அப்பா என்று சொல்லப்படுகிற திருத் தகப்பன்களைப் பற்றி என் மனசுக்குள் என்ன அபிப்ராயம் வைத்தி ருக்கிறேன் என்பதை இப்பொழுதே நான் சொல்லி விடுகிறேன். இல்லையென்றால் கதை முடிகிறபோது என்னை நீங்கள் தகப்ப ஜாதிகளின் நிஷ்ட்டூர எதிரி என்று நினைத்துக்கொள்வீர்கள். ஆகாசப் பெரு வெளியில் ஆவி ரூபத்தில் சுற்றிக் கொண்டிருக்கிற அரூப ஆத்மாக்களான நம்மை பூமிக்கு கொண்டு வந்து அம் மாக்களின் திருவயிற்றில் சேர்ப்பிக்கிற தேவதூதனின் திரு அவதார உருவம் தான் தகப்பன் என்று அப்பாக்களின் தாத்பரியம் குறித்து, (அது என்ன தரித்திரியமோ) சில மூதேவி அப்பாக்... இல்லை மூதாதை அப்பாக்கள் காண பரம்பரைக் கதைகளை கட்டவிழ்த்து விட்டுச் சென்ற சேதி எனக்குத் தெரியும். அதை நான் உண்மை என்று நம்புகி றேன். அப்பாக்களைப் பற்றிய மேற்படிபெரு மிதங்கள் உங்களுக்கும் இருக்கும் என்கிற நம்பிக்கையில் உங்களிடம் நான் மூன்று கேள்விகளை கேட்கப்போகிறேன்...

என் முதல் கேள்வி சாதாரணமானது: என்னுடைய அப்பாவின் பெயர் என்ன? இந்தக் கேள்விக்காக நீங்கள் சிரிக்கவும் கூடாது, அப்பா பெயர் தெரியாத அரைலூசு என்று என்னை நினைக்கவும் கூடாது. ஊருக்கே தெரிந்த உத்தமபுத்திரரான என் அப்பா இன்றைக்கும் சகல சௌகர்யங்களோடும், தன் கிழட்டு மனைவியோடும் நன்றாக வாழ்ந்துகொண்டி ருக்கிறார். என் அப்பாவின் பெயர் ஒரு வேளை உங்களுக்குத் தெரியுமென்றால் இந்தக் கதை உங்களுக்கானது அல்ல. காரணம் நான் அப் பாவைப் பற்றிய ஒரு தப்பான கதையை சொல்லப் போகிறேன்.

என் இரண்டாம் கேள்வி கொஞ்சம் வன் முறையானது: பன்றியைக் குத்தி கொலை செய்வதைக் காட்டிலும் அப்பாவை கொலை செய்துவிடுவதாய் மிரட்டுவது பாவமான செய்கையா? உங்களின் பதில் ஆமென்றால் அதற்கு ஆதாரமான மூன்று காரணங்களை நீங்கள் சொல் லியே ஆகவேண்டும். அப்பாவை கொலை செய்கிற உத்தேசத்தில் நான் இருக்கிறேனா என்பதை நீங்கள் கேட்டாலும், தற்போதைக்கு அதை நான் யாரிடமும் சொல்லப் போவ தில்லை.

மூன்றாம் கேள்விக்கு நீங்கள் சொல்லப் போகிற பதிலிலிருந்துதான் நான் உங்களிடம் மேற்கொண்டு பேசுவதா, இல்லை நவத் துவாரங்களையும் மூடிக் கொண்டு போவதா என்பதே இருக்கி றது. மூன்றாம் கேள்வி இதுதான்: இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நானே இருக்கிற இத்தகைய நிர்கதியான நிலையில், உலகத்தின் அப்பாக்கள் எல்லோரும் கடுங்கோபம் கொள்கிற படியான ஒரு "தகப்பன் ஒழிக!' கதையை நான் சொல்வது சரியா, தவறா? தவறு என்பவர்கள் அவசியமில் லாமல் ஆதாரம் சொல்லத் தேவை யில்லை. இத்துடன் முற்றும் போட்டுக் கொள்ளலாம். எனக்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்.

மேலே கேட்ட மூன்று கேள்விகளுக்கும் யாராவது சரியான பதிலைச் சொல்லி விட்டால் (எனக்கு மகிழ்ச்சியளிக்கிற பதிலாக இருப்பது அவசியம்) அவர்களின் அப்பாக்களிடமிருந்து... மன் னிக்கவும் அப்பாவிடமிருந்து விலை மதிக்கமுடியாத ஒரு பொக்கிஷத்தை பரிசாகப் பெறப் போவது உறுதி.

ஒருவேளை, கிழிந்த டவுசரையே பெரிய பொக்கிஷமாக நினைத்து அப்பா பரிசாகக் கொடுத்துவிட்டால், அவனை அப்பனென்று எப்படி ஒப்புக் கொள்வது? இந்த உலக மகா கேள் வியைக் கேட்காதவன் ஏழை வயிற்றில் பிறந்த மகனே கிடையாது. அவர்களுக் கும் உலக நீதிக் கதைகளில் பதில் இருக்கிறது. 'கோடு போட்ட டவுசரை மட்டுமே பரம்பரைச் சொத்தாக வைத் திருக்கிற அப்பாவி அப்பாக்களிடம் அதைவிட அதிக மதிப்புள்ள பொக்கி ஷங்களை ஒரு மகன் எதிர்பார்ப்பது பித்ரு சாபத்திற்கு வழிவகுக்கும்'' என்று, ஈசல்பட்டி இண்டம் புடிச்ச லெட்சுமணக் குண்டன் என்ற அப கீர்த்தி தெய்வீகன் அருளிய அருட்திரு எச்சரிக்கையை நீங்கள் எந்த நேரத்தி லும் மறக்காமல் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பொக்கிஷங்கள் இல்லாத காரணத்திற்காக தகப்பனை தகப்பன் இல்லை என்று சொல்வது தப்பான அர்த்தத்தில் முடியும். இத்தனை குழப் படியான என் தாக்கங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால், கண்டிப்பாக என்னை, என் வீட்டில் வந்து நீங்கள் பாக்க வேண்டியது அவசியமாகிறது. என் வீட்டிற்கு வழியா? அய்யோ, அந்த வழிமுறை... இரும்பைத் தங்கமாக் குகிற செய்முறையைவிட கஷ்ட மானதாயிற்றே!

ஈ எறும்பு யானை பூனை ஏமாந்த தெருநாய் எருமைமாடு ஏழை கோழை ஏமாளிப் பெருங்குடிகள் என்று கண் ணில் கண்ட சகலத்தெட்டு ஜீவராசிக ளின் வயிற்றிலும் கண்டபடி அடித்து ஊரே வியக்கும் வண்ணம் பெரும் பணக்காரனாக ஆனவன் கிடையாது நான். அப்படி பணக்காரன் ஆன செருக் கில் உலகமே வயிற்றில் ஆரம்பித்து வால்குடல் வரையில் பற்றி எரிச்சலடை கிறபடியானதொரு பெரிய வீட்டைக் கட்டி என் மனைவிக்கு அன்பளிப்பாக தந்து வாழ்கிற பாக்கியம் கொண்டவ னும் கிடையாது. அது எனக்குப் பிடிக் கவும் பிடிக்காது. ஐயாயிரம் அறைகள் கொண்ட வீட்டைக் கட்டினாலும், ஒரே மனைவி கொண்ட ஒருத்தன் ஒரே இரவில் எத்தனை அறைகளில் படுப் பான்? மற்ற அறைகளில் விளக்கு எரியுமா, எரியாதா? (இவ்வளவு எரிச்ச லோடு நான் பேசுவதால், அ என்று ஆரம்பித்து, னியில் முடியும் ஆமணக்கு பெயர் கொண்ட வடக்கத்தி சீமெண்ணை வியாபாரிக்கும் எனக்கும் என்னவோ தொழில் முறை தகராறு என்று யாரும் நினைக்கக் கூடாது. குடியிருக்க சொந்தமாக ஒரு வீடில்லாத ஆசாமி என்று என்னைப் பற்றி மொட்டையாகச் சொல்லிக்கொள்வ தில் என்றைக்குமே எனக்கு விருப்பம் இருந்ததில்லை என்பதால்தான் விளக்க மாக பேசினேன்.)

வாடகைக்கு என்றாலும் எனக்கும் வீடென்று ஒன்று இருக்கிறது. அது வெறும் தரையில், பாய்கூட போட்டுக் கொள்ளாமல் அமுங்கி அலங்கோல மாய் உட்கார்ந்திருக்கிறது. ஏழைகளின் வீட்டை நேரில் பார்ப்பதால் உங்க ளுக்கு அஜீரணக் கோளாறு வராது என்றால் வழி சொல்கிறேன். என் வீட்டையும், விலாசத்தையும் கண்டு பிடிப்பது என்பது குடிகாரன் சாராயக் கடை கண்டுபிடிப்பது போல மிக எளிமையானது. அதேசமயம் அவசர மாக வந்தவன் சந்தைக் கூட்டத்திற்கு நடுவே சிறுநீர் கழிக்குமிடத்தை தேடிக் கண்டுபிடிப்பதைவிடவும் சிரமமானது.

உச்சியில் பியூஸ் போன தெருவிளக்கு தொங்குகிற கரண்ட் கம்பத்தின் அடியில்தான் என் வீடு இருக்கிறது. கரண்ட் இல்லாத கரண்ட் கம்பத்தின் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு, “இங்கே எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் ஒருத்தன் இருக்கிறா னாமே, அவன் வீடு எங்கே இருக்கி றது?'' என்று கேட்டால் பிறக்காத குழந்தைகூட என் வீட்டைக் கை காட் டும். விவரம் தெரியாமல் என்னிடமே அந்தக் கேள்வியை கேட்டுவிடாதீர்கள். எச்சில் கையில் காக்கை ஓட்டாதவன் நான்தான் என்பதால், அது நடுத்தெரு என்று கூட பார்க்காமல் கதறி அழுதுவிடுவேன்.

சுற்றிலும் பசியோடு ஏராளமான நாய் கள் இருக்கிறது என்று தெரிந்த பின் னும் தள்ளுவண்டி இட்டிலிகளை நடுத் தெருவில் நின்று வயிறு புடைக்கத் தின்கிற (தவறி கூட ஒரு துண்டு இட்லி நாய்க்கு விழாது) மேற்படி "நின்றபடி தின்னும் சமூகம்' தான் என்னை எச்சில் கையில் காக்கை ஓட்டாதவன் என்று சொல்கிறது. சொல்லட்டும் என்று நானும் பெரியமனுசத் தன்மையோடு விட்டுவிட்டேன். ஆனால், காக் கையைக் கண்டதும், தூங்கிக்கொண்டி ருந்தாலும் எழுந்துபோய் கையை எச்சிலாக்கிக்கொண்டு காக்கை ஓட்டு கிற பரம்பரையில் பிறந்ததாய் நம்பிக் கொண்டிருக்கும், எல்லா கையிலும் காக்கை ஓட்டுகிற சில உத்தமர்கள் எனக்கு "காக்கைக் கருப்பன்' என்று பட்ட பெயர் வைத்திருக்கிறார்களே! வேதனை வருமா வராதா? நேரில் என் தோற்றத்தைப் பார்த்தால் வேதனையில் அர்த்தம் இருப்பதை புரிந்துகொள் வீர்கள். நான் நிறத்தில் மட்டுமல்ல, சாரைக் கண் கொண்ட தோற்றத்திலும் சற்றேறக் குறைய காக்கை போலவே இருப்பவன்.

நீங்களே சொல்லுங்கள்... உலக ஜனத்தொகையில் எத்தனை கோடி ஜனம் எச்சில் கையால் காக்கை ஓட்டியிருக்கிறது? அதை விடுங்கள். மனசாட்சியோடு யோசித்துப்பாருங் கள். பிறந்ததில் இருந்து நீங்கள் எத் தனை முறை எச்சில் கையால் காக்கை ஓட்டியிருக்கிறீர்கள்? உண்மை இப்படி ஊறுகாய்க்கு உதவாத ஊமத்தங்காய் போல முள்ளுருண்டையாய் இருக்கி றது. ஆனால் எனக்கு மட்டும் எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்கிற பட்டப் பெயர். (என் நிஜப் பெயர் என்னவென்பதை பக்கத்தில் இருக்கிற யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.) 'அவன் மட்டுமில்லை அவன் பரம்பரையில் எந்த எடுபட்ட நாயும் வெறும் கையால் கூட காக்கை ஓட்டியதில்லை'' என்கிற வதந்தி சமீபத் தில் வந்ததால்தான் என் கதையை நானே சொல்கிறபடி விதி வந்தது. என் தகப்பனைப் பற்றிய தாறுமாறான முன்னுறையுடன் ஏன் கதையை ஆரம்பித்தேன் என்பதற்கு ஒரு விளக்கக் கதை சொல்லிவிடுகிறேன் நான்.

நானும் என்னைப் பெற்ற அப்பனும் ஒரே ஊரில் ஒரே தெருவில் தனித் தனி குடும்பமாக இருக்கிறோம். பிரிவி னைக்கு ஆயிரம் காரணங்கள். குறிப் பிட்டுச் சொல்லும்படி உருப்படியான காரணம் ஒன்றுகூட கிடையாது. (இன் னொரு ஜாதிக்காரியை பார்த்து விசில டித்து, பெரிய தகராரு ஆகி, அவளையே கல்யாணம் பண்ணிக்கொண்ட என் ஆகப் பெரும் தவறையே பெரிய மனுசத்தனமாக ஏற்றுக்கொண்டவர் என் அப்பா) எனக்கும் அப்பாவுக்கும் பெரிய அடிதடியெல்லாம் ஒன்றும் கிடையாது.

கல்யாணம் முடித்த நான்காம் வருடம், “நாய்க்கு வாய் இருக்கிறது. அது தனியாக போய் திங்கட்டும்'' என்று என் அப்பா சாடைமாடையாக கோர்ட்டுக்கு போகாத வக்கீல் ஒருத்தனிடம் சொன்னதால் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். (அப்பா, எதைத் தின்னச் சொன்னார் என்பது எனக்கு மட்டுமான கதை.) எனக்கும் அப்பா வுக்கும் நடுவில், எதிரில் பார்த்தால் எட்டி உதைக்கிற அளவுக்கு விரோதம் இல்லையென்றாலும் ஆள் இல்லை என்றால் அசிங்கமாக பேசுகிற அள வுக்கு மறைவான பகைமை உண்டு. ஆனால் எதிருக்கு எதிராக பார்த்துக் கொண்டால் பேச்சு, சிரிப்பு, வார்த்தை, முறைப்பு “சாப்ட்டியா?'' என்ற விசாரிப்பு எல்லாம் சகஜமாக உண்டு.

அப்பாவோடு சேர்ந்து இருந்த வரையில் எனக்கு எந்த அவப் பெயரும் இல்லை. தனியாக வந்த பிறகுதான், காக்கைக் கருப்பன் என்ற பெயர் வந்தது. நான் காக்கையாக மாறி கதறி அழுகிறபடி நாளுக்கு நாள் அந்த பெயர் அசிங்க மாகிக்கொண்டே இருந்தது. “டேய் ஆப்பிரிக்க அல்பேட் அல்பநாய்களா... எவன்டா என்னப்பத்தி இப்படியெல் லாம் கதை கௌப்பி விடறது?'' என்று குளிக்கிற அறைக்குள் தாழிட்டுக் கொண்டு நான் கதறி அழுதிருக்கிறேன். சிலரிடம் பகிரங்கமாகவும் கேட்டிருக்கி றேன். நாய் போல பல்லை பயங்கர மாகக் காட்டி சிலரை மிரட்டியும் கேட்டிருக்கிறேன். பலபேர் எனக்கு தெரியாது என்று சொன்னாலும், ஆக கடைசியில் ஒருத்தன் உண்மையை ஒப்புக்கொண்டான். “உங்கப்பன் தான்டா அப்படிச் சொன்னான்!''

அப்பாவா? பெற்ற பிள்ளை வீதியில் நடக்கமுடியாதபடி சாக்கடை மூடியைத் திறந்து வைத்த என் அப்பனின் செய்கை எனக்குப் புரியவில்லை. அம்மாவிடம் ஏனென்று கேட்டால் ஓவென்று அழுகிறாள். “எனக்கு ஏன் பாட்டி இப்படி ஒரு அப்பாவ பெத்துத் தந்தீங்க?'' பாட்டியிடம் நான் அழ, பாட்டியும் அழுகிறாள். “நான் என்னடா பண்ணட்டும், சொல்பேச்சு கேக்காம உங்க தாத்தா பண்ண தப்புல இதும் ஒண்ணு. ஆனாலும் உங்கொப் பனை பகைச்சிக்காதேடா... பல் சொத்தையாயிடும்.''

பல் சொத்தையாகும் என்பதற்காக ஒரு மஹாராஜனாகப் பட்டவன் யுத்தம் செய்யாமல் இருப்பானா? தகப்ப னோடு நேருக்கு நேராக மோதிப் பார்த்து விடுவது என்று நான் முடிவு செய்தேன். என்னவிதமாக யுத்தம் செய்தேன், அதில் யார் ஜெயித்தது என்பது ஆர்வ மூட்டுகிற கதைதான். ஆனால் அதற்கு முன்பாக நான் நிஜமாகவே காக்கை கறுப்பன்தானா... (ச்சே! அசிங்கமான பெயரை நானே எத்தனை முறை சொல்லிக்கொள்வது.) நான் சத்தியமாக காக்கைக் கறுப்பன் கிடையாது என்பதை விளக்கினால்தான் கதையின் முடிவில் எனக்கு ஒரு நீதி கிடைக்கும். உலகமே ஒரு கணம் சிரிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் பகிரங்கமாக நான் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். உண்மையில் நான் எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன்தான்! அடச்சே என்று சொல்லிவிட்டு பாதிக் கதையில் ஓடாதீர்கள்... ஏனென்று விளக்கம் கேளுங்கள். அந்த புண்ணியத்தால் உங்கள் வீட்டு மெழுகுவர்த்தி மின்சார மில்லாமலே எரியும்.

எச்சில் கையால் காக்கை ஓட்டினால் எச்சில் சோறு பிறர் மேல் படுமே, அது தப்பாயிற்றே என்ற நல்ல புத்தியில்தான் நான் அப்படி செய்வதில்லை. நம்புங் கள், நான் கருமி இல்லை. எச்சில் கையால் காக்கை ஓட்டினால் அதில் இருந்து ஒரு சோறு விழுந்து அதை காக்கை கொத்திக்கொண்டு போய் விடும், பிறகு நம் ஆஸ்தி பூஸ்திகள் எல்லாம் நஷ்டமாகிவிடும் என்று பயப்படுகிற பரம்பரையில் நான் பிறக்கவில்லை என்பதை கடப்பாரைத் தனமாக இங்கே சொல்கிறேன். என் பரம்பரைப் பெருமைகளை ஆதார மில்லாமல் நான் பீற்றிக்கொள்ள வில்லை... ஆதாரமிருக்கிறது.

கல்லால் ரத்தம்வர அடித்துத் துன்புறுத் தினாலும் பரவாயில்லை இந்தக் கதையை நான் நம்ப மாட்டேன் என்று சொல்லும்படியான அதிர்ச்சிக் கதைகள் சொல்வதில் கெட்டிக்காரி என் பாட்டி. (அப்பாவைப் பெற்றவள்). அந்த பாட்டி கதைகளில் எங்களின் பரம்பரை பற்றிய ஆதாரமிருக்கிறது. வழித்தடமே போகிற ஒருத்தனை தரதரவென்று இழுத்துவந்து, அவன் வயிறு வெடிக்கச் சாப்பிட்டுவிட்டு வந்ததாகச் சொன்னாலும் பரவாயில்லையென்று வற்புறுத்தி இன்னொரு விருந்து போட்டு சாகடித்து அனுப்பிய பின்பு தான் காலை ஆகாரத்தையே சாப்பிடு வாராம் என் தாத்தா. எத்தனை விருந் தோம்பல்!

எந்தக் கதையைச் சொன்னாலும் துன்ப ராகத்தோடு சொல்லுகிற என் அம்மா வும் பாட்டிக் கதைக்கு போட்டிக் கதையாக ஒன்றை சொல்லியிருக்கி றாள். என்னுடைய தாத்தா (இது அம்மாவைப் பெற்ற அப்பா) காலை யில் எழுந்ததும் காக்கைக்கும், மதியத் தில் பசுமாட்டிற்கும், ராத்திரியில் பிச் சைக்காரனுக்கும் சோற்று உருண்டை களை உருட்டித் தராமல் நிம்மதியாக உறங்கியதே இல்லையாம். (தூக்கம் வராத வியாதி என் தாத்தாவிற்கு இருந்ததை இங்கே நான் சொல்வது அனாவசியம்.)

ஆக, என் இருவழிப் பரம்பரையும் வள்ளல் தன்மைக்கு போ; போனது. அதனால் நானும் வள்ளலாக இருக்க வேண்டும் என்று உலகம் எதிர்பார்த் தால் அது குற்றம். யானை கட்டி நெல் அடித்தது எங்கள் பரம்பரை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டா லும் தற்போதைக்கு நான் பூனை கட்டி கூட சோறு போடுவது கிடையாது. இந்த ஒரே காரணத்திற்காக, தருமம் தராத வனை தராதரம் இல்லாமல் பேசலாம் என்று என் அப்பா நினைத்தால்... இங்கேதான் அவரைப் பற்றி அவ தூறான கதைகளை நான் சொல்ல வேண்டியிருக்கிறது.

என் அப்பாவின் பவிசு என்ன? நான் பூனைக்கு சோறு போடுவதில்லை, அவரிடம் சோறு போட்டு வளர்க்க பூனையே இல்லை. ஆக, பூனைக்கு சோறு வைக்காத பஞ்சத்திற்குப் பிறந்த அஞ்சாவது குரங்குகள்தானா இருவரும் என்று யாராவது பரிகாசம் செய்தால் நான் நெற்றிக் கண் திறப்பேன். பூனைக்கு சோறு போடமுடியாத அளவிற்கு நானும் அப்பாவும் பஞ்சப் பரதேசிகள் கிடையாது. பூனை வளர்க்கிற வழக்கமில்லாத குடும்பம் எங்களுடையது.

நானும் மற்றவர்களுக்கு தருமம் செய்தவன்தான். திருட்டுக் கோழி அடித்தாவது வந்தவர்களுக்கு விருந்து வைக்கவேண்டும் என்கிற நல்லபுத்தி கொண்டவன்தான். ஒரு காலத்தில் ஏகப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் கூட்டம் என்னைச் சுற்றி இருந்திருக்கி றது. இரவலாக பொருள் கேட்டு வரு வார்கள், பிறந்திருப்பதே அடுத்தவர் காசில் சாப்பிடத்தான் என்று கடன் கேட்டு வருபவர்கள், கண்ணீரைக் காட்டி என் காசை அபகரித்துச் சென்ற வர்கள் என்று பலபேர் என்னைச் சுற்றி வந்து பாட்டு பாடியிருக்கிறார்கள். (பஞ்சப் பாட்டுதான்.) நானும் ஐயோ பாவமே என்று தருமம் கொடுத்து தருதலையாய் நின்றிருக்கிறேன். உலகத்தில் ஐயோ பாவமே என்று நிற்கிற நாலுகால் ஜீவன் இரண்டுதான். ஒன்று நான். இன்னொன்று பசுமாடு. சொல்ல கூச்சமாய் இருந்தாலும் ஒன்றை சொல்லிவிடுகிறேன். உண்மையில் உதவிக்கு வந்து கதறியவர்களைப் பார்த் தால் எனக்கு கொலைகாரக் கும்பலா கத்தான் தெரிந்தது. பசுவை வெட்டுவ தற்கு முன் மறக்காமல் பாலை கறந்து கொள்ளும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் என் தகப்பனும் அடக்கம்.

ஊருக்கே உதவ நினைக்கிற என் நல்ல மனசை புரிந்துகொள்ளாமல் என் நெற்றியில் எட்டணா சைசுக்கு கேணை யன் என்ற பட்டத்தை இந்த உலகம் ஒட்டவைக்க நினைத்ததால்தான் என் தரும குணத்தை மாற்றிக்கொண்டேன். பிறகு என் வீட்டின் உச்சியில் காக்கை பறப்பது கூட நின்றுபோனது. (மீண்டும் காக்கையா?) இப்பொழுது கஞ்சன், கம்சன், கறியன், வெறியன் பிசினாறி பீனாரி என்று பல பட்டப் பெயர்கள். எல்லாம் என் தகப்பனால் வந்தது! தப்பானவன் தகப்பனே ஆனாலும் அவனை எதிர்த்து நீதிக்காக நிற்பதுதான் தருமனின் குணமென்பதை அறிந்த வன் நான். அதனால்தான் அப்பா வோடு யுத்தம் செய்ய முடி வெடுத்தேன்.

யுத்தமென்று அறிவித்ததும் சம்மந்தப் பட்டவர்களுக்கு கழிசல் வியாதியும், வேடிக்கை பார்ப்பவர்களுக்கு குதூகல மும் ஏற்படுவது இயற்கை. ஆர்வத் தோடு நீங்கள் எதிர்பார்த்த அந்த யுத்தக் கதை ஆரம்பிக்காமலே தோல்வியில் முடிந்தது என்பதை வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறேன். என் அப்பாவுக்கு கிராமத்து முன்சீப்பில் ஆரம்பித்து, நாட்டாமை, போலீஸ்காரன், பேட்டை ரவுடி, மத்திய மந்திரி, சிங்கப்பூர் மேஸ்திரி, ஆஸ்திரேலிய கங்காரு எல்லாம் சினேகிதம் என்பதால் ஒரு மரியாதைக்காக அவரோடு சண்டை போடுகிற எண்ணத்தை நான் நிறுத்திக் கொண்டேன். “தாத்தாகிட்ட துப்பாக்கி இருக்குப்பா!'' என்று என் இரண்டாவது மகள் சொன்னதால் நான் பயந்து விட்டேன் என்பது சும்மா! ஆயிரம் இருந்தாலும் அது என் அப்பா!

என் அப்பா என்னைப் பற்றி ஏன் இப்படி வதந்தி கிளப்புகிறார்? நின்று, உட்கார்ந்து, அந்த உட்கார்ந்து, ஓடி, படுத்து என்று பலதினுசாய் யோசித்த பிறகு ஒன்று புரிந்தது. “பெத்த அப் பனுக்கு காசு தராதவன் ஒரு மனுசனா?'' என்று பொதுப்படையாக என் அப்பா சொல்கிற வார்த்தையில் இருக்கிறது நெருப்பு. வயதான அவருக்கு நான் ஒரு சல்லிக் காசு தருவதில்லை. அதுதான் குற்றம். அப்பாவின் குறை தீர்ப்பது மகனின் கடமைதானே. அவரிடம் எப்படி நல்ல பெயர் சம்பாதிப்பது என்பதே என் அடுத்த யோசனையாக இருந்தது. அதுகூட ஒருவித யுத்தம் தான். அதில் நான் எப்படி ஜெயித்தேன், யுத்தத்தின் தந்திரம் என்ன என்பதுதான் மீதிக் கதை!

நாலு பேருக்கு தருமம் செய்தால் என் அவப் பெயர் நீங்கி, என் தகப்பனிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்பது என் எண்ணம். என்ன தருமம் செய்வது? நூறு பேருக்கு சாப்பாடு போடுவது, குழந்தைகளுக்கு சீருடை தருவது, விதவைகளுக்கு தையல் மெசின் தருவது போன்ற பெரிய யோசனைகளாக முதலில் வந்தது எனக்கு. அவ்வளவு பெரிதாக செய்துவிடும் யோக்கியதை எனக்கில்லை.

தருமத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வழுக்கைத் தலையனுக்கு எண்ணையும், பாதம் வெட்டுண்ட நொண்டிக்கு செருப்பும், பல் இல்லாத வனுக்கு பட்டாணி கடலையும் தருவது. கொடுத்தாலும் அவர்களுக்கு உதவாது. இன்னொரு வகை, எட்டு பிள்ளை பெற்றவளுக்கு பிள்ளை வரமும், திண்ணையில் தூங்குகிற இரண்டு பெண்டாட்டி கிழவனுக்கு அழகான பெண்ணையும் தருவது. தந்தாலும் அது கொடுமையில் போய்த்தான் முடியும். உண்மையான தருமம் என்பது மூன்றா வது வகை. அதாவது அவசியமான பொழுதில் அவசியமான பொருளை சரியான ஆளுக்குத் தருவது. அதுதான் தலைகாக்கும் தருமம். அப்படியொரு தருமம் என்ன தருமமாக இருக்கும் என்று மூளையை பல கோணங்களில் முறுக்கித் திறுக்கி யோசித்தபோது விரலில் அழுத்திய வேப்பம் பழம் கொட்டையோடு பிதுங்கி விழுவது போல ஒரு யோசனை என் மனசில் வந்தது. குளிரில் நடுங்குகிற ஒருத் தனுக்கு சூடாக ஒரு கோப்பை தேநீர் தருவது.

இந்த யோசனை வந்ததும் சந்தோஷ மாகிவிட்டது எனக்கு. என் வசதிக் கேற்ற தருமம். சாகிற குளிரில் இருக்கி றவனுக்கு சூடான தேநீர் தந்தால் எத் தனை சந்தோஷப்படுவான் என்பதை குளிரில் விரைத்துச் சாகிறவனிடம் கேட்டால் சொல்வான். பாத்திரமறிந்து பிச்சையிடு என்ற வார்த்தைக்கு இங்கே தான் சரியான பொருளை நான் கண்டு கொண்டேன். பூமி உருண்டையைத் தூக்கி ஒரு ஊமைக்கு தானமாகக் கொடுத்தால் அதனால் யாருக்கு பிரயோ ஜனம். அவன் யாரிடமும் புகழந்து பேசமாட்டான். நான் செய்கிற தரு மத்தை ஊரே பாராட்ட வேண்டும். பலநூறு பேரிடம் அதை அவன் சொல்ல வேண்டும். சட்டென்று என் நினை வுக்கு வந்தது தினம் ஆயிரம் பேரை சந்திக்கிற ஒரு டீக்கடைக்காரர். "அட அறிவுகெட்டவனே டீக்கடைக்கார னுக்கே டீயா?' என்று நீங்கள் கோபப் படலாம். ஆனால் ஓட்டல் கடைக் காரன் வீட்டிற்கு வந்தான் என்பதற்காக அவனுக்கு நாம் சோறு போடாமல் இருக்கிறோமா? ஊருக்கே டீ போட்டுத் தரும் அவருக்குத்தான் பாவம் ஒருத் தரும் டீ போட்டு தருவதில்லை.

என் யோசனை அபாரமானது என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று நம்புகி றேன். யோசனை வந்துவிட்டது என்று உடனே நான் அதை செய்துவிட வில்லை. ஆத்திரமாய் வருகிறதென்று அங்கேயே உட்காருவதற்கு நானொன் றும் எருமை கிடையாது. நமக்கென்று நாள் கிழமை அமாவாசை சாந்தி முகூர்த்த நாள் என்று எல்லாவற்றையும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். என் மனைவி ஒரே ஒருநாள் விட்டை விட்டு பிள்ளைகளோடு ஓடட்டும் அதுதான் நல்லநாள் என்று நான் காத்திருந்தேன். (நிரந்தரமாக அவள் ஓடிப்போனால் நன்றாய் இருக்கும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு சின்ன வீட்டுத் தகிரியம் எனக்கு கிடையாது) அப்படி ஒரு அதிர்ஷ்ட நாள் என்பது நட்ட நடுச் சாமத்தில் சந்திர சூரியர்கள் ஒன்றாய்த் தெரிவது போல கஷ்ட மானதுதான். ஆனாலும் எனக்கு தெய் வம் துணையிருக்கிறது. அந்த நாளும் வந்தது.

என் மனைவி, மூன்று பெண் குழந்தை பெற்றுத்தள்ளிய தன் தங்கைக்கு நடக்கவிருந்த நாலாவது பிரசவம் பார்ப்பதற்காக ஊருக்கு கிளம்பினாள். பிரசவம் பார்க்க அவள் ஒன்றும் மருத்துவச்சி கிடையாது. யாராவது பிரசவம் பார்த்தாள் இவள் பிறந்த குழந்தையைப் பார்ப்பாள். என் மனை விக்கு ஒரு அதிர்ஷ்ட குணம். அவள் எங்கே பிரசவம் பார்க்கப் போனாலும் அங்கே பெண் குழந்தைதான் பிறக்கும். காரணம் இவள் பெற்ற நான்குமே பெண்கள். குடும்பம் கட்டுப்பாடு கருத்தடை என்று மனித மூளை வளர்ச்சி யடைந்த இந்தக் காலத்தில் எனக்கு நான்கும் பெண் என்றால் மயக்கம் போட்டு விழு கிறார்கள். எனக்கும் குடும்பம் கட்டுப் பாடு இருக் கிறது. ஆண் குழந்தைதான் இல்லை.

சொல்லவந்த விசயத்தை விட்டு விட்டு வேறு எதையோ பேசுகிறேன். தலை வலி கண்டவனை கூலிக்கு ஆள் வைத்து சிரிக்க வைத்தாலும் சிரித்துக் கொண்டே அடிக்கடி தலைவலிக்கு "ஐயோ' சொல்லிக் கொள்வது போல கஷ்ட சம்சாரிகள் வேறு எதையோ பேசி னாலும் அடிக்கடி தன் கஷ்டத்தை நாலு வார்த்தை சொல்லாமல் இருக்க முடியாதே. அதனால்தான்... சரி என் மனைவி பிரசவம் பார்க்க ஊருக்கு போய்விட்டாள். வர ஒரு வாரம் ஆகும். இதுதான் சரியான தருணம்.

ஒரு டம்ளர் டீத் தண்ணீர் போட்டுத் தருவதற்கு மனைவி இல்லாத நாளாக நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்ற பெரிய சைஸ் கேள்வி உங்களுக்கு இருக்கலாம். பச்சைத் தண்ணீரை அடுத்தவர்க்கு தந்தாலும் மயக்கம் போட்டு விழுகிற அளவுக்கு அவள் கருமியாக இருப்பாளோ? காக்கைக் கருப்பனுக்கு வாய்த்த பொண்டாட்டி யும் எச்சில் கையில் காக்கை ஓட்டாத காக்கைக் கறுப்பியோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உண்மை அது கிடையாது. அவள் எச்சில் கையால் காக்கை மட்டுமல்ல ஈ எறும்பு தெரு நாய் பிச்சைக்காரர்கள் அண்டை வீட்டுக்காரர்கள் பெத்த அம்மா அப்பா உறவு என்று அத்தனைபேரை யும் ஓட்டுவாள். அவள் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு வருகிற விருந் தாளிக்கு நான்தான் டீ போட்டுத் தருவேன் என்று அடம் பிடிப்பாள். பிறகு டீ குடித்த புண்ணியவானுக்கு வைத்தியத்திற்கு பணம் கொடுத்து அனுப்ப வேண்டியிருக்கும். அதனால் தான் அவள் இல்லாத நாளாக தேர்ந் தெடுத்தேன். விருந்துக்கு வருகிறவர் யார்? ஊருக்கே டீ ஆற்றித் தருகிற பெரிய டீக்கடைக்காரர் ஆயிற்றே!

அந்த டீக்கடைக்காரரை சாதாரணமாக நினைக்கக் கூடாது. ஆயிரம் பேருக்கும் மேலாக தினம் அவர் கடையில் தேநீர் குடிக்கிறார்கள். லட்சக்கணக்கான லிட்டர் தேநீரை அவர் வியாபாரம் செய்திருக்கிறார். ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் டீ போட்டுத் தரும் வேலைக் காக கூப்பிட்டதாக அவர் அடிக்கடி ஏமாந்தவர்களிடம் சொல்லி பெரு மைப்பட்டுக்கொள்வார். அப்படிப்பட் டவருக்கு சாதா டீ கொடுக்க முடியாது. ஸ்பெசல் சாதா டீ தான் கொடுக்க வேண்டும்.

'நாளைக்கு காலையில வீட்டுக்கு வாங்க. டீ சாப்பிடலாம்!'' என்று நான் பணிவோடு சொன்னதும் டீ கடைக் காரர் அதிர்ச்சியோடு பார்த்தார். ஈஸ்வரன் கோயில் நந்தியில் பால் கரக்கமுடியுமா என்கிற சந்தேக புத்தி! இதில் என்னவோ விபரிதம் இருக்கிறது என்கிற பயம். அவர் வெகுநேரம் யோசித்தார். பிறகு எதற்கும் துணிந்தவர் போல, “சரி வர்றேன்.'' என்றார். எனக்கு குதூகலத்தில் அவர் காலைக் கும்பிடலாம் போல வந்துவிட்டது.

நான் இரவெல்லாம் பெரிதாக யோசித் தேன். வருகிற விருந்தாளியின் கண் ணில் கண்ணீர் வருவது போல உச்ச பட்சமாய் உபசரிக்கவேண்டும். தூக்கத் தில் கூட ஓயாமல் டீ ஆற்றிக்கொண் டிருப்பது போல கனவு வந்தது. வீதியில் நாய் விழித்ததோ, கோழி விழித்ததோ தெரியாது. என் விருந்தினர் கடிகார அலாரம் அடிப்பதற்கு முன்பே வீட்டுக் கதவைத் தட்டினார். கதவின் இடுக்கில் தெரிந்த அவர் தோற்றம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை அதிகாலையில், அதுவும் இந்த கடும் குளிரில் நன்றாக குளித்து முடித்துவிட்டு வெள்ளை வெளேர் என்று வேட்டி கட்டிக்கொண்டு நெற்றியில் நறுமணம் மிக்க திருநீறு பூசிக்கொண்டு வாயில் புன்சிரிப்பும் உடம்பில் குளிர் நடுக் கமுமாய் அவர் நின்றிருந்தார். ஒரு வாய் தேநீருக்கு இத்தனை காலையில் குளித்து முடித்து கடவுள் முன்பாக பஜனையெல்லாம் பாடி திருநீறு துலங்க வரவேண்டுமா?

நானும் நன்றாக குளித்து முடித்து கடவுளை வணங்கி என் நெற்றியிலும் சுண்ணாம்புச் சுத்தமாய் திருநீறு பூசிக் கொண்டு விருந்தினருக்கான தேநீர் தயாரிக்க ஆரம்பித்தேன். விருந்தினரை கையைப் பிடித்து அழைத்து காலில் விழுந்து இன்முகத்தோடு நடுவீட்டில் உட்காரவைத்தேன் என்கிற அளவுக்கு விளக்கத்தை நீங்கள் எதிர்பார்க் காதீர்கள்.

இது வழக்கமான பாணியில் இல்லாத புது மாதிரியான விருந்து. என் விருந் தின் பெருமையை விருந்தினரும் நேரில் கண்டு ரசிக்க வேண்டும் என்ப தற்காக கேஸ் அடுப்பை நடுக் கூடத் தில், விருந்தினருக்கு முன்பாகவே பற்றவைத்தேன். தேநீர் எப்படி பாசத் தோடும் அக்கறையோடும் தயாரிக்கப் படுகிறது என்பதை அவர் பார்த்தால் சந்தோசப்படுவார். என் நண்பன் சொன்ன அறிவுரை சட்டென்று நினை வுக்கு வர பற்றவைத்த அடுப்பை ஊதி அணைத்தேன். 'விருந்து என்பது பரி மாறப்படும் உணவின் தரத்தைப் பொறுத்தது கிடையாது. அன்போடும் இன்முகத்தோடும் பிரியத்தோடும் தயாரிக்கப்பட்ட உணவுதான் சுவை யான சத்துள்ள உண்மையான விருந்து'' என்றான் என் நண்பன். பாவம் அதிக தத்துவம் சொல்லியே அல்பாயுசில் போனான்.

பற்றவைத்த அடுப்பை அணைத்து திரும்பவும் பற்றவைக்கிற என் குழப் பத்தைக் டீக்கடைக்காரர் குழப்பத் தோடு பார்த்தார். நான் புன்னகை செய்தேன். என்னிடம் இருப்பது பெருங்கருணை, பெரிதோம்பல்! மிகுந்த அன்போடு தீப்பெட்டி உரசி அடுப்பு பற்றவைத்தேன். பக்தியோடு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அன் போடு பால் ஊற்றி அக்கரையோடு காய்ச்சினேன். அந்த பால் பாசமிக்க பசு மாட்டில் அன்பாக கறக்கப்பட்டது. பிரத்யேகமாக வாங்கப்பட்ட தேயிலைப் பொட்டலத்தை கருணையோடு பிரித்து பாத்திரத்தில் கொட்டினேன். அந்த தேயிலை என்பதும் பிரியமான மேகங்கள் உலவும் உயர்ந்த மலையில் விளைந்தது. அழகும் அன்பும் மிக்க பெண்களால் பறிக்கப்பட்டது. கருணை கொண்ட பெண்களால் பொட்டல மிடப்பட்டு ஒரு கனிவான பெண்ணி டம் விலைக்கு வாங்கப்பட்டது. இரண்டு தேக்கரண்டி அளவுக்கு சர்க் கரை போட்டேன். இந்த சர்க்கரையும் ஒரு கருணைமிக்க பெண்ணின் கரும்புத் தோட்டத்தில்... வேண்டாம் அக்கறை மிக்க சர்க்கரை என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

சரியான பதத்தில் பாலும், டிக்காஷனும் கலந்த பிறகு நாட்டுப்புறப் பாடலின் ஓசையோடு தேநீரை ஆற்றினேன். பைத்தியக்காரட்னால் தயாரிக்கப்பட்டு உதவாக்கரை கோப்பையில் தரப்படும் தேநீர் என்பது பசுமாட்டின் கோமியத் திற்கு ஒப்பாகும் என்பது பல்லாயிரம் பேருக்கு தேநீர் போட்டுத்தந்த இந்த தேநீர் கடைக்காரருக்கு தெரியும் என்ப தால் அதை ஒரு அழகான கோப்பைக்கு மாற்றினேன். இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விசயம் நான் ஒரே ஒரு கோப்பை தேநீர்தான் போட்டிருந்தேன்.

என் விருந்தினர் குளிட்ரில் சாகிற நிலைமைக்கு வந்திருந்தார். அவருக்கு முன்பாக ஒரு குட்டை மேஜை போட்டு, பூ வேலைப்பாடு மிக்க துணி விரித்து அதன் நடுவே தேநீர் கோப் பையை வைத்துவிட்டு புன்னகை யோடு, 'தேநீர் தயார்!'' என்று சொன் னேன். தண்ணீர் பார்த்த ஒட்டகம் போல சிலுப்பிக்கொண்டு தேநீர் கோப்பையை எடுக்க கை நீட்டினார். என் தேநீரின் தரம் அப்படி. அதன் நிறம், அதில் பொங்கிய நுரை, அதன் நறுமணம், கோப்பையின் பரிசுத்தம் அப்படி. அது எப்படிப்பட்ட நாகரிக மானவர்களையும் கல்யாண மண்ட பத்து எச்சிலை நாய்களாக்கிவிடும்.

நான் இரண்டு கை நீட்டி சத்தமாய் 'பொறு பொறு!'' என்று விருந்தினரைப் பார்த்து அதட்டினேன். விருந்து உணவை சுவைத்துப் பார்க்காமல் விருந்தினருக்கு கொடுப்பதைவிட மனுசத் துரோகம் பிரபஞ்சத்தில் வேறு இருக்க முடியாது. கோப்பையை எடுத்து ஒரு சாய்வு நாற்காளில் சாய்ந்து உட்கார்ந்து மிடறு மிடறாய் ரசித்துக் குடித்து அதன் தரத்தை பரிசோதித் தேன். சபாஷ்! உண்மையில் அறுமை யான தேநீர். தேநீர் முழுதையும் குடித்த என்னைப் பார்த்த விருந்துக்காரனின் முகம் எத்தனை கோரமாய் போனது என்பதை என்னால் முழுசாக விவரிக்க முடியாது.

“பொறுமையா இரு! உனக்கும் இதே மாதிரி டீ போட்டுத் தரேன்!'' அன்பாக அவரிடம் சொன்னேன். இன்னொரு தேநீருக்கு ஆயத்தமானேன். தேவா மிர்தம் போன்ற தேநீரை நான் எப்படித் தயாரித்தேன் என்பதை முன்பே சொல்லிவிட்டேன். விருந்தினருக்கு எப்படி தேநீர் தயாரித்தேன் என்பதை யும் அவசியம் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அலுத்துக்கொள்ளாதீர் கள். இது வேறுமாதிரியானது.

அவர் கண் முன்பாகவே நான் குடித்த எச்சில் டம்ளரை கழுவி பாத்திரத்தில் ஊற்றி சூடேற்ற ஆரம்பித்தேன். விருந் துக்காரன் என்னை பார்த்த பார்வையில் நரகமிருந்தது. நான் புன்னகையோடு “பால் காய்ந்து கொண்டிருக்கிறது'' என்று சொன்னேன். டிக்காஷன் இறக் கப்பட்ட அதே தேயிலைத் தூளை பாத்திரத்தில் கொட்டி இன்னும் கொதிக்கவிட்டேன். சாயம் போன எருமைச் சாணி நிறத்தில் அது கொதித் ததை நானே அறுவெறுப்பாய் பார்த் தேன். பிறகு நான் குடித்த எச்சில் டம் ளரில் அந்த கிரகத்தை ஊற்றி கடுப்பாக டர் டர்ரென்று வானத்துக்கும் பூமிக்கு மாக ஆற்றினேன். என் முகத்தில் வயிற்றுவலிக்காரனின் கடுப்பிருந் ததை விருந்துக்காரன் அதிர்ச்சியோடு பார்த்தான். என்ன நடக்கிறது என்ற குழப்பத்திலிருந்து அவன் விடுபடுவ தற்குள்ளாக நான் விருந்துக்காரன் முன்பாக நங்கென்று டீட்டம்ளரை சிந்தச் சிதற வைத்துவிட்டு, 'மூணு ரூபாய் சில்றையா குடு!'' என்றேன்.

குளிரில் விறைத்துப் போய் செத்து விடும் சுரணையில் இருந்த விருந்துக் காரனுக்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ! எதிரில் இருந்த முக்காலியை எட்டி உதைத்துவிட்டு, என் அற்புதமான தேநீரில் எச்சில் துப்பிவிட்டு காட்டுக் கத்தல் கத்திக் கொண்டே ஓடிப்போனான். ஆயிரம் கஷ்டப்பட்டு விருந்து தரலாம் ஆனால் ஒரு விருந்தினரின் முகச்சுளிப்பில் மொத்த விருந்தும் கெட்டுப்போய் விடுகிறது பாருங்கள். நான் என்ன தப்பு செய்தேன். கடும் குளிரில் நடுங்கும் ஒருத்தனுக்கு கதகதப்பான தேநீர் தருவது உலகமாகா குற்றமா? அவருக்கு நான் தந்த தேநீரில் நிறம் குறைச்சல் தான்; ஆனால் அன்பு அதிகமிருந்தது. சர்க்கரை குறைச்சல்தான்; ஆனால் அக்கறை அதிகமிருந்தது. இதை அந்த ஆள் புரிந்துகொள்ளவேயில்லையே! சொல்லுங்கள் சாமிகளே! நான் எச்சில் கையில் காக்கை ஓட்டாதவன்தானா? மனசு வந்து ஒருத்தனுக்கு டீ கொடுத் தால் முக்காலியை உதைத்துவிட்டு போகிறான். என்ன சொல்லவருகிறீர் கள்... என்ன இருந்தாலும் நான் செய் தது குற்றமா? என் பாட்டியும் அப் படித்தான் சொன்னாள் சாமிகளே... அவளுக்கு அறிவே கிடையாது. இப் பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

விருந்துக்காரன் ஓடிப்போன அன்றி ரவே என் பாட்டி வீடுதேடி வந்து விட்டாள்: “டேய் கிறுக்குப்பிடிச்ச மகனே! உன் அப்பன்காரன் வானத்துக் கும் பூமிக்கும் அங்க கோவத்தில குதிக்கறான்டா. என்னடா பண்ண? எச்சி டம்லளர்ல கழனித் தண்ணிய ஊத்தி குடிக்கத் தந்தியாமே! நெசந் தானாடா?''

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு உரிமை தருகிறேன். பெற்றத் தகப்ப னுக்கு எச்சில் டீ கொடுத்த குற்றத்திற்காக, என் வக்கிர புத்திக்காக நீங்கள் என்மீது கோபப்படலாம். ஆனால் குற்றம் சொல்லக் கூடாது.

"கோபப்படாதே பாட்டி. உனக்கும்; அதே மாதிரி ஒரு டீ போட்டுத் தரேன். குடி. அப்புறம் மத்ததை பேசிக்கலாம்''

"எனக்கே டீ போட்டுத் தருவியா நீ? உனக்கு கொழுப்பு அதிகந்தான்டா? பெத்த அப்பனை இப்படி அவமானம் பண்ணக்கூடாது.!''

“ஒரு நாள் நான் செஞ்சதையேதானே வருசம் பூரா உன் மகன் செய்யறாரு''

“அவன் வியாபாரம் செய்யறாண்டா''

“ஆமா, பெரிய வியாபாரம்! ஒரு லிட்டர் பால் வாங்கி எத்தனை ஆயிரம் பேரு வந்தாலும் தண்ணிய கூசாம கலந்து பண்ற வியாபாரம். ஆயிரம் எச்சில் டம்ளர ஒரு பக்கெட் தண்ணியில அசிங்கமே இல்லாம நனைச்சி நனைச்சி எடுத்து அதுல ஊருக்கே டீ தர உன் மகனுக்கு எப்படி மனசு வருது? அது எச்சில் டம்ளர் இல்லையா? உலகத்திலேயே பெரிய எச்சி டம்ளர் உன் மகன் கடையிலதான் இருக்கு. போயி பாரு. புதுசா ஊருக்கு வரவன் அவர் கடையில டீ குடிச்சா வயிறு சம்மந்தமான அத்தினி வியாதியும் வந்து நொந்து போவானா இல்லையா? தெரிஞ்சவன் என் மேல எச்சில் துப்பறான்.''

'அதுக்காக?''

'நானும் ஆள் வெச்சி சொல்லிப் பாத்தேன். திருந்தறதா தெரியலே. அதான் செஞ்சிக் காண்பிச்சேன். பெரும் பாவிய பெத்துட்டு தரும தேவதை மாதிரி பஞ்சாயத்துக்கு வந்துட்டே நீ''

பாட்டிக்கு ஏறுக்கு மாறாக கோபம் வந்து, அவளும் ஒரு நாற்காலியை எட்டி உதைத்துவிட்டு ஓடினாள். எத்தனை நாற்காலி, முக்காலிதான் நான் வாங்கு வது. இப்பொழுது சொல்லுங்கள் மகா ஜனங்களே! நான் தப்பாக ஏதும் செய்துவிட்டேனா? நாலாயிரம் பேர் சுத்தமான டீ குடிக்கவேண்டும் என்ப தற்காக ஒருத்தன் எச்சில் டீ குடித்தால் அது குற்றமாவிவிடுமா? நான் வக்கிர மானவன் என்ற எண்ணம் உங்களுக் கும் கூட இருக்கலாம். ஆனால் அதன் பிறகு நடந்தது நல்ல விசயம். ஒன்றுக்கு இரண்டு முறை கழுவிய டம்ளரில் என் அப்பா டீ போட்டு தருகிறாராம். டீத்தூளை அடிக்கடி மாற்றுகிறாராம். பால் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் இருக்கிறதாம். நான் காலமெல்லாம் காக்கைக் கருப்பனாகவே இருந்தாலும் பரவாயில்லை நாலு பேர் நல்ல டீ குடித்தால் சந்தோசம்தான். அதைவிட நல்லது ஒன்று நடந்திருக்கிறது. என் அம்மா வந்து என்னிடம் சொன்னாள்: 'உன்னை அப்பா கூப்பிட்டாருடா... இனிமே கூட்டுக் குடும்பமா இருந்துக் கலான்னு அபிப்ராயப்படறாரு!''

'என்ன ஆச்சி அவருக்கு?''

'அதான்டா எனக்கும் புரியலே. நீ வீட்டுல அவரோட போட்டோவ மாட்டிவெச்சிருந்தியாமே. மனசு உருகிப்போயிட்டாரு போல இருக்கு. இதுக்கேவாடா அந்த மனுசன் மனசு மாறிட்டாரு?''

'சும்மா ஒண்ணும் மாட்டி வெக்க லேம்மா. அவர் படத்துக்கு சந்தன பொட்டு வெச்சி, மாலைபோட்டு, ஊதிவத்தி காட்டி குத்துவிளக்கு ஏத்திவெச்சிருந்தேன். அப்பா மேல அத்தனை பக்தி எனக்கு''

'அடப்பாவி... உயிரோட இருக்கிற மனுசனுக்காடா பொட்டு வெச்சி குத்துவிளக்கு ஏத்திவெச்சே... நான் நெனைச்சதவிட வக்ரம் புடிச்சவன்டா நீ!'' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு என் அம்மா விழப்போனாள். வக்கிரம் பிடித்திருந்தாலும் வாழ்க் கைக்கு அவசியமென்றதைத்தானே செய்தேன். ஆக கடைசியில் நல்லது நடந்ததா இல்லையா? நானும் அப்பா வும் ஒன்றாய் இருக்கப்போகிற சந்தோச நினைவுகளை நினைத்துப் பாருங்கள். ஆஹா எத்தனை சந்தோஷமான... ஏங்க ஏங்க! பாதிக் கதையில படம் முடிஞ்சதுன்னு எழுந்து போகாதீங்க. இன்னும் ரெண்டே ரெண்டு வரி இருக்கு... சொல்லிடறேன்.

பிரசவம் பார்க்கப்போன என் மனைவி வீட்டுக்கு வந்ததும் இந்த சந்தோசமான சமாச்சாரத்தை சொல்ல நான் நினைக் கிறதுக்குள்ள அவ இன்னொரு சமாச் சாரம் சொன்னாங்க. 'அய்யோ, என் தங்கச்சிக்கு ஆம்பள புள்ள பொறந்தி ருக்குங்க... நெனைச்சாவே வயித் தெரிச்சலா இருக்கு. பவுர்ணமி அன்னைக்கி நாலு பேருக்கு அன்னதானம் செஞ்சா ஆம்பளை புள்ளை பொறக்குமாமே! நாமலும் குடுக்கலாங்க...'' நான்கு பெண் பெற்ற பிறகும் அவளுக்கு ஆண் குழந்தை ஆசை தீரவேயில்லை. எனக்கும்தான். ஒரே ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக, ஒரு ஓட்டல் கடை ஓனரை வீட்டுக்கு அழைத்து வந்து அறுசுவை உணவை அன்பாக செய்து போடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். ஓட்டல் கடைக்காரரும் ரெடி! என் மனைவியிடம் சொல்லாதீர்கள்.. அது என் மாமனார்தான்.

இன்னொரு முறை என் மனைவி காணாமல் போனால் கண்டிப்பாக அவருக்கு விருந்து வைக்கவேண்டும். அந்த புண்ணியத்தில் எனக்கொரு மகன் பிறந்து... ஆமாம்; குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பிறகு மனைவிக்கு குழந்தை பிறக்குமா? உங்களோடு சேர்ந்து உட்கார்ந்து அதைப் பற்றி யோசிக்க ஆசையாய் இருக்கிறது. வாருங்களேன், நான் தேநீர் போட்டுத் தருகிறேன்... அதை அன்பாக குடித்த படி உட்கார்ந்து யோசிப்போம்!

- எழில்வரதன்

Pin It