தெருவிலே ஒருத்தர் சென்றார்.
கவிஞராம், நண்பர் சொன்னார்.
"கவிஞரே, வணக்கம்' என்றேன். வணக்கத்தைத் தலையால் அசைத்தார்.
"கவிதைகள் எப்படிச் செய்வீர்?' சொன்னார்.
"கும்மோணம் வெற்றிலை, கைச்சீவல், பன்னீ
ர்ப் போயிலை குதப்ப எச்
சில் தெறிப்பிலே கவிதை வீழும். ஒரு
ரகசியம் போலச் சொல்லி
துப்பினார் தெருவில் மூன்றை
நாயொன்று முகர்ந்து போச்சு.                                                                                                                                   (1)

"என்ன ஓய் பேரு' என்றார்
"கோய்ந்த்சாமி' என்றேன். "எந்தக்
கோய்ந்த்சாமி என்று அந்தாளும்
கேட்க வில்லை. எந்தக்
கோய்ந்த்சாமி என்று நானும்
சொல்லவில்லை.
 "அப்புறம் என்ன' என்றேன்
 "அவ்வளவே கவிதை' என்றார்
 அவசரமாய் "அபாரம்' சொல்லி
 "இன்னொன்றைக் கூறும்' என்றேன்.                                                                                                                      (2)

பாடையின் கீழே நா
யொன்று நிழலுக்காய்ப்
பதுங்கிப் போச்சு.
படுத்திருந்தவன்
"ச்சூ' என விரட்டிப்படுத்தான்
நாயல்ல அவன் தானென்று
என்றுமே அறிய மாட்டான்.
பிணந்தூக்கி ஒருத்தன் காலினால்
எட்டி எற்ற "வள்'ளெனத்திட்
டிப்போச்சு, வழியெங்கும் மூத்
திரம் போச்சு.
 "தத்துவம் புரிந்ததா?' என்றார்
 புரிந்ததாய் தலையை ஆட்ட
 அடுத்ததொன்று ஈந்துப் போனார்.                                                                                                                           (3)

பல்லியின் அறுந்த வால்,
பாலிலே ஈயின் பிணம், வேலி
முள்ளிலே பறக்கும் கூந்தல்,
நசுக்கிய டூத்பேஸ்ட்க் குப்பி,
நக்கித் தீர்ந்த ஊறுகாய் சாஷே,
நாரை மூக்கின் மீனின்குஞ்சு,
நறுக்கிய நகத்தின் துணுக்கு,
காக்கை உகக்குமோர் பெருச்சாளிப்
பிணம், ச்சீச்சி... சிந்தி எறிந்த
மூக்கின் சளி, பரணில் பழைய போட்டோ...

 களைத்துப்போய் நிறுத்தி,
 "எப்படி?' என்று கேட்டார்
 "என்ன இதுவெல்லாம்?' என்றேன்
 "இதுதான் வாழ்க்கை... மக்கே
 வரிசையாய் சொல்லிப்பாரு
 வரும்பாரு கவிதை' என்றார்
 கவிதை செய் சூத்திரம்
 புரிஞ்சுப் போச்சு. இனி,
 நானும் தான் கவிதை செய்வேன்
 எவரென்னைத் தடுக்கக்கூடும்? 

Pin It