சூர்யநிலா பல இதழ்கள் வாசிப்பவர், உடனுக்குடன் விமர்சித்து எழுதுபவர். அவர் "கருக்கல் விடியும்' இதழுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். “புரியாத எழுத்துகள் குறித்து அடிக்கடி பேசுதலே தேவையற்றது. புரிந்தால் பிரசுரியுங்கள், படியுங்கள் அல்லது தூக்கிப் போட்டுவிட்டு வேறு வேலைகளைப் பார்ப்போம், என்ன சரிதானே'' என்று எழுதியிருந்தார். சரியில்லை, சூர்யநிலா. தினமும் வீட்டைப் பெருக்கியாக வேண்டும்; யார் செய்வது. யாராவது செய்துதானே ஆக வேண்டும்! இந்தப் போக்கை அனுமதித்துக் கொண்டே இருப்போமானால், தூக்கிப்போட்டு விட்டு எனக்கு என்னாச்சு என்றிருந்தால் குப்பைகள் மலைபோல் குவிந்து ஒருநாள் புரியாததே, புரியக்கூடாது என்று எழுதுவதே இலக்கியம் என்று ஆகிவிடும். இனி, நா.விச்வநாதன் எழுதியுள்ள எதிர்வினை “புரிதல் கலை'' என்ற கடிதம் குறித்துப் பேசலாம்.

“வாழ்க்கை புரிகிறதா?'' என்ன மாதிரியான கேள்வி! இதற்கு பதில் உண்டா? சொல்ல முடியுமா? எதிராளியைப் பயமுறுத்தும் கேள்வி, வாயடைத்துப் போகச் செய்யும் கேள்வி, புத்திசாலித்தனம் போன்ற அதட்டலான கேள்வி. பேசாமலிருந் திருக்கலாம், கவிதை புரியலைன்னா என்ன...

குடியா முழுகிவிடும். நா.வி. சொல்வது போல ஞானக்குறைவு தான் இவ்வாறான கேள்வியைச் சுமந்து திரிகிறது. ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கற்பூரம் கொளுத்தி கழுதைக்குக் காட்டலாமோ... கற்பூரத்தின் மேன்மை அதற்குப் புரியுமோ... மேற்படிக் கருத்துதான், வானம் புரிகிறதா? நட்சத்திரங்கள் புரிகிறதா? சூரியன் சந்திரன் புரிகிறதா? பூமி புரியுதா? சாமி புரியுதா? அடுக்கடுக்கான கேள்விகளில் உட்கார்ந் திருக்கிறது.

அடுத்து ஓர் அடி, மரண அடி. “ஏன் புரிய வேண்டும்?'' அதாவது, உனக்கு ஏன் புரிய வேண்டும்? இன்று நேற்றைய அடி அல்ல ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு பழமையான அடி. அந்தக் கேள்வி "நீ யார்?' எனப் புரியவைத்தக் கேள்வி. துரோணாச் சாரியிடம் இருந்த கேள்வி.

நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன், ஸ்வாமி. ஒரு ஞான சூன்யத்தால் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். புரிஞ்சதுக்கு தக்கன தானே பதிலும் வரும். புத்தியில்லை என்பதை உம்போல "ஞானக்குறைவு' என்ற சொல்லில் நாகரிகமாகப் பேசத் தெரிய வில்லை. மன்னிக்கவும்.

“வாசகனுக்கு படைப்பாளியை விட அதிகப்பொறுப்பு இருக்கிறது. படைப் பாளன் தன் படைப்பில் சொல்லாத பொருளைக்கூட கண்டடையும் திறன் வாசகனுக்கு அவசியம்'' தன்யனானேன் ஸ்வாமி... தங்கள் எழுத்தின் பொருளை நான் விளங்கிக் கொண்ட லட்சணம் குறித்துப் பேச வேண்டும் இல்லையா... "தற்செயலா வேண்டுமென்றா தெரிய வில்லை பருத்த ஸ்தனங்கள் தெரியத் தெரிய துளியும் கூச்சமின்றித் தாண்டிப் போனாள், அற்புதமான வாசனை, கழுத்தின் செழுமை, சற்றே கீழிறங்கிச் சிவந்த தோள்களின் வனப்பு'' (“வலியின் வாசனை'' - நா.வி, கணையாழி ஆகஸ்டு 2013-இல் எழுதிய சிறுகதையிலிருந்து) “தெரியத் தெரிய'' ஆஹ்ஹா... மந்திரம் போன்ற எழுத்தின் வேகத்தை, உக்கிரத்தை, உரசலை, வழிசலை உணரத்தான் முடியும். புரிய முடியுமா என்ன... நெசந்தான் என்றிருந்தது அதிலும் தெரியத் தெரியலில் கரைந்து, உறைந்து, மறைந்து போகும்படி ஆயிற்று. இவ்வாறான எழுத்து எப்படி சிலருக்கும் மட்டும் வாய்க்கிறது. தவம்... தவம் செய்திருக்கணும்.

ஆயினும் லா.ச.ரா. ஆக இன்னும் நீண்ட தொலைவு நடந்தாகணும். முடியும்... இவரால் நிச்சயம் முடியும்.

“கால் தடுக்கி மெத்தையில் அவர் மேல் அப்படியே விழுகிறேன்! இடைத் துணி நெகிழ்கின்றது. ஆயினும் எனக்கு ஏன் முகம் கவிழவில்லை? ஒருவரோ டொருவர் பின்னிப்புரண்டு பிணைந்து இருவரும் ஒன்றாகி, அவ்வொன்றும் அன்று என்ற ஒன்றலில் மூச்சோடு மூச்சு கோர்த்து; வாங்கும் மூச்சில் யார் மூச்சு யாருடையது? மூச்சு தானா, அல்லது பூமி தன் அச்சுப் பிசகிப் போச்சா? கண் திறந்திருப்பதற்கும் மூடியதற்கும் வேறு தெரியாமல் திகைக்கடித்து என்றும் ஒன்றாய அவ்விருளில்...

அங்கத்தில் அங்கம் அழுந்தி இரு கூறு ஒன்றோடொன்று பொருந்தி எப்படி யேனும் ஒன்றாய், அந்த ஒன்றும் அன்று என இழைந்து விடத்தவிக்கும் இப்பேரிணைப்பின் அவஸ்தையில், என்ன தான் அழுத்தியும், என்னதான் இழைந்தும், இருகூறு இருகூறுதான் என்று உணர்ந்த பிளவின் ஏக்கம் நெஞ்சைப் பிளந்து கொண்டு எங்களிருவரிடமிருந்து ஒரே சமயத்தில் கிளம்பிய கேவலில்...'' (“இன்று, நேற்று, நாளை'' லா.ச.ரா.வின் சிறுகதையிலிருந்து).

லா.ச.ரா. எழுத்தில் என் ஞானக் குறைவையும் தாண்டி த்வைத, அத்வைத தத்துவங்களெல்லாம் என்னுள் பரவி, வேர்த்து விறுவிறுத்து பரவச மோன நிலையினை அடைந்தேன். ஆனால், நிறைஞானம் பெற்றோருக்கு இந்த எழுத்து வேறு ஏதும் சொல்லலாம். என்போன்ற குறை ஞானம் பெற்றவருக்கு இவ்வளவு தான் புரிகிறது.

தாங்கள் பிழிந்துவிடும் ஸ÷நாதமான, ஸகந்தமான மோனா வஸ்தையான, பவித்திரமான, சிரேஷ்டமான எழுத்துகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் என் போன்றோருக்கு வரவில்லை, வராதுன்னுதான் நினைக்கிறேன். என்னோட ரசனை யெல்லாம் இவ்வளவுதான்.

“மெல்லிய புலால் நாற்றம்

வீசுகின்ற நானும்

தசை முற்றாகப் பிய்த்தெடுக்கப்பட்ட

எலும்புகள் தொங்கும்

என் வீடும்

கொட்டாங்கச்சியில் தோலைக் கட்டி

பறையொலிப் பழகும்

விடலைகள் நிறைந்த

என் தெருவும்

ஊரின் கடைசியில் இருப்பதாக

நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்

முதலில் இருப்பதாக''

- சுகிர்தராணியின் கவிதை புரிகிறது.

“எதை எதையோ சலுகையின்னு

அறிவிக்கிறீங்க

நாங்க எரியிறப்போ

எவன் மசுரப்புடுங்கப்

போனீங்க...

டேய்... மனுசங்கடா

நாங்க... மனுசங்கடா''

- இன்குலாப்பின் ஆவேசம் புரிகிறது.

“ஆண்டியப்பன் மவன்

அதிகாரியானதால

போற எடமெல்லாம்

மக்க கையெடுத்துக் கும்பிடுதுவ...

பொறந்த மண்ணப் பாக்க

ஊருக்கு வர்றப்ப மட்டும்

கையெடுக்கவும் முடியாம

லேசா எழுற மாதிரி

பல்லக் காட்டி நடிச்சு

சூத்து மண்ணத் தட்டுவாங்கெ

ஆண்டங்க...''

- மீனா சுந்தரின் அடக்கப்பட்ட ஆயிரமாண்டு கோபம் புரிகிறது.

“ஊர் தோறும்

வல்லரசு வாய்மணக்க

நாறிக்கிடக்கின்றன

நாட்டார் மங்கலமும்

பாப்பாட்டி கீரிப்பட்டியும்

கொட்டாங்கச்சி யேந்தலோடு.

விரலில் வைக்கும்

கருமையால்

இருண்டு கிடக்கின்றன

மனித மனங்கள்.

இன்னும்

கனன்று கொண்டுதான் இருக்கிறது

இருப்பவனின் எதிர்ப்பும்

எதிர்ப்பவனின் நெருப்பும்''

- கலைபாரதியின் கனன்று எரியும் வரிகள் புரிகிறது.

ஆனா... சத்தியமாப் புரியலீங்... சாமி, உங்களோட சிரேஷ்டமும் பவித்திரமும்.

“எத்துவாளிகள்

மாசாமாசம் அறிவுக்காரர்களின்

கண்ணுக்கு மட்டுமே தெரிவதான

ஆடைகள் தயாரிக்கிறார்கள்

அறிவுசீவி அரசர்கள்

மாய ஆடைதரித்து

அம்மணமாய் அலைகிறார்கள்

முட்டாள் குழந்தை

கை காட்டிச் சிரிக்கிறது''

“வாசிப்பு என்பதை வெறும் இலக்கிய சக்தி என்று புரிந்து கொள்ளுதல் கூடாது. அது ஒரு சமூக சம்பவம் என்பது முக்கியம். வாசிப்பு ஒரு சமூகச் சம்பவம் என்று கூறும்போது யாரும் எதனையும் வாசித்து எப்படியும் புரிந்து கொள்ளலாம் என்ற கருத்தை நாம் மறுக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாசிப்பும் ஒவ்வொரு விதமானது என்ற அதீத நிலைக்குச் செல்லமுடியாது. சமூக வாசிப்புக்குப் பொது சராசரி உண்டு. சமூகத்தின் பொருள்வகை உறவமைப்பும், பண்பாட்டு அமைப்பும், அந்த அமைப்புகளில் தனி மனிதன் வகிக்கும் பிரத்தியேகப் பாத்திரமும் அவனது வாசிப்பின், புரிதலின் பொதுச் சராசரியை நமக்குக் கோடிட்டுக் காட்டும்''. 

(அமைப்பியல் பின் அமைப்பியல் - முனைவர் ந.முத்துமோகன்)

இறுதியாக ஆத்மாநாம் கவிதை ஒன்றை நண்பர் நா.வி.க்கு சமர்ப்பித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

“நிஜம் நிஜத்தை

நிஜமாக நிஜம் நிஜத்தை

நிஜத்தை நிஜமாக நிஜம்

நிஜமும் நிஜமாக நிஜம்

நிஜமே நிஜமே நிஜம்

நிஜம் நிஜம் நிஜம்!''

Pin It