நயவஞ்சகமாய்
ஏமாற்றிப்பிழைப்பதே தொழில்
நரிகளுக்கு
செழித்து விளைந்திருக்கும்
உழவனின்
கரும்புக்கொல்லைதான்
அவற்றிற்குப் புகலிடம்
உருவத்தில்
நாயை ஒத்திருக்க
காவலுக்கு வைத்த
தோற்றப்பிழையால்
வேட்டடையாடப்பட்ட நம் உடமைகள்
மிகுதி
வீழ்த்த முயற்சித்தவனை
சூழ்ச்சிமிக்க நரிகள்
தனியாளாய் அகப்படும் தருணம்
பலியிட்டு ரத்தம் ருசிக்கின்றன
எவன் கற்பித்தான்
அவை முகத்தில் விழித்தால்
அதிர்ஷ்டமென்று
உலக்கை எடுத்தாலொழிய
ஒழிக்க முடியாது
நரிகளை

ரகசிய வழி

அங்கொன்றும்
இங்கொன்றுமாக
இளங்குருத்தைக்
கத்தரித்த எலிகள்
விழிபிதுங்கி
விரைத்து
உப்பிக்கிடக்கும்
பொறிவைத்த கிட்டியில் மாட்டி
முற்றிய நெற்கதிரைக்
கொத்துக்கொத்தாய்க்கொய்து
வளையில் கொண்டுபோய்
வாரிசுகளுக்கும் சேர்க்கும்
மேட்டுவரப்பு எலிகளைப் பிடிக்க
வரப்பை வெட்டினால்
வக்காளோழிதுவ
தப்பி ஓடுதுக
குப்பன் வளை திறந்து.

Pin It