நீ பேசும்போது தெளிவாகப் பேசுகிறாய். ஆனால் உன் பேச்சு முழுமையாக இல்லை என்று பேசும் ஜென். தெளிவாகவோ நீண்டதாகவோ இருப்பது முழுமையற்றது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் கவிதையை அல்லது படைப்பை அணுக வேண்டும். புரிந்துகொள்ளும் ஞானக்குறைவு காரணமாகவே இந்தப் புரியாமை. இன்னொன்று ஒரு கவிதையோ கதையோ ஏன் புரியவேண்டும் என்ற கேள்வியிலும் நியாயமுண்டு.

வாழ்க்கை புரிகிறதா? புரியா விட்டாலும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம். வானம் புரிகிறதா. அதிலிருக்கும் நட்சத்திரங்கள், நிலா, சூரியன் புரிகின்றனவா. அறிவியலாளர்கள் கனிமங்களாகக் கணக்கிட்டு அதைப் புரிய வைப்பார்கள். கவிமனசு தனி. படைப் புலகமே தனி. இதில் லயிக்க தனி மனசு வேண்டும். படைப்புலகம் தனியென்றால் ஒதுங்கி நிற்றல் என்ற பொருளில் இல்லை. ரசனையனுபவத்தை முன்னிலைப் படுத்தினால் புதிர்களற்ற வரிகளைத் தரிசிக்கலாம்.

"பெயலாற்ற நீருலந்த உண்கண் உயலாற்றா

உய்வில்நோய் என்கண் நிறுத்து' என்ற குறட்பாவும் உடன் புரிகிறதோ.

"கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்கது உடைத்து' என்ற குறட்பா புரிகிறதோ.

"ஓதஞ்சுற்றிய ஞி தூரென ஒரு சார் ஞி கார்தூம் பற்றது ஞி வானென ஒரு சார்' (பரிபாடல்) விளங்குகிறதா.

"மன்ற மரா அத்த பே எழுதிர் கடவுள்

கொடியோரத் தேறூஉம் என்ப' என்ற வரிகள் விளங்குகின்றனவா. சிக்கல் படைப்பாளி களிடமில்லை. வாசகனிடமே என்று ஏற்பதே சால்பு.

வாசகனுக்குப் படைப்பாளியைவிட அதிக பொறுப்பு இருக்கிறது என்றறிய வேண்டும். தோட்டத்து மலர்களின் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால் தோட்டத்திற்குள் நுழைந்து பார்க்கச் சொல்வார் க.நா.சு. தமிழ்ப் படைப்பிலக்கியம் குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். உலக இலக்கியத் தரத்துக்கு நகர்த்தும் முயற்சி இருக்கவே செய்கிறது. படைப்பாளன் தன் படைப்பில் சொல்லாத பொருளைக்கூட கண்டடையும் திறன் வாசகனுக்கு அவசியம். எனவே வாசகன் படைப் பாளியைவிட மேலானவன்தான். படைப் பாளியும் தன் படைப்புக்கு முதல் வாசகனாகிறான்.

"வெளிச்சம் பரவிக் கிடக்கும் ஞி உயர்வழி நெடுகிலும்  மூலையில் நின்று யுகமாய்ச் சிரிக்கும்  எல்லாமறிந்த இருட்டு' - என்ன புரிகிறது என்ற கேள்வி யில்லை. தேர்ந்த வாசகனுக்குப் புரிதல் சிக்கலில்லை.

"வாசலில் அவன் நின்று கொண்டிருந்தான்  அசலான நரியொன்றின் சாயலோடு செவிகள் கூர்ந்த நரியின்  சோம்பலான கண்களைச் சுமந்திருந்தான்' - இதில் காணும் காட்சிப் படிமம் அற்புதமானது.

இதிலுள்ள எந்த வார்த்தைக்கும் கழக அகராதியில் பொருள் தேட வேண்டியதில்லை. சிறந்த கவிதை அல்லது சிறந்த படைப்பு ஒருவகையான தியானம் தான். ஆன்மீகத்தோடு இதைக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அது உன்னுள்ளே புதைந்து கிடக்கும். ஏதோ ஒன்று பரந்த ஆகாயத்தையும் சூரியனையும் காற்றையும் எட்டுவதற்கு வழிதேட முயற்சித்து வருகிறதே அதுதான் தியானம், யோகம், கவிதை எல்லாமே.

நவீனப் படைப்புகளின் தன்மையே அதன் மிகைத் தன்மைதான். மிகையாக இருப்பினும் தேர்ந்த வாசகன் அதற்குள் பொதிந்திருக்கும் புதையலைக் கண்டு பிடித்துவிட முடியும். இன்னொன்று சொற்களின் திறமையான சேர்க்கைக்குள் நல்ல படைப்பு ஒரு போதும் இருக்க முடியாது.

யாப்பின் வசதியை இழப்பது தவிர்க்க முடியாதது. இதனாலேயே முதல் வாசிப்பிலேயே கவிதை சிக்குவதில்லை. நவீன படைப்புக்கு வாசல் சன்னல் கதவுகள் உண்டு. கவிஞனின் இதயத்தின் அடியாழத் திற்குள் புதிய காற்றுகள் எப்போதும் பிரவேசிக்கும். கவிஞன் தரிசன ஆற்றல் பெற்றவன். யாப்பு மேதையல்லன். உண்மையில் மொழி பெயர்ப்பாளனும்கூட. அவனுள் நிகழ்ந்துவிட்ட ஒன்றை வார்த்தைகளால் வடித்தெடுக்கிறான். கவிதை, மூளையில் சொற்பமாகவும் இதயத்தில் அடர்த்தியாகவும் இருப்பது.

வாசகனுக்குக் கேள்விகள் இல்லை. கவிதைக்கான சொற்பிரயோகங்கள் அபத்தமான மன்றப் பேச்சுக்களல்ல. எந்த சமுதாயப் புரட்சிக்கும் மனிதனின் மனம் தயாராக வேண்டும். இந்த வேலையைத்தான் கவிதை இலக்கியங்கள் செய்கின்றன. இதில் முற்போக்கு பிற்போக்கு என்பது பொருளற்றது. நற்போக்குதான்.

கவிதையை புரிந்து கொள்ள என்ன வேண்டும் : கவிமனசுதான்.

(தாமதமாக வந்த இக்கடித எதிர்வினைக்கு, மறுவினை சுட்டுவிரலில் இடம் பெற்றுள்ளது.)

Pin It