நவீன தமிழிலக்கிய நகர்தலில் இசங்களின் ஆளுமையென்பது பசியோடு வாசலில் நிற்போரைக் கதவடைத்து வருந்தி யழைப்பதைத் தலைமேற் கொண்டுள்ள தெனலாம். இச்சூழலில், இருத்தலை அடையாளப்படுத்தவும் அர்த்தப்படுத்தவுமான படைப்பாக்கங்களைக் கவனப்படுத்த வேண்டியது நம் கடமையாகிறது.

                செதுக்கப்படுவதெல்லாம் சிலை யாவாததைப் போல், எழுதி பதியப்படுவது மட்டும் எப்படி படைப்பாகிவிடும்? வாசிப்பவரின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்பதைவிட தம்மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகவே எனும்போது அவற்றைக் குப்பையென அப்புறப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இயங்கிக் கொண்டிருக் கிறோம்.

                இப்படியான அருகாமையில்தான் கவிஞர் வைகறையின் "நிலாவை உடைத்த கல்' தகிதா பதிப்பகத்திலிருந்து பௌர்ணமியாக மிளிர்கிறது. “என் கவிதைகள் உங்களுக்குப் பெரிதாய் ஏதும் கொண்டுவர வில்லை; அதிகபட்சமாய் கொடுக்கலாம் ஒரு புன்னகையை அல்லது ஒரு துளி கண்ணீரை” என்ற புரிதலோடு கவிதையின் அகவெளிக்குள் நுழையும் கவிஞர், புன்னகைக்கும் கண்ணீர்த் துளிக்கும் இடைப்பட்ட வாழ்வைக் கவிதையாகத் தந்திருக்கும் பக்குவமே அவரைக் கவிஞனாக்கியிருக்கிற தென்பேன்.

                கவிஞர் வைகறையின் கவியாளுமை பற்றி அறியும்முன் அவரின் இலக்கிய வேட்கையினைக் குறிப்பிட்டேயாக வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், "நந்தலாலா' என்ற இணைய இதழைத் தீவிர முனைப்புடன் நடத்தி வருகிறார். அதில் அறியப்பட்ட மற்றும் அறிமுக கவிஞர்களின் படைப்புகள் வெளிவருகின்றன. சதா கவிதையோடே புழங்கும் இவருக்குக் கவிதை பின்னுவ தொன்றும் சிக்கலான விஷயமில்லை.

                உள்வாங்கிய மொழியை ஆளத் தெரிந்தவனுக்கே சொற்களும் கட்டுப் படுகின்றன. வார்த்தைகளை வழி நடத்துபவன் படைப்பாளனாகிறான். வைகறைக்குக் கைவரப்பெற்ற பதங்களே நமக்குக் கிடைத்திருக்கும் கவிதைகள்.

                இத்தொகுப்பில் ஹைக்கூவும் குறுங் கவிதைகளும் சமவாய்ப்பைப் பெற்றுள்ளன. தமக்கு நேர்ந்த வாழ்வனுபவங்கள் புற உலகு சூழலியக்கிகளான மரம், மழை, நதி, தும்பி, பறவை, வண்ணத்துப்பூச்சி இவற்றுடனான அழகியல், விஞ்ஞான அபரிமித வளர்ச்சியால் இயற்கையை இழக்கும் அபாயங்கள், குழந்தையின் புன்னகை, தாய்மையின் பேரன்பு, தந்தையின் தியாகம், வஞ்சித்த அரசியல், வாழ்க்கைத் தத்துவம் எனும் கருத்தமைவுகளால் கவிதைகள் முகிழ்ந் துள்ளன.

                காதலைப் போலவே காதல் கவிதை களும் புதிது புதிதாய் முளைத்துக் கிளை பரப்புவதைக் காலயேடுகள் பிரியத்துடன் ஏந்திக்கொள்ளும். வெற்றி பெற்ற காதலை விட தோல்வியுறும் காதல்களையே மிகுவாக வரலாறும் இலக்கியங்களும் பதிந்து கொள்வதில் பெருமையடைகின்றன. பூக்களைப் போல் மலரும் காதல் சந்தோஷங் களைப் பகிர்தலுக்கும் மேலாகவே அடியோடு வெட்டப்படும் காதலின் ரணங்களை உகுக்கும் பதிவுகளே தமிழ்க் கவிதைகளில் நெடுகக் காணலாம்.

                அவ்வகையில் இவரது காதலின் வேதனை நம் கண்களிலும் நீர் சுரக்கக் காரணமாகிறது.

                அழவைக்க / போதும்/ மெழுகு வர்த்திக்கு ஒரு தீக்குச்சி / எனக்கு உன் காதல் / எனும் போதும்,

                எனது கோப்பை / காலியாகிறது / உன்னை ஊற்றி / எனும் போதும் காதலின் வலி, பூமியில் புதைந்த மரத்துண்டு வைரமாகிக் கொண்டிருப்பதைப் போன்ற வேதிவினையை அவரது துயரச் சொற்களாய் மினுக்குகின்றன.

                மழையைக் கவிதையாகவும் கவிதையை மழையாகவும் இயற்கை யசைவுகளைச் சொட்டுச் சொட்டாய் ருசித்து லயித்த, தமக்கு வாய்த்த சந்தர்ப்பங்களையும் அழகியல் உணர்வையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் மனம் அவருடையது.

                குடையின் / கம்பி நுனியிலிருந்து / விடுபட்ட தருணம் முதல் / தரை தொடும் வரை / சிறுபறவையாகிப் பயணிக்கிறது / கடைசி மழைத்துளி / என மழைத் துளியைப் பறவையாக்கியவர்,

                விலகிச் செல்கையில் / காலைப் பிடிக்கிறது / நிழலாடும் மரம் / என மரத்தை வாஞ்சையுடன் அரவணைக்கும் மனிதனாகப் படைக்கையில் இயற்கை மீதான இவரின் காதல் வெளிப்படுகிறது.

                தமிழ் ஈழம் எரிந்து கொண்டிருந்த போது இங்கே ஓரங்க நாடகம் அரங் கேறியதை உலகம் அறியும். ரத்த உறவான நம் சகோதரத் தமிழினம் வெந்து மடிகையில் வழக்கமான கிழக்காக நமக்கும் விடிந்தது. இந்த அழிக்க முடியா வரலாற்றுக்கறை படிந்துள்ளதற்கு ஒருத்தரையொருத்தர் கை நீட்டி எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. தேசியத்திற்குள் கட்டுண்ட நம் அடிமை இயல்பும் இயலாமையும் குறித்து ஆதங்க எள்ளலுடன் இங்கே,

                கொஞ்சம் பொறுத்திரு / எரிந்து முடியட்டும் / இரங்கல் தெரிவிக்கலாம்ஞி

என்ற கவிதை, கள்ள மௌன அரசியலை தோலுரிப்பதைக் காணலாம்.

                ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் தளங்களில் உயர்ந்து வருவதைக் காலம் ஆரத்தி வரவேற்றாலும் ஆதிக்க சக்திகளுக்கு என்னவோ அஜீரண கோளாறைத் தந்துள்ளது. தமிழ் நிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் நிகழ்ந்துள்ள சாதிய மோதல்களும் இழப்புகளுமே இதற்கு சாட்சி. குட்டக்குட்ட குனிந்ததுபோக, மிகத்தெளிவான அடுத்தக் கட்ட நகர்தலுக்குத் தாங்கள் தயாராகி வருவதின் ஒட்டு மொத்த குரலின் சார்பாகக் கவிஞர் எச்சரிக்கை விடுக்கிறார்.

                இன்னுங் கொஞ்சம் / தட்டிவை என்னை / இன்னமும் பலமாய் இழுக்கப் பட வேண்டியுள்ளது / என் அம்பு /

                மானுடத்தின் சரிபாதியான பெண்ணினம் பன்னெடுங்காலமாய் போராடி, அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற்று விட்டனர் என்பது ஒருமாயத் தோற்றம். இன்னும் அவர்கள் அடைய வேண்டிய உயரங்களுக்கான நம்பிக்கையை ஒளியாய் பாய்ச்சும் கவிஞர்,

                என்ன பயம் / ஒளிந்து கிடக்கிறது / கிணற்றுக்குள் நிலா / என, பெண்ணியத் திற்குக் குரல் கொடுப்பவர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

                "A poet is an abnormal person born in the normal society" - ஷெல்லி சொல்வதைப் போல போகிற போக்கில் வாழ்வின் எதார்த் தத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் இயம்ப யோகி, முனிவர், ஞானி இவர்களின் வரிசையில் கவிஞரையும் சேர்த்துக்கொள்ள ஒரு சான்று -

                பட்டமரம் / ஒற்றைக்குயில் / கிளை யெல்லாம் இசை /

                பழைய ஹைக்கூ கவிதைகள் மிகச் சில, வேறு சொற்களால் வெளிப்பட்டிருப்பது இவரின் சாமர்த்தியமா? ஒரே சிந்தனை பல கவிஞர்களுக்கும் உதித்ததின் வெளிப்பாடா? தொடர்வாசிப்பின் பாதிப்போ?

                ஒரே வடிவத்தின் சாயல் குறுங் கவிதைகள் மேல் நெடுக இழையோடுவதைத் தீவிர கவிதை வாசகரால் நுகராமல் இருக்க முடியாது. போகட்டும்.

                கவிஞர் வைகறை, தாம் அடைகாத்து வைத்திருந்த சொற்களையே கவிதை மொழி யாக்கியிருக்கிறார். வையத்தில் கண்டடையும் ஒவ்வொரு அசைவையும் கவிதையாக்கும் லாவகம் இவருக்குக் கை கூடிவிட்டது. சொற்செட்டு, குறியீடு, படிமம் கவிதைக்கு அடர்த்தி சேர்த்துள்ளன. வளர்ப்புப் புறாக்கள் வளர்ப்பவனின் தோளில் பயமற்றும் உரிமை யோடும் பிரியத்துடனும் வந்தமர்வதைப் போல் கவிதைக்கான வார்த்தைகள் கவிஞரின் கரங்களில் குழந்தையென தவழ்கின்றன. உதாரணத்திற்கு, நிழலாடும் மரம், முத்தமிட துடிக்கும் மழை, காற்றின் நாட்டியம், வண்ணத்துப்பூச்சியின் விசும்பல், மௌனம் பேசு, இலைச்சிறகு, இறகுகளைத் தேடும் தேவதைகள் போன்ற சொல்லாடல்களை இங்குக் குறிப்பிடலாம்.

                தம்மீது கல்லெறிந்தவர்களின் கரம் பிடித்து அவர்களின் கை வலிக்குமென கவிதையால் ஒத்தடம் கொடுக்கும் இவரது மனநிலை யாவருக்கும் வாய்த்தால் நலம்.

                ஆகச் சிறந்தது கூட வேண்டாம். பரவலான அறிமுகத்தையும் முத்தாய்ப்பான அடையாளத்தையும் இத்தொகுப்பு இவருக்குத் தருமென நம்புவோம்.

                அழகிய அட்டைப்படம், நேர்த்தி யான கட்டமைப்பு, ஒழுங்கான பக்கவடி வமைப்புடன் வெளிவந்திருக்கும் "நிலாவை உடைத்த கல்'லை வாசித்தவர்களிடமிருந்து கவிஞர் வைகறை கற்களையோ பூக்களையோ எதிர்கொள்ள காத்திருக்கிறார். வீசலாம் இஷ்டம் போல்.

 

நிலாவை உடைத்த கல்

ஆசிரியர் : வைகறை

தகிதா பதிப்பகம்

4/833, தீபம் பூங்கா,

கே.வடமதுரை, கோவை - 641 017

விலை : ரூ.60-

பேச: 9443751641

Pin It