப்படி பாக்குற பொதுப்பணத்த சாப்பிட்டா சாமி ஒன்னும் கண்ண குத்திராது. எங்கே உன் சட்டை பாக்கெட்டு... காட்டு''ன்னு பாக் கெட்ல பணத்த செருகி விட்டுட்டாரு.

“தோபாருண்ணே நம்பூருக்கு ரோடு இல்லைன்னு யாரும் அழுவலேண்ணே. நம்பூரு வழியா போற தார்ரோடு அந் தாண்டை அவலூர் பேட்டை திரு வண்ணாமலையிலிருந்து இந்தப்பக்கம் செஞ்சி திண்டிவனம் போய் தொடு திண்ணே. நம்பூருக்கு மிஞ்சி போனா பத்து பாஞ்சி பஸ் வருது அதுவும் ஊருக்குள்ள சுத்தரத்தில்ல. நேரா வந்து நேரா போய்டுது. அது எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம்... எனக்கு மருத்துவ மனை முக்கியம்ணே... தோணி தொலங்கி என்னிக்கோ ஒரு நாள் இந்த மாதிரி வர்ற நல்ல நல்ல திட்டங்களை அமல்படுத்தும்போது ஜனங்களை நேரா விசாரிச்சி அவங்களுக்கு நெஜ மாலுமே என்ன தேவைன்னு தெரிஞ்சி செய்யணும்ணே அதான் முக்கியம். சும்மானா பணத்தை வாரி இறைச் சிட்டா ஆச்சா. . . ஆனா நீங்க இப்படி திடீர்னு கிறுக்கு மாங்க்காவா மாறு வீங்கன்னு நான் நெனைக்கலேண்ணே... “

“சமுதாயத்தைப் பத்தி நீ தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு கோபாலு.''

“சமுதாயத்தைப் பத்தி மக்களோட கஷ்டங்களைப் பத்தி தெளிவான பார்வை எனக்கு உண்டு. எனக்கு ஆரும் உபதேசம் சொல்ல வாணாம். கடை சியா ஒரு கேள்வி. நாளைக்கு பக்கத் தூருக்கு போயாவது கலெக்டரு பாத்து பேசணும் வர்றீங்களா. . .''

“என்ன விளையாடறியா கோவாலு. இவ்ளோ தூரம் சொல்றன். எனக்கு தெள்ளோடை நெலம் முக்கியம். உனக் கும் ஒரு ஜோடி காங்கேயம் காளை வாங்கிட்டியானா வண்டி ஜோரா சல் லுன்னு போவும்... சட்டுன்னு சொல்லு.''

“என்னை மன்னிச்சிடுங்கண்ணே. . .'' என்று ஒருவிதமான வெறியோடு கையிலிருந்த தடித்த மொளக்குச்சி யெடுத்து ஒரே போடுதான் போட்டேன். வண்டியைவிட்டு சுருண்டு கீழே விழுந் தாரு. கீழே குதித்து அவரின் கழுத் தாம்பட்டையிலும் தோளிலும் மாரி மாரி விளாசினேன். எழுந்திருக்க முடி யாமல் “என்னடா கோபாலு''ன்னாரு.

“நாளைக்குக் காலைல ஊரு ஜனத் தையே தெரட்டிகினுப்போய் கலெக் டருகிட்ட போப்போறேன். எல்லார் கையிலேயும் மனு. மருத்துவமனை மட்டும்தான் வேணும்னு மனு. வரண்ணே அதுக்குள்ள இன்னும் ஒரு அடி மரண அடி கொடுத்துடறண்ணே உங்களுக்கு. . .''

ராத்திரியெல்லாம் சரியான மழை. இடின்னா இடி. அப்பேர்குந்த இடி. மழ சொழட்டி சொழட்டி அடிச்சது. பள பளான்னு யாரோ வானத்துல இருந்து டார்ச் லைட் அடிச்சிப்பாக்கற மாதிரி மின்னல்.

மறுநாள் காலைல மலை கூட்டுரோட் டுக்கு ஊர் ஜனங்களையெல்லாம் அழைச்சிட்டு போனேன். அந்த வழி யாத்தான் கலெக்டரு வரார்னு மதியம் வரைக்கும் காத்திருந்தோம். சரியான வெயில் வந்தது. மதியம் மாதிரியும் பசியோட இருந்தோம். தேப்பைத்தேப் பையா கூட்டம் நின்னிருந்தது. ஆனா கலெக்டரு வர்றலை. பரவாயில்ல அதனாலென்ன. இன்னொரு நாளைக்கு இன்னொரு மொற பாத்துக்கலாம்னு எல்லாரையும் நான் சமாதானப்படுத்து னேன். கலெக்டர் புரோக்ரோம் எத னால கேன்சல்னு தெரியலை. ஜனங் கள்ளலாம் என்னை சமாதானப்படுத்து னாங்க. எனக்கா ஆத்திரமாயிருந்துச்சி. அமைதியா நடையக் கட்னன். எல்லாரும் என்னோட நடந்தாங்க.

ஒரு நாலு மணி வாக்குல ஊர் திரும்ப குள்ள டண்டனக்கர டண்டனக் கரன்னு ஏதோ சத்தம் கேட்டது. கூடவே டமால் டமால்னு வேட்டுச் சத்தம் வானத்த பொளந்தது. அந்தப் பக்கம் போன ஒரு ஆளை கூப்பிட்டு யாரு பொணம் போவுதுன்னு கேட்டன். ஜனங்களே சொன்னாங்க.

“உனக்கு வெசயம் தெரியாதா நம்ம சாரங்கபாணி. அதான் உன் உயிர் தோஸ்து ஆத்தங்கரை காட்டுமொக னைல கோட்டமேட்டு மதில்ல நீ படம் எழுதியிருந்தியே அந்த இடத்துல மணல்ல செத்துக் கிடந்தாரு. ராத்திரி இடி விழுந்திருக்கு. அதான் யாருக்கும் சொல்லியனுப்பாம கூட பொணத்த எரிக்க எடுத்துட்டுப் போறாங்க. இது வொன்னும் பெரிய சாவு இல்லையே. இடி விழுந்து செத்த பொணத்துக்குப் போய் ஈமச்சடங்கை விமரிசையா பண்ணுவாங்களா என்னா?'' என்றார்கள்.

“ஆஸ்பத்திரி வரதுக்கு சாரா அண்ணன் போராடினாரு. ஆனா, ஆஸ்பத்திரி ஊருக்கு வரப்போற வேகத்துல சாரா அண்ணனையே காவு வாங்கிடிச்சி....'' என்று சொன்னேனே தவிர என் கண்களிலிருந்து பொலபொல வென்று வழிஞ்சது.

பிறகு திரும்பவும் நானே பேசினேன், “உண்மைதான். வயசாயி செத்ததை பெரிய சாவுன்னலாம். நாலு ஊருக்கு சொல்லியனுப்பி பிரமாண்டமா தேரெல்லாம் செஞ்சி கொண்டா டலாம். திடீர்னு அகால மரணமடைஞ் ண்சதைப் போயி எப்படி விமரிசையா கொண்டாட முடியும். வழக்கமாக அதுமாதிரி செய்யறதில்லை. சிம்பிளா செய்யறாங்கன்னா அதுவும் சரிதா'' ன்னு சொன்னேன்.

சாரா அண்ணணோட இறுதி ஊரலத்துக்கு போறதா இல்லையான்னு தெரியலை. ஜனங்க வெள்ளாந்தாங்கல் பொறடை பம்புசெட்டு வழியா ஊரப்பாத்து நடந்துகிட்டிருந்தாங்க. இன்னிக்கும் வானத்துல கொண்டல் கொண்டலா மப்புங்க ஏற ஆரம்பிச்சது.

- பால்நிலவன்

Pin It