புதிய அரசமைப்பில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கென சட்டமன்றத்தில் 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுதந்திரத் தொழிலாளர் கட்சி சார்பில், நான் வேட்பாளர்களைப் பரிந்துரை செய்திருக்கிறேன். நாம் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை ஏன் தொடங்க வேண்டும்? இந்தியாவில் ஏற்கனவே இந்திய தேசியக் காங்கிரஸ் என்ற வலிமை வாய்ந்த கட்சி இருக்கும்போது, புதிய கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன என்ற நியாயமான கேள்வியை பலர் கேட்கக்கூடும்.
காங்கிரசின் முதன்மையான நோக்கம் சுதந்திரம் பெறுவது. நானும் எம் தோழர்களும்கூட சுதந்திரம் பெற விரும்புகிறோம். ஆனால், இது அத்தனை எளிதல்ல. ஓர் உண்மையான சுதந்திரத்தை வென்றெடுக்கும் வலிமையும் திறமையும் நமக்கு இல்லை எனில், நமது நோக்கத்தை நிறைவேற்ற – முன்பே முயன்று பலனளித்த செயல்முறைகளைப் பின்பற்றுவதே அறிவுடைமையாகும்.
இந்தியா இன்றளவும் ஒரு தேசமாக உருவாகவில்லை. இந்நாடு 4,000 சாதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இது போதாதென சாதியம், மாநிலப் பிரிவினை, மத வேறுபாடுகள், இன்னும் எண்ணிலடங்கா சச்சரவுகள், மோதல் மற்றும் முரண்பாடுகள் நாட்டைப் பிரித்து வைத்திருக்கின்றன. இத்தனைப் பிரிவினைகள் இருக்கும் நிலையில், ஒருங்கிணைந்த இந்தியாவை கற்பனை செய்வதே கடினம். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு என ஒரு பொது லட்சியம் இல்லை. இத்தகைய சூழலில், பிரிட்டிஷ் அரசு முடிவுக்கு வந்தால் இந்தியா ஒரு தேசம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களும், மதவெறியர்களும், சாதி உணர்வாளர்களும் – அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில், ஒருவருக்கொருவர் சண்டையிடாமல் இருப்பார்களா?
உண்மையான சுதந்திரத்தைப் பெறுவதற்கான உண்மையான வலிமை இல்லையெனில், அத்தகைய சுதந்திரத்தைப் பற்றிய கனவுகளில் மூழ்குவதே ஆபத்தானது. இன்னொரு புறம் நமது நிலைக்கும் காங்கிரஸ் நிலைக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடு உண்டு. அரசமைப்புச் சீர்திருத்தங்களை காங்கிரஸ் விரும்பவில்லை. அது, சீர்திருத் தங்களுக்கு எதிரானது. அவர்கள் சட்டமன்றங்களில் நுழைந்த பிறகு சீர்திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். இத்தகைய சீர்திருத்தங்கள் நமது எண்ணங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஏற்புடையவை அல்ல. இருப்பினும், அவற்றை சரிசெய்து நமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைவிட, சட்டமன்றங்களில் கூடுதலான உரிமைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாக நாம் கருதுகிறோம்.
இன்று காங்கிரஸ் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஒரு கலப்படமான மக்கள் கூட்டமாக இருக்கிறது. அதில், மிகவும் வறிய கூலித் தொழிலாளர் கள், ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர் முதல் நிலவுடைமையாளர்கள் வரை, கந்து வட்டிக்காரர்கள், வியாபாரிகள், நடுத்தர மக்கள், முதலாளிகள், சுரண்டல்காரர்கள் என எல்லா தரப்பு மக்களும் இருக்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால், முரண்பட்ட நோக்கம் கொண்டவர்கள் அக்கட்சியில் திரண்டிருக்கின்றனர். ஏழை மக்களின் ரத்தத்தைச் சுவைப்பவர்கள், சுரண்டப்பட்ட மக்களின் நண்பர்களாக இருக்க முடியுமா? காங்கிரஸ் கட்சி கொழுத்த பணக்காரர்களின் மடியில் அமர்ந்திருக்கிறது. அவர்களால் எப்படி ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய முடியும்?
காங்கிரஸ் கட்சி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி அல்ல. அது, முதலாளிகளின் பாதுகாவலன். உழைக்கும் மக்களின் நலன்களை யும், பொது மக்களின் நலன்களையும் காப்பாற்றவோ, பாதுகாக்கவோ அக்கட்சியால் முடியாது. இதற்கு மாறாக, நமது அமைப்பான சுதந்திரத் தொழிலாளர் கட்சி, சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்குப் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரசைவிட நாம் எளிதாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும்.
நமது கட்சியின் முக்கிய நோக்கம், தீண்டத்தகாத மக்கள், உழைக்கும் மக்கள், ஏழை மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடுவதே. நமது கொள்கை மற்றும் கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காமலேயே நம்மால் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.
தீண்டத்தகாத மக்களின் பிரச்சினைகளை விட்டுவிட்டு, பிற மக்களுடன் இணைந்து பணிபுரிவதை நான் ஏன் தேர்வு செய்தேன் என்று என்னிடம் பலமுறை கேட்கப்பட்டது. இது தொடர்பாக நான் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். வரவிருக்கும் புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி 175 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 15 பேர் தீண்டத்தகாதவர்களாக இருப்பர். இந்த 15 பேர்களால் திறம்படச் செயலாற்றுவது கடினம்.
ஏராளமான மக்களின் உதவி நமக்குத் தேவை. எனவே, நம்மைப் போன்ற கொள்கை கோட்பாடுகள் உள்ள பிற நண்பர்கள் நமக்குத் தேவை. தீண்டத்தகாதோர் அல்லாதோர் இடையிலும் நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நமக்கு நேர்மையாக உதவியிருக்கிறார்கள்; தங்களுடைய நலன்களைத் தியாகம் செய்து, நம்மோடு இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள். அதே போல நாமும் இத்தகையோரை நம்முடைய கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட வைக்க வேண்டும். எனவே, வீண் விவாதங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 391
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நாம் எல்லோரும் ஒரே மக்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் செயல்படுங்கள்
- விவரங்கள்
- அம்பேத்கர்
- பிரிவு: தலித் முரசு - மார்ச் 2009