* 1919 – பெண்களுக்கான சிறப்பு மாநாடுகளில் அம்பேத்கர் கலந்து கொண்டு, தலித் சமூகம் விடுதலை பெற, அதன் முன் தேவையாக தலித் சமூகப் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்றார். * 1921 – சாதிப் பெயர்களை ஆண்கள் தங்கள் பெயர்களின் பின்னால் இணைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், பெண்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அத்தகைய பெயர்களைத் தவிர்க்கின்றனர். அதே நேரம் திருமணம் போன்ற நிகழ்வுகளால் சாதி உணர்வை வலியுறுத்த வேண்டிய சூழலில் பெண்கள் உள்ளனர். இதைக் களைந்தெறிய, பெண்கள் போதுமான அளவு பொதுத் தளத்திற்கு வர வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர்.

* 1927 – சைமன் குழுவிடம் தந்த பரிந்துரை மற்றும் சாட்சியங்களில் பெண் கல்வி, பெண் விடுதலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்துள்ளார். மு1930 – 31 – லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளில் பெண்களின் பங்களிப்பை அம்பேத்கர் வலியுறுத்தினார். * 1931 – ஹிதகாரிணி சபாவில் "சமார்' மற்றும் "மகர்' பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தார். * 1931 – "மூக் நாயக்' பத்திரிகையில் தலித் பெண்களின் நிலையும் அதை நோக்கிய தீர்வும் குறித்த விரிவான கட்டுரை வெளிவந்தது.

* 1935 – இயோலா மாநாட்டில் மநுஸ்மிரிதியின் வாசகங்களை ஒரு பார்ப்பனரை விட்டு படிக்கச் செய்து அதனை தீயிட்டுக் கொளுத்தினார் அம்பேத்கர். அதில் பெரும்பாலும் மநு பெண்களைப் பற்றி இழிவாகத் தெரிவித்த வரிகள்தான் இருந்தன.

* 1947 – 1950 – இந்திய அரசியல் சாசனத்தில் சாதி, ஆண் – பெண் பாகுபாடு தவிர்த்தும், நிலவும் பாகுபாட்டை நீக்கவும், முழுமையான தீர்வை ஒட்டியும் ஒவ்வொரு சட்ட முன்வரைவும் உருவாக்கப்பட்டுள்ளன. "கடவுள்' என்ற சொல்தான் சாதி மற்றும் பெண் அடிமை ஆகியவற்றைப் பாதுகாக்கிறது என்றும் அதற்காக "கடவுள்' என்ற சொல்லை முழுவதுமாகத் தவிர்த்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.

* 1951 – தான் ஒரு இந்து அல்லாத போதும், இந்து சட்டவரைவை வடிவமைக்க அம்பேத்கர் முன் வந்தார். அதற்கு மிக முக்கியமான காரணம், பெரும்பான்மையான பெண்கள் தங்களை இந்துக்கள் என்று நம்பும்போது, அவர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்த பின்வரும் பரிந்துரைகளை அளித்தார் : * பெண்களுக்குப் பேறுகால விடுப்பு * பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு புகட்ட அலுவலகங்களுக்கு 2 மணி நேரம் தாமதமாகவோ அலுவலகம் முடியும் முன்னரோ புறப்பட்டுச் செல்ல அனுமதி * அலுவலகங்களில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்த பரிந்துரை * பெண்களுக்கு சொத்தில் உரிமை

* விவாகரத்தின்போது வாழ்வாதாரம் பெறும் உரிமை * விருப்பமின்றி கணவனே பாலியல் உறவு கொள்ள கட்டாயப்படுத்தினால்கூட, சட்டப்படி நடவடிக்கை * வரதட்சிணை வழக்குகளை பிணை அற்ற வழக்குகளாக அறிவித்தல்.

* 1921 – காந்தி, அம்பேத்கரைப் பேச அழைத்தபோது, காந்தியை கண்டிப்பாக சந்திக்கும்படி அம்பேத்கரின் மனைவி ரமாபாய் அம்பேத்கருக்கு ஆலோசனை கூறினார். காந்தியை தலித் மக்களின் எதிரியாகப் பார்ப்பதற்கு பதில், நாம் சந்திக்க வேண்டிய சாதி இந்துக்களின் பிரதிநிதியாகப் பார்க்க வேண்டும் என ரமாபாய் அம்பேத்கரிடம் கூறினார். ரமாபாய் உயிருடன் இருக்கும்வரை, அம்பேத்கரின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார்.

– கவுதம சன்னா

Pin It