1.

எனது உலகம்
முத்தங்கள் அற்றது.
தாயிடமிருந்து மகள் பெறும் முத்தமும்
காதலியிடமிருந்து காதலன் பெறும் முத்தமும்
யாரிடமிருந்தோ யாரோ பெறும் முத்தமும்
கானல் நீராகி
மின்னி மறையும்
எனது சுடுவனத்தில்.
அன்றும் முத்தங்களைப் பரிமாறிக்கொள்ள முடியாத
இடைவெளி.
எனினும் முத்தத்துக்கு மிக அருகில்
ஒரு உரையாடலை
நிகழ்த்திக் கொண்டிருந்தேன்.
இலக்கிலாமல் அலைந்துகொண்டிருந்த
எனது கோடிக்கணக்கான முத்தங்களில்
ஒன்று
காற்றின் தீவிரமான அசைவுகளின்
எதோ ஒரு கணத்தில்
உன் உதடுகள் மீது கவியும்.
அதே காற்றில் வீசப்பட்டு
நிராகரிக்கப்பட்டோ அல்லது
போய்ச் சேராமலோ
அலையும்
வேறொரு முத்தம்
என்னிடம் வந்து சேரும்,
முத்தத்தைவிட
வசீகரமான ஒன்றாக.

2

எனது எல்லைகளை
என்னிடமிருந்து
விடுவித்துக்கொண்டிருக்கிறேன்.

எனது ஆழங்களையும்
எனது விரிவுகளையும்
இன்னும் சிற்சிலவற்றையும்.

எல்லாவற்றையும் விடுவித்தது போக
என்னிடம் சில விடுதலைகள்
மிச்சமிருக்கின்றன.

தேவைப்படுகிறவர்கள்
பெற்றுக்கொள்ளலாம்.

3.

உன்னைப் பார்க்கும்போது
பகிரவென
துண்டுக் காகிதங்களில்
சேர்த்து வைத்திருந்த
செய்திகளையும், சுவாரஸ்யங்களையும்
நேசங்களையும் நம்பிக்கைகளையும்
நீ பரிசாகத் தந்த
துரோகத்தின் நிழலில்
வீசிச் செல்கிறேன்.
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு,
துரோகம் தனது நிழலை
மேலும் படரவிடுகிறது. 

Pin It