வணக்கம்,

ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி “கருக்கல் விடியும்'' முகவரிக்கு ரூ.500ஞி-க்கான தொகை அஞ்சல் வழி வந்தது. 5 ஆண்டுகளுக்கான சந்தா தொகை! "யார் அனுப்பி இருப்பார்கள்' என ஆர்வத்தோடு முகவரியை நோக்கினேன். தஞ்சைக்கு அருகிலுள்ள பூண்டி அயயங கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து வந்திருந்தது.

தினசரி “கருக்கல் விடியும்'' சந்தாவுக்காக பலரிடமிருந்தும், பல்வேறு ஊர்களிலிருந்தும் தொகை வருவது இயல்பு தான். எனினும் இந்தத்தொகை அனுப்பப்பட்டு, அதை பெற்றபோது எனக்குள் ஏற்பட்ட மனவெழுச்சியை, மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்பதால் இதை எழுதுகிறேன்.

1969-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவிட்டு, வேலையின்றி இருந்த காலத்தில் “மல்லிகை'' என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழ் நடத்தினேன். முழுக்க முழுக்க படங்கள் உட்பட எனது முயற்சி மற்றும் கையெழுத்திலேயே உருவாகி, இளம் படைப்பாளிகள் பலரது படைப்புக்களையும் ஏந்தி வந்த ஏடு அது.

இன்றைக்கு உயிரோடு இல்லா விட்டாலும் அன்று சைரன் என்ற பெயரிலே நண்பன் பாலகிருஷ்ணமூர்த்தி தந்த வித்தியாசமான துடிப்பான சிறுகதைகள், இன்று கென்யாவில் வங்கியிலே உயர் பதவியிலே இருக்கிற நண்பன் வே.அமரநாதன் எழுதிய சமூகசீர்திருத்த பெரியாரிய கட்டுரைகள், கதைகள், சிகி (சித்திரகிறுக்கன்), ஜெயசுபா, மன்னை பாண்டியன் என்ற பெயர்களில் நான் எழுதிய அநேக சிறுகதைகள், கட்டுரைகள் (பிளேட்டோ கண்ட குடியரசு, (சாதிமதம் குறித்த காட்டமான) நாம் எங்கே போகிறோம்?, பிரான்மலை (அன்றைய பாரி மன்னரின் பறம்புமலை) சுற்றுலா சென்ற எனது அனுபவங்களை பதிவு செய்து எழுதிய பிரான்மலையில் ஓர் நாள்), காரோட்டியின் காதல் - தொடர்கதை... இப்படி இன்றைய “கருக்கல் விடியும்'' இதழுக்கு முன்னோட்டமாக அன்றே “மல்லிகை'' மூலம் இதழியல் பயிற்சி பெற்ற அனுபவங்கள்... இன்றைக்கு நினைத்தாலும் வியப்பாகவும், பயனாகவும், மகிழ்வாகவும் இருக்கிறது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த “மல்லிகை'' கையெழுத்து பிரதி மாதந்தோறும் ஒரே ஒரு பிரதி மட்டுமே தயார் செய்து நண்பர்கள் மத்தியில் துவக்கத்தில் புழக்கத்தில் விட்டேன். ஒருவர் மாற்றி ஒருவராகப் படித்து கருத்துக்களைப் பதிவு செய்து படைப்புகளையும் தந்து கொண்டு "இலக்கியம்' செய்த காலகட்டமது.

அன்று இன்று போல் நிறைய கல்லூரிகளில்லை. மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி, பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, தஞ்சை சரபோஜி கல்லூரி... இப்படி விரல்விட்டு எண்ணிவிடலாம். மன்னார்குடியிலிருந்து பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (இன்று அயயங கல்லூரி)க்கு ரயில் வசதி இருந்தது. எனது நண்பர்களில் பலர் அக்கல்லூரியிலே படித்து வந்த நிலையில் அவர்கள் மத்தியிலே “மல்லிகை''யை மணக்கவிட்டேன். விளைவு? கூடுதலான வாசக கவனிப்பும், படைப்பாளிகளின் புது வரவும் கிடைக்க ஆரம்பித்தது. பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலே “மல்லிகை''க்கு என்று ஒரு தனியிட மிருந்தது. அவர்களது நூலகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அன்று நண்பர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பினால் பூண்டி கல்லூரி தமிழ்த்துறை வரை சென்ற எனது “மல்லிகை'', இன்று “கருக்கல் விடியும்'' என்ற வடிவில் என்னுடைய எவ்வித தனி முயற்சியின்றி தமிழ்த்துறையைச் சென்று சேர்கிறது என்றால் இதைவிடப் பெரிய பேறு அல்லது அங்கீகாரம் வேறு என்ன இருக்கப் போகிறது?

அன்றைய நாள் பூராவும் பழைய நினைவுகளிலும், உற்சாகத்திலும் மனசு நிரம்பித் ததும்பி வழிந்தது.

எங்கள் இல்லத்தினுள் நுழைந்ததும் கூடம். கூடத்தில் வந்தமருவோர் கண்களில் ஒரு சட்டமிடப்பட்ட எழுத்து ஆவணம் கண்டிப்பாகத் தென்படாமல் இருக்காது. அது எனது மனைவி (அனுசுயா) 7.3.2011 அன்று எழுதிய ஒரு மரண சாசனத்தின் வாசகங்கள் அடங்கிய பிரதி. அதன் முழு வடிவத்தையும் தெரிவிக்குமுன், அது எழுதப்பட்ட பின்னணியை விவரிக்க விரும்புகிறேன்.

6.3.2011 அன்று எனது தந்தையார் சிவ.சுந்தரம் அவர்கள் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அவர் பெரியாரின் அணுக்கத் தொண்டர்; மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி. வாழும் காலம் வரை மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்; போராடியவர். பேசியது போலவே வாழ்விலும் கொண்ட நெறி வழுவாமல் வாழ்ந்தவர்.

அவரது உடல் அனைவரின் பார்வைக்கும் வைத்து, இறுதி மரியாதை செய்யப்பட்டு, அன்று மாலையே இறுதி ஊர்வல ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கண்ணீரோடு நானும் குடும்பத்தாரும் அமர்ந்திருக்க, என் தந்தையார் வாழ்ந்த மன்னார்குடி உப்புக்காரத்தெரு வாசிகளும், உறவினர்களும், நண்பர்களும் இறுதி ஊர்வல ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். எல்லாம் நல்ல படியாகவே நடந்துகொண்டு இருந்த வேளையில்... எனது அம்மா அவர்களை கைத்தாங்கலாகப் பிடித்து சில உறவுக்காரப் பெண்கள் வாசலுக்கு அழைத்து வந்தனர். வந்ததோடு நில்லாமல் தலையில் நீரூற்றி, பூச்சரம் சூட்டி, நெற்றியில் பொட்டிடவும் முனைந்தனர்.

அருகிலிருந்த எனக்கு ஏதோ "நடக்க'ப்போகிறது என்பது புரியவர நாற்காலியைத் தள்ளிவிட்டு ஆவேசமாக எழுந்தேன்; கத்தினேன். “நிறுத்துங்க... நிறுத்துங்க'' மொத்த கூட்டமும் என்னை நோக்கி பார்வையைத் திருப்பியது. “இப்ப எதுக்கு பூ வைக்கிறீங்க. பொட்டு வைக்கிறீங்க? வச்சிட்டு விதவைங்கிற பேர்ல எடுக்கணும்ங்கிறதுதான உங்க நோக்கம்?'' கத்தினேன் நான்.

“ஆமாம்பா, இதெல்லாம் வழக்கமாச் செய்யறதுதான். புருசன் இறந்ததும் செய்யுற சடங்குதான் இதெல்லாம்'' என்று பல பெரியவர்கள் என்னை சமாதானப்படுத்த முனைந்தார்கள்.

“என் அப்பாவே இதெல்லாம் விரும்பமாட்டார். இது தெரிஞ்சும் நீங்க இதைச் செய்றிங்கன்னா அதை நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீங்க உங்க சடங்கை செய்யுங்க''.

“என்ன?''

“எங்க அம்மா பூவும் பொட்டும் எங்க அப்பா வந்த பிறகுதான் வச்சாங்களா? சின்ன வயசிலேர்ந்து அவங்க வச்சிக் கிட்டு வரதை என் அப்பா இறந்ததைக் காரணம் காட்டி எடுக்கணும்ங்கிறது என்ன நியாயம்?''

கூட்டத்தில் சிறு சலசலப்புத் தோன்றியது. வந்திருந்த மொத்த கூட்டமும் சிந்திக்கும் ஆற்றலற்று பழக்க வழக்கத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தது. என் ஒற்றைக் குரலுக்கு அங்கே ஆதர வில்லை. தனி ஒருவனாகப் போராடிக் கொண்டிருந்தேன் நான், என் தந்தையாரின் கொள்கை வழி தமையனாக (என் தாயார் வைத்த பூவை, அவராகவே ஆவேசத்தோடு பிய்த்து எறிந்தார் பிற்பாடு).

இந்த நிகழ்வு என் மனைவியை மிகவும் பாதித்தது. என் தந்தையார் பெண்ணியவாதியாக, பகுத்தறிவாளராக இருந்தும்கூட அவரது இறப்புக்குப்பின் அவர் விருப்பப்படி மூடநம்பிக்கைக்கு எதிராக சடங்குகளுக்கு மாறுபட்டு செயல் படுத்தப்பட முடியாமல் போய்விட்டதே... அப்போதைக்கு கூடும் ஒரு சிறு கும்பலும் குழுவும் பெரும்பான்மை என்ற பெயரில் அரங்கேற்றும் பழக்க வழக்கத்தினால் தனி நபரின் தத்துவங்கள், போராட்டங்கள் அமுங்கிச் செயலிழந்து போவது சமுதாயத்தில் தொடர்ந்து நிகழ்ந்தே வருகிற அவலம்... அல்லவா? இவையெல்லாம் அன்றிரவே என் மனைவியை ஒரு மரண சாசனம் எழுதத் தூண்டியிருக்கிறது. இரவு கண் விழித்து காகிதத்தில் எழுதியதை மறுநாள் காலை என்னிடம் நீட்டியபோது என்னால் அதற்குப் பதிலாக எதையும் உடனே சொல்ல முடியவில்லை.

என் மனைவி நினைப்பதுபோல அவரது இறப்புக்குப்பின் நானோ என் குடும்பத்தினரோ அவர் கொள்கையாக வாய்வழி சொல்லியதை செயல்படுத்த முனைந்தால் அன்று கூடும் சிறு கூட்டம் (உறவுகள் உட்பட)அதற்கு சம்மதிக்குமா என்று தெரியவில்லை. என் குரல் காற்றில் கரைந்த பேரோசையாகப் போய்விட விட்டு விடக்கூடாது என்கிற ஆதங்கத்தின் விளைவாகவே அவர் எழுதியது இந்த மரண சாசனம்:

“எல்லாவிதமான உயிரினங் களுக்கும் பிறப்பும் இறப்பும் இயற்கையானது. செடி, கொடி கூட பட்டுப்போனபின் மக்களுக்கு எரி பொருளாக பயன்படுகிறது. நம் மனித இனத்தில் முக்கால் பகுதிபேர் இறந்தபின் சாம்பலாகி எதற்கும் பயன்படாமல் போகின்றனர். என்னுடைய விருப்பங்களை இதில் எழுதி உள்ளேன். கண்தானத்திற்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 30.12.1999 அன்றே கையொப்பம் போட்டுள்ளேன். என்னுடைய உடலில் மருத்துவத்திற்கு தேவைப்படுவதை எடுத்துக்கொள்ள நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன். எனக்கு எந்தவிதமான சடங்கும் செய்யக்கூடாது.

என் உடலை எரிக்கக்கூடாது. அடக்கம் செய்ய வேண்டும். புழு, பூச்சிகள் சாப்பிட்டு பசி ஆறட்டும். மனிதனாகப் பிறந்துவிட்டால் சுயநலவாதியாகத் தான் வாழ வேண்டி யுள்ளது. நான் இறந்த பிறகு என் நிழற் படத்தை நான்கு சுவற்றுக்குள் மாட்டு வதற்கான செலவில், படத்தில்கூட தாய், தந்தையை பார்க்க முடியாத குழந்தைகளுக்கு உங்களால் முடிந்தவரையில் உதவி செய்தால் மகிழ்வேன். என்னுடைய எண்ணங்களை என் குடும்பத்திற்காக எழுதவில்லை. குழப்பவதியாக இருக்கும் நம் தமிழ்ச்சமுதாயத்திற்காக எழுதுகிறேன்.

அனைவரின் அன்பிற்கும் அடிபணிந்த அனுசுயா பாண்டியன் 7.3.2011''.

என் மனைவி இதை எழுதிவிட்டு என்னிடம் சொன்னார் “ஒருவேளை நான் இறந்ததுக்கு அப்புறம் இப்படி ஒரு நிலைமை வந்துச்சுன்னா, அன்னைக்கு நீங்களோ நம் பசங்களோ வந்தவங்ககிட்ட வாதாடி போராட வேண்டிய அவசிய மில்லை. நான் எழுதிய இதை எடுத்துக் காட்டுங்க. யார்க்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை''.

உடன் எழுதிய காகிதத்தை அப்படியே அச்சிட்டு, சட்டமிடப்பட்ட எழுத்து ஆவணமாக, அனைவரும் பார்க்கும்படி கூடத்தில் மாட்டியும் வைத்துவிட்டார்.

கொள்கைகளைக்கூட, எழுதி சட்டமிட்டு, பிறர் பார்க்க மாட்டி, நிறைவேற்ற வேண்டிய என்ன மாதிரி சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம்!

அன்புடன்,

அம்ரா பாண்டியன்

(ஆசிரியர்)

Pin It