வணக்கம்.

"இன்று புதிதாய் பிறந்தோம்''.
 இதற்கு முன் ""கருக்கல் விடியும்''

சில இதழ்கள் முன்னோட்டமாக விடியலுக்கு முன் வரும் கருக்கலாக,எங்களின் பயணம் எது,இலக்கு எது என்பதனை உங்களுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம்.

அரசின் முறையான பதிவுடன் வரும் முதல் இதழ் ""கருக்கல் விடியும்''இதுவே.முன்வந்த இதழ்களின் உள்ளடக்கச் சிறப்போடும்,மேலும் பல புதிய பகுதிகளை வெளிச்சங்களை உருவாக்குவதாகவும் இனிவரும் அனைத்து இதழ்களும் அமைந்திருக்கும்.தொடர்ந்து இரு மாதங்களுக்கு ஒருமுறை தொய்வின்றி ""கருக்கல் விடியும்'' இனி வெளிவரும்வாசகர்களாக, படைப்பாளிகளாக உங்கள் அனைவரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம். முன் வந்த இதழ்களின் போக்கும் -நோக்கும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?இன்னும் என்னென்ன இடம்பெற வேண்டும்?விரிவாகவோ அல்லது ஓரிரு வரிகளில் சுருக்கமாகவோ உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்... புதிய நண்பர்களை அறிமுகப் படுத்துங்கள்.

"கருக்கல் விடியும்'' மேலும் பரவலாகச் சென்றிட உங்களால் முடிந்த வரை (விற்பனை முகவர்களை அறிமுகப் படுத்தியோ,விளம்பரங்களை பெற்றுத் தந்தோ,புதிய சந்தாதாரர்களைச் சேர்த்தோ) உதவுங்கள்...
 
தமிழ்நாட்டில்,தமிழ் திரைப் படங்களில் தமிழரின் சமுதாய பிரச்னைகள் பேசப்படுவதில்லை, சமீபகாலமாய். ஆனால் அண்மைக்கால மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தின் சமுதாயப் பிரச்னைகளை உற்று நோக்கி,பேசுபவைகளாக வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.சமீபத்தில் வெளியான டிராபிக் (மூளைச் சாவுக்குப்பின் உறுப்புதானம் செய்வதைப் பற்றிய படம்),ஸ்பிரிட் (மது அருந்துவதால் ஏற்படும் மனப் பிறழ்வு மற்றும் பொருளாதாரச் சூழலைப் பேசும்படம்),உஸ்தாத் ஓட்டல் (கோழிக்கோட்டில் ஓட்டல் வைத்திருக்கும் சூஃபி முஸ்லீம் ஒருவருக்கும் அவரது மகன் மற்றும் பேரனுக்கான பிரச்னைகளே கதைக்களன்) என்ற மூன்று படங்களை அவசியம் பார்க்கும்படி என்னை எனது மகன் வேண்ட,சூழல் காரணமாக "உஸ்தாத் ஓட்டல்'திரைப்படத்தை மட்டுமே பார்க்க நேரிட்டது. மலபாரி வகை உணவுகள் குறிப்பாக பிரியாணி மற்றும் கேரள மாப்பிள்ளை இன மக்களுடைய பேச்சு வழக்கு,பாரம்பரிய பழக்க வழக்கங்களை உள்ளடக்கிய படம் இது. அன்வர்ரசீது இயக்கத்தில், அஞ்சலிமேனன் கதை, திரைக்கதையில், மம்முட்டி மகன் துல்குவீர் சல்மான்,திலகன் (அவரது கடைசி படமும் கூட)நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், ஆரம்பத்தில் சராசரி கதையம்சத்தோடுதான் துவங்குகிறது.

ஆனால் பட இறுதி வேறொரு திக்கில் பயணிக்கிறது.தமிழ்நாட்டின் ஹீரோ ஒருவரை (சமுதாயத்தின் நிஜ நாயகன் இவர்) படம் காட்சிப் படுத்தும்போது, நாம் சற்றே நிமிர்ந்து உட்கார்கிறோம்.

1981 இல் மதுரையில் பிறந்த நாராயணன் கிருஷ்ணன்தான் அந்த நிஜ நாயகன். இவரை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஜெயா தொலைக்காட்சியின் விசுவின் "மக்கள் அரங்கம்' நிகழ்ச்சியில் இவர் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்.

பெங்களூரு தாஜ் ஓட்டல் செஃப் (சமையல்காரர்) ஆக பணிபுரிந்த நாராயணன், வேலையின் பொருட்டு வெளிநாடு (சுவிட்சர்லாந்து) செல்ல முனைகிறார். செல்லுமுன் மதுரையில் தன் குடும்பத்தாரிடம் விடைபெற வந்தவர், வரும் வழியில் கண்ட காட்சி அவரது வாழ்க்கையை மட்டுமல்ல-எண்ணற்ற மனநிலை சரியில்லாதவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுவதாக அமைந்தது.சாலை ஓரம் மனிதன் ஒருவன்,பசியால் தன் மலத்தை தானே தின்னும் அவலத்தைக் கண்டு பதை பதைத்த நாராயணன்,இக்கொடுமையைக் காண சகியாமல், உடனே அருகிருந்த ஓட்டலுக்குச் சென்று இட்லி பொட்டலம் வாங்கி அவனுக்கு தந்து சாப்பிடச் செய்கிறார். அவன் கண்களில் கண்ணீரும் ஆனந்தமும் பரவுவதை கண்டவர், "இனி நமக்கு வேலை வெளிநாட்டில் இல்லை; இங்கேதான்' என்ற முடிவுக்கும் வருகிறார். 2003 இல் அட்சயா டிரஸ்ட் துவங்க இந்நிகழ்வே காரணமாகிறது. மதுரையைச் சுற்றி 200 கிலோமீட்டருக்குள் உள்ள மக்களுக்கு குறிப்பாக மனநிலை சரியில்லாதவர்களுக்கு தினசரி உணவு சமைத்து,பரிமாறுவதை கடமையாக இன்றும் அட்சயா டிரஸ்ட் மூலம் செய்து வருகிறார்.

 கடந்த 10 ஆண்டுகளில் 49 இலட்சம் மக்களுக்கு இப்படி உணவளித்திருக்கிறார் இவர். இவரது இந்தச் சேவையைப் பாராட்டி 2010இல் இசச தொலைக்காட்சி "இசச ஏஉதஞஉந" விருது வழங்கி,கௌரவித்தது.இவ்விருது பெற்ற இந்தியர் இவர் ஒருவர் மட்டுமே. மனநிலை சரியில்லாத மனிதர்களுக்கு முடி வெட்டி, குளிப்பாட்டி, உடைமாற்றி "சமூகத்தில் தாங்களும் ஒரு மனிதனே'என்ற தன்னம்பிக்கையை விதைத்து,உணவு படைத்திடும் இவரது பணி, நுட்பமாக "உஸ்தாத் ஓட்டல்' படத்தில் இணைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெருவாரியாக கவனம் பெறாத நாராயணன் கிருஷ்ணனின் சேவையை,மலையாளப்படக்கதை வழி மக்களிடம் கொண்டு சேர்த்த இயக்குநர் அன்வர்ரசீதின் செயல் போற்றற்குரிய ஒன்று. கதைகளைத்தேடி அலையும் தமிழ் நாட்டிலிருந்துதான் மலையாளப் படவுலகம் கதைகளைப் பெறுகிறது; மக்களை மனித நேயர்களாக மடைமாற்றுகிறது.

 தமிழ் திரைப்பட கர்த்தாக்களே! இன்னமும் நாம் கதைகளுக்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி கதை பண்ணத்தான் வேண்டுமா? இங்கேயே இருக்கிறது,ஓராயிரம் மனித நேயக் கதைகள்!கண்களையும் காதுகளையும் தீட்டிப் பாருங்கள் -புலப்படும்! இல்லையேல் மலையாளம் நம்மிடம் இருந்து சுவீகரிக்கும் கதைகளையாவது உற்று நோக்குங்கள்...

(நாராயணன் கிருஷ்ணன் விருது பெறும் மற்றும் உரை நிகழ்த்தும் காட்சிகளைக் காண: http://www.you tube.com/watch?v=ZJZ.OGX1XQU)         

Pin It