நம் முன்னேற்றத்தைத் தடுப்பவர்கள்தாம் நம்மை நாத்திகர்கள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் கூற முடியுமேயன்றி, சிறிதேனும் நேர்மை, புத்தி, மக்கள் நலனில் அக்கறையுடையவர்கள் அப்படிக்கூற மாட்டார்கள். நாங்கள் சென்ற 30 ஆண்டுகளாகச் செய்துவரும் முயற்சியால் இதுவரை சமுதாயத்துக்குக் கேடு விளைந்துள்ளதா? அல்லது நன்மை விளைந்துள்ளதா? மக்களுக்கு எங்களால் ஒரு சிறு கெடுதியாவது ஏற்பட்டதென்று விரல் மடக்க முடியுமா? சுயமரியாதை இயக்கமோ, ஜஸ்டிஸ் கட்சியோ, திராவிடர் கழகமோ தோன்றியிருக்காவிடில் நம் நாட்டில் மக்களிடத்தில் காணப்படும் ஓரளவு பகுத்தறிவாவது மிஞ்ச வைத்திருப்பார்களா பார்ப்பனர்கள்?

மேல்நாட்டிலே அணுகுண்டுக்கு மறுப்புக் குண்டு கண்டுபிடிப்பதிலிருந்து, தினசரி விஞ்ஞான அறிவு மூலம் அற்புதங்களையும், மக்களுக்கு மேலும் மேலும் நன்மை பயக்கக் கூடியவைகளையும் கண்டுபிடித்து வரும் இந்த நிலையில் நம்நாட்டில், அதுவும் இச்சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் தினசரி ராமாயண, பாரத, கீதை போதனைகளா? பத்திரிகைகளில், "நாளைய நிகழ்ச்சிகள்' என்ற பகுதியில் பார்த்தால், மாம்பலத்திலே வாலி வதை உபதேசம்; அந்த இடத்திலே சீதா ஜனனம்; இந்த இடத்திலே கருடகர்வ பங்கம் காலட்சேபம் என்றா காணப்படுவது?

நாம் மக்களுக்காக ஓர் அங்குல அறிவை உயர்த்தி வைத்தால், இந்தப் பார்ப்பனர்கள் அடுத்த நாள் இவ்விதப் பிரச்சாரத்தால் ஒன்றே முக்காலே அரைக்கால் சாண் இறக்கி விடுகிறார்களே! இந்த ராமாயணக் காலட்சேபத்திற்கும் மான ஈனமில்லாமல் சிலர் தாய்மார்களையும் அழைத்துச் சென்று காலில் விழுகின்றனரே! இதற்குப் பதிலாக "எலக்ட்ரிசிடி' ஏற்பட்டவிதம்; ஆகாய விமானம் ஏற்பட்ட வரலாறு; கம்பியில்லாத் தந்தி, ரேடியோ ஆகியவைகள் ஏற்பட்ட விதங்களை மக்களுக்குப் போதிக்கக் கூடாதா? இவைகளை எதற்காகக் கூறுகிறேன் என்றால், திராவிடர் கழகம் இவ்விதத் தொண்டுகளைச் செய்து வருகிறதேயல்லாது எவன் மடியில் பணமிருக்கும், அதைப் பொய் புளுகி, மந்திரம் என்ற பேரால் அவிழ்த்துத் தட்சணை பெறலாம் என்பதற்காக அல்ல.

நம் நாட்டு மக்களுக்குச் சமுதாயத் துறையில் புதியதோர் உணர்ச்சி ஏற்படாதவரை நாம் எதற்கும் லாயக்கற்றவர்களாகத்தான் இருக்க நேரிடும். ஏனெனில், இன்றைய சமுதாய அமைப்பே பார்ப்பனர்களின் இந்நாட்டைச் சுரண்ட வருபவர்களின் பித்தலாட்டங்களுக்கு அஸ்திவாரமாயிருக்கிறது. அதை ஒழித்துவிட்டால் நம் நாடும் மக்களும் ஏன் சர்க்காருங்கூட நல்ல நிலையில் இருக்க முடியும். இப்பேர்ப்பட்ட சமுதாய வாழ்வை நாம் அடையவேண்டுமானால், நாம் மேற்கொண்டுள்ள நீதி நூற்களைப் பற்றியும் கவலை செலுத்த வேண்டும். கடவுளையும், மதத்தையும் எப்படி முட்டாள்தனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ, அதேபோன்று நீதி நூற்களிலும் நம்மை இழிவுபடுத்தும் ராமாயணம், பாரதம், கீதை போன்றவைகளை நம்பி வந்திருக்கிறோம். அதே சமயத்தில் உலகிற்கே பொதுவான அறிவு விளக்கத்தையும், அதற்கான அரசியல் முறைகளையும், மக்களின் வாழ்வு பற்றியும் எடுத்துக் கூறியுள்ள நமது திருக்குறளை நாம் மதிப்பதில்லை; நாம் படிப்பதுமில்லை.

ராமாயணத்தில், பாரதத்தில் நேர்மையோ, நீதியோ இருக்கின்றனவா? திராவிட விபீஷணர்கள் ராமாயணத்தை யானை மீது வைத்து ஏன் அம்பாரி செய்கின்றனர்? கொஞ்சமேனும் மானம், ரோஷம் வேண்டாமா? ராமாயண ஆதாரத்தை அதிலிருப்பதைக்கொண்டே வால்மீகி எழுதியதைக் கொண்டே நாங்கள் கூறினால், "முட்டாள்' என்று எங்களைக் கூறுகிறார் மந்திரியார்!

நான் கேட்கிறேன் : ராமாயணத்தில் ஒழுக்க ஈனம், புத்திரத் துரோகம், சகோதரத் துரோகம், மனைவிக்குத் துரோகம், பெண்ணடிமை கொள்ளுதல், மனிதத் தன்மைக்குத் துரோகம், திராவிடரை இழிவுபடுத்துதல் தவிர வேறு யாதாகிலும் அதில் இருக்கிறதென்று? அறிவற்றவர்கள் அல்லது அடிமைப் புத்தியில் ஊறிப்போனவர்கள், இனத் துரோகம் செய்பவர்கள் தவிர, வேறு யாராவது கூற முடியுமா?

எனவே, அருமைத் திராவிட மக்களே! திருக்குறள் உலகில் உள்ள எல்லா "இசங்'களுக்கும் அதாவது லெனினிசம், சோஷலிஸம் ஆகியவைகளைவிட உயர்ந்த தத்துவங்களைக் கொண்ட மக்களின் நல்வாழ்வுக்கு ஆன நீதிநூலாகும். அதை இனியேனும் திராவிடர்கள் படித்து அதன்வழிச் சென்று பொதுப்பணி ஆற்றினால் நாம் எவருக்கும் அடிமைப் பட்டிருக்கமாட்டோம் என்பது மட்டுமல்ல; எங்கும் நம்மை ஏமாற்ற முடியாது. நாங்கள் செய்துவரும் இப்பணிக்கு நீங்களும் ஒத்துழைக்க வேண்டும். காங்கிரசு மட்டுமல்ல கம்யூனிஸ்ட் திராவிடர்களும் கவலை செலுத்த வேண்டும்.                          

– முற்றும்

சென்னை பெத்துநாயக்கன் பேட்டையில் சொற்பொழிவு "விடுதலை' - 14.11.1948

Pin It